உள்ளூர் செய்திகள்

நட்பு!

தரைத்தளத்திலிருந்த, 'லிப்டை' மூன்றாம் தளத்திற்கான, பட்டனில் அழுத்தினார், ராமநாதன்.'லிப்ட்' மேலேறி திறக்கவும் அதே, 'லிப்டில்' வந்திறங்கிய அவருடைய மகன், “என்னப்பா... கிளம்பியாச்சா உங்க இளைஞர் மாநாட்டுக்கு'' என்று புன்னகையோடு கலாய்த்தான்.'ஆமாம்ப்பா இன்னைக்கு, அஞ்சு நிமிஷம் லேட்,' என்று சிரிப்புடன் சொன்னவர், 'லிப்டில்' ஏறினார்.'கேட்டட் கம்யூனிட்டி' என்று சொல்லப்படும் அடுக்குமாடி வீட்டுக் குடியிருப்பில், ஐந்து, 'ப்ளாக்கு'களுடன், 200 வீடுகளைக் கொண்ட வரிசையில், 'பிளாக் பி' பகுதியில் மனைவி, மகன், மருமகள் மற்றும் பேரப் பிள்ளைகளுடன் வசிப்பவர், ராமநாதன்.பெரிய கார் பார்க்கிங், நடை பயிற்சி, உடற்பயிற்சி தளங்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு தளங்கள், சிறிய பூங்கா மற்றும் சிறு சிறு விசேஷங்களை கொண்டாட, 'மினி ஹால்' போன்ற வசதிகளுடன் கூடிய குடியிருப்பு அது. சில மாதங்களுக்கு முன் தான், அதன் உரிமையாளர்கள் குடிபெயர்ந்திருந்தனர்.தொழில் நுட்பத்தில், பண வசதிகளின் பெருக்கத்தில், அவரவர்கள் வசதிக்கேற்ப வாழ்க்கைத்தரம் உயர்ந்து வருகிறது. பலவிதமான கம்பெனிகளின் வேறுபட்ட பதவிகளில் இருக்கும் தற்போதைய தலைமுறைப் பிள்ளைகள், தங்கள் விருப்பத்திற்கேற்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடிகிறது. அதே சமயம் தன்னுடன் இருக்கும் வீட்டு பெரியவர்களையும், அவர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்து மகிழ்விக்கின்றனர்.தற்போதைய அதிகமான வேலைப் பளு, நேரமின்மை போன்ற காரணங்களால், அதிக நேரம் பெரியவர்களுடன் நேரம் செலவழிக்க முடியவில்லை என்பது தான், பிள்ளைகளின் இன்றைய நிலை. கால சக்கரத்தின் சூழலுக்கு ஏற்ப, நம்மை மாற்றிக் கொள்வது அவசியமாகி விட்டது.'லிப்டில்' இருந்து இறங்கிய ராமநாதன், நடைப்பயிற்சி தளத்திற்கு சென்றார். இவருடன், இவர் வயது ஒத்த பெரியவர்களும், அங்கு அதே நேரத்திற்கு வந்து விடுவர். அப்படி ஒவ்வொருவராக இறங்கி வந்து, ஒருவருக்கொருவர் ஒரு மாலை வணக்கத்தை உதிர்த்துவிட்டு நடக்க ஆரம்பிப்பர். இது, அவர்களுடைய அன்றாட வழக்கம்.சிறுகதை நடைப்பயிற்சி முடிந்தவுடன் அனைவரும், அங்கு இருக்கும் பெஞ்சுகளில் ஒன்றுகூடி அமர்ந்து பேசிவிட்டு, வீடு திரும்புவர். நான்கு பேருடன் ஆரம்பித்த நண்பர்களின் கூட்டம், இன்று, 20 பேராக உயர்ந்திருக்கிறது.ஆறு மாதத்திற்கு முன்பு, இந்த பழக்கத்தை ஆரம்பித்து வைத்தவர், ராமநாதன் தான். பார்ப்பவர்களிடம் தானாகவே வலிய சென்று நட்புப் பாராட்டி, தன் குழுவில் இணைத்து கொண்டார்.ஒரு விஷயத்தில் உறுதியாக இருந்தார், ராமநாதன். அதனால், ஆரம்பத்திலேயே அவர்களிடம், 'இது நம் சந்தோஷத்திற்கான, பொழுதுபோக்குக்கான ஒரு கூட்டம். இதில், நம் சொந்த விருப்பு, வெறுப்புகள், கவலைகள், வீட்டுக்கதைகளின் அன்றாட நிகழ்வுகளைப் பற்றி பேச வேண்டாம்...நாம் கடந்து வந்த பாதை பெரிது. இதற்கு முன் நாம் எப்படிப்பட்ட பதவிகளில் இருந்திருந்தாலும், இப்போது நாம் அனைவரும் இருப்பது, 'ஓய்வு' என்ற உயர் பதவியில். இதை நல்ல ஆரோக்கியமாக்க, நம்மிடம் என்றுமே நல்ல பரிமாற்றங்கள் தான் அவசியம். நம்* கசப்பான அனுபவங்களை மறந்து, என்றும் நல்லவற்றையே பேசுவோம்...' என்று அழகாக பேசினார், ராமநாதன்.அரசியல், ஆன்மிகம், நாட்டு நடப்புகள், சிறு வயது அனுபவங்கள் என்று பேசப்பட்ட விஷயங்கள் யாவும், பொதுவானவையாகவே இருக்கும். கலகலப்பிற்கும் குறைவிருக்காது. இவர்களின் பேச்சையும், சிரிப்பையும் பார்த்து, புரிந்தவர்கள் ரசித்தும், புரியாத சிலர், 'இவங்க, 'அட்ராசிட்டி' தாங்க முடியல...' என்று பேசியும் கடந்து செல்வர்.அவ்வப்போது அங்கு வந்து அவர்களது பேச்சை கேட்கும், அவர்களின் வயதை ஒத்த, வாட்ச்மேன் ரங்கசாமியையும், அவரின் பணியில்லாத நாட்களில் வரச் சொல்வார், ராமநாதன்.இவர்களின் கூட்டத்தில் சேராமல் விலகியே இருப்பவர் தான், வரதராஜன். ஏற்கனவே அழைத்திருந்த ராமநாதனிடம், மென்மையாக மறுத்திருந்த வரதராஜன், தினமும், ஒரு கையசைப்பில் அவர்களை கடந்து சென்று விடுவார்.இதில், கோபாலன் என்பவருக்கு தான், கொஞ்சம் அவர் மேல் கோபம். 'மனுஷன் தனியாத்தான் இருக்கார், பாவம். அவருக்கும் ஒரு, 'சேஞ்ச்' கிடைக்கும்; வரலாமே...' என்று ஆதங்கப்பட, நாராயணன் என்பவர், 'ஆமாமா, நானும் அவரை நிறைய தடவை கூப்பிட்டிருக்கிறேன், அவர் ஒரு தனிமை விரும்பி போலிருக்கு...' என்றார்.'ஒருவரின் தனிப்பட்ட விருப்பம் சார் இதெல்லாம். பரவாயில்லை விடுங்க...'என்று, அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார், ராமநாதன்.வரதராஜன் வீட்டில், மகளும், மருமகனும் கூட, 'நீங்களும் அங்க பெரியவங்க 'குரூப்'ல சேரலாமே...' என, வரதராஜனிடம் கேட்பதுண்டு.'இல்லம்மா பரவாயில்ல...' என்று மறுத்து விட்டார்.ராமநாதன் குழு நினைப்பது போல், வரதராஜன் தனிமை விரும்பி கிடையாது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்வரை, அவர் மனைவி காலம் முடியும் வரை, அவரது நண்பர்களுடன் இருந்தவர் தான். சிறு வயது முதலே இருந்த எழுத்தார்வமும், திறமையும் அவரை, நாடகக் கலைத்துறையில் ஈடுபட வைத்திருந்தது.அதனால், நண்பர்கள், நாடகக்குழு, அதற்கான ஏற்பாடுகள் என்று, அவரின் முழுக் கவனமும் அந்த துறையில் இருந்தது. அதற்காக வீட்டு பொறுப்புகளில் இருந்து விலகியவரும் இல்லை, வரதராஜன். அவர் மனைவியின் முழு ஒத்துழைப்பும், உதவியும் அவரின் இந்தப் பேரார்வ பயணத்தை தொடர, முக்கிய காரணமாக இருந்தது.இருபது ஆண்டு பயணம் முடிந்து, மனைவியின் காலத்திற்கு பின், இன்று மகள் வீட்டில், இந்தக் குடியிருப்பிற்கு வந்து சேர்ந்தார், வரதராஜன். தன்னுடைய விருப்பங்களுக்காகவே வாழ்ந்த, தன் மனைவிக்கு எதுவும் செய்யாமலேயே விட்டுவிட்டதாக, ஒரு குற்ற உணர்வு அவருக்கு!அதை, தன் மகளிடமும் ஒருநாள் தெரிவிக்க, 'அப்பா... நீங்க தேவையில்லாம இதெல்லாம் யோசிக்கறீங்க. நாமே ஏதோ காரணங்களை தேடி கவலைப்படறதுல அர்த்தம் இல்லப்பா. நம்ம வாழ்க்கையின் பிடிப்பே. நமக்கு ஆர்வமான விஷயங்கள்ல நம்மை ஈடுபடுத்திக்கறது தான். அதைத்தான் நீங்க செஞ்சீங்க. அதுவும் அம்மாவோட முழு விருப்பத்தோடு...' என்று, ஆதரவாக பேசினாள்.இந்தக் குடியிருப்பு கட்டி முடித்து, ஒரு ஆண்டு முடிவடைகிறது என்பதால், இதன் முதலாம் ஆண்டு விழாவை மிக சிறப்பாக கொண்டாட முடிவு செய்திருந்தனர், குடியிருப்பு வாசிகள்.“என்ன... ராமநாதன் சார்... முதல் ஆண்டு விழாவை பிரமாண்டமாக கொண்டாட போறதா சொன்னான், என் மகன். அவங்களுக்கு உதவியா நாம ஏதாவது செய்யலாமா?' என்றார், ஒருவர்.உடனே, “ஆமாங்க சார், பாவம் பசங்க. அவங்க இருக்குற, 'பிஸி'ல, அவங்களுக்கு ஏது நேரம்? நாமே எல்லா ஏற்பாடுகளும் பண்ணலாமே. குழந்தைகள், பெரியவர்களுக்கான போட்டிகள், பெண்களுக்கான கோலப்போட்டி, சமையல் போட்டி, பாட்டு போட்டி, கலை நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுன்னு செய்து அசத்திடலாம் சார்,' துள்ளலாய் கூறினார், மற்றொருவர்.பணி ஒய்விற்கு பின், பிடித்த விஷயங்களில் கவனத்தை செலுத்தும் போது மனமும், உடலும் வலுவாகி, புதுத்தெம்பு பிறக்கிறது. ராமநாதனின் தலைமையில் ஏற்பாடுகள் ஆரம்பித்தன.எதிர்பார்த்ததை விட, ஆண்டு விழா நிகழ்ச்சிகளை விமரிசையாக ஏற்பாடு செய்திருந்தனர். பெரியவர்கள். இவர்களின் ஏற்பாட்டிலும், 'பிளாட்'வாசிகளின் பங்களிப்பிலும் விழாக்கோலம் பூண்டிருந்தது, குடியிருப்பு.யாரும் எதிர்பாராதவிதமாக, அனைவரும் வியக்கும் விதமாக, அந்த பெரியவர்களுக்கு சிறப்புப் பரிசு கொடுத்து அசத்தியிருந்தனர். அங்கிருந்த குடும்ப உறுப்பினர்கள்.வழக்கம்போல் பெரியவர்கள் அனைவரும் அன்று மாலை நடைப்பயிற்சி முடிந்து கூடினர்.'நாராயணன் சார், கவனிச்சீங்களா நீங்க... ரெண்டு நாளா, வரதராஜன் சார் கண்ணுலயே படலை?' என்றார். பெரியவர்களில் ஒருவர்.அவர் அருகிலிருந்தவரும் உடனே, 'ஆமா சார், நானும் நினைச்சேன்,' என்றார்.'அப்படியா, என்னாச்சு அவருக்கு தெரியலையே, 'சற்றே கவலையுடன் கேட்டார், ராமநாதன்.பிறகு அவரே, “பாப்போம்... இப்போ அவர் பசங்க வர்ற நேரம் தான் அவர்களிடம் கேக்கலாம்...' என, சொல்லிக் கொண்டிருக்கும் போதே, வழக்கமான நேரத்தை விட, சற்று முன்னதாகவே வந்து கொண்டிருந்த அவரின் மருமகனிடம் விசாரித்தனர்.'ஆமாங்க சார், மாமனாருக்குக் கொஞ்சம் உடம்பு முடியல. மூன்று நாள் முன்னாடி லேசா நெஞ்சு வலின்னு சொன்னதுனால ஆஸ்பத்திரியில, 'அட்மிட்' செய்திருக்கோம். இப்போ கொஞ்சம் தேறி, 'நார்மல் வார்டு'க்கு வந்திருக்கார்.“இன்னைக்கு நான் தான், 'லீவு' போட்டிருக்கேன். மனைவிக்கு ஆபீசுல, 'லீவு' போட முடியலை. நாளையிலேருந்து எனக்கு ஆபீசுல, 'ஆடிட்டிங்' ஆரம்பம்.'வெளியூர்ல இருக்கற எங்க பெற்றோரும் வர முடியாததால் ஒரு உதவியாளரை தான் பார்த்துட்டுருக்கோம். உங்களுக்கு யாராவது தெரியுமா... உங்களால ஏற்பாடு பண்ண முடியுமா, சார்?' என்று கேட்டார், வரதராஜனின் மருமகன்.அவரின் பேச்சில் இருந்த தவிப்பை உணர்ந்து, 'கண்டிப்பா தம்பி... இன்னைக்கு ராத்திரிக்குள்ள ஏற்பாடு பண்ணிட்டு உன்னை கூப்பிடறேன்,' என்றார், ராமநாதன்.சொன்னபடியே செய்தார். ஆம், அந்த உதவியாளர்கள் யாருமல்ல, இந்த பெரியவர்கள் தான்.குழுவின் நண்பர்கள் அனைவரும் அவர்களின் வசதிக்கேற்ப, 'ஷிப்ட் டைம்' போட்டு கொண்டனர். வரதராஜனை ஆஸ்பத்திரியில் மாறி மாறி பார்த்துக் கொள்வதாகவும், அவர்களின் வீட்டுப் பெண்களின் உதவியில், அவருக்கு உணவு தயார் செய்து தருவதாகவும் ஏற்பாடாகி இருந்தது.நெகிழ்ச்சியின் எல்லைக்கே போன அவரின் மகளும், மருமகனும் பேச வார்த்தையின்றி, தங்கள் நன்றியை கண்ணீர் துளிகளில் காண்பித்து கை கூப்பினர்.“என்னப்பா இதெல்லாம்... மனுஷங்களுக்கு மனுஷங்க இது கூட செய்யலேன்னா எப்படி? நீங்க நிம்மதியா உங்க வேலையப் பாருங்க. அப்புறம், உங்க குழந்தையை பள்ளிக்கூடத்திலிருந்து, ராஜன் சார் கூப்பிட்டு வந்து, அவங்க வீட்டுல பாத்துப்பார். டோன்ட் வொர்ரி,” என்றார், ராமநாதன்.இதில், வாட்ச்மேன் ரங்கசாமியின் பங்கும், மிக முக்கியமாக இருந்தது. தயார் செய்யப்பட்ட உணவை, வரதராஜனுக்கு ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்வது, 'பினாஸ்க்'கில் காபி, தண்ணீர் என்று மாற்றி மாற்றி கொண்டு செல்வது என்று, தன்னால் முடிந்தவற்றை செய்தார்.ராமநாதனிடம், 'சார், நீங்கள்லாம் அவருக்கு ஏதாவது பணத்துனால உதவி செய்வீங்களோ என்னவோ. என்னால இதுதான் சார் முடியும்,” என்றார், வாட்ச்மேன்.“அடடா என்ன, ரங்கசாமி இது... நீங்க என்ன குடுக்கறீங்கங்கிறது முக்கியமில்லை; உங்க எண்ணம் தான் முக்கியம்,' என்று தட்டிக்கொடுத்தார், ராமநாதன்.நல்லபடியாக அனைவரின் ஒத்துழைப்பிலும், கடவுளின் கருணையிலும், உடல் நன்றாகத் தேறி, வீடு திரும்பினார், வரதராஜன்.மாலை 6:30 மணி. நடைப்பயிற்சி முடிந்து அனைவரும் ஒன்று கூடும் நேரம். அனைவரும் தங்கள் இடத்திற்கு வர, 'குட் ஈவினிங்' என்ற குரல் வந்த பக்கம் திரும்பினர். அங்கே, வரதராஜன் இவர்களுக்காக எதிர்பார்த்து காத்திருக்க, அவருடன் அன்புடன் கை குலுக்கினர்.'நட்பு' என்று, தான் முடித்து வைத்திருந்த அத்தியாயத்தை மீண்டும் இவர்களுடன் தொடர ஆரம்பித்தார், வரதராஜன்!- லட்சுமி ராமானுஜம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !