ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி!
கோகுலாஷ்டமி அல்லது ஜன்மாஷ்டமி, மும்பை மற்றும் புனாவில், 'டாகி ஹான்றி' என்ற பெயருடன் இந்நிகழ்வு, மிக முக்கியமானதாக இருக்கிறது. நம் ஊரில் உறியடித்தல் நிகழ்ச்சி போல், இவர்கள் ஊரில் மிக உயரமான இடத்தில் பானை கட்டப்பட்டிருக்கும். ஆண்கள் ஒருவர் மீது ஒருவர் பிரமிடு போல ஏறி, உயரத்தில் மோருடன் கட்டப்பட்டிருக்கும் மண் பானையை உடைப்பர். அப்போது, மோர், அந்த குழுவினர் அத்தனை பேர் மீதும் விழும். இந்த நிகழ்வு, குழந்தை மாயக் கண்ணனின் சிறு வயதில் வெண்ணெய் திருடி உண்பதை அடிப்படையாகக் கொண்டு ஏற்படுத்தப்பட்டது. இதில், கிடைக்கும் பரிசு தொகைக்காகவே போட்டி போடுபவர்கள் அதிகம். இந்த குழுவினர், மண்டல்ஸ் அல்லது ஹண்டல் என்ற பெயரில் அழைக்கப் படுகின்றனர். இவர்கள் அந்த பகுதி முழுவதும் சுற்றித்திரிந்து இதுபோன்ற பானைகளை எவ்வளவு முடியுமோ அவ்வளவு உடைத்து, வெற்றி வாகை சூடுவர்.பிருந்தாவனத்தில் வம்சீவட்! கண்ணன், தன் புல்லாங்குழல் இசையால் கோபியரை கவர்ந்த இடம், வம்சீவட். வம்சீ என்றால் புல்லாங்குழல். வட் என்றால், ஆல மரம் என்று பொருள். இங்கிருக்கும் மூலவரின் திருநாமம் வம்சீவட விஹாரி கிருஷ்ணன்.பல வடிவம் எடுத்து, ஒவ்வொரு கோபியருடனும் லீலை புரிவதை, கோவிலுக்குள் ஓவியமாய் தீட்டி வைத்திருக்கின்றனர். நான்கு பக்கங்களிலும் வரிசைப்படி, ராமானுஜர், மத்வர், விஷ்ணுஸ்வாமி மற்றும் நிம்பார்கர் ஆகிய ஞானியர்களின் விக்கிரகங்கள் வடிக்கப்பட்டுள்ளன.துவாரகாதீசன்!துவாரகாவில் கோவில் கொண்ட கண்ணனுக்கு, துவாரகாதீசன் என்ற திருப்பெயர் உள்ளது. ஜகத் மந்திர் எனப்படும் இத்தலத்தில் உள்ள முக்கிய வாயிலின் பெயர், சுவர்க்க துவாரம். இது எந்நேரமும் திறந்தே இருக்கும்.இதை கடந்து போனால் மோட்ச துவாரம். அதையும் கடந்து சென்றால், கண்ணனின் தரிசனம். இந்த இரு வாசல்களுக்கு இடையே, பலராமன், தேவகி, ராதை, சத்தியபாமா, லட்சுமி, சரஸ்வதி மற்றும் காயத்ரி சன்னிதிகளும், ருக்மணிக்கு தனி கோவிலும் உள்ளது.கரையும் மண்! யமுனை நதிக்கரையில் நந்த காம் என்ற இடத்தில், கண்ணனுக்கு சிறிய கோவில் உள்ளது. இங்கு கண்ணனின் பெயர், பிரமாண்ட விஹாரி. மண்ணை உண்ட வாயைத் திறந்து, தன் அன்னைக்கு அண்ட சராசரத்தையும் காட்டிய இடம் இது. அதனால், இன்றும் இங்கு மண்ணையே பிரசாதமாக தருகின்றனர். இதற்கென பிரத்யேக மண் வரவழைக்கப்பட்டு, பகவானுக்கு நிவேதனம் செய்யப்படுகிறது. இந்த மண்ணை வாயில் போட்டால் கரையும். முக்தி அளிக்கும், வட மதுரா! கண்ணன் அவதரித்தது, விரஜ பூமி என்ற வடமதுரா பகுதி. அவர் வளர்ந்தது, கோகுலம். இவற்றுள், கண்ணன் பிறந்த வடமதுரா, முக்தி அளிக்கும் ஏழு நகரங்களில் ஒன்று என, மகாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது. யமுனை நதியின் ஒரு கரையில் வட மதுராவும், எதிர் கரையில் கோகுலமும் அமைந்துள்ளன.திருவடி மாக்கோலம் ஏன்?தன் வீட்டிற்கு, கண்ணன் வந்து, வெண்ணெய் திருட வேண்டும் என, ஒவ்வொரு கோபிகையையும் விரும்புவாளாம். கொட்டிய தயிரில் காலை வைத்து, கண்ணன் நடந்த அடிச்சுவடுகளை காட்டவே, கிருஷ்ண ஜெயந்தி அன்று, ஒவ்வொரு வீட்டிலும் வாசலிலிருந்து, பூஜையறை வரை, கண்ணனின் திருவடி மாக்கோலமாக போடப்படுகிறது.தொகுப்பு: ஆர்.ஜெயலட்சுமி