அம்மா என்றொரு தெய்வம்!
கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் திணறினாள், வனிதா. மூலைக்கொன்றாய் படுத்திருக்கும் தன் மூன்று பெண் குழந்தைகளையும் பார்த்தவுடன், அவளுக்கு மேலும் அழுகை வெடித்தது. செய்தி கேள்விப்பட்டு ஊரிலிருந்து வந்திருந்த, அம்மா அஞ்சலை சோர்வுடன் முற்றத்தில் அமர்ந்திருந்தாள். நேற்றிலிருந்து கட்டிய இடத்திலேயே புல்லோ, தண்ணீரோ இல்லாமல், மூன்று ஆட்டுக்குட்டிகளும் விடாமல் கத்திக் கொண்டிருந்தன. ரோட்டில் சென்று கொண்டிருந்த அடுத்த தெரு, தனபாக்கியம், ''என்னடி பண்ற? அவன் தான் ஓடிப் போயிட்டான். இந்த பிள்ளைகளுக்கு கஞ்சி தண்ணி வச்சு கொடுக்காம, அதுங்களையும் கொன்னுடாதடி,'' என்றாள். பதிலுக்கு எதுவும் சொல்லவில்லை, வனிதா. என்ன சொல்வது? ஆளாளுக்கு எது வேண்டுமானாலும் பேசத்தான் செய்வர். இன்று ஒரு நாள் பேசுவர், நாளை அனுபவிக்க போவது அவளும், அவளது பிள்ளைகளும் தானே! என்ன குறை வைத்தாள் அந்த பாவிக்கு? அந்த சண்டாளன் ஏன் இப்படி நடந்து கொண்டான்? வனிதாவை குழந்தை முதல் செல்லமாக வளர்த்தாள், அவளது அம்மா அஞ்சலை. அவள் கணவன் விபத்தொன்றில் இறந்து போனதும், கூலி வேலைக்கு போய் வனிதாவையும், அவளது அண்ணன் சரவணனையும் படிக்க வைத்தாள், அஞ்சலை. டிகிரி படித்து, திருப்பூர் பனியன் கம்பெனி ஒன்றில் வேலைக்கு போய் விட்டான், சரவணன். டிகிரி முடித்து, வீட்டிலேயே இருந்தாள், வனிதா. சரவணன் பொறுப்பான பையன்; கம்பெனிக்குப் போன சில ஆண்டுகளில், கொஞ்சம் பணம் சேர்த்து, வனிதாவிற்கு நகைகள் வாங்கினான் குணசேகரனுக்கும், வனிதாவுக்கும் திருமணம் செய்து வைத்தான். குணசேகரனிடம் பெரிய வசதி இல்லை. ஒரே பையன். வீடு மட்டும் தான் இருந்தது. வெளிநாடு போய்விட்டு வந்திருந்தான். அங்கும் கூலி வேலை தான். ஊருக்கு வந்தவனுக்கு, மீண்டும், வெளிநாடு போக விருப்பமில்லை. திருமணம் முடிந்ததும், ஊரில் கிடைத்த வேலைக்குப் போனான். அவன் மீது உயிரே வைத்திருந்தாள், வனிதா. இல்லற வாழ்வில், அவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் பிறந்தனர். மூத்தவள், பபிதா ஏழாம் வகுப்பு. அடுத்தவள், பரமேஸ்வரி நான்காம் வகுப்பும், அனிதா, ஒன்றாம் வகுப்பும் படிக்கின்றனர். அழகாய்தான் போய்க்கொண்டிருந்தது வாழ்க்கை! நிரந்தர வேலை இல்லாமல் குடும்பத்தை எப்படி நடத்துவது? அதனால், கடைத்தெருவில் இருந்த ஒரு ஹோட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலைக்கு போனான், குணசேகரன். பி ரச்னையில்லாமல் வாழ்க்கை ஓடிய நிலையில், சமீபகாலமாக வேலை முடிந்து, கால தாமதமாக வர ஆரம்பித்தான். சில நாட்கள் வீட்டுக்கே வருவதில்லை. வரும்போது லேசான சாராய வாடை. கண்டித்தாள், வனிதா. 'பொழுதேனிக்கும் நின்று பார்க்கிற வேலை. காலெல்லாம் வலி. ஒரு, 'கட்டிங்' சாப்பிட்டேன்...' என்பான். பின், அந்த, 'கட்டிங்' கூடுதலானது. வாய் குழறியது வீட்டுக்கு பணம் கொடுப்பது குறைந்து போனது. வனிதா வயக்காட்டு வேலைக்கு போய் சம்பாதித்த காசில் தான், ஜீவனம் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. 'பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும், அவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்ற கனவு தகர்ந்து விடுமோ...' என்ற அச்சம் அவளுக்கு இருந்தது. இந்நிலையில், அண்ணன் சரவணன், 20 நாட்களுக்கு முன், போன் செய்தான். 'வனி... மச்சான் போக்கு சரியில்லைன்னு நினைக்கிறேன்...' என்றான் தயக்கத்துடன். 'என்னண்ணே சொல்றே?' என்றாள் அதிர்ச்சியுடன், வனிதா! 'ஆமா, வனிதா. போன வாரம், நான் பைக்ல வந்துகிட்டு இருந்தேன். அப்போது ஒரு பொம்பளையோட மச்சான் போயிட்டு இருந்தாரு. என்னை பார்க்கல. நான் ஹெல்மெட் போட்டுகிட்டு இருந்தேன். வண்டியை ஓரமா நிப்பாட்டிட்டு பார்த்தேன். அவங்க ரெண்டு பேரும் ஒரு லாட்ஜுக்குள் போனாங்க...' என்றான். வனிதாவிற்கு ஆகாயம் வெடித்து, அவள் தலையில் விழுந்தது! 'கடவுளே!' என்று அதிர்ச்சியுடன் கத்தினாள், வனிதா. 'அவ யாரு என்னன்னு, மச்சான் வேலை செய்யற கடைக்கு பக்கத்தில் உள்ள பிரண்டுகிட்ட விசாரிக்க சொன்னேன். அவன் விசாரிச்சுட்டு, அவ மச்சான் வேலை பார்க்கிற ஹோட்டலில் பாத்திரம் கழுவுறவளாம்...' என்றான். அவள் வீடு இருக்கும் இடத்தையும் விளக்கமாக சொன்னான், சரவணன். இ ரவு, குணா வீட்டுக்கு வந்ததும் கேட்கலாம் என்று இருந்தாள். 'எப்படி கேட்பது...' என்று அவளுக்கு தெரியவில்லை. இரவு குழந்தைகள் துாங்கியதும் கேட்கலாம் என்று நினைத்தாள். ஆனால், அன்று இரவு அவன் வரவே இல்லை. மறுநாள் இரவு தான் வந்தான். 'நண்பனுக்கு உடம்பு சரியில்லை; மருத்துவமனையில் இருந்தேன்...' என்றான். குடித்திருந்தான். 'உன்னை போன வாரம் டவுன்ல பார்த்ததாக ஒரு அக்கா சொன்னாங்க...' என்று ஆரம்பித்தாள். சற்று நேரம் அமைதியாக இருந்தவன், 'ஆமா, ஒருத்தன் கொஞ்சம் கைமாத்தாக பணம் வாங்கி இருந்தான். அதான் கேட்க போனேன்...' என்று கூறி, 'தொணதொணன்னு பேசாத, துாக்கம் வருது...' என்று திரும்பி படுத்துக் கொண்டான். அதன் பின், அவன் நடவடிக்கைகள் சுத்தமாக மாறின. எந்த நேரமும் போதையில் இருந்தான். சரியாக வேலைக்கு போவதில்லை, கையில் போட்டிருந்த அரைப்பவுன் மோதிரத்தையும் காணவில்லை; கேட்டால் பதில் இல்லை. நே ற்று காலை ஒரு நடுத்தர வயது ஆள் வீட்டிற்கு வந்தான். வந்தவன், 'வீட்டில் யாரும்மா?' என்றான், சன்னமான குரலில். 'நீங்கள் யாரு?' என்றாள், வனிதா. 'நான், குணா வேலை செய்ற ஹோட்டலில் வேலை பார்க்கிறேன். முதலாளி ஒரு செய்தி சொல்லிட்டு வர சொன்னார்...' என்றான், வந்தவன். 'என்னங்க?' என்றாள், வனிதா. 'குணா நேற்று வீட்டுக்கு வந்தாரா?' என்றான், வந்தவன். 'இல்லையே!' என்றாள், அவனை உற்று நோக்கி! அவன் தொண்டையை செருமியபடி சொன்னான்... 'குணா, நேற்று காலை முதலாளி வீட்டுக்கு போய், குழந்தைக்கு உடம்பு சரியில்லை. 'ஹாஸ்பிடல்ல' சேர்த்திருக்கிறோம். 10 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் தான், 'ட்ரீட்மென்ட்' பண்ண முடியும்ன்னு சொல்லி, பணம் வாங்கிட்டு வந்திருக்கான். 'குழந்தைக்கு உடம்பு சரியில்லை என்று சொன்னதும், முதலாளியும் கொடுத்துட்டாரு. அப்புறம் தான் தெரிஞ்சிருக்கு, இதே காரணத்தை சொல்லி அக்கம், பக்கத்தில் உள்ள கடைகளிலும் இவன் நிறைய பணம் வாங்கி இருக்கான்...' வனிதா அமைதியாக இருக்க அவனே தொடர்ந்தான்... 'நேத்திக்கு கடையில் வேலை பார்க்கிற, சாந்திங்கிற ஒரு பொம்பளையும் வரல. ரெண்டு பேருக்கும் நீண்ட நாட்களாக தொடர்பு இருக்கு. அது, கடையில் உள்ளவங்களை தாண்டி, வெளியில் உள்ளவங்களுக்கும் தெரியும். கடையிலேயே பல முறை கொஞ்சி பேசிக்கிட்டு இருந்ததை, நாங்கள் பார்த்து கண்டிச்சிருக்கோம். 'ரெண்டு பேரும் நேத்து சாயந்தரம், எர்ணாகுளம் எக்ஸ்பிரஸில் கோயம்புத்துார் பக்கம் போயிட்டதா பரவலாக பேசிக்கிறாங்க. முதலாளி இதை, உன்னிடம் சொல்லிட்டு வர சொன்னாரும்மா, வர்றேன்...' என, ஒரே மூச்சில் சொல்லி, தன் பைக்கில் ஏறி சென்றான். அவன் சொன்னதை கேட்டதும், நிலை குலைந்து போனாள், வனிதா. 'பத்திரகாளி அம்மா... நான் யாருக்கு என்ன துரோகம் செய்தேன்? என்னை, ஏன் இப்படி சோதிக்கிற அம்மா...' என்று கதறினாள். வனிதா போட்ட கூப்பாட்டில் தெருவே கூடி விட்டது. ஊர்க்காரர்களும், உறவுக்காரர்களும் குணசேகரனை விட்டு, ஹோட்டலில் பாத்திரம் கழுவும் அந்த பெண்ணை கழுவி ஊற்றினர். உள்ளுர் காளியாத்தா முதல், சமயபுரம் மாரியாத்தா வரை சபித்தாள், வனிதா. மூன்று குழந்தைகளையும் எப்படி வளர்ப்பது. அவள் கோபம் அந்த, சாந்தி மீது திரும்பியது. 'திமிர் பிடித்த நாயி... இப்படி அழகாய் போய்க்கொண்டிருந்த குடும்பத்தை சிதைத்து விட்டாளே! உலகத்தில் ஆம்பளைகளா இல்லை? இப்படி குடும்பம், குழந்தை என்று இருக்கும் ஒரு மனுஷனை மயக்கி, என் குடும்பத்தை தெருவில் நிறுத்தி விட்டாளே, பாவி...' என்று கதறியவள் அப்படியே மயங்கி சாய்ந்தாள். மா லையில் பிள்ளைகள் பள்ளிவிட்டு வந்து எழுப்பியதும் தான், அவளுக்கு விழிப்பு வந்தது. எழுந்ததும் அவளுக்கு மீண்டும் அழுகை வெடித்தது. ஆனால், இப்போது அதையும் மீறி ஓர், 'ஆக்ரோஷம்' ஏற்பட்டது. ஒரு முடிவுக்கு வந்தவளாய் அழுகையை நிறுத்தினாள். 'அவளுக்கும், ஒரு புருஷன் இருப்பான் தானே! அந்த நாயை பார்த்து, இப்படி பொண்டாட்டியை ஊர் மேய விட்டு எங்கடா போன என்று கேட்டு, அவனை செருப்பால் அடித்து விட்டு வந்தால் தான் ஆத்திரம் அடங்கும்!' தலைமுடியை உதறி முடிந்தாள். முந்தானையை சரி செய்தாள். மூத்தவளை அழைத்தாள், ''பாப்பா, தங்கச்சிங்க ரெண்டு பேரையும் பார்த்துக்க... நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வந்துடறேன்,'' என்று ஆக்ரோஷமாய் புறப்பட்டாள். ''எங்கடி போற?'' என்று பின்னாலேயே கத்தினாள், அவளது அம்மாக்காரி. அதை காதில் வாங்கவில்லை, வனிதா. வழியில் மளிகை கடையில் நின்று, ஹோட்டலில் வேலை பார்க்கும், சாந்தி வீடு எது என்று கேட்டு தெரிந்து கொண்டாள். நேராய் போய் அவள் வீட்டு வாசலில் நின்றாள். அங்கு கிழவி ஒருத்தி, கோணி சாக்கில் குப்பையாய் சாய்ந்து கிடந்தாள். ''இந்தாம்மா சாந்தியோட புருஷன் எங்கே?'' என்றாள், குரலை உயர்த்தி! ''அதோ பின்னாடி கட்டிலில் கிடக்கிறானே, குடிகாரப்பயன்,'' என்றவள், ''ஆமாம், நீ யாரும்மா?'' என்றாள் கிழவி. பதில் ஏதும் சொல்லாமல் கட்டிலை பார்த்தாள், வனிதா. கயிற்று கட்டிலில் முண்டாப் பனியன், கைலியோடு, குறட்டை சத்தத்துடன் கிடந்தான், சாந்தி புருஷன். ''இவன் பொழுதன்னிக்கும் குடிச்சிப்புட்டு கிடந்தான். அவ, எவனோ ஹோட்டலில் கூட வேலை பார்க்கிறவனாம், அவன் கூட ஓடிப்புட்டா. இவன் குடிச்சுப்புட்டு கிடக்கிறான். எனக்கு கண்ணு, மண்ணு தெரியாது. போனவ, அதோ நிக்குதே... பொட்டை கழுதை, அதையும் துாக்கிக்கிட்டு போய் இருக்கலாம். அதுதான் என்ன பாவம் செஞ்சுதோ... சோறு, தண்ணீர் இல்லாமல் கிடந்து சாகப்போகுது,'' என்றாள், கிழவி. கிழவி சுட்டிக்காட்டிய திசையில் திரும்பி பார்த்தாள், வனிதா. எண்ணெய் காணாத தலையுடன், வயிறெல்லாம் மண் படிந்து, ஜட்டியுடன் மண்ணை அள்ளி துாவியபடி நின்றிருந்தது, அந்த மூன்று வயதுள்ள பெண் குழந்தை. கட்டிலில் இருக்கும், சாந்தியின் கணவனையும், குழந்தையையும் மற்றும் கிழவியையும் மாறி மாறி பார்த்தாள், வனிதா. கிழவி இப்பவோ, எப்பவோ என்று இருந்தாள், அந்த குடிகாரன், கிழவிக்கு முன்பே போய் சேர்ந்து விடுவான் போல் கிடந்தான். குழந்தையை மீண்டும் பார்த்தாள், வனிதா; அது பொக்கை வாய் பிளந்து, '...ம்மா' என்றபடி அவளை நோக்கி வந்தது. அருகில் வந்ததும், அவள் அம்மா இல்லை என்று தெரிந்ததும், மீண்டும் அழுதது. அதை பார்த்ததும், வனிதாவிற்கு சட்டென்று உடல் குலுங்கியது; கண்ணீர் பெருக்கெடுத்தது. அக்குழந்தையை அப்படியே வாரி அள்ளி, நெஞ்சோடு அணைத்தபடி தன் வீடு நோக்கி நடந்தாள்! தங்க.நாகேந்திரன் படிப்பு : எம்.ஏ., பி.எட்., (ஆங்கில இலக்கியம்) பணி : ஆசிரியர்.சொந்த ஊர் : நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே உள்ள, செம்பொடை என்ற ஊர். இதுவரை, 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், பல்வேறு இதழ்களில் வெளியாகியுள்ளன. கதைக்கரு பிறந்த விதம்: நண்பர் ஒருவரின் சகோதரியிடம் வெளிப்பட்ட தாய்மை குணத்தை பார்த்ததும் எழுத துாண்டியது. தமிழின் சிறந்த சிறுகதை எழுத்தாளராக வேண்டும் என்பது இவரது லட்சியம்.