உள்ளூர் செய்திகள்

நம்மிடமே இருக்கு மருந்து - சுரைக்காய்!

வெள்ளரிக்காய் குடும்பத்தைச் சேர்ந்தது, சுரைக்காய். இதன் பூர்வீகம் ஆப்ரிக்கா. பயிரிட்ட, 75 நாட்களில் பலன் தரும். கோடைக்கால காய் ஆன இது, 96 சதவீதம் நீர்ச்சத்து நிரம்பியது. இதனால், நம் உடலை குளிர்ச்சியாகவும், புத்துணர்ச்சியாகவும் வைத்து கொள்ள உதவுகிறது. புரோட்டீன், வைட்டமின் பி3, பி5, பி6, சி. கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம் பாஸ்பரஸ், இரும்புச்சத்து மற்றும் துத்தநாகம் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. எலும்புகளை வலுப்படுத்தவும், இதயம் பாதுகாப்பாக செயல்படவும் உதவுகிறது. சுரைக்காயில் உள்ள சில சத்துகள், புற்றுநோயை உருவாக்கும் செல்களை அழிப்பதாக கண்டறிந்துள்ளனர், இந்திய விஞ்ஞானிகள். இதிலுள்ள, 'லாக்டீன்ஸ்' எனும் சத்து, புதிய செல்களை உருவாக்கும் ஆற்றல் உடையது என்கின்றனர், கர்நாடக மாநில குவெம்பு பல்கலைக்கழக ஆய்வாளர்கள்.சுரைக்காய் ஜூஸ், ரத்த அழுத்த நோயாளிகளுக்கு சிறந்தது. சுரைக்காய் உடல் சூட்டை குறைக்கும். சுரைக்காயின் சதைப் பகுதியை வெட்டி சாறு பிழிந்து, அதனுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து பருகி வர, சிறுநீரக கோளாறு, சிறுநீர் கட்டு, நீர் எரிச்சல், நீர் கட்டு ஆகிய பிரச்னைகள் குணமாகும். மேலும், கல்லீரல் வீக்கத்தை குறைத்து, நன்கு செயல்பட உதவுகிறது.சுரைக்காய் சாற்றை தலைமுடிக்கு தேய்த்து குளித்தால், செம்பட்டை வராது. நல்லெண்ணெயுடன் சுரைக்காய் சாறு சேர்த்து, தலையில் தேய்த்து ஊற வைத்து பிறகு குளிக்க, நல்ல துாக்கம் வரும்.ஒரு கப் பச்சை சுரைக்காய் சாறில், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அருந்தினால், நா வறட்சி நீங்கும்; வயிற்றுப் போக்கு நிற்கும். குறிப்பாக, உப்பு போடாமல் இதை அருந்தக் கூடாது.சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து உண்டு வந்தால், பித்தம் விரைவிலேயே சமநிலைப்படும். கர்ப்பப்பையை பலப்படுத்தவும், கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கும் தீர்வு தருகிறது.இதிலுள்ள அதிகப்படியான நார்ச்சத்து மலச்சிக்கலை போக்கும்; உடல் எடையை குறைக்கும்; அல்சர் புண்களை ஆற்றும்; வயிற்று வலியை தவிர்க்கும்; உடலில் அமிலச் சத்தை குறைக்க உதவுகிறது.சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது; செரிமானம் சீராகும், அஜீரணம், வாயுத் தொல்லை போன்ற பிரச்னைகள் இருக்காது.சுரைக்காயில் அதிக அளவில் இரும்புச்சத்து காணப்படுவதால், உடலில் ஹீமோகுளோபினின் சரியான அளவை பராமரிக்க உதவுகிறது.சுரைக்காயை சுவைத்து பார்க்கும் போது, கசப்பாக இருந்தால், அதை பயன்படுத்த கூடாது. சுரைக்காய் சாறு செய்த, இரண்டு நிமிடத்தில் பருகி விட வேண்டும். இல்லாவிட்டால், அதில் பாக்டீரியா கிருமிகள் பரவும் அபாயம் உள்ளது. தொகுப்பு: கோ.மகிழினியாள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !