கல்யாணப் பரிசு!
தோழி சொன்ன அழகு நிலையத்தின் எண்களை குறித்துக் கொண்டு எழுந்தாள், தான்யா.அம்மா அடிக்குரலில், மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்தது இயல்பாக வந்து காதுகளில் விழுந்தது.'ஆமாக்கா. நல்ல அருமையான இடம் தான் முடிவாகியிருக்கு நம்ம, தான்யாவுக்கு. வீடியோ அழைப்புல பாத்தியே, சுபாஷ், அதே பையன் தான். நீ ஒரு மாசம் முன்னாடியே வந்துடணும். நமக்கு ஒரே பொண்ணு. அவங்களுக்கு ஒரே பையன்.'என்னக்கா, லிஸ்ட்டா, போட்டாச்சுக்கா. 25 லட்சம் ரூபாய் இதுவரை பட்ஜெட். இன்னும் ஜவுளி, ஹனிமூன், மியூசிக் இதெல்லாம் சேக்கலே. என்னக்கா பண்ணுறது, நமக்கு கிளி மாதிரி ஒரே ராஜாத்தி. அவளுக்கு செய்யாமல் யாருக்கு செய்யப் போறோம். நம்ம சொந்தக்காரங்க தங்கறதுக்காக, ஹோட்டல் அறைகள். அதையும் செய்யத்தான் வேணும். அப்புறம்...'அம்மா விடாமல் பேசியபடி இருக்க, அவள் காபி கலந்து எடுத்துக் கொண்டாள்.சுபாஷ் முகம் நினைவில் வந்தது. இதே ஹாலில் தான், தன் பெற்றோர், அக்கா, மாமா, குழந்தைகள் என, அவன் வந்து உட்கார்ந்திருந்தான். தெளிவான பேச்சு, சிரித்த முகம், கல்லுாரியில், 'டாப் ஒன்' கம்பெனியில் மேலதிகாரி, நீச்சல் சாம்பியன் என, நிறைய கிரீடங்கள் இருந்தாலும், எதையும் பெரிதாகக் காட்டி அலட்டிக் கொள்ளாத நல்ல பண்பு.அவன் பெற்றோரும் எளிமையாகவே இருந்தனர். காளான் வளர்ப்பு சிறு யூனிட் வைத்திருக்கிறாளாம், அக்கா பானுமதி. ஜெர்மனி நாட்டு கார் கம்பெனி ஒன்றில் நல்ல வேலையில் இருக்கிறாராம், மாமா. ஆர்ப்பாட்டமில்லாத சிரிப்பும், இனிமையான பேச்சுமாக அந்தக் குடும்பம் இவர்களுக்கு பிடித்துப் போனது.''தான்யா, இந்த வாரம் ஒரு நாள், 'லீவு' போட முடியுமா?'' என்றபடி வந்தார், அப்பா.''சரிப்பா, எதுக்கு?''''முகூர்த்தப் புடவை எடுக்கணும்மா. பையன் வீட்டுலேயும் வருவாங்க. மாப்பிள்ளையும் வரணும். அவருக்கும் கல்யாண உடை எடுத்திடலாம்,'' என்றார்.''சரிப்பா, நானும், 'ஆன்லைன்'ல பாத்தேம்பா. ஏழாயிரம் ரூபாய்க்கு வைர ஊசி புடவை நல்லா இருக்கு. கோல்டன் பிரவுன் கலர்ல!''அம்மா சிரித்துக் கொண்டே வந்தாள்.''என்ன சொல்றே தான்யா? முகூர்த்தப் புடவை என்கிறது, காலத்துக்கும் வெச்சு பாதுகாக்கறது. 500 பேர் கல்யாணத்தப்ப பாக்கப் போகிற புடவை. அவ்வளவு நினைவுகளைக் கொடுக்கப் போகுது. ''நானும், அப்பாவும், 25 ஆயிரம் ரூபாய்க்கு அருமையா பட்டுச்சேலை பார்த்து வெச்சுட்டோம். மாப்பிள்ளைக்கும் அதே விலைல டிரஸ். சரி, புதன்கிழமை போகலாமா? நீ, 'லீவு' போட முடியுமா ஆபிசுக்கு?'' என்றாள், அம்மா. சரேலென தலை உயர்த்தி, அம்மாவைப் பார்த்தாள், தான்யா.''ஏம்மா இவ்வளவு, 'காஸ்ட்லி'யா ஒரு புடவை? ஏழாயிரத்துக்கு நான் சொன்னதை ஒரு தடவை பாரு. பிரமாதமா இருக்கு,'' என்றாள், தான்யா.திடீரென நினைவு வந்தவராகச் சொன்னார், அப்பா...''பார்வதி, லிஸ்ட்ல ஒரு முக்கியமான விஷயத்தை விட்டுட்டோம். பாயசத்துல குல்கந்து போட்டு ஒரு வெரைட்டி இப்போ ரொம்ப வைரலா இருக்காம். அதை மெனுல சேர்க்கலே,'' என்றார்.''அட, ஆமாங்க. மறந்தே போயிட்டோம். கேட்டரிங்ல கூப்பிட்டு சொல்லிடலாம். அப்புறம் தாம்பூலப் பை டிசைன் கூட, இன்னும் நல்லா போடணும்ங்க. ஜூட் பைல, பூ டிசைன் போட்டதைப் பார்க்கணும். பட்ஜெட் ஏறும் தான். ஆனாலும், நல்லா, 'ரிச்'சா இருக்கும்ங்க.''அவர்கள் இருவரும் பேசிக் கொண்டே போயினர்.மொபைல் போன் ஒலித்தது; தோழி, வினியின் அழைப்பு.''ஹலோ வினி. எப்படி இருக்கே? கல்யாணமாகி கொச்சின் போனாலும் போனே, மூணு மாசமா ஒரு, 'மெசேஜ்' கூட இல்லே. நாலு முறை உனக்கு போன் பண்ணினேன். 'ரெஸ்பான்ஸ்' இல்லே. எப்படி இருக்கே?'' என்றாள்.'தான்யா, இனிமேல் கொச்சின் எல்லாம் இல்லே. இங்க அடையார்ல அம்மா வீடுதான்...'' தோழியின் குரல், மெதுவாக ஒலித்தது.''என்னடா... என்ன சொல்றே?''''ஆமாம், தான்யா. விவாகரத்து. கோர்ட் இன்னும் மூணு மாசத்தில் முடிச்சுடும்.''''அய்யய்யோ, வினி. என்ன, 'ஷாக்கிங்'கா ஏதோ சொல்றே?'' என, அதிர்ந்து போனாள்.''ஆமாம், தான்யா, நேரில் வரேன். வெச்சுடறேன்.''கண் சிமிட்டாமல் நின்றாள், தான்யா. வினியும், ஆதவ்வும் எவ்வளவு ஆசையாக, உற்சாகமாக, விமரிசையாக திருமணம் செய்து கொண்டனர்? அவ்வளவு அழகான ஜோடி. இனிமையானவள், வினி. பிறர் நலம் விரும்புபவள். பிரியமானவர்களின் கண்ணீரை ஓடிச் சென்று துடைப்பவள். அவளுக்கு எப்படி இது நடக்க முடியும்?அலுவலகத்தில் எப்போதும் போல இயங்க முடியவில்லை. கனவு போல ஏதோ ஒன்று திரும்பத் திரும்ப வந்து கொண்டிருந்தது. சாத்தப்பட்ட கதவுகளுக்கு முன், நின்று யாசிப்பதைப் போல ஏதோ ஒரு வெற்றுணர்வு. மதுக்கோப்பைக்குள் விழும் ஐஸ் கட்டிகள் போல இதயத்தினுள் ஏதேதோ எண்ணங்கள் முட்டிக் கொண்டே இருந்தன.''தான்யாம்மா, 'ரிசப்ஷன்'ல உன்னைத் தேடி யாரோ வந்திருக்காங்கம்மா,'' என, காலி காபி டம்ளரை எடுத்தபடி, சொல்லி விட்டுப் போனாள், பணியாள்.'என்னைத் தேடியா?' என, யோசித்தாள்.முதல் மாடியிலிருந்து இறங்கி தரைத்தளம் வந்தபோது, அங்கே நின்றிருந்தான், சுபாஷ்.''நீங்களா?'' என்றாள். தொண்டை வழுக்கியது.''ஹலோ தான்யா. உங்களை சங்கடப்படுத்திட்டேனா? சாரி சட்டுன்னு கிளம்பி வந்துட்டேன்.''''நோ நோ. உக்காருங்க, சுபாஷ்.''''தாங்க் யூ. ஜஸ்ட் பத்து நிமிடம் பேசலாமா?''''ஓ, எனக்கும் கொஞ்சம் பேசணும்,'' என்றாள். இப்போது ஏதோ பலமும், தெளிவும் வந்திருப்பதைப் போல இருந்தது.கடற்கரை அலைகள் இன்று, அளவான வேகத்தில் அடிப்பதைப் போலிருந்தது. கூட்டம் அதிகமற்ற கடற்கரையில் சிறுவர்கள் மட்டும் கபடியும், கிரிக்கெட்டும் விளையாடிக் கொண்டிருந்தனர். நண்டுகள் ஓடும் வலைகள். வெண்மேகங்களுக்கு நடுவில் இப்போதே தலைகாட்டும் ஒன்றிரண்டு நட்சத்திரங்கள்.தரையில் விரித்த ஜமக்காளத்தில், இரண்டு பேரின் பெற்றோர்களும் உட்கார்ந்திருந்தனர்.'ஏன் இங்கே வரக் கூறினர்; தான்யா என்ன சொல்லப் போகிறாள்; சுபாஷ் சொன்ன நேரத்துக்கு வந்து விடுவான். வீட்டில் பேசாத எதை இங்கே பேசப் போகிறோம்; கல்யாணப் பேச்சு நல்லபடியாக முடிந்து வேலைகள் ஆரம்பிக்கும் வேளையில் திடீரென இந்த, 'பீச்' சந்திப்பு எதற்காக?' என, எண்ணற்ற கேள்விகள் எழுந்தன.குறிப்பிட்ட நேரத்துக்கு வந்தான், சுபாஷ். அடுத்த இரண்டாவது நிமிடம், தான்யாவும் வந்து விட்டாள்.சம்பிரதாய நலம் விசாரிப்புகள் முடிந்தன.புன்னகையுடன், ''நான் ஆரம்பிக்கவா இல்லை நீயா? உன் விருப்பம், தான்யா,'' என்றான், சுபாஷ். ''நீங்க ஆரம்பிங்க, சுபாஷ். நானும் சேர்ந்து கொள்கிறேன்.''''தட்ஸ் நைஸ்.''பெற்றோர்கள் அமைதியாக கவனித்தனர்.''எங்க அழைப்பை மதிச்சு இங்க வந்த உங்களுக்கு ரொம்ப நன்றி. நானும், தான்யாவும் ஒரு முறை சந்திச்சு பேசினோம். நான் தான், அவளை சந்திக்கப் போனேன். பேசப் பேசத்தான், இரண்டு பேருக்கும் ஒரே மாதிரி சிந்தனைகள் இருப்பதை புரிந்து கொண்டோம். அதாவது, இந்த திருமண வைபவம் தொடர்பாக.''நம்ம, ரெண்டு குடும்பங்களுமே நடுத்தர வர்க்கம். இப்பத் தான் ஏணியில் ஒவ்வொரு படியாக ஏறிக் கொண்டிருக்கிறோம். நல்ல படிப்பு, நல்ல வேலை, நல்ல சம்பளம் என்பதை, இப்போது தான் முதல் தலைமுறையாகப் பார்க்கிறோம்.''இதில், கல்யாணச் செலவு என, பார்க்கும் போது, ஒவ்வொரு குடும்பத்துக்கும், 40 லட்சம் ரூபாய் வருகிறது. இதோ இது, தான்யா வீட்டு லிஸ்ட். இது எங்க வீட்டு பட்டியல்.''ஆடம்பர மண்டபம், படோடோபமான உணவு, விலை உயர்ந்த உடைகள், தீம் நகைகள், சொந்தக்காரங்களுக்கு ஹோட்டல் அறைகள், ஜவுளிகள், ப்யூட்டி பார்லர், சங்கீத், மெகந்தி, டிக் ஜாக்கி, பிரீ போட்டோ ஷூட்... இதெல்லாம் மெயின் செலவுகள். உதிரிச் செலவுகள் தனி. அதுவே, அஞ்சு லட்சம் ரூபாய் வரும் தனித்தனியா.''தான்யா, தொடர்ந்தாள்...''இரண்டு குடும்பமுமே, 'பிசினஸ் க்ளாஸ்' இல்லே. எங்க வீட்டு செலவான, 40 லட்சம் ரூபாய் என்பது, கொஞ்சம் அப்பாவின் சேமிப்பு, அம்மாவின் சிக்கன குடித்தனம், பாட்டியின் நகைகள், என்னுடைய சம்பளம் இப்படி வந்தது. இன்னும் கடனையும் சேத்துக்கலாம்.''சுபாஷ் வீடும் கிட்டத்தட்ட, இதே நிலைமை தான். 30 லட்சம் ரூபாய், சுபாஷ் வீட்டு பட்ஜெட். அதனால், நாங்க பேசி ஒரு முடிவுக்கு வந்திருக்கோம்,'' என்றவள் தொடர்ந்தாள்...மற்றவர்கள் மூச்சு விடுவது கூட கேட்கவில்லை.''இந்த திருமணம் எளிமையாக நடக்கணும்ன்னு, நாங்க விரும்பறோம். 70 லட்சம் ரூபாய் மொத்தச் செலவுன்னு வருது. இதில், 50 லட்ச ரூபாய்ல, ஈ.சி.ஆர்.,ல செகண்ட் ஹாண்ட் ப்ளாட் ஒண்ணு பாத்திருக்கோம்.''ரெண்டு பேர் அலுவலகங்களுக்கும் பக்கமா, மலைக்கோவில்ல முக்கியமான உறவுகளோட திருமணம். அடுத்த நாள், 'பீச் ரெசார்ட்'ல அத்தனை பேருக்கும் அருமையான விருந்து போதும். ''நாங்க வாழ்க்கையை அமைதியாக துவங்கறோம். ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கறோம். விட்டுக் கொடுக்கவும், பொறுத்துப் போகவும், பாராட்டவும், வேலைகளை பகிர்ந்துக்கவும், அன்பை வினியோகிக்கவும் கத்துக்கறோம்.''எல்லாம் சரியாக வந்தால் ரொம்ப ரொம்ப சந்தோஷம். அப்படி இல்லை, இது சரியாக வரவில்லைன்னு எங்களுக்கு தோணினால், கவுரவமாக விலகிக் கொள்வோம், சட்டத்தின்படி. நெருப்புன்னா வாய் சுடுவதில்லை. இன்றைய காலகட்டம் அப்படி இருக்கு.''எங்க நண்பர்கள் வட்டாரத்தில் விவாகரத்து, பிரிவு எல்லாம் ரொம்ப சகஜமாகிட்டு வர்றதனால, எங்களுக்கு உள்ளுக்குள்ளே பயமாக இருக்கு. அதிலும், சூதாட்டம் போல, 70, 80 லட்சங்களை ஆடம்பரமாக இறக்குவது எங்களை நடுங்க வைக்குது.''ரெண்டு பேர் மேலேயும் அபார்ட்மென்ட் ரிஜிஸ்டர் பண்ணிக்கலாம். நகை, வண்டி, ஆடம்பர உடைகள் எதுவும் வேணாம். எங்கள் அன்பு ஸ்திரமாக நிலை பெற்ற பின், பெற்றோர்களாகிய நீங்கள் கொடுக்கும் எதுவும் கல்யாணப் பரிசு தான். சரியா?'' என முடித்தாள், தான்யா.பெற்ற முகங்கள் இப்போது சிரிப்பை பரிமாறி, பெற்ற குழந்தைகளை அன்பால் அணைத்துக் கொண்டன.- வி.உஷா