குட்டி!
மொபைல் போனில் வந்த அந்த குறுஞ்செய்தியைப் படித்து அதிர்ந்தாள், மல்லிகா. 'ஐயோ...' என, அலறியபடி, மகள், வாசுகியிடம் ஓடி வந்தாள்.கட்டிலில் மல்லாந்து படுத்தபடி, கண்களை மூடியிருந்தாள், வாசுகி. இத்தனை நேரம் படித்துக் கொண்டிருந்தாள் என்பதை, மார்பில் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்த புத்தகம் உணர்த்தியது. ''யம்மாடி... யம்மாடி,'' என, அவளை அசைக்க, திடுக்கிட்டு எழுந்தாள், வாசுகி.''என்னம்மா?''''உங்க பிரின்சுபால், என்னா மெசேஜ் பண்ணியிருக்காரு பாரு,'' என, நீட்டினாள்.வாங்கிப் படித்த, வாசுகியும் அதிர்ந்து தான் போனாள்.'வாசுகி இனி எங்கள் பள்ளியில் படிப்பதை, ஆசிரியர்கள் விரும்பவில்லை. அதனால், டி.சி.,யை வாங்கி செல்லவும்!' இவ்வளவு தான் செய்தி.தலையில் அடித்துக் கொண்டு, அப்படியே சுவரில் சாய்ந்து அமர்ந்து அழத் துவங்கினாள், மல்லிகா.''நீ என்ன வேணுமின்னா அப்படி செய்தே? தெரியாம நடந்த ஒண்ணுக்கு இப்படியா அந்த பிரின்சுபாலு பண்ணுவாரு. ''எந்த பள்ளிக்கூடத்துல உன்னை கொண்டு போய் நான் சேப்பேன். இந்த பள்ளிக்கூடம் தானே கிட்டக்க இருந்துது. படிச்சவங்களே இப்படி பண்ணலாமா?'' என, ஒப்பாரி வைத்தவள், திடீரென அந்த ஒப்பாரியை நிறுத்தி, அவிழ்ந்து கிடந்த முடியை அள்ளி கொண்டையிட்டு கொண்டாள்.''கிளம்புடி. அந்த பிரின்சுபால்கிட்ட போய், நியாயத்தை கேட்டுப் புடுவோம். என்னா நெனைச்சுக்கிட்டு இருக்காரு? பாதியில வேற ஸ்கூல்ல போயி சேர்த்துக்க சொன்னா, என்னா அர்த்தம்?''ஏதோ தெரியாம நடந்துட்டு. அதுக்கு போயி இப்படியா தண்டனை தர்றது. போயி கேட்டுப் புடுவோம்,'' என, வீராவேசமாக வாசுகியை இழுத்துக் கொண்டு, அவள் படித்த பள்ளிக்கூடத்தை நோக்கி ஓடினாள், மல்லிகா.எல்லா வீரமும் பள்ளிக்கூட வளாகத்திற்கு வெளியே வரை தான். உள்ளே நுழைந்ததுமே அப்படியே ஒடுங்கி விட்டாள்.அவள் கேட்கப் போகும் நியாயம் இதுதான்...ஒரு வாரத்திற்கு முன், மதிய இடைவேளைக்கு பிறகான முதல் வகுப்பு சற்றே மந்தமாக போய் கொண்டிருந்தது. திடீரென பள்ளிக்கூடமே அல்லோகலப்பட்டது. பெரும் கூக்குரல், சோதனைக் கூடத்திலிருந்து வந்தது. மாணவர்களின் அலறல், எல்லா வகுப்பிலிருந்தும் மாணவர்களையும், ஆசிரியர்களையும் வெளியே ஓடிவர வைத்தது.சோதனைக் கூடத்தின் வாசலில் கூட்டம் கூடியிருந்தது.'மோகன் சார் மேல ஆசிட் பாட்டில் விழுந்துட்டுது...' இந்த வார்த்தைகள் எல்லாரையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி சோதனைக் கூடத்தை நோக்கி ஓட வைத்தது.மோகனை, ஆண் ஆசிரியர்கள் சூழ்ந்து கொண்டிருக்க, அவனை நெருங்க முடியாமல், 'எப்படி... எப்படி ஆசிட் அவர் மேல கொட்டுச்சு...' என, ஆசிரியர்கள் படபடத்தனர்.'வாசுகிக்கு, சார் சொல்லிக் குடுத்துக்கிட்டு இருந்தாரு. அப்ப, வாசுகியோட கைப்பட்டு பாட்டில் கவிழ்ந்து கொட்டிடுச்சு...' என்றனர், மாணவர்கள்.''ஐயோ, சனியனே, கவனமா எதுவும் செய்ய மாட்டியா?'' என, கமலா டீச்சர், அங்கே பயந்து நடுங்கி, கோழிகுஞ்சாய் வெடவெடத்துக் கொண்டிருந்த, வாசுகியின் ஒற்றை சடையை பிடித்து இழுத்து குனிய வைத்து, முதுகில் படார் படாரென விளாசினாள்.மாணவ - மாணவியர் தடுக்க முடியாமல் தவிக்க, மற்ற ஆசிரியைகளும் தன் பங்கிற்கு, வாசுகியை வெளுத்தனர்.''எங்க... எங்க கொட்டிச்சு?'' கமலா டீச்சர் கோபமும், அதிர்ச்சியும் மாறாமல் கேட்க, மாணவர்கள் சொல்ல தயங்கி தலைகுனிந்தனர்.அதற்குள், உள்ளிருந்து துடிதுடிக்கும் மோகனை, ஆசிரியர்கள் துாக்கிக் கொண்டு வர, ஆசிட் கொட்டியது எங்கு என்பது புரிந்து விட்டது. இரண்டு தொடைகளுக்கும் இடையில்.பரபரப்பாக முதலுதவி செய்யப்பட்டு, அழைக்கப்பட்டிருந்த ஆம்புலன்சில் ஏற்றி, மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டான், மோகன்.இங்கே, ஆளாளுக்கு, வாசுகியை அடித்துக் கொண்டிருக்க, அவள் பெரிதாக அழ ஆரம்பித்தாள். பிறகு, சில ஆசிரியர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு, பிரின்ஸ்பாலின் அறையில் நிறுத்தப்பட்டாள். பாவம் அவளால் எதையும் சொல்ல முடியவில்லை. அறை வாங்கியதில் அழுது அழுது அவளுடைய முகம் சிவந்திருந்தது. கூடியிருந்த மாணவர்கள் தான், அவளுடைய கைத்தவறி ஆசிட் பாட்டில் இருக்கையில் அமர்ந்திருந்த மோகன் சாரின் மடியில் கவிழ்ந்து விட்டதை விளக்கினர்.வாசுகியை தோழி ஒருத்தி துணையுடன், வீட்டிற்கு அனுப்பி வைத்தார், பிரின்ஸ்பால்.அடுத்தடுத்த நாட்களில் பள்ளியில் தன்னைப் பற்றியே பேசுவர் என, வாசுகி போகவில்லை. பள்ளியில், மோகனின் உடல்நிலையைப் பற்றி பலவாறாக பேசினர். 'கொட்டினது தான் கொட்டியது. தொடை அல்லது காலில் கொட்டக் கூடாது. பாவம், சரியா அந்த இடமா பார்த்து கொட்டியிருக்கு. ரொம்ப மோசமாக இருக்காம்...''ம்... அவன் தேறி எழுந்து வர, ஒரு மாசம் புடிக்கும் போலிருக்கு...''ம்கும், தேறி எழுந்து என்ன புண்ணியம்? அவன் குடும்ப வாழ்க்கையில் எல்லாம் ஈடுபட முடியாதாம்...' உதடுகள், காதோடு காதாய் கிசுகிசுத்தன.ஆசிரியர்கள் ஒருவர் மாற்றி ஒருவர், மோகனைப் பார்த்து விட்டு வந்தனர்.''மோகனுக்கு எவ்வளவு நல்ல மனசு? தெரியாம அவ கைப்பட்டு பாட்டில் தவறிட்டு. அவளை யாரும் திட்டாதிங்க, அடிக்காதிங்கன்னு சொல்றார்.''''ஆமா, வாசுகியும் ரொம்ப நல்ல மாணவி தான். எதிலேயும் கவனமாத்தான் இருப்பா. பரீட்சை எழுதினாக் கூட, ஒரு தடவைக்கு பத்து தடவை, 'செக்' பண்ணுவா. அவ எப்படி இப்படி கவனக்குறைவா இருந்தா!''''சின்ன பொண்ணு தானே. எல்லாருக்கும் கை தவறுறது இயற்கை தானே!''''ப்ச். நான் கூட அன்னைக்கு அவளை நல்லா அடிச்சுட்டேன். பாவம். அப்பா இல்லாத பொண்ணு. அவங்கம்மா கூலி வேலை செஞ்சு படிக்க வைக்குது.''வாசுகிக்காக, கமலாவை தவிர அனைவரும் பரிதாபப்பட்டனர்.வாசுகியைப் பற்றியே எல்லாரும் பேசுவர், திட்டுவர் என்பதால், அவளை ஒரு வாரம் பள்ளிக்கூடம் வர வேண்டாம் என்று, கூறிவிட்டார், பிரின்ஸ்பால். இப்போது, டி.சி.,யை வாங்கிக் கொண்டு போகும்படி செய்தி அனுப்பி இருக்கிறார்.வீராவேசமாக நியாயம் கேட்டு ஓடிவந்த, மல்லிகா, சிங்கத்தின் முன், சிறு முயலைப் போல் அவர் எதிரே அமர்ந்திருந்தாள். கண்கள் பொங்க நின்றிருந்தாள், வாசுகி.''ஐயா இது உங்களுக்கே சரியாப்படுதுங்களா? இந்த புள்ளை வேணுமின்னா செஞ்சுது. கைத்தவறி பட்டு பாட்டில் விழுந்துட்டு.''''அதனால தான் இது, போலீஸ் கேஸ் ஆகாம இருக்கு. பாவம் வாழ வேண்டிய பையன். குடும்ப வாழ்க்கைக்கே லாயக்கு இல்லாமப் போயிட்டான். என்ன நேரமோ?''''ஐயோ... கடவுளே? அவ்வளவு பாதிப்பா? ஐயா, பாவம் தான். ஆனா, இந்த புள்ளையோட படிப்பை நினைச்சுப் பாருங்க. டி.சி.,யை வாங்கிட்டு போக சொன்னா, என்னா அர்த்தம்?'' கண்கள் கலங்கி, கண்ணீர் வழிய கேட்டாள், மல்லிகா.''உங்க புள்ளையோட நல்லதுக்குத்தான், டி.சி.,யை வாங்கிட்டுப் போயி, வேற ஸ்கூல்ல சேர்க்க சொல்றேன். இங்கயே உங்க பொண்ணு தொடர்ந்து படிச்சா, தினம் தினம் டீச்சர்களும், பசங்களும் இதையே பேசுவாங்க.''அந்த வாத்தியார் திரும்ப வேலைக்கு வரும் போது, இவளை தினம் தினம் பார்க்க நேரும். என்ன தான் இவ தெரியாம செய்திருந்தாலும், அவளைப் பார்க்க பார்க்க கோபம் வரும். இவளுக்கும் அவரை தினம் தினம் குற்ற உணர்வோட பார்க்கணும். ''அதனால, இவளோட படிப்பு கெட்டுப் போகும். நல்லா படிக்கிற பொண்ணு. குற்ற உணர்வால படிக்காம போயிடக் கூடாது. அவளும் இங்க இருந்தா இந்த சம்பவத்தை மறக்க மாட்டா. எல்லாரும் குத்தி குத்தி பேசி, அவளை கொலைக்காரி மாதிரி ஆக்கிடுவாங்க. வேற ஸ்கூல்ல சேர்ந்து படிச்சா, அவ மனசுல குற்ற உணர்வு இல்லாம இருக்கும்.''அவர் சொல்வதும் மல்லிகாவிற்கு சரியாகத்தான் பட்டது.மவுனமாக டி.சி.,யை வாங்கி, மகளுடன் பள்ளிக்கூடத்தை விட்டு வெளியே வந்தாள், மல்லிகா. தளர்வாக நடந்தபடியே, ''அந்த வாத்தியாருக்கு இப்படி ஒரு நிலைமை வரக்கூடாது தான். ஆனா, செய்யாத ஒரு செயலுக்கு உனக்கு இப்படி தண்டனை கிடைச்சுட்டதே,'' என, நொந்து கொண்டாள், மல்லிகா.''நான் வேணுமின்னேதான் அப்படி செஞ்சேம்மா,'' சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு சொன்னாள், வாசுகி.அதிர்ந்து போன, மல்லிகா கண்கள் பிதுங்க, ''என்னடி சொல்றே?'' என்றாள்.''அம்மா, நீ எதுக்கு உன் படிப்பை எட்டாவதோட நிறுத்தினே?''''அது எதுக்கு இப்ப?''''சொல்லும்மா.''''படிப்பு ஏறலை. அதனால நின்னுக்கிட்டேன்.''''பொய்ம்மா. அந்த, சாமிநாதன் வாத்தியாரால தானே!''அதிர்வாய் மகளைப் பார்த்தாள்.''நீ என்கிட்ட சொல்லலைன்னாலும் எனக்கு தெரியும்மா. போன வருஷம் நம்ம ஊர் கோவில் திருவிழாவுக்கு வந்திருந்தாங்களே உங்க ப்ரண்ட், தேன்மொழி. அவங்க தான் சொன்னாங்க. உங்கம்மா ரொம்ப நல்லா படிப்பா. வகுப்புல அவதான் பர்ஸ்ட் வருவா.''அந்த, சாமிநாதன் சாரு மட்டும், அப்படி பண்ணாம இருந்தா, அவளும் என்னை மாதிரி இன்னிக்கு டீச்சராயிருப்பா. வகுப்பிலேயே பார்க்கறதுக்கு உங்கம்மா தான் அழகா, வயசுக்கு மீறின வளர்ச்சியோட இருப்பா. ''ஒருநாள் எல்லாரும், பி.டி., வகுப்புக்கு போயிட்டோம். அவ மட்டும் கட்டுரைப் போட்டிக்காக ஏதோ கட்டுரை எழுதிக்கிட்டு, வகுப்பில தனியா உட்கார்ந்திருந்தா. அப்ப அந்த, சாமிநாதன் சாரு அவக்கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணினாரு.''பயந்து அலறி அடிச்சுக்கிட்டு வீட்டுக்கு ஓடினவ தான். யார்க்கிட்டயும் சொல்ல தைரியம் இல்லாம, மறுநாள்லேர்ந்து ஸ்கூல் பக்கம் தலை வச்சே படுக்கலைன்னு சொன்னாங்க. அதேதாம்மா எனக்கும் அன்னைக்கு நடந்தது. ''லேப்ல அவரு சொல்லித் தர்றேங்கற சாக்குல, என்னை தொடக் கூடாத இடத்துல தொட்டாரு. அசிங்க, அசிங்கமா பேசினாரு. ஆத்திரம் தாங்க முடியாம திறந்திருந்த ஆசிட் பாட்டிலை அப்படியே தள்ளிவிட்டேன்.''அது... அவரோட, அந்த இடத்துல விழுந்துட்டு. நான் வேணுமின்னே செய்தேன்னு அவர் உண்மையை சொன்னா, 'நீ, என்ன செய்தேன்'னு கேட்பாங்கள்ல. அதனால, அவரால உண்மையை சொல்ல முடியலை. ''நீ கோழையாய் இருந்து உன் படிப்பை கெடுத்துக்கிட்ட. என்னால அப்படி கோழையா இருக்க முடியலைம்மா. தாய் பத்தடி பாஞ்சா குட்டி பதினாறடி பாயும்ன்னு சொல்வாங்க. தாய் பாயாம நொண்டியா இருந்தா கூட, குட்டி பதினாறடி பாயும்மா,'' என, வாசுகி சொல்ல சொல்ல வாயடைத்துப் போனாள், மல்லிகா.ஆர். சுமதி