மறக்க இயலாத ஆளுமை!
எஸ்.ஏ.பி.அண்ணாமலையின் நுாற்றாண்டு பிறந்த தினம் - டிச., 2'கு முதம்' இதழ் நிறுவனரும், முன்னாள் ஆசிரியருமான, எஸ்.ஏ.பி.அண்ணாமலையுடனான அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார், மணிமேகலை பிரசுரத்தின் நிர்வாக இயக்குனரான, ரவி தமிழ்வாணன். 'குமுதம் இதழுக்கு வெளியீட்டாளர் இருப்பது போல், என்னுடைய வெளியீட்டாளர், ரவி தமிழ்வாணன்!' என்று, எஸ்.ஏ.பி. அண்ணாமலை சொன்ன அந்த வார்த்தைகளை என் வாழ்நாளில் மறக்கவே இயலாது; கல்வெட்டாக இன்றும் என் மனதில் பதிந்திருக்கிறது. கடந்த, 1980ம் ஆண்டின் துவக்கத்தில், என் தந்தை தமிழ்வாணன் மற்றும் சகோதரர் லேனா தமிழ்வாணன் எழுதிய நிறைய நுால்களை மணிமேகலை பிரசுரத்தின் சார்பில் வெளியிட்டிருந்தோம். எஸ்.ஏ.பி., எழுதிய புத்தகங்கள், விற்பனையில் இல்லாமல் இருந்தது. வாசகர்கள் பலர் அப்புத்தகங்களை விரும்பி கேட்க, எஸ்.ஏ.பி.,யிடம், மணிமேகலைப் பிரசுரம் மூலமாக அவரது நாவல்களை மறுபதிப்பு செய்ய வேண்டும் என்று கேட்ட போது, உடனே ஒப்புதல் தந்து, தன்னுடைய தனிப்பட்ட நுாலகத்திலிருந்து மூலப் பிரதிகளை எடுத்து கொடுத்தார். எஸ்.ஏ.பி.,யின், 'சின்னம்மா' என்ற, புத்தகத்தின் அட்டைப்படத்தை, ஓவியர், மாருதியும், 'காதலெனும் தீவினிலே' அட்டைப்படத்தை, ஓவியர், ஜி.கே.மூர்த்தி வரைந்தால் நன்றாக இருக்கும் என்று, எஸ்.ஏ.பி., கருத்து தெரிவிக்க, உடனே ஏற்பாடு செய்தேன். ஓவியர்கள் இருவருமே, எஸ்.ஏ.பி., விருப்பப்பட்டார் என்று தெரிந்ததும் உடனே வரைந்து கொடுத்தனர். திரைப்பட இயக்குனர், மகேந்திரன், 'சின்னம்மா' நுாலுக்கு முன்னுரை எழுதித் தர வேண்டும் என்று, எஸ்.ஏ.பி., விரும்ப, அதையும், மகேந்திரனிடம் சொன்னபோது, 'அப்படியா? என்னிடமா கேட்டார்? என்னால் நம்பவே முடியவில்லையே!' என்று சொல்லி, முழு நாவலையும், உடனடியாக படித்து, முன்னுரை எழுதி தந்தார். கடந்த, 1983ல், அச்சான முதல் பிரதியை, எஸ்.ஏ.பி.,யின் பங்களாவிற்கு சென்று கொடுத்தபோது ரொம்பவும் மகிழ்ந்து, குழந்தையின் கன்னத்தை வருடுவது போல், அட்டைப்படத்தை தன் விரல்களினால் மெல்ல வருடி, சந்தோஷப்பட்டார். ' இப்புத்தகங்களுக்கு, 'ராயல்டி'யை எந்தப் பெயரில் கொடுக்கட்டும்?' என்று நான் கேட்டபோது, 'மணிமேகலைப் பிரசுரம் நம்முடைய பதிப்பகம். சொந்தப் பதிப்பகத்தில் யாராவது, 'ராயல்டி' பெற்றுக் கொள்வரா?' என்று கேட்டு, இன்ப அதிர்ச்சி தந்தார். மணிமேகலைப் பிரசுரம், எஸ்.ஏ.பி.,யின் மனதில் எந்த அளவிற்கு இடம் பெற்றிருந்தது என்பதற்கு இது ஒரு சின்ன உதாரணம். கடந்த, 1977ல், என் அப்பா தமிழ்வாணன் மரணம் அடைந்தபோது, அச்சாகிக் கொண்டிருந்த, 'குமுதம்' இதழை நிறுத்தி, அவசரமாக அப்பா பற்றி, ஒரு பக்கத்துக்கு எழுதி, 'குமுதம்' இதழில் அச்சிடச் செய்தார். அதில், 'மணிமேகலைப் பிரசுரம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்பதற்காகவாவது, 'கல்கண்டு' இதழை தொடர்ந்து நடத்த வேண்டும். வாசகர்களின் விருப்பமும் இதுவாகவே இருக்கும்...' என்று எழுதியிருந்தார். இவ்வாறு, 'கல்கண்டு' இதழ் தொடர்ந்து வெளிவர செய்து, எங்கள் அப்பாவின் புகழுக்கு பெருமை சேர்த்தார், எஸ்.ஏ.பி., 'குமுதம்' இதழின் நிறுவனராகவும், ஆசிரியராகவும் திகழ்ந்த எஸ்.ஏ.பி., தான் வாழ்ந்த காலம் வரை தன்னுடைய புகைப்படத்தை, தம் இதழில் தப்பித் தவறி ஒரு முறை கூட வெளியிட்டதில்லை என்பது பத்திரிகையுலக ஆச்சரியங்களுள் முக்கியமானது. என் அப்பா தமிழ்வாணன் இதற்கு நேர் எதிர்! 'கல்கண்டு' இதழின் அட்டைப் படங்களில் ஒவ்வொரு வாரமும் அவருடைய படம் இடம்பெறும். கல்கண்டு பத்திரிகைக்கும், எஸ்.ஏ.பி., தான் அதிபர் என்றாலும், அதன் கொள்கைகளில் அவர் தலையிட்டதே இல்லை. தமிழ்வாணன் காலமானபோது, எஸ்.ஏ.பி., என் அப்பா மீது எவ்வளவு அன்பும், பாசமும் கொண்டிருந்தார் என்பதை எங்களால் மட்டுமல்ல, நெருங்கிய வட்டத்தினராலும் உணர முடிந்தது. எங்களது, 'சங்கர்லால்' இல்லத்திற்கு வந்து, தந்தையின் உடலைப் பார்த்து, சிறு பிள்ளையைப் போல் குலுங்கிக் குலுங்கி அழுதார். இக்காட்சியை நான் மரணிக்கும் வரை என்னால் மறக்க இயலாது. துக்க வீட்டில் அழுகை என்பது சாதாரண விஷயம் தானே என்பீர்கள். இது, எஸ்.ஏ.பி.,க்கு மட்டும் பொருந்தாது. காரணம், எஸ்.ஏ.பி., மிக ஆழமான மனிதர். வாழ்க்கைத் தத்துவங்களில் தோய்ந்தவர். சுவாமி சின்மயானந்தரின், சொற்பொழிவுகளை கேட்டு, பக்குவப்பட்டவர். இன்பத்தையும், துன்பத்தையும் ஒன்றுபோல் ஏற்றுக்கொள்ளக் கூடிய இயல்புடையவர். இப்படிப்பட்டவர் அப்படி அழுதது தான் அனைவரையும் நெகிழச் செய்தது. இவருடைய இந்த மனநிலையை, அந்த வாரம் வெளியான, அரசு கேள்வி பதில்களிலும் வெளிப்படுத்தியிருந்தார். தமிழ்வாணன், தீபாவளி அன்று இறந்ததைப் பற்றி, வாசகர் ஒருவர் கேள்வி கேட்டிருந்தார்... 'தீபாவளி அன்று உங்கள் மனம் எப்படி இருந்தது?' இதற்கான பதில்: காலையில் எண்ணெயில் குளித்தது; மாலையில் தீயில் வெந்தது! எவ்வளவு ஆழ்ந்த பொருள் கொண்ட பதில்! பலராலும் விரும்பப்பட்ட பல சிறப்புகளைக் கொண்ட, 'அரசின் 1000 பதில்கள்' நுாலை அவரது, நுாறாவது பிறந்தநாளன்று வெளியிடுவதில் பெருமகிழ்வு கொள்கிறோம். இதுமட்டுமல்ல, சிறந்த வரவேற்பை பெற்று விற்பனையாகித் தீர்ந்து வரும், எஸ்.ஏ.பி.,யின் அனைத்து நுால்களையும் தொடர்ந்து மறுபதிப்பு செய்வதில் பெருமை கொள்கிறோம். இதற்கு ஆதரவு தந்த, எஸ்.ஏ.பி.,யின் மகன் டாக்டர் ஜவஹர் பழனியப்பனுக்கு மிகவும் நன்றி சொல்ல வேண்டும். அப்பாவுக்கு பிறகு, 'கல்கண்டு' இதழின் ஆசிரியர் பொறுப்பை ஏற்க பலர் விரும்பினர். தமிழ்வாணன் வாரிசு தான் ஆசிரியர் பொறுப்பை ஏற்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார், எஸ்.ஏ.பி., சகோதரர் லேனா தமிழ்வாணனுக்கு, 'கல்கண்டு' இதழின் ஆசிரியர் பொறுப்பையும், 'குமுதம்' இதழின் துணை ஆசிரியர் பொறுப்பையும் தந்த, எஸ்.ஏ.பி.,க்கும், டாக்டர் ஜவஹர் பழனியப்பனுக்கும் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறோம்.