உள்ளூர் செய்திகள்

சோதனை!

பெரியவர் ஒருவர் இருந்தார். அவருக்கு அடிக்கடி கடவுள் தரிசனம் கொடுப்பதுடன், சிறிது நேரம் பேசிவிட்டும் செல்வார்.ஒருநாள், பெரியவரை தேடி வந்த ஏழை பக்தர் ஒருவர், 'நீங்கள் தான் அடிக்கடி கடவுளிடம் பேசிக்கிட்டு இருக்கீங்களே... எனக்காக ஒரு விஷயம் அவரிடம் கேட்டுச் சொல்லக் கூடாதா?' என்றார்.'என்ன கேட்கணும் சொல்லுங்க...' என்றார், பெரியவர்.'கடவுள் ஏன், எனக்குன்னு பார்த்து கஷ்டத்துக்கு மேல கஷ்டமா கொடுத்துக்கிட்டு இருக்கார் என, கேட்டு சொல்லுங்கள். இவ்வளவுக்கும், நான் தினமும் அவரைத்தான், கும்பிட்டுக்கிட்டு இருக்கேன். பூஜை செய்து வருகிறேன்.'இருக்கிற கஷ்டம் போதாதுன்னு, நேற்று, என் சின்ன குடிசையும் இடிந்து விட்டது. தங்க கூட இடமில்லாமல் தவிக்கிறேன். நான் என்ன தப்பு செய்தேன் என, கடவுளிடம் கொஞ்சம் கேட்டு சொல்லுங்களேன்...' என்றார். 'சரி, கேட்டுச் சொல்றேன்...' என்றார், பெரியவர்.கொஞ்சநாள் கழித்து, ஒருநாள், பெரியவரை பார்க்க வந்தார், கடவுள். ஏழை பக்தர் சொன்ன விஷயத்தை கேட்டார், பெரியவர். 'இதுக்கு நான் பதில் சொல்றேன். ஆனால், அதுக்கு முன், நீ எனக்கு ஒரு உதவி செய்யணும்...' என்றார். 'என்ன செய்யணும்?' 'ஒரு செங்கல் வேண்டும்...' என்றார். உடனே, பக்கத்து டவுனுக்கு போனார், பெரியவர். அங்கு எல்லாம் பெரிய கட்டடமாக இருக்க, அதிலிருந்து செங்கல்லை எடுக்க மனம் வரவில்லை. இன்னும் சிறிது துாரம் சென்றதும், அங்கே, பாதி இடிந்த நிலையில் வீடு இருந்தது.அதிலிருந்து ஒரு செங்கல்லை பிடித்து இழுக்க, மீத கட்டடமும் பொல பொலவென இடிந்து விழுந்தது. அதை பற்றி கவலைப்படாமல், செங்கல்லை எடுத்து வந்து கடவுளிடம் கொடுத்தார், பெரியவர்.'இந்த கல்லை எங்கே இருந்து எடுத்து வந்தே?' என கேட்டார், கடவுள்.'ஒரு பழைய வீட்டில் இருந்து எடுத்து வந்தேன்...' என்றார்.'ஏன், அங்கேயிருந்த, பெரிய கட்டடங்களில் இருந்து எடுக்கலே?' என்று கேட்டார். 'அவை நல்ல கட்டடமாக இருந்தது. அதில் இருந்து எடுத்தால், அதன் அழகு கெட்டுவிடும். பழைய வீட்டில் இருந்து எடுத்தது, நல்லதாக போனது. இப்போது அங்கே ஒரு புது வீடு கட்டிவிடுவாங்க...' என்றார்.'நான், அந்த பக்தனுக்கு கஷ்டத்துக்கு மேல் கஷ்டமாக கொடுத்தது, இதே காரணத்தால் தான். அவனுக்கு, வைராக்கியம் அதிகரிப்பதற்காக இப்படி செய்கிறேன். கஷ்டங்கள் அதிகரிக்க, அதிகரிக்க அவர் புது மனுஷனாக மாறிவிடுவார்...' என, விளக்கம் கொடுத்தார், கடவுள். இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்... துன்பத்தை கண்டு துவண்டு போகக் கூடாது. துன்பம் வரும்போது, நமக்கு மன உறுதி வரணும். அந்த மன உறுதியை துணையாக வைத்து, நாம் புது மனுஷனாக மாறலாம். பி. என். பி.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !