உள்ளூர் செய்திகள்

நட்சத்திரத் தூளியில் ஊஞ்சலாடு!

அந்த பங்களா, மூன்று மாடிக்கட்டடமாய் நிமிர்ந்திருந்தது. போர்டிகோவின் ஒரு மூலையில் ஓட்டிவந்த 'ஸ்கூட்டி'யை 'ஸ்டாண்'டிட்டு நிறுத்தினாள், மஞ்சுளா. வயது 35. 'பிசியோதெரபி' மருத்துவம் படித்த, செவிலியர் நங்கை. 170 செ.மீ., உயரம். தலைமுடியை அழகிய கொண்டையாய் போட்டிருந்தாள். திருத்தப்பட்ட புருவங்கள். சோகம் மறைக்கும் கரிய கண்கள். பாடகி, சின்மயி குரல். கோடி நோயாளிகளுக்கு சேவை செய்ய பிறந்த பத்து விரல்கள். இடுப்பை மறைத்து சேலை உடுத்தியிருந்தாள். அந்த பங்களாவின் உரிமையாளர், பராந்தகன். வயது 72. நடிகர், எம்.எஸ்.பாஸ்கர் சாயல். கோடீஸ்வரர். மகன் குடும்பம் அமெரிக்காவிலும், மகள் குடும்பம் ஸ்விட்சர்லாந்திலும் உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன், பராந்தகனுக்கு பக்கவாதம் வந்து படுத்த படுக்கையானார். அவருக்கு, மூன்று வேளையும் சமைத்துப் போட, ஒரு சமையற்காரரும், காலை 6:00 மணியிலிருந்து இரவு 9:00 மணி வரை மருத்துவ உதவிகள் செய்து கவனித்துக் கொள்ள, ஒரு செவிலியர் நங்கையையும் அமர்த்தி இருந்தனர், பிள்ளைகள். தினமும் மொபைல் போனில், தந்தையின் நலம் விசாரிப்பர். பணியாளர்களுக்கு மாதாமாதம் அவரவர் வங்கிக் கணக்கில் சம்பளப் பணத்தை போட்டு விடுவர். பங்களாவுக்குள்ளும், வெளியேயும் நடக்கும் ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்க சி.சி.டி.வி., பொருத்தி, அவர்களின் மொபைல் போனுடன் இணைத்திருந்தனர். தேவைப்பட்டால் இணைப்பில் உத்தரவிடுவர். ''கு ட்மார்னிங் சார்!'' படுக்கையில் படுத்திருந்த, பராந்தகன் மெதுவாக கண்விழித்து முகம் மலர்ந்தார். ''குட்மார்னிங் ஏஞ்ஜல்.'' 'பிஸியோதெரபி' கொடுத்து, கொடுத்து பக்கவாத பாதிப்பிலிருந்து, 80 சதவீதம் மீண்டிருந்தார், பராந்தகன். அவரைக் கைத்தாங்கலாய் அழைத்துப் போய், பல்துலக்கி விட்டாள். அவரது ஆடைகளை அகற்றி, அவரை குளிக்க வைத்தாள். குளித்தவருக்கு மாற்றாடைகள் அணிவித்து, படுக்கையில் அமர வைத்தாள். சமையல்காரர் கொண்டு வந்த சிற்றுண்டியை ஊட்டி விட்டாள். மாத்திரைகளை கொடுத்து விழுங்கச் சொன்னாள். அமர்ந்தவாறே, பராந்தகனுக்கு 'பிசியோதெரபி' பயிற்சியை செய்ய ஆரம்பித்தாள். ''இன்னைக்கி, நீ ரொம்ப அழகா இருக்க,'' என்றார், பராந்தகன். ''தினமும் நீங்கள் சொல்ற, 'டயலாக்' தானே இது?'' என்றாள், மஞ்சுளா. ''பனி நனைந்த ரோஜாப்பூ போல் இருக்கிறாய்!'' ''சரி!'' ''உன்னைப் பார்த்தால் என் வயது குறைகிறது!'' ''எத்தனை வயதில் நிற்கிறீர்கள்?'' ''எனக்கு வயது இப்போது, 20!'' ''ஓ... என்னை விட, உங்களுக்கு பதினைந்து வயது குறைவு.'' ''எத்தனையோ விஷயங்களில், எனக்கு துரோகம் செய்த என் பிள்ளைகள், அவர்கள் அறியாமலேயே எனக்கொரு நன்மை செய்து விட்டனர்!'' ''என்ன நன்மை?'' ''ஒரு தெத்துப்பல் அரைக்கிழவியை எனக்கு, நர்ஸாக போடாமல், ஒரு உலக பேரழகியை எனக்கு நர்ஸாக போட்டு, புண்ணியம் தேடிக் கொண்டனர்.'' ''மிகைப்படுத்தி பேசுகிறீர்கள். பொருளாதார சிக்கல்கள், கணவருடனான உறவுச்சிக்கல் என்னுடைய தனிப்பட்ட உடல் மற்றும் மனஆரோக்கியம் ஆகியவை என்னை 'மெதுமெது'வாக தின்று வருகின்றன. நான் ஒரு சராசரி பெண்.'' ''உன்னுடைய அழகும், மருத்துவ சேவையும் தான் என்னை பக்கவாதத்திலிருந்து ஓரளவுக்கு மீட்டுள்ளது. யார் கண்டது? நாளை நான் மான் போல் துள்ளிக்குதித்து, பீடு நடை போட்டாலும் போடலாம்.'' ''வாரம் ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்யும் மருத்துவர், உங்கள் விருப்பத்தை வழி மொழிந்து உள்ளார்.'' ''என் மனைவி இறந்து, 22 ஆண்டுகள் ஆகின்றன. யாரையும் மனதால் கூட நினைக்காமல், விசுவாமித்திரர் போல வாழ்ந்தேன். என் தவத்தை கலைத்து விட்டாய்!'' சிரித்தாள், மஞ்சுளா. ''நான் கல்யாணமானவள். எனக்கு கணவன் இருக்கிறான். அதை நீங்கள் நினைவில் கொள்ளுங்கள்.'' ''உன் கணவனால் என்ன சுகப்பட்டாய்? அவன் ஒரு குடிகாரன், சூதாடி.'' ''என் முன், என் கணவனை விமர்சிக்காதீர்கள்!'' ''ஒரு கோஹினுார் வைரம், கண் தெரியாத பிச்சைக்காரனிடம் சிக்கி விட்டது!'' ''உங்கள் உதாரணம் தவறானது.'' ''மஞ்சுளா நேராக என் கண்களை பார்த்துப்பேசு.'' ''உங்கள் கண்களை பார்த்து பேசுவதில் எனக்கென்ன தயக்கம்... சொல்லுங்க.'' ''நான் உன்னை நேசிக்கிறேன்.'' ''உங்களுக்கு என் தகப்பனார் வயது. ஒரு மகளாய் என்னை நேசியுங்கள்.'' ''காதலுக்கு வயதில்லை. மறைக்காமல் சொல். நீயும், என்னை நேசிக்கிறாய் தானே?'' விகற்பமில்லாமல் சிரித்தாள்... ''நீங்கள், நான் முழுமையாக கவனித்துக் கொள்ளும், நோயாளி. நீங்கள், எனக்கு சம்பளம் தரும் முதலாளி. உங்கள் மீது எனக்கு, அன்பு உண்டு. நோயாளியின் மீது, அன்பில்லாமல், ஒரு நோயாளியை முழுமையாக கவனித்துக் கொள்ள முடியாது.'' ''விருப்பமில்லாத வாழ்க்கையை ஏன் வாழ்கிறாய்? தலைமுழுகி விட்டு வா. என் ராஜ்ஜியத்தின் மஹாராணி ஆகு.'' ''இந்த விஷயத்தை பேசாமல் வேற விஷயம் பேசுவோமே.'' ''இந்த கிழவனை கல்யாணம் பண்ணி என்ன சுகத்தை காணப்போகிறோம் என, எண்ணாதே. இன்னும், 20 ஆண்டுகள் உயிர் வாழ்வேன். தாம்பத்யத்தில் உனக்கொரு குறையும் வராமல் நான் பார்த்துக் கொள்வேன்.'' ''நான் ஒரு நர்ஸ், நீங்கள் ஒரு நோயாளி. நமக்கிடையே இருக்கும் இந்த உறவை நீங்கள் கொச்சைப் படுத்தலாமா?'' ''எத்தனையோ முறை என் கன்னத்தில் முத்தமிட்டு உள்ளாய். என்னை படுக்கையிலிருந்து எழுப்பும் போதெல்லாம் என்னை கட்டியணைத்துள்ளாய். ஒரு தாய் போல என்னை குளிக்க வைத்துள்ளாய். உன் பத்து விரல்களும், என் பத்துவிரல்களுடன் கைகோர்த்து பரமபதம் ஆடியுள்ளன. உயிர் வாழும் ஆசை அறவே இல்லாத, எனக்கு இன்னும், 100 ஆண்டுகள் வாழும் செயல்திறனை ஏற்படுத்திவிட்டாய்.'' ''என்னுடைய மருத்துவ சேவைகள் உள் நோக்கம் இல்லாதவை. மருத்துவ சேவை ஆண், பெண் பேதம் பார்ப்பதில்லை.'' ''மஞ்சுளா உனக்கு ஒரு வாய்ப்பு தருகிறேன். இன்னும் சில மாதங்களில் முழுமையாக குணமாகி பிசினஸில் மீண்டும் கால் வைக்கப் போகிறேன். உன் கணவரை விவாகரத்து செய்துவிட்டு, என்னை மறுமணம் செய்து கொள். திருமணப்பரிசாக உனக்கு, இரண்டு கோடி ரூபாய் மதிப்பில் வைர நெக்லஸ்.'' இறுகினாள், மஞ்சுளா. இ ரவு பணி முடித்து வீடு திரும்பும் மஞ்சுளாவை, மொபைல் போன் அழைத்தது. பராந்தகனின் மகன் பேசினான். ''நீங்களும், எங்கள் அப்பாவும் பேசியதை சி.சி.டி.வி.,யில் கேட்டோம். எங்கள் அப்பாவுக்கு நாங்கள் எந்த வஞ்சகமும் புரியவில்லை. அவர் மகிழ்ச்சியாக இருந்தால் சரிதான். நீங்கள், எங்கள் அப்பாவை மறுமணம் செய்து கொள்ள எங்களுக்கு பூரண சம்மதம்.'' ''யோசிக்கிறேன்!'' கணவனிடம் நடந்ததைக் கூறினாள். ''நாம் காதலித்துதான் மணந்து கொண்டோம். கேவலமான குடிப்பழக்கம் நம் திருமண வாழ்வை பாழடித்து விட்டது. நான் திருந்த தயாராக இருக்கிறேன். உன் கால்களை பிடித்து கேட்கிறேன். என்னை விட்டுப் போய் விடாதே. ஆனால், உனக்கு ஒரு வசதியான வாழ்க்கை கிடைப்பதை நான் ஏன் தடுக்க வேண்டும்? நீ, அவரை மறுமணம் செய்து கொள்.'' பூ ர ணகுணமடைந்து புல்சூட்டில் நின்றிருந்தார், பராந்தகன். ''நீங்கள் சொல்லியதை பரிசீலித்தேன். இனி வரும்காலத்தில் பல கோடீஸ்வரர்களுக்கு மருத்துவ சேவை செய்ய வேண்டிய நான், ஒவ்வொருவரையும் காதலிக்க முடியுமா? மருத்துவ சேவையை கொச்சைப்படுத்த விரும்பவில்லை நான். குணமடைந்த நோயாளி, குணப்படுத்திய செவிலியர் நங்கையாக பிரிவோம் நாம். ''என் கணவருடனான காதல் இன்னும் தீர்ந்து விடவில்லை. இந்தப் பிறவியில், அவர் எனக்கு போதும். உங்களை என் தந்தை ஸ்தானத்தில் வைத்து பணிவிடை செய்தேன். நேசிக்கும் தந்தையை எந்த மகள் திருமணம் செய்து கொள்வாள்? உங்கள் பூரண ஆரோக்கியத்துக்கு வாழ்த்துகள்.'' பராந்தகனின் நெற்றியில் முத்தமிட்டு, பிரியாவிடை பெற்றாள், மஞ்சுளா. ஆர்னிகா நாசர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

T Kumaresh
செப் 25, 2026 11:34

ஆர்னிகா நாசர் ரொம்ப அருமையா எழுதியுள்ளார். பாராட்டுகள்.


Venkatesan Ramasamay
செப் 21, 2026 11:03

"நோயாளியின் மீது, அன்பில்லாமல், ஒரு நோயாளியை முழுமையாக கவனித்துக் கொள்ள முடியாது. இந்த வரிகள் மிகவும் ஆழமான கருத்துள்ள வரிகள் .. ஒவொரு மருத்துவமனையிலும் பிரேம் பண்ணி வைக்கப்பட வேண்டிய வைர வரிகள் ... வாழ்த்துக்கள் ... வித்தியாசமான சிந்தனை ....கதை அருமை ...


அழகர்சாமி
செப் 20, 2026 13:52

அப்ப செம


Rangarajan
செப் 20, 2026 13:39

சூப்பர் சார். ரொம்ப ரொம்ப வித்தியாசமான கதை