உள்ளூர் செய்திகள்

தீபாராதனா! (8)

முன்கதைச் சுருக்கம்: தீ பாவின் அப்பா ஞானசேகரனின் இறப்புக்கு பின், அவரது கம்பெனி நிலவரங்களை பற்றி, ஞானசேகரனின் மனைவி மஞ்சுளாவுக்கும், மகள் தீபாவுக்கும் விளக்கமாக கூறினர், கம்பெனி பொது மேலாளர் முத்துராமனும், வக்கீல் பத்மநாபனும். ஞானசேகரன் பேராசை காரணமாக, முறைகேடாக, 'பிசினஸ்' செய்தும், அதை சரிக்கட்ட, கல்யாண் மேத்தா என்பவரிடமிருந்து ஏகப்பட்ட கடன் வாங்கியிருந்ததும், கடனை திருப்பி செலுத்த முடியாததால், 'தீபா ஷிப்பிங் ஏஜென்சிஸ்' கல்யாண் மேத்தாவிடம் போனதையும் தெளிவாக கூறினர், முத்துராமனும், பத்மநாபனும். இதுதவிர, ஞானசேகரனுக்கு, 'சின்ன வீடு' இருப்பதாக கேள்விப்பட்டு அதிர்ச்சி அடையும் தீபா, அவர்களை பற்றி விசாரிக்க, காதலன் திலகனிடம் கூறினாள். ஆராதனாவின் தம்பி வருண் பற்றிய தகவலை திலகன் தர, உடனே அவனை சந்திக்க புறப்பட்டாள், தீபா. க டற்கரை மணல் வெளியிலிருந்து எழுந்துவிட்ட, தீபாவை தயக்கத்தோடு பார்த்தான், திலகன். ''வருணைப் பார்க்க நீ போகும்போது, நான் எதுக்கு, தீபு? இது, உங்க குடும்பப் பிரச்னை... என்ன இருந்தாலும் நான் மூணாவது மனுஷன்,'' என்ற, திலகனின் குரல் காயப்பட்டது போலிருந்தது. ''புரியுது, திலக். எங்கப்பா அவசரப்பட்டு முடிவெடுக்காம உன்னையும் பார்த்திருந்தாருன்னா, நீயும் எங்க குடும்பத்துல ஒருத்தனாயிருப்பே. அந்த அதிர்ஷ்டம் எனக்கு இல்ல. அதனால, இப்ப நான் உனக்கு அந்நியமாப் போயிட்டேன், இல்ல?'' என்ற, தீபாவின் குரலில் வலி இருந்தது. ''ஐயோ, அப்படி அர்த்தம் பண்ணிக்காத, தீபு. எனக்குத்தான் அதிர்ஷ்டமில்லை.'' என்றான். ''உனக்கு இன்னும் அதிர்ஷ்டம் இருக்கு, திலக். நீ, எம்.பி.ஏ., முடி. முத்துராமன் அங்கிள் தான் கம்பெனில ஜி.எம்.,மா இருக்கப்போறாரு. அப்பா செய்யாததை நிச்சயம் அவர் நமக்கு செய்வாரு.'' திலகன் எழுந்து, அவளுடன் நடந்தபடியே, ''அம்மா எப்படி இருக்காங்க?'' என்றான். ''ஒடிஞ்சு போயிட்டாங்க. அவங்களால நிம்மதியாத் துாங்க முடியலை. நமக்கு எதுக்கு இவ்வளவு பெரிய வீடு? ரெண்டு கார் எதுக்கு? ஒண்ணை வித்திடுன்னுல்லாம் புலம்ப ஆரம்பிச்சிட்டாங்க.'' ''பாவம், உங்கம்மா,'' என்று உலர்ந்த குரலில் சொன்னான், திலகன். காரை நெருங்கியதும், சாவியை அவனிடமே துாக்கிப் போட்டு, ''நீயே ஓட்டு,'' என்றாள், தீபா. மை தானத்தில் கால்பந்து விளையாடி விட்டு, வியர்வையில் ஒட்டிய உடைகளுடன் தன் அறைக்கு திரும்பி கொண்டிருந்தான், வருண். ''வருண்...'' என்று ஒரு குரல் ஓங்கி ஒலித்து, அவனை நிறுத்தியது. ''உன்னை வார்டன் உடனே, 'ரிசப்ஷன்' ரூமுக்கு வரச் சொல்றாரு,'' என்று அங்கிருந்தே குரல் கொடுத்தான், சக மாணவன். வருண் வேகமாக நடந்து, வார்டனின் அறையைக் கடந்து, விருந்தினர் அறையில் நுழைந்ததும், திகைத்தான். அங்கே நாற்காலிகளில், தீபாவும், அவளுடன் ஓர் இளைஞனும் புன்னகையின்றி அமர்ந்திருந்தனர். ''உனக்கு, ஒரு சிஸ்டர்ன்னு தானே சொல்வே? இவங்களும், உன்னோட சிஸ்டர்ன்னு சொல்லிட்டு வந்திருக்காங்க?'' என்றார், வார்டன், குப்பென்று சிகரெட் வாசம் வீச. ''சொல்லேன், வருண். நானும், உன் சிஸ்டர் தானே? எப்படி என்னன்னு அவருக்கு சொல்லேன்,'' என்றாள், தீபா, சற்றே நக்கலாக. முதல் அதிர்ச்சி விலகி, வருண் சகஜ நிலைக்கு வந்திருந்தான். ''ஆமா, சார். இவங்களும் என் சிஸ்டர் தான். அவரும் என் பிரதர் தான். அப்படித்தான் எல்லாரையும் பார்க்கணும்ன்னு, விவேகானந்தர் சொல்லியிருக்காரு?'' என்றான். தீபாவின் புன்னகை நழுவியது. ''உன்கூடக் கொஞ்சம் பேசணும்,'' என்றாள், குரலில் இறுக்கத்தை சேர்த்துக்கொண்டு. ''ரூமுக்குப் போய் டிரெஸ்ஸை மாத்திட்டு வந்துடறேன்.'' ''நோ, நோ. நாம ஒண்ணும் கடைத்தெருக்குப் போகல. ஒரு அஞ்சு, பத்து நிமிஷம் அப்பா பத்தி உன்கிட்ட பேசணும்,'' என்ற, தீபாவின் குரல் நறுக்கென்றிருந்தது. '' இங்க வேணாம். எதிர்ல ஹோட்டல் இருக்கு. அங்க போவோம்,'' என, வார்டனிடம் அனுமதி பெற்று, அவர்களுக்கு வழி காட்டினான், வருண். ஹோ ட்டல் அதிக பரபரப்பில்லாமல் இருந்தது. மூலையில் இருந்த மேஜையில் இடம் பிடித்தனர். தனக்கு எதுவும் வேண்டாம் என்று மறுத்து விட்டான், வருண். இரண்டு காபி, 'ஆர்டர்' செய்து, அவன் பக்கம் திரும்பினாள், தீபா. ''அன்னிக்கு அவசரத்துல எதுவும் கேட்க முடியல. உங்கம்மாவுக்கும், எங்கப்பாவுக்கும் என்ன தொடர்பு?'' வருண் முகம் களையிழந்தது. ''உண்மை என்னன்னு தெரியாம, எங்கம்மாவைப் பத்திப் பேச உங்களுக்கு உரிமையில்ல.'' ''சரி, அந்த உண்மை தான் என்ன?'' என்றான், திலகன், குறுக்கில் புகுந்து. ''நீங்க யார்னே தெரியாது. உங்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்ல.'' வருண், இவ்வளவு துணிச்சலோடு பேசுவான் என்று, தீபாவும் எதிர்பார்க்கவில்லை. ''சரி, உங்கக்காகிட்டயே எல்லாம் கேட்டுக்கறோம். அவ, 'அட்ரஸ்' கொடு,'' என்றாள், தீபா. ''ஒரு நிமிஷம்,'' என, பாக்கெட்டிலிருந்து தன் மொபைலை எடுத்து, ஓர் எண்ணை அழைத்தான், வருண். ''அக்கா, தீபாக்காவும், கூட ஒருத்தரும் வந்திருக்காங்க. உன், 'அட்ரஸ்' கேக்கறாங்க... சரி,'' என்றவன் போனை, தீபாவிடம் நீட்டினான். ''பேசுங்க.'' ''ஹலோ.'' ''தீபா, வருணோட காலேஜுக்கெல்லாம் போய் அவனை தொந்தரவு பண்றது சரியில்ல,'' என்று, ஆராதனாவின் குரல் மிருதுவாகத்தான் ஒலித்தது. ஆனால், தீபாவின் குரல் கனல் கக்கியது. ''நீ யாரு, என்ன ஏதுன்னு சொல்லாம ஓடிப்போயிட்ட. யாரைப்போய் நான் கேக்கறது?'' மறுமுனையில் மெலிதாய்ச் சிரித்தாள், ஆராதனா. ''நாங்க ஓடிப்போகல. அங்க நிக்க விடாம தொரத்தினது நீங்க தான். உங்களுக்கு என்ன வேணும்? என்னைப் பார்க்கணும், அவ்வளவு தானே? நாளைக்கே பார்க்கலாம், பேசலாம். எங்க வரணும் சொல்லுங்க.'' ''எனக்கு உன்னை மட்டுமில்ல, உங்கம்மாவையும் பாக்கணும்,'' என, பச்சைமிளகாய்க் குரலில் சொன்னாள், தீபா. மறுமுனையில் ஆராதனாவின் குரல் சட்டென்று மாறியது. ''அப்படி நெனைச்சபோதெல்லாம் எங்கம்மாவை நீங்க பார்க்க முடியாது. அவங்களை நீங்க எப்பப் பார்க்கலாம்னு நான் தான் சொல்லணும்,'' என்றாள், ஆராதனா. தீபா, அப்படியொரு பதிலை எதிர்பார்க்கவில்லை. ''சரி, நாளைக்கு உன்னைப் பார்க்க எங்க வரணும்?'' ''நீங்களே சொல்லுங்க, தீபா.'' ''பெசன்ட் நகர், 'பீச்' சாயந்திரம் 7:00 மணி.'' ''ஓ.கே., உங்க நம்பர் எங்கிட்ட இருக்கு. மெசேஜ் பண்றேன். ஆனா, இன்னொரு தடவை, வருணை தொந்தரவு பண்ணாதீங்க,'' என்றாள். மறுமுனையில், ஆராதனா தொடர்பைத் துண்டித்தாள். போனை வருணிடம் திருப்பினாள், தீபா. ''உன்கிட்ட பேசுனதுக்கே உங்கக்கா சிலுத்துக்கிட்டு வராளே,'' என்றாள். வருண் பதில் பேசாமல் எழுந்தான். அவர்களிடம் விடைபெறாமல் வெளியேறினாலும், கல்லாவில் இருந்தவரிடம், ''அந்த பில்லை என் கணக்குல எழுதிக்குங்க,'' என்று சொல்ல மறக்கவில்லை. பெசன்ட் நகர் கடற்கரை. மனிதர்களை விட தள்ளுவண்டி கடைகள் அதிகம் தென்பட்டன. மணற்பரப்பில் தெரு நாய்கள் குறுக்கும், நெடுக்கும் ஓடிக்கொண்டிருந்தன. கூட்டத்திலிருந்து ஒதுங்கி, சற்றே சலிப்புடன் காத்திருந்தாள், தீபா. 'போலீஸ் பூத்துக்கு நேர் பின்னால் தானே, ஆராதனா வந்து சந்திப்பதாக சொல்லியிருந்தாள்? வராமலேயே ஏமாற்ற நினைத்திருக்கிறாளா?' திரும்பத் திரும்ப தன் வாட்ச்சை பார்த்துக் கொண்டிருந்தபோது, ''ஸாரி, தீபா,'' என, கணீரென்று பின்புறம், ஆராதனாவின் குரல் கேட்டது. திரும்பினாள், தீபா. ஆராதனா, இப்போதும் புடைவை தான் உடுத்தியிருந்தாள். கழுத்துவரை மூடும் ரவிக்கை. நவீனமான கைப்பை. புடவையை நறுவிசாக குவித்துக் கொண்டு, அமர்ந்தாள். ''முக்கியமான போர்டு மீட்டிங். எதிர்பார்த்ததை விட அதிக நேரம் இழுத்திருச்சு. ரியலி ஸாரி.'' திருத்திய புருவங்கள். மெலிதாக மையிட்ட கண்கள். நேர்ப்பார்வை. அதிராத அதே சமயம் அழுத்தமான குரல். ''நீ பிஸி. நான்தான் வெட்டி. எனக்கு எந்த வேலையுமில்ல,'' என்றாள், தீபா, சூடாக. ஆராதனாவின் கண்கள் சுருங்கின. கணநேரம் தான். சுதாரித்து விட்டாள். ''சண்டை போடவா கூப்பிட்டீங்க?'' என்றாள். ''இல்ல, உன் ஆபீஸ் வேலையைப் பத்திக் கேக்கவும் கூப்புடல. சில கேள்விகளுக்கு எனக்கு பதில் தெரிஞ்சாகணும்,'' என்ற, தீபாவின் முகம் இறுக்கமாயிருந்தது. ஆராதனா அதிரவில்லை. அகலமான புன்னகை இன்னும் விரிந்தது. ''பர்ஸனலா சொல்ல முடியற பதிலை நான் சொல்லத் தயார்.'' ''நீ யாரு?'' ''இதோ உட்கார்ந்திருக்கேனே, ஆராதனா.'' ''நக்கலா பதில் சொல்ல வேணாம். எங்கப்பாவுக்கும், உனக்கும் என்ன தொடர்பு?'' பதில் சொல்லாமல், ஆராதனா வானத்து நிலாவை சற்று நேரம் பார்த்தாள். நிலவொளியில் அவள் கண்களில் கண்ணீர் திரண்டு நிற்பது தெரிந்தது. ''அது ரொம்ப பெரிய கதை. அப்பா, அதைப் பத்தி இன்னும் உங்ககிட்டல்லாம் சொல்லலைன்னா, உங்களுக்கு தெரிய வேண்டாம்ன்னு தான நெனச்சிருக்காரு?'' ''இந்த பதிலத்தான் அன்னிக்கும் சொல்லிட்டு ஓடிட்டே. யார்கிட்ட கேட்டா ஒழுங்கா பதில் கிடைக்கும்? உங்கம்மாவைப் பார்த்து கேக்கணுமா?'' ''எங்கம்மாவைப் பார்க்க உடம்புலயும் தெம்பு வேணும், மனசுலயும் தெம்பு வேணும். அது உங்ககிட்ட இருக்கா, தீபா?'' ''எங்கப்பா பண்ண துரோகத்தையே தாங்கிகிட்டேன். இதுக்கெல்லாம் தெம்பு இருக்காதா? எப்பப் பார்க்கலாம்?'' ''ஒரு, 'கான்பரன்ஸ்'க்காக நான் நாளைக்கு காலைல, மும்பை போறேன். வர மூணு நாளாகும். ஞாயித்துக்கிழமை?'' ''என்ன கான்பரன்ஸ்?'' கைப்பை திறந்து ஒரு முகவரி அட்டையைக் கொடுத்தாள், ஆராதனா. ''எங்க கம்பெனி, இன்னொரு கம்பெனியோட இணையுது. அதுக்கான மீட்டிங்.'' அலட்சியமாக அந்த முகவரி அட்டையைப் புரட்டினாள், தீபா. 'ஆராதனா, மனிதவள பொதுமேலாளர், கீர்த்திலால் பிரதர்ஸ்...' தீபாவின் பார்வை கூர்ப்பானது. ''நீ, நீ...'' ''கீர்த்திலால் கம்பெனில், 'ஹெச்.ஆர்.,' மும்பை கம்பெனில இருக்கற, 'ஸ்டாபை' எங்க கம்பெனில எப்படி, 'ஸ்மூத்தா சேர்த்துக்க முடியும்'ன்னு முடிவு பண்ற வேலை எனக்கு. அதனாலதான் உடனே உங்களை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போக முடியல.'' அவள் ஏதோ ஒரு சாதாரண வேலையில் இருப்பாள் என்று நினைத்திருந்த, தீபாவுக்கு அவள் அவ்வளவு பெரிய பதவியில் இருப்பது சற்று உறுத்தலாக இருந்தது. ''இது எங்கப்பா வாங்கிக் கொடுத்த வேலை தானே?'' என்றாள், சற்றே திமிராக. கேள்வியை அலட்சியம் செய்தாள், ஆராதனா. ''என் வீட்டு முகவரியை, 'மெசேஜ்' பண்றேன். உங்கம்மாவை வேணும்னாலும் கூட்டிட்டு வாங்க, தீபா.'' ''எங்கம்மா கண்ட வீட்டுக்கெல்லாம் வர மாட்டாங்க.'' ஆராதனா அதையும் அலட்சியம் செய்தாள். ''ஞாயித்துக்கிழமை சாயந்திரம், 7:00 மணிக்கு வாங்க. அதுக்கு முன்னால வந்தா, வீடு பூட்டியிருக்கும்.'' ''உங்கம்மா?'' ''அன்னிக்கே பாக்கலாம்.'' தன் அலைபேசியில் குறுஞ்செய்தி பார்த்துவிட்டு நிமிர்ந்தாள், தீபா. ''வேளச்சேரில தான் வீடா?'' ''ஆமா. கூட்டுறவுக் கடை ஒண்ணு இருக்கும். அதுக்கு நேர் எதிர் ரோட்டுல மூணாவது வீடு.'' ''எங்க அப்பா வாங்கிக் கொடுத்த வீடா?'' என்ற தீபாவின் கேள்விக்கு, பதில் தராமல் புன்னகைத்தாள், ஆராதனா. ''இந்தக் கேள்விக்கு மட்டுமில்ல, இன்னும் உங்க மனசுல தத்தளிக்கற பாக்கி கேள்விக்கெல்லாம் ஞாயித்துக்கிழமை நிதானமா பதில் சொல்றேன்,'' என்றாள், ஆராதனா. விருட்டென எழுந்து, திரும்பிப் பார்க்காமல் தன் கார் நோக்கி நடந்தாள், தீபா. - தொடரும்.சுபா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !