வாசகர்கள் கருத்துகள் ( 1 )
வித்தியாசமான கதை. வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க. பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து
கடையைச் சாத்திவிட்டு கிளம்பும் போது இரவு, 10:00 ஆகிவிட்டது, தேவகிக்கு. பெட்டிக் கடைக்கும், பல்பொருள் அங்காடிக்கும் இடைப்பட்ட அந்த கடையை முழுக்க முழுக்க அவள் தான் பார்த்துக் கொள்கிறாள். கணவர், பால்ராஜ் சின்னதாய், 'ரியல் எஸ்டேட் பிசினஸ்' செய்து வந்தார். அந்த பகுதியில் வேறு கடைகள் கிடையாது! கடைமூடும் சமயம், யாராவது எந்த பொருளையாவது கேட்டு, அவசரம் அவசரமாக கடைக்கு வருவர்; மறுக்க முடியாது. 'ஒருவருக்கு வியாபாரம் என்றால், நுாறு பேருக்கு வியாபாரம் செய்த மாதிரி...' என்று நினைப்பவள், மூடிய ஷட்டரைத் திறந்து, பொருட்களை எடுத்துக் கொடுத்திருக்கிறாள், அவள். இத்தனைக்கும் பெரிய பொருட்கள் கூட கேட்க மாட்டார்கள். 'அஞ்சு ரூபாய்க்கு வெத்தல பாக்கு கொடுக்கா, விடிகாலை பூஜைக்கு வேணும்...' 'அக்கா ரெண்டு ரூபாய்க்கு மட்ட ஊறுகாய் கொடேன். என் ஆளுக்கு தண்ணி அடிக்கும்போது வேணும். இல்லேன்னா ரகள தான்!' சலிக்காமல், மறுபேச்சு பேசாமல் எடுத்துக் கொடுப்பாள். 'அக்காவுக்கு நல்ல மனம்...' என்று நிறைய பேர் சொல்லிவிட்டு போவர். இதைத்தவிர அடுக்குமாடி குடியிருப்புவாசிகளும் அவள் கடை வாடிக்கையாளர்கள் தான். 'ஆன்லைன்' மூலம் மொத்தமாக வாங்கிக்கொண்டாலும் அவ்வப்போது, தேவகி கடைக்கும் வருவர். 'சும்மா வீட்டுக்குள்ளே அடைஞ்சி கிடக்கறதுக்கு, இறங்கி வந்து ஒரு மிட்டாயோ, தயிர் பாக்கெட்டோ வாங்கிட்டு போறதுல ஒரு சுகம் இருக்குக்கா...' என்பாள், மிருதுளா. 'இன்னொரு விஷயம், அக்கா. உன் முகத்தைப் பார்ப்பதிலும் ஒரு சந்தோஷம். நீ சிரிச்சுகிட்டே பொருள் தர்றது, ஏதாவது காசு குறைஞ்சா கூட, 'பரவாயில்ல பிறகு கொடு'ன்னு சொல்றது, அதைக்கூட நச்சரிச்சுகிட்டே இருக்காமல் தருகிற வரைக்கும் பொறுமையா இருக்கிறது, வந்து கேட்கிற இளசுகள்கிட்ட, 'சிகரெட் விக்கிறதில்ல'ன்னு புன்னகையோட சொல்றதுன்னு பல நல்ல குணங்கள் இருக்குக்கா. எனக்கு ரொம்ப பிடிக்கும்...' என்பாள், மிருதுளா. இப்படி பல பெண்களின் சர்டிபிகேட், தேவகிக்கு இருப்பதால் வியாபாரம், 'ஸ்டெடி'யாக ஓடிக்கொண்டிருந்தது! ''அக்கோவ்...'' என்றவாறே வந்தாள், சுடர்க்கொடி. இரண்டாவது தெரு. மாடி வீட்டுக்காரி. சும்மா பேசுவதற்காக வருவாள். வியாபாரம் கெடக்கூடாது என்று பொருட்களும் வாங்கி செல்வாள்! ''அக்கா, ஒரு விஷயம்.'' ''சொல்லு, சுடர்க்கொடி.'' ''வர வெள்ளிக்கிழமை, என் மகள் சுருதிகாவை பொண்ணு பார்க்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வராங்க.'' ''அட, அப்படிபோடு! மாப்பிள்ளை எந்த ஊரு? சொந்தமா, அசலா?'' ''திருநெல்வேலி பக்கம், பூதங்குளம். அசல் தான். ஆனா பாரு இந்த பொண்ணே, 'செலெக்ட்' பண்ணியிருச்சு!'' ''அடிப்பாவி!'' ''இப்படித்தான், முதல்ல நானும் கத்தினேன். பாவி மக ஊமை மாதிரி இருந்து என்ன காரியம் பண்ணிடுச்சுன்னு!'' ''எப்படி தெரிஞ்சது?'' ''எப்படியோ... ஜாதகத்தை எடுத்தவுடனே, 'திருதிரு'ன்னு முழிச்சுருக்கா. கேட்டதற்கு சொல்லிருச்சு! வேல பார்க்கிற கம்பெனில, டீம் லீடராம்.'' ''நல்லா இருந்தா சரி தான்.'' ''அக்கா, பையன் வர அன்னிக்கு நீங்களும் வரணும்.'' ''ஐயோ நானா? நான் மூணாவது மனுஷி. நான் எப்படி சம்பந்தம் இல்லாம?'' ''அப்படி சொல்லாதக்கா. உங்களுக்கும் திருநெல்வேலி. பையனுக்கும் திருநெல்வேலி! பேசிக்கிடுவீகல்ல,'' என்று சொல்லி சிரித்தாள், சுடர்க்கொடி. ''என்ன நக்கலா?” ''ஐயோ அக்கா, நீங்க எங்க வீட்டு ஆள் மாதிரி. அண்ணாச்சியும் வந்துரணும். கலகலப்பாக இருக்கும்,'' என்று கூறி மீண்டும் சிரித்தாள், சுடர்கொடி. ''சரி! வரேன்,'' என்றாள், தேவகி. இப்பொழுதெல்லாம் வழக்கத்திற்கு மாறாக கடையில் கூட்டம். காரணம் கடை அருகே ஒரு, 'டிஜிட்டல் ரிகார்டிங் எடிட்டிங் அண்டு டப்பிங்' என்ற ஒரு கம்பெனி முளைத்திருந்தது. அங்கு வேலை பார்க்கும் பணிப்பெண் வேலம்மா, தேவகிக்கு நெருக்கமாகி விட்டாள். ''அக்கா, ஊழியர்களுக்கு காலையும், மாலையும் டீ வாங்க 'பிளாஸ்கை' துாக்கிட்டு ரொம்ப தொலைவு போக வேண்டியிருக்கு. நீங்க ஒரு டீக்கடையும் போடலாமேக்கா?'' ''சரியாப் போச்சு, இதுக்கே முடிலம்மா.'' ''முடியும்க்கா. 'ம்'முனு ஒரு வார்த்தை சொல்லுங்க. என் மச்சான் டீமாஸ்டரா மதுரையில இருந்தான். அங்க பிடிக்கலேன்னு இங்க வந்துட்டு, மோட்டுவளைய பார்த்துக்கிட்டு உக்காந்திருக்கான். அவன போட்டுறலாம்,'' என்றாள். யோசித்தாள், தேவகி. கணவரிடம் கேட்டாள். 'நல்ல, 'ஐடியா'வா இருக்கே...' என்று சொல்லி விட, சில, 'பார்மாலிட்டீஸ்' முடிந்து, பார்க்க வேண்டியவர்களை பார்த்து, கொடுக்க வேண்டியதை கொடுத்து, கடை வாசலிலே ஒரு டீக்கடை போட்டு விட்டாள், தேவகி. சும்மா சொல்லக்கூடாது, வேலம்மாவின் மச்சான், மருதன் செம மாஸ்டர்! அருமையான டீ வகைகள் போட்டு, ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி விட்டான்! சாதா டீ, லெமன் டீ, புதினா டீ, இஞ்சி டீ, மசாலா டீ என்று வியாபாரம் அள்ளியது! வியந்து போனாள், தேவகி. அவள் காலில் விழுந்து நன்றி சொன்னான், மருதன். ''எனக்கு, 'தண்டச்சோறு'ங்கிற பட்டத்தை கிழிச்சு எறிஞ்சிட்டீங்க அக்கா!'' ''இதெல்லாம் உங்களுக்கு கொஞ்சம் ஓவரா தெரியலையா?'' என்று வெட்கப்பட்டு கேட்டாள், தேவகி. மிருதுளா, சுருதிகா, வேலம்மா, மருதன் மேலும் பல பெண் வாடிக்கையாளர்கள் என்று சின்ன கூட்டம்! ஒரு டீபாய், அதில் ஒரு அரைக்கிலோ அளவு கொண்ட, 'பர்த்டே கேக்!' ''இப்படி வாங்கக்கா. கத்திய பிடிங்க, 'கேக்'க வெட்டுங்க. அண்ணாச்சி, இப்படி அக்கா பக்கத்துல வாங்க, வெக்கப்படாதீங்க,'' என்றனர். ஒரே சிரிப்பு. கலகல... தேவகி வெட்கப்பட்டுக் கொண்டே, 'கேக்'கை வெட்டி முதல் துண்டை, அண்ணாச்சிக்கு ஊட்ட எல்லாரும், 'ஹேப்பி பர்த்டே' பாட்டுப் பாடினர். 'என் வாழ்நாளில் இப்படி 'கேக்' வெட்டி, பிறந்த நாளை கொண்டாடியதே இல்லை...' என்று நெகிழ்ந்தாள், தேவகி. ''காலைல அண்ணாச்சியும், உங்களையும் கோவில்ல பார்த்தபோது, நீங்க தான் சொன்னீங்க, பிறந்த நாள்னு. இல்லாட்டி தெரிஞ்சிருக்காது. அவசரம் அவசரமா நம்ம நண்பர்கள்ட்ட சொல்லி, 'சர்ப்ரைசா' ஏற்பாடு பண்ணிட்டேன்,'' என்றாள், மிருதுளா. ''பெரிய கவுரவம் எங்களுக்கு,'' என்றார், அண்ணாச்சி. ''அக்கா வெறும் வியாபாரி மட்டும் இல்ல, அண்ணாச்சி. பிறருக்கு உதவணும், நட்பா இருக்கணும்ன்னு நினைக்கிறவங்க. அன்னிக்கு, ஷியாமளா அக்கா நாய்க்குட்டி காணாம போச்சு. அவங்களும் வருந்தி, அதோடு நிக்காம கண்டுபிடிச்சும் கொடுத்தாங்க. போன மாதம் ஒருநாள், விசாலி அக்கா புருஷனுக்கு ராத்திரி, 2:00 மணிக்கு நெஞ்சுவலி! அக்காவுக்கு, விசாலி போன் போட்டா. உடனே கடைய திறந்து, அஞ்சால் அலுப்பு மருந்தும், சோடாவும் எடுத்து வந்து கொடுத்தாங்க. மறக்க முடியுமா. காசு பணம் துட்டுன்னு இருக்கிற உலகத்துல, உங்க வீட்டம்மா, தேவகி அக்கா ஒரு அற்புத மனுஷி, அண்ணாச்சி! அது தான் இந்த எளிய கொண்டாட்டம்.'' ''அதுதான், என் உடன்பிறந்தவளா நினைச்சு, நாளைக்கு என் பொண்ணுக்கு மாப்பிளை வீட்டுக்காரங்க வராங்கன்னு, அக்காவையும் கூப்பிட்டு இருக்கேன்,'' என்றாள், சுடர்க்கொடி. கூடத்தில் பூமணம், பத்தி வாசனை எல்லாம் ரம்மியமாக இருந்தது. எல்லாவற்றையும், 'ஓவர்டேக்' செய்தது, பஜ்ஜி, சொஜ்ஜி மணம். தேவகியும், அண்ணாச்சி பால்ராஜும் வந்து விட்டனர். ''அக்கா, மாப்பிள்ளையிடம் ஏதாவது பேச்சு கொடுக்கா. அவரைப் பற்றி தெரிஞ்சிக்கலாம்ல?'' என்று, தேவகியின் காதில் கிசுகிசுத்தாள், சுடர்க்கொடி. மாப்பிள்ளையை பார்த்த, தேவகிக்கு தலையில் இடிவிழுந்தது போலாயிற்று! இவனா! அன்றொரு நாள்... 'டேய் சொல்றா! பஸ்ல பொண்ணுகிட்ட தப்பா நடந்துகிட்டது மட்டுமில்லாம, வேற யாருகிட்டயும் பர்ஸ அடிச்சியா?' என, இன்ஸ்பெக்டர் அவனை அடிக்க கை ஓங்கினார். 'சார் வேண்டாம் சார். நானே ரெண்டு அடி அடிச்சிட்டேன். விட்ருங்க!' என்று வேகமாய்த் தடுத்தாள், தேவகி. 'உங்களுக்காக விடறேன். ஏதாவது, 'கம்ப்ளெயின்ட்' கொடுக்கறீங்களாம்மா?' யோசித்தாள், தேவகி... 'வேண்டாம் சார். பார்த்தா நல்ல குடும்பத்து பையன் மாதிரி தெரியுது, சார். பாருங்க இவனால பாதிக்கப்பட்ட பொண்ணு கூட பஸ்ஸ விட்டு போயிட்டா. நான் தானே உங்களுக்கு போன் போட்டேன்...' 'பேர் என்னடா?' 'அஜயன் சார்...' 'போய்த் தொலை!' அவன் இன்ஸ்பெக்டரையும், தேவகியையும் கையெடுத்து கும்பிட்டு, ஓடியே போனான். அதே, அஜயன்! சில ஆண்டுகளுக்கு முன், பஸ்ஸில் தேவகியிடம் கன்னத்தில் அடிவாங்கி போலீஸ் ஸ்டேஷனுக்கேல்லாம் போய், இன்ஸ்பெக்டர் காலில் விழுந்து பிறகு, தேவகியே பாவப்பட்டு அவனை விடுவித்தது எல்லாம் 'படபட'வென பழைய நினைவுகள் அவளுக்கு வந்து போயின. அதேசமயம், அஜயனும், தேவகியைப் பார்த்து ஒரு கணம் திகைத்து, அப்படியே ஸ்தம்பித்து விட்டான். அவன் பேயறைந்தது போல் இருந்தான். ''என்ன மாப்பிள்ளை திடீர்ன்னு மவுனமாயிட்டாரு? ஏம்மா சுருதிகா! காபில சர்க்கரை போடாம கொடுத்திட்டியா?'' என்று அப்பா கேட்க, ஒரே சிரிப்பலை! சம்பிரதாய பேச்சுக்கள் முடிந்து, தட்டும் மாற்றியாயிற்று! எல்லாரும் கிளம்பும் நேரம், அஜயன் யாரும் எதிர்பாராத வகையில், தேவகியின் காலில் விழுந்தான். ''அக்கா, என்னை ஆசிர்வாதம் பண்ணுங்கக்கா!'' ''அட, தம்பி, என்னப்பா இதெல்லாம். என் ஆசிர்வாதம் எப்பவுமே உண்டுப்பா.'' ''என்ன, உங்க ஊர்ங்கறதால ஸ்பெஷல் மரியாதை காட்றாரா மாப்பிள்ளை?'' சிரித்தாள், சுடர்க்கொடி. ''அக்கா ரொம்ப நல்லவங்க. எல்லாருக்கும் வலிய வந்து உதவி செய்வாங்க.'' ''தெரியுமே அதான். அவங்களுக்கு எங்க பேட்டை பொண்ணுங்கல்லாம் சேர்ந்து பிறந்தநாள் கூட கொண்டாடினோம். அடுத்த வருஷம் இப்படி கடை வாசல்ல கொண்டாடாம பெரிய ஹோட்டல்ல கொண்டாடிட வேண்டியது தான்.'' சிரித்தாள், சுடர்க்கொடி. தேவகியைப் பார்த்தான், அஜயன். 'எதுவும் சொல்லிடாதீங்கக்கா!' என்றான், விழிகளால். 'மாட்டேன் தம்பி. பயப்படாதே! நீ அன்னிக்கு என்கிட்ட சொன்ன மாதிரியே நல்ல மனிதனா மாறி, உழைச்சு நல்ல நிலைல இருக்கே! நான் ஏன் பழச கிளறுறேன்? தவறு செய்வது மனித இயல்பு, அதை மன்னித்து மறப்பது மனிதப் பண்பல்லவா? நீ சந்தோஷமா, சுருதிகாவுடன் வாழ்க்கையை தொடங்கு...' தேவகியும், அவனிடம் பார்வையாலே பதில் அளித்தாள்! மகிழ்ச்சியாக அவர்கள் விடைபெற்று சென்றதும், ஆவலோடு தேவகியிடம் ஓடி வந்தாள், சுருதிகா... ''ஆன்ட்டி! உங்க கால்லல்லாம் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிட்டு போறாரு. முன்னாடியே தெரியுமா?'' வியப்பாக கேட்டாள். ''ஆமாம்,'' என்று சிரித்தவாறே அவள் கன்னத்தை செல்லமாகக் கிள்ளினாள், தேவகி! கே.ஜி.ஜவஹர்
வித்தியாசமான கதை. வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க. பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து