உள்ளூர் செய்திகள்

தீபாராதனா! (7)

முன்கதைச் சுருக்கம்: தொழிலதிபர் ஞானசேகரன் திடீரென்று இறந்துவிட, அவரது இறப்பு எதனால் ஏற்பட்டது என்று, கம்பெனி ஜி.எம்.,மிடம் விசாரித்தாள், ஞானசேகரனின் மகள், தீபா. அப்போது தான், யாரோ ஒருவன் கூறிய யோசனைப்படி, 'லெதர் ஜாக்கெட்'களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழிலை ஆரம்பித்ததும், அந்த, 'லெதர் ஜாக்கெட்'டில் போதை பொருட்களை கடத்தி, கஸ்டம்சில் மாட்டிக் கொண்டதையும் விளக்கமாக கூறினார், ஜி.எம்., முத்துராமன். 'அந்த சிக்கலிலிருந்து விடுபட, அரசியல்வாதிகளுக்கும், ஆபீசர்களுக்கும் ஏராளமாக லஞ்சம் கொடுக்க வேண்டியாதாகி விட்டது...' என்றும் கூற, 'இதெல்லாம் அவரது சின்ன வீட்டு ஆளுங்க கூறிய யோசனையாயிருக்கும்...' என்று ஆத்திரமாக கூறினாள், ஞானசேகரன் மனைவி, மஞ்சுளா. ஞானசேகரனை, 'அப்பா' என்று கூறியபடி வந்த, ஆராதனா மற்றும் அவள் தம்பி வருண் பற்றி, விசாரிக்கும்படி, தன், காதலன் திலகனிடம் கூறினாள்.தீபா. திலகனிடம், தீபா எரிந்து விழுந்ததற்கு காரணம் இருந்தது. வாக்கு கொடுத்தபடி, தீபாவை சந்திக்க வந்திருந்தார், முத்துராமன். அவருடன், கம்பெனி வக்கீல், பத்மனாபனும் கையில் ஒரு சிறிய, பெட்டியுடன் வந்திருந்தார். இருவர் முகங்களிலும் சுரத்தில்லை. அவர்கள், ஒரு சோபாவில் அமர்ந்திருக்க, தீபாவும், மஞ்சுளாவும் எதிர் சோபாவில் உட்கார்ந்திருந்தனர். நெற்றிச் சூரணம் கலையாமல் கைக்குட்டையால் ஒற்றியபடி, தொண்டையை செருமிக் கொண்டார், பத்மனாபன். ''ரொம்பக் கஷ்டமாயிருக்கும்மா... சாரோட குடும்பத்துக்கு இப்படி ஒரு நிலைமை வரும்ன்னு நான் கனவுலயும் நெனைச்சதில்லை. என்ன செய்யறது, எல்லாம் விதி! பெருமாள் கட்டளையை மாத்த முடியுமா?'' ''சார், புலம்பாம விஷயம் என்னன்னு நறுக்குன்னு சொல்லுங்க,'' என, எரிந்து விழுந்தாள், தீபா. தன் அப்பாவின் மீது பொங்கி எழுந்த கோபத்திற்கெல்லாம் வடிகாலாய் எதிரே இருப்பவர்கள் மீது பாய்ந்து, பிராண்டி கடித்துக் குதறுவது தப்பு என்று அவள் புத்தி ஒரு புறம் எச்சரித்தாலும், நாக்கு கட்டுப்பாட்டை இழந்திருந்தது. அதை சற்றும் கவனிக்காதவர் போல், தன் பெட்டியை திறந்து, குறுக்கில் மடித்த கற்றை பேப்பர்களை எடுத்தார், பத்மனாபன். ''அப்பா கடைசியா திருத்தி எழுதச் சொன்ன உயில் இது... படிக்கட்டுமா?'' என்று கூறி படிக்க ஆரம்பித்தார். ''சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த ஞானசேகரனாகிய நான், சுயநினைவுடனும்...'' ''சார், ப்ளீஸ் வெறுப்பேத்தாதீங்க. உயிலை வரிவரியா நாங்க அப்புறம் சாவகாசமா படிச்சுப் புரிஞ்சுக்கறோம். மேட்டர் என்னவோ அதைச் சுருக்கமா சொல்லுங்க,'' என்ற, தீபாவின் பொறுமையற்ற குரல் படபடவென்று பொரிந்தது. அவளைத் திகைத்து பார்த்தார், முத்துராமன். 'வயதில் மூத்த ஒருவரிடம் கொஞ்சமும் நாகரிகம் இல்லாமல் இப்படியா கோபமாக பேசுவது...' என்பது போல், அவர் மஞ்சுளாவை பார்த்தார். அவள் முகத்திலும் அமைதியில்லை. மெல்லத் திரும்பி, பத்மனாபனை பார்த்தார். தீபாவுடைய மனநிலையை புரிந்துகொண்டவர் போல், சின்னதாக தலையை அசைத்தார், பத்மனாபன். முகத்தில் எந்த பாதிப்பும் காட்டாமல், கையிலிருந்த காகிதக் கற்றையை மடித்து பெட்டிக்குள் வைத்து விட்டு நிமிர்ந்தார். ''புது பிசினஸுக்காக, ஞானசேகரன் சார் வங்கியில நிறைய கடன் வாங்கியிருந்தாரு. அது தவிர, கணக்குல காட்டாம, 'இன்வெஸ்ட்' பண்றதுக்காக வெளியில கொள்ளை வட்டிக்கும் கோடிக்கணக்குல பணம் வாங்கியிருந்தார். இருந்த கடனையெல்லாம் அடைக்கறதுக்கும், 'கஸ்டம்ஸ்'ல மாட்டிக்கிட்ட கப்பலை மீட்கறதுக்கும் அவருக்கு வேறு வழி தெரியல.'' ''அதனால பொட்டுன்னு உயிரை விட்டுட்டாரா? இப்ப கடனையெல்லாம் நான் அடைக்கணுமா?'' தீபாவின் குரல் உயர்ந்தது. ''அவசரப்படாத, தீபா. உங்கப்பா, உங்க மேல கடன் எதையும் சுமையா ஏத்தல.'' ''பின்ன?'' ''கல்யாண் மேத்தான்னு புனாவுல இருக்கற ஒரு பெரிய, 'பிசினஸ்மேன்' ஏற்கனவே நம்ப கம்பெனில நிறைய, 'இன்வெஸ்ட்' பண்ணியிருந்தாரு. அவர்கிட்ட சார் உதவி கேட்டாரு. மொத்த செலவையும் அவர் ஏத்துக்கத் தயாராயிருந்தாரு. அதுக்கு ஈடா, நம்ப கம்பெனியோட மொத்த ஷேரையும் அவர் பேருக்கு அப்பா மாத்த வேண்டியிருந்தது.'' ''என்ன சொல்றீங்க?'' ''தீபா, 'ஷிப்பிங் ஏஜன்சீஸ்' நம்ம கையை விட்டுப் போயிருச்சு,'' என சொல்லி, தலையை குனிந்து கொண்டார், பத்மனாபன். ''அதெப்படி? அம்மாவுக்கும் கம்பெனில நெறைய, 'ஷேர்' இருக்கே?'' ''இருந்தது. எல்லாத்தையும், கல்யாண் மேத்தாவுக்கு மாத்தித் தரதா, மஞ்சுளா மேடமும் கையெழுத்து போட்டுக் கொடுத்திருந்தாங்களே!'' ''என்னம்மா இது? எங்கிட்ட நீ சொல்லவேயில்லியே?'' என, அதிர்ந்துபோய் கேட்டாள், தீபா. நிமிர்ந்து உட்கார்ந்து, ''உங்கப்பா மனசறிஞ்சே ஏமாந்திருக்காரு, தீபா. போன வாரம் நெறைய பேப்பரை காட்டி கையெழுத்து கேட்டாரு. அப்பப்ப அப்படி வாங்கிட்டுப் போறது வழக்கம் தானே? அதனால, ஒரு வரிகூட படிச்சுப் பார்க்காம, காட்டுன இடத்திலெல்லாம் கையெழுத்து போட்டேன். இப்படி துரோகம் பண்ணுவாருன்னு நினைக்கலியே...'' என்றாள், மஞ்சுளா. ஹாலில் மாட்டியிருந்த, ஞானசேகரனின் படத்தை காழ்ப்புடன் பார்த்தாள், மஞ்சுளா. பிறகு, தலையைத் திருப்பி, முத்துராமனையும், பத்மனாபனையும் பார்த்தாள். ''அது செல்லாது. நான் கோர்ட்டுக்கு போவேன்'' என்று, க்ரீச் குரலில் இரைந்தாள், மஞ்சுளா. ''இரும்மா, இரும்மா. சட்டத்துல கம்பெனியை கைமாத்த முறையா என்னென்ன செய்யணுமோ, அதையெல்லாம் செஞ்சு தான், கல்யாண் மேத்தா பேருக்கு மாத்தியிருக்காரு. கோர்ட்டுக்கு போய் புண்ணியமில்ல,'' என்றார், வக்கீல் பத்மநாபன். ''அப்ப, நாளைக்கு காலையில சாமான் சட்டியெல்லாம் துாக்கிட்டு நாங்க நடுத்தெருவுக்கு போயிடணுமா?'' இந்தக் கேள்வியை, தீபா கேட்டுக் கொண்டிருந்தபோது தான், திலகனிடமிருந்து போனில் முதல் அழைப்பு வந்தது; எடுக்காமல் தவிர்த்தாள். ''ஏம்மா, இவ்ளோ கோபப்படறே? கம்பெனியோட இடம், கப்பல், கட்டடம் எல்லாம் வங்கி லோனுக்கு அடமானமா வெச்சிருக்கு. ஆனா, இந்த வீடு பேர்ல கடன் எதுவும் இல்ல. இந்த வீடு, உன்னோட காரு, அம்மாவோட காரு இதெல்லாம் உங்க ரெண்டு பேருக்கும் தான் உயில்ல எழுதியிருக்காரு.'' இதைக் கேட்டதும், 'எவ்ளோ பெரிய மனசு!' முணங்கினாள், தீபா. தன் அப்பாவின் மீது, தீபாவுக்கு எப்பேர்ப்பட்ட மரியாதை இருந்தது என்று, முத்துராமனுக்கு தெரியும்; இரண்டே நாளில் அது இப்படி தலைகுப்புற கவிழும் என்று அவரால் நம்பவே முடியவில்லை. ''முக்கியமான விஷயம் அவ்வளவுதாம்மா.'' ''இருங்க, வேற யார் யார் பேருல்லாம் உயில்ல எழுதியிருக்கு?'' ''ஏம்மா இப்படி கோபப்படறே?'' ''கேட்டா கேட்டதுக்கு பதில் சொல்லுங்க சார். எதிர்க்கேள்வி கேட்காதீங்க.'' ''தீபா, அப்பா சொன்னதைத்தான் இவர் எழுதியிருக்காரு. இவர் மேல ஏன் எரிஞ்சு விழறே?'' என்று முத்துராமன் சமாதானம் செய்ய முயன்றபோது, மறுபடியும் திலகனிடமிருந்து அழைப்பு. தீபா துண்டித்தாள். ''திடீர்ன்னு ஒரு நாள் மந்திரவாதி மாதிரி கோலையாட்டி, இருக்கிறதையெல்லாம் பறிச்சுட்டுப் போனா, உங்களுக்கும் கோபம் வரும், அங்கிள்.'' நிலைமையை பக்குவத்தோடு அணுகத் தெரிந்தவராக இருந்தார், பத்மனாபன். ''உனக்கு என்னம்மா தெரிஞ்சுக்கணும்?'' ''ஆராதனா, வருண்னு ரெண்டு பேருக்கும் உயில்ல எத்தனை சொத்து எழுதி வெச்சிருக்காரு எங்கப்பான்னு சொல்லுங்க,'' என்று குரலில் கோபத்தை குறைத்து கொள்ளாமலேயே கேட்டாள், தீபா. ''ஆராதனாவுக்கு எதுவும் இல்லம்மா. வருண்னு ஒரு பையனோட படிப்பு முடியற வரைக்கும், 'காலேஜ் பீஸ்' கட்டறதுக்குனு ஒரு தொகையை ஒதுக்கி எழுதியிருக்காரு.'' ''அவங்கம்மாவுக்கு?'' ''அவங்கம்மா யாரு?'' என்று திகைத்துப்போய் கேட்டார், பத்மனாபன். ''அதையெல்லாம் சொல்லிட்டு போயா துரோகம் பண்ணாரு?'' என முனகினாள், மஞ்சுளா. இப்போது, திலகனிடமிருந்து மீண்டும் அழைப்பு. ''கட் பண்ணா, புரிஞ்சுக்க மாட்டே?'' என்று கத்தினாள், தீபா. ''ஆராதனா பத்தி விசாரிக்க சொல்லியிருந்தியே,'' என்று அவன் குரல் வர, ''ஒரு மண்ணும் வேண்டாம். வை போனை,'' என்று தொடர்பை துண்டித்தாள். ''அப்பா கடைசியா பெங்களூருக்கு எதுக்கு போனாரு? அங்கதான் அவருக்குச் சின்ன வீடு இருக்கா?'' என்றாள், தீபா. ''மறுபடியும் அவசரப்படறம்மா. கல்யாண் மேத்தா பெங்களூருக்கு வந்திருந்தாரு. அப்பாவோட இத்தனை நாள் உழைப்புக்கு அவர் ஒரு தொகையை கொடுக்க விரும்பினாரு. அதை ஒரு பாங்க்ல போட்டு, அதுல வர வட்டிப் பணத்தை மாசாமாசம் உங்க செலவுக்கு கொடுக்க ஒரு ஒப்பந்தம் போடத்தான் அப்பா போயிருந்தாரு.'' இப்போது, முத்துராமன் பக்கம் திரும்பினாள், தீபா. ''எங்கப்பாவுக்காக இத்தனை நாள் மாடு மாதிரி உழைச்சீங்களே, உங்களுக்கும் இப்ப வேலை போச்சா?'' ''இல்லம்மா, கல்யாண் மேத்தா என்னையே ஜி.எம்.மா தொடர சொல்லிட்டாரு. சென்னை வரும்போது, உங்க ரெண்டு பேரையும் பார்க்க வரதாவும் சொல்லியிருக்காரு.'' ''அப்பாவோட இறப்புக்கு வராதவரு எங்களை எதுக்கு வந்து பார்க்கணுமாம்?'' ''சாரை பெங்களூர்ல, 'மீட்' பண்ணிட்டு அவர் சிங்கப்பூர் போயிட்டாரு, தீபா. வருவாரு, கண்டிப்பா வருவாரு.'' ''எனக்கு ரொம்ப, 'டயர்டா' இருக்கு. நான் படுக்கப் போறேன்,'' என்று எழுந்த, மஞ்சுளா உடனே தடுமாறினாள். ''அம்மாவை பத்திரமாக கூட்டிட்டுப் போம்மா, தீபா,'' என்று கூறி, அதுதான் சாக்கு என்று எழுந்தார், பத்மனாபன். முத்துராமனும் எழுந்தார். மா லை வெயில், கட்டடங்களின் நிழல்களை கடற்கரை மணலில் நீட்டியிருந்தது. ஓயாத அலைகளில் கால் நனைத்து நிற்கும் கூட்டம். சிலீரென்ற கடற்காற்று. வளையிலிருந்து வெளி வருவதும், நடமாட்டம் கண்டு அடுத்த வளையில் பதுங்குவதுமாக இருந்தன, நண்டுகள். காற்றாடிகளையும், பலுான்களையும் துரத்தும் குழந்தைகள். திலகனுக்கு எதிரில் அமர்ந்து, விரல்களால் மணலை அளைந்து கொண்டிருந்தாள், தீபா. ''ஸாரி, ஸாரி. ஆனாலும் நேத்து அவ்வளவு கோபமா உங்கிட்ட கத்தியிருக்கக் கூடாது, திலக். எனக்கு அப்ப இருந்த மூடு அப்படி. எங்கப்பான்ற துரோகி மேல, கோபம். அதை வக்கீல் கிட்டேயும், உங்கிட்டேயும் காட்டியிருக்கேன்.'' ''தீபு, செத்துப் போனவங்களை திட்டாதே.'' ''செத்துப் போனவங்க கவுரவமானவங்களா இருந்தா திட்டக்கூடாது தான். ஆனா, எப்பேர்ப்பட்ட அயோக்கியத்தனம் பண்ணியிருக்காரு, பாரு.'' ''ஷ்ஷ். மெதுவா பேசு. இது, 'பப்ளிக் பிளேஸ்' எனக்கே, 'ஷாக்'காத்தான் இருக்கு, தீபு.'' ''எங்கண்ணன் போன அப்புறம் என் மேல உயிரே வெச்சிருந்தாருன்னு நெனச்சேன். எல்லாமே நாடகமா? எங்களுக்குத் தெரியாம இன்னொரு பொண்டாட்டி, அவ மூலமா ரெண்டு குழந்தைங்க, வியாபாரத்துலேயும் கள்ளத்தனம். ஒரு வார்த்தை கூட எங்ககிட்ட சொல்லலை தெரியுமா?'' ''எப்படி, தீபு உங்கிட்ட போய் இன்னொரு குடும்பம் இருக்குன்னு சொல்வாரு?'' ''அந்தப் பொண்ணு திடீர்ன்னு அன்னைக்கு வந்து கலக்கிட்டு போச்சே, அப்புறம் பேச்சு மூச்சில்ல. அவங்க குடும்பத்தை நான் பாத்தாகணும், திலக். அவங்கம்மா யாரு, எப்படி எங்க அப்பாவை மடக்கி போட்டாங்க, இப்ப என்ன நிலைமையில இருக்காங்கன்னு எல்லாம் தெரியணும்.'' ''எதுக்கு தீபு?'' ''தெரியணும், திலக். எங்கப்பா இத்தனை ஆண்டுகளா ரகசியமா வச்சிருந்தாரு. இனிமேலும் அது ரகசியமா இருக்கக் கூடாது. எதிர்பாராதவிதமா திடீர்ன்னு அவங்க வேற இடத்துலேர்ந்து வந்து எங்களை, 'அட்டாக்' பண்றதுக்கு முன்னால, அவங்க யாரு, என்னன்னு நாம தெரிஞ்சு வச்சுக்கணும்.'' ''அந்தப் பையன் தங்கியிருக்கிற ஹாஸ்டல்ல போய் அவனைப் பிடிச்சு விசாரிச்சா?'' ''யெஸ். நீயும் என்கூட வா, திலக்.'' ''எப்போ?'' ''இப்பவே'' என்று மணலைத் தட்டிக்கொண்டு எழுந்தாள், தீபா.  - தொடரும். - சுபா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !