நம்மிடமே இருக்கு மருந்து - பார்லி!
அரிசி, கோதுமைக்கு முந்தைய முழுமையான தானிய உணவு, பார்லி.தற்போது, 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பயன்படுத்தி வரும், 1000 ஆண்டு பழமையான உணவுப் பொருளாக உள்ளது. இதில் உள்ள, 350 கலோரிகளில், 80 சதவீதம், கார்போஹைட்ரேட் மாவுச்சத்து நிறைந்துள்ளது. எகிப்து நாட்டில் பிரமிடு கட்டிய தொழிலாளர்களின் முக்கியமான உணவாக, பார்லி தான் இருந்தது. பார்லியில் அதிகளவில் பாஸ்பரஸ், நியாசின், பொட்டாசியம், கோலின் மற்றும் பான்டோதெனிக் அமிலம் உள்ளது. 100 கிராம் பார்லி அரிசியில், ஒரு நாளைக்கு தேவையான பாதி நார்ச்சத்து கிடைத்து விடும்.உடல் எடை, கொலஸ்ட்ரால் மற்றும் சுகர் அளவை குறைக்க, ஓட்ஸ் எடுத்துக் கொள்பவர்கள், அதற்கு பதிலாக, பார்லி சாப்பிடலாம். சமைக்கும் போது, மற்ற தானியங்களிலுள்ள நார்ச்சத்து கொஞ்சம் குறையும். ஆனால், பார்லியில், 'பீட்டோ குளூக்கான்' என்ற நார்ச்சத்து, எந்த வகையான தயாரிப்பு முறையிலும் அழிவதில்லை. இதுவே இதன் தனிச்சிறப்பு.டைப் 2 டயாபடீஸ் நோயாளிகள், அரிசி சாதம் சாப்பிடுவதை விட, பார்லி நீர் குடித்தால், ரத்த குளுக்கோஸ் அளவு குறைவதாக ஆய்வுகள் தெரிவிகின்றன. இதில் உள்ள பாஸ்பரஸ் உப்பு, மூளைக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. நரம்புகளை பலப்படுத்தும், வைட்டமின் பியும் உள்ளது.பார்லியில் உள்ள அதிகளவு நார்சத்து, ஆன்ட்டி ஆக்சிடெண்ட், பிளோவனாய்ட்ஸ், வைட்டமின் இ, ஏ மற்றும் செலினியம் சத்து, நுரையீரலின் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை, பார்லி கஞ்சி சாப்பிட்டு வர, உடலிலுள்ள நச்சுப்பொருட்கள் வெளியேறும். மலச்சிக்கலை நீக்கும். காய்ச்சல் வராமல் தடுத்து, உடலின் வெப்ப நிலையை சமநிலையில் வைத்திருக்க உதவும்.பித்தப்பையில் கல் உருவாவதை தடுக்கிறது. எலும்பு மற்றும் பற்களுக்கு பலனளிக்கிறது. மலட்டுத்தன்மையை போக்குகிறது. தோலின் ஈரப்பதம் மற்றும் ஆரோக்கியம் காக்கிறது. மூட்டு வலி உள்ளவர்களும், பார்லி கஞ்சி சாப்பிடலாம். காய்கறிகள் சமைக்கும் போது, பார்லி பவுடரை சிறிதளவு சேர்த்துக் கொண்டால், சுவையாக இருக்கும். தோசை மாவில் கலந்தும் சாப்பிடலாம். வயிறு சார்ந்த பிரச்னைகளுக்கு பல காலமாக வீட்டு வைத்தியத்தில் பார்லி நீர் பயன்பட்டு வருகிறது. நம் உடலில் உள்ள அதிகப்படியான நீரை குறைத்து, வயிறு உப்புசம் ஏற்படாமல் தடுக்கிறது.இரவில், ஒரு லிட்டர் நீரில், 10 கிராம் பார்லி அரிசியை ஊற வைத்து, காலையில் கொதிக்க வைத்து, கால் லிட்டராக சுண்டிய பின், வடிகட்டி குடிக்கலாம். இது, சிறுநீரக பாதை அடைப்பை நீக்கி, ஆரம்ப கட்ட புரோஸ்டேட் பிரச்னையை சரியாக்கும். நேரடியாக குடிக்க முடியாதவர்கள், இதனுடன் சர்க்கரை பாகு அல்லது பழச்சாறு கலந்து கொள்ளலாம்.மருந்துகளின் வீரியத்தை குறைத்து விடும் என்பதால், மாத்திரை, மருந்துகள் எடுத்துக் கொள்ளும் போது மட்டும், பார்லி சாப்பிட கூடாது.தொகுப்பு: தேவ்