நம்மிடமே இருக்கு மருந்து - பீச் பழம்!
குங்குமப்பூ மற்றும் மஞ்சள் நிறமும் கலந்த, பீச் பழங்களின் பூர்வீகம், சீனா நாடு. பீச் சாகுபடி, 3,000 ஆண்டுகளுக்கு முந்தையது என, சமீபத்திய தொல்பொருள் கண்டுபிடிப்பு கூறுகிறது. சீனாவிலிருந்து, பீச் பழம், பெர்ஷியாவிற்கு சென்றது. அங்கிருந்து கிரேக்கம் மற்றும் ரோமானியர்களை அடைந்தது. இதை, 'ஸ்டோன் பழங்கள்' என, அழைக்கின்றனர். பேரிக்காய், ஆப்பிள், பாதாம், பிளம் போன்ற ரோசேசியின் தாவரவியல் குடும்பத்தை சேர்ந்த பீச், இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கொண்டது. ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க, பீச் பழம் உதவும். இப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. எனவே, இரும்புச்சத்து குறைபாடு அல்லது உடலில் ரத்தம் குறைவாக இருப்பவர்கள், தினமும் ஒரு பீச் பழத்தை சாப்பிட்டால், ரத்தத்தின் அளவை அதிகரிக்கலாம்.கோடையில் வெளியில் சென்று களைப்புடன் வருபவர்கள், பீச் பழத்தை சாப்பிடலாம். ஏனெனில், இதில் நிறைந்துள்ள நீர் சத்து, உடல் வறட்சியை போக்குகிறது. மேலும், அதிகப்படியான பீட்டா கரோட்டின், கண்களுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, கண் பார்வையை அதிகரிக்க உதவுகிறது.லைகோபின் மற்றும் லுாடீன், சத்துக்கள், புற்றுநோய் மற்றும் மாகுலர் டிஜெனரேசன் எனும் கண் பார்வை குறைபாடுகளை சரி செய்கிறது.பீச் பழத்தில் வைட்டமின் ஏ, சி அதிகமுள்ளது. இதை வைத்து பேஷியல் செய்தால், சரும சுருக்கங்கள், சரும துளைகளில் உள்ள அடைப்புகள் நீங்கி, முகம் சுத்தமாகவும், பொலிவுடனும் இருக்கும். கரும்புள்ளிகள் மற்றும் முகத்தில் சுருக்கமும் வராமல் தடுக்கும்.பீச் பழத்துடன் தக்காளி, எலுமிச்சை மற்றும் முட்டையின் வெள்ளை கரு என, எதாவது ஒன்றை சேர்த்து முகத்திற்கு பேஷியல் போட்டால், முகத்தில் பொலிவு கூடும்.பீச் பழத்தில், கொழுப்பு எதுவும் கிடையாததால், எடையை குறைக்க விரும்புவோர், இதை சாப்பிடலாம். முடி உதிர்வதை கட்டுப்படுத்துகிறது.பொட்டாசியம், இரும்பு சத்துக்கள் அதிக அளவில் உள்ளதால், உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. மார்பு சளி, வறட்டு இருமல், தொண்டை புண் ஆகியவற்றை குணப்படுத்துகிறது.மன அழுத்தம், மனநோயால் பாதிக்கப்பட்டவர்களை மீட்க, பீச் பழங்கள் உதவுகிறது. இரவில் படுக்கும்போது தோலுடன் இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால், அமைதியான துாக்கம் கிடைக்கும். கருவில் உள்ள குழந்தைக்கு நரம்பு குழாய் குறைபாடு ஏற்படுவதை தடுக்கிறது. மேலும், சிறுநீரகத்தில் உருவாகும் கல் மற்றும் கட்டிகளை தடுப்பதுடன், சிறுநீரகங்கள் மற்றும் சிறுநீரகப்பையில் உள்ள நச்சுக்களையும் நீக்க உதவுகிறது.தொகுப்பு : கோ.வீரா