பிள்ளை நிலா!
சாந்தா, மாரியப்பன் தம்பதியின் மூன்று மகள்களும், உறவினர் இல்லத் திருமணத்தை முடித்து விட்டு அம்மா வீட்டில் குழுமியிருந்தனர். ''என்னம்மா, நேத்தும் குடிச்சுட்டு வந்தாரா, அப்பா?'' என, ஏளனம் கலந்த வெறுப்போடு கேட்டுக் கொண்டிருந்தாள், மூத்த மகள், கவிதா.''ஆமாம்மா, எல்லாம் என் தலை எழுத்து. வயசானா எல்லாருக்கும் பக்குவம் வரும்ன்னு சொல்வாங்க. இந்தாளுக்கு புத்தி இன்னும் மழுங்குது. தினமும் குடி தான். சாப்பிட வாங்கன்னு கூப்பிட்டா, அசிங்கமா திட்டிட்டுப் போறாரு,'' என்ற, அம்மா சாந்தாவின் குரலில் வேதனையும், வெறுப்பும் தெரிந்தன. ''நீங்க ஏன், சாப்பிடக் கூப்புடுறீங்க. குடிக்கறதுக்கு சம்பாதிக்கத் தெரியுற ஆளுக்கு, சாப்பிடறதுக்கு காசு இருக்காதா? இனி, சாப்பிடக் கூப்பிடாதீங்க. இந்த மாதம் பெயின்ட் அடிக்குற வேலைக்குப் போயிட்டு வந்து ஏதாவது பணம் கொடுத்தாரா?'' என்றாள், கவிதா. ''ஆமா... அது தான் இங்க குறை. நீ வேற ஏன்டி. சின்னவ கொடுத்த பணத்துல தான் இந்த மாசம் ஓடுது. நான் பிறந்த யோகம் போல. கடைசி வரை பொம்பளை புள்ளைகள் கிட்ட யாசகம் வாங்கியே காலத்தை கடத்தணும்ன்னு என் தலையில எழுதியிருக்கு,'' குரல் தழுதழுக்க கூறினாள், சாந்தா. ''அம்மா, இப்ப எதுக்கு இப்படி பேசுறீங்க? இதுவே ஒரு ஆம்பிளைப் பிள்ளை இருந்து, அது செஞ்சா சரின்னு சொல்லுவீங்கள்ல. நாங்க, மூணு பேரும் வேலைக்கும் போறோம்ல. நீங்க பாட்டுக்கு இருங்க. அப்பா, என்னமோ பண்ணிட்டுப் போறாரு,'' என்றாள், கவிதா. ''அப்படிலாம் சொல்லாத, கவிதா. என்ன இருந்தாலும், நீங்க வேற வீட்டுப் புள்ளைக. என்னைக்கு இருந்தாலும், கட்டுனவன் தான் என்னை பார்க்கணும். நீங்க யாராவது குடிக்க வேண்டாம்ன்னு சொல்லுங்களேன். நீங்க சொன்னா கேட்பாரு.''''அதெல்லாம் எத்தனையோ தடவை சொல்லியாச்சுமா. 'வீட்டுக்கு வந்தா உங்க அம்மாவப் பார்த்துட்டு போய்கிட்டே இருங்க. உங்கம்மாவுக்கு, நீங்க மூணு பேரும் செய்யறீங்கன்னு தெரியும். நான் எதுவும் உங்ககிட்ட எதிர்பார்க்குறேனா?' என, மூஞ்சுல அடிச்ச மாதிரி பேசுறாரு,'' என்றாள், இரண்டாம் மகள், தாரணி. ''அதை விடு, தாரணி. மேகலாவோட பிள்ளைய ஒரு தடவை கூடத் துாக்கிக் கொஞ்சல தெரியுமா. அது பாவம், கண்ண உருட்டி உருட்டி அவரைப் பார்க்குது. சும்மா பேருக்கு சிரிச்சுட்டு தொட்டுக் கூடப் பார்க்காம போயிடுறாரு. அப்படி என்ன தான் அவருக்குப் பிரச்னைன்னு தெரியல,'' என்றாள், கவிதா. ''அப்படியா மேகலா?'' என, தன், ஏழு மாதப் பெண் குழந்தையை துாங்க வைத்துக் கொண்டிருந்த கடைசி தங்கை, மேகலாவை ஏறிட்டாள், தாரணி. ''ஆமாக்கா, எனக்கு ரொம்ப வருத்தமா போச்சு. ஒரு காலத்துல எப்படி இருந்த மனுசன். இப்ப ஏன் இப்படி மாறிட்டாருன்னு தெரியலை,'' என்றாள், மேகலா. ''எல்லாம் இந்த குடியால தான், மேகலா. கண்டவனுங்களோட சேர்ந்து, 50 வயசுக்கு மேல இந்த பழக்கத்தை கத்து வச்சுருக்காரு. என்னைக்கு குடியத் தொட்டாரோ குடும்பத்தை மதிக்கறதும் இல்லை, நினைக்கறதும் இல்லை,'' என்றாள், அம்மா சாந்தா. ''என்னமோமா, எல்லாப் பொம்பளப் பிள்ளைகளுக்கும் கடைசி வரை அப்பாவோட துணை இருக்கு. நாங்க தான் இப்படிக் கிடக்கோம்,'' என, கவிதா சொல்லிக் கொண்டிருக்கும் போதே, ''வாங்கம்மா,'' என்று வாசற்படியில் ஏறி வந்தார், அப்பா. ''நல்லா இருக்கீங்களாப்பா?'' என, மேகலா கேட்க, ''ம். இருக்கேன். பாப்பா துாங்குதா?'' என்றபடி, அவள் பதிலுக்கு கூட, காத்திருக்காமல் மாடிக்கு ஏறி சென்றவரிடமிருந்து வந்த மது நெடி, 'குப்'பென கடந்து சென்றது. 'கவலைப்படாம இருங்கம்மா...' என, பொத்தாம் பொதுவாய் அம்மாவிடம் கூறிய மகள்கள் மூவரும், அப்பாவிடம் சொல்லிவிட்டு போக வந்தனர்.''உங்க அம்மாவைப் பார்க்கத்தானே வந்தீங்க. பார்த்துட்டீங்கள்ல கிளம்புங்க,'' என, நிமிர்ந்து கூடப் பார்க்காமல் கூறினார், அப்பா. அம்மா வீட்டிற்கு சென்று திரும்பிய பின், மேகலாவின் சிந்தைக்குள் ஆழமாய் அப்பாவின் நினைவு வந்து போய் கொண்டிருந்தது. தன், குழந்தையை மடியில் இட்டு துாங்க வைத்துக் கொண்டிருந்தவளின் காதுகளுக்குள், 'உங்க அம்மாவைப் பார்க்கத் தான வந்தீங்க, கிளம்புங்க...' என, அவர் சொன்ன வார்த்தைகளுக்கு பின் இருந்த, வெறுமையை உணர முடிந்தது. எப்படி இருந்த மனிதர். கிட்டத்தட்ட, 50 வயது வரை குடும்பத்தின் மாபெரும் துணையாய், நம்பிக்கையாய் இருந்தவர். உழைப்பில் எறும்பு போல் ஓடிக்கொண்டிருந்தவர். இந்த சில ஆண்டுகளில் அப்படியே தலைகீழாக மாறிப் போனதன் மாயம் என்ன?பிள்ளைகளுடன் உட்கார்ந்து அரசியல், சினிமா என, கலகலப்பாய், ஒரு தோழன் போல் பேசிச் சிரிக்கும் அப்பாவின் சிரிப்பை கடைசியாய் எப்போது பார்த்தோம் என, நினைத்தவளின் நினைவுகள் பல ஆண்டுகள் பின்னோக்கி போனது.முத்து முத்தாய் பிறந்த பேரப் பிள்ளைகளை, இப்போதெல்லாம் கொஞ்சி பேசுவதில்லை. பிள்ளைகள் என்ன படிக்கின்றனர் என கேட்கக் கூட, அவருக்கு விருப்பமில்லை. பாவம் அம்மா, இந்த வயதிலும் அவளுக்கு நிம்மதி இல்லையே என, நினைத்தவளின் மனதுக்குள் சர்ரென ஒரு மின்னல் கீற்றுப் போல், 'அப்பா மட்டும் நிம்மதியாக இருக்கிறாரா?' என்ற கேள்வி வந்து போனது. அதைக் கலைக்கும் விதமாய் அறைக்குள் வந்த, மேகலாவின் ஆறு வயது மகன், ''எப்பவுமே இவள மட்டும் தான் பார்ப்பியா? எனக்கு எவ்வளவு நேரமா பசிக்குது தெரியுமா? இவள மட்டும் பெத்துருக்க வேண்டியது தான,'' என, அழுதபடி அவள் மடியிலிருந்த தன், தங்கையின் காலில் ஓங்கி ஒரு அடி அடித்து செல்ல, துாங்கிக் கொண்டிருந்த குழந்தை வீறிட்டு அழ ஆரம்பித்தது.குழந்தையின் அழுகையை நிறுத்தக் கூட முயற்சி செய்ய இயலாமல், அவள் மனம் ஒரு நொடி இறுகியது. கோபித்துக் கொண்டு செல்லும் மகனை பேச்சற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். 'வயோதிகத்தின் வாசலை எட்டுகையில், அத்தனை ஆண்டுகளை சுமந்த மனம் மரித்து, மீண்டும் மழலையின் மனம் பிறப்பெடுத்து விடுகிறது...' என, எங்கோ படித்தது நினைவுக்கு வந்தது. இப்போது அப்பாவும், தன் மகனைப் போன்ற ஒரு குழந்தை தானோ... உண்மையில், அவர் எங்களிடம் விலகிச் சென்று குடிக்கிறாரா? இல்லை நாங்கள் அவரிடம் இருந்து விலகிச் சென்றதால் குடிக்கிறாரா என்ற கேள்விக்கு, இரண்டாவதே சரி என, அவள் மனம் சொன்னது. திருமணம் ஆனதும், பெற்றவன் மீதிருந்த பாசம் கொஞ்சம் குறைந்து விட்டதோ! வெளியில் மகன் அழும் சத்தம் கேட்டது.இத்தனைக்கும், கருவிலிருக்கும் போதே, 'உனக்கு தங்கச்சி பாப்பா வரப்போகுது...' எனச் சொல்லி சொல்லி அவனும் சேர்ந்து சந்தோஷப்பட்டு, ஆசையாய் பிறந்த குழந்தை தானே என் மகள். இங்கு பிரச்னை இடைவெளியா, இல்லை முக்கியத்துவமின்மையா என, தன் திருமணத்திற்கு முந்தைய அப்பாவுடனான இனிய நாட்கள் நினைவுக்கு வந்தன. 'அப்பாவிடம் குடிக்க வேணாம்ன்னு பேசுங்க...' என்ற அம்மா, ஒரு தடவையாவது, 'அப்பாவிடம் நல்லா பேசுங்க...' என்று சொல்லாததன் விளைவு தான், தங்கமாய் இருந்த அப்பா தகரமாய் மாறிவிட்டாரா? வினாக்கள் எழ, எழ அவள் மனம் வெம்பி, ஒரு நொடி வெடித்து அழுதாள். 'சாரிப்பா...' என மனதுக்குள், ஆயிரம் முறை மன்னிப்பு கேட்டவள், கண்களைத் துடைத்து, 'உங்களை அப்படியே விட்டுவிட மாட்டேன்ப்பா...' என மனதுக்குள் உறுதியாய் சொல்லிக் கொண்டாள். தனியாக நின்று சரிசெய்ய வேண்டியது அவசியம் என நினைத்தவள், கடிகாரத்தை பார்த்தாள். இரவு மணி 7:00 எனக் காண்பித்தது. மகனைச் சமாதானம் செய்து, மொபைல் போனை எடுத்தாள். அப்பா கூர் வாள் வார்த்தைகளை வீசக் கூடும். பொறுமையாக இருக்க வேண்டும் என்று நினைத்தபடி, அப்பாவை அழைத்தாள்.''என்னம்மா, அதிசயமா போன் பண்ணியிருக்க,'' என்ற, அப்பாவின் வார்த்தைகள் ஏளனத்தின் உச்சத்தில் இருந்தன. ''சும்மாதான்ப்பா, சாப்டீங்களா?'' எனக் கேட்டபோது, ''ஆமாம்மா உங்கம்மா சட்டி நிறைய ஆக்கி தந்தா சாப்பிட்டேன். தேவையில்லாததை கேட்காம வைம்மா,'' என்றபடி அழைப்பை துண்டித்தார். காயப்படுத்தும்படி, பேசினாலும், என் அப்பா அவர் என, மனதைத் தேற்றியபடி, தினமும் இரவு, 7:00 மணிக்கு அழைக்க வேண்டும் என முடிவு செய்தாள், மேகலா. இரண்டாம் நாளும் அப்பாவிடம் இருந்து ஏளனம் மட்டும் தான் வெளிப்பட்டது. ''எதுக்கும்மா போன் பண்ணுற?'' எனக் கேட்க, ''பாப்பா, தாத்தான்னு சொல்லுதுப்பா. அதான் உங்ககிட்ட சொல்லலாம்ன்னு கூப்பிட்டேன்,'' என்றாள், மேகலா. ''ஓ, பரவாயில்லையே, தாத்தான்னு ஒருத்தன் இருக்கேன்னுலாம் சொல்லிக் கொடுக்குறீங்களா?'' என்ற கடினமான வார்த்தைகளோடு அழைப்பை துண்டித்தார்.ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மனக்காயம் எனத் தொடர்ந்த அழைப்பு, 10ம் நாளில், ''சாப்பிட்டேன்மா, நீ சாப்பிட்டியா?'' என்ற கேள்வியாய் உருவெடுத்தது. மூன்றாம் வாரத்தில் ஒருநாள், மேகலாவின் உடல்நிலை சரியில்லாமல் போன் செய்யாத போது, ''என்னடா நேத்து நீ போன் பண்ணல?'' என, அப்பாவே அழைத்து கேட்டபோது, அவளுக்கு ஒரு ஆனந்தம் பரவியது. நான்காம் வாரத்தில் ஒருநாள், அம்மா வீட்டிற்கு சென்றாள்.''அம்மா இன்னைக்கு வெளியே போய் சாப்பிடலாம். அப்பாவையும் கூட்டிட்டு போகலாம்,'' என்றாள், மேகலா. ''அவர் எதுக்கு? அதெல்லாம் வேணாம்,'' என்றாள், அம்மா. ''உங்களுக்கு செய்யறதுல அப்பா ஏதாவது தலையிடுறாரா? நீங்களும் தலையிடாதீங்க'' என்றாள். இருவரையும் உணவகத்திற்கு அழைத்து சென்றாள், மேகலா. ''பிரியாணி நல்லா இருக்குடா,'' என்ற அப்பாவைப் பார்க்கும் போது, மேகலாவின் மனதுக்குள் மெல்ல கண்ணீர் வடிந்தது. ஏழு மணி அழைப்பு, மெகாத் தொடர் போல் தொடர, பழையபடி சில அரசியல் பேச்சுகள் கூட, இருவருக்கும் இடையிலும் இழையோடியது. தினமும், பாப்பாவைப் பற்றி விசாரித்து, அவள் தாத்தா என, மழலையில் சொல்லும் வரை, அவர் போனை வைப்பதில்லை. ''கவிதா அக்கா உங்களுக்கு போன் பண்ணுச்சாம்ப்பா. நீங்க எடுக்கலயாம்,'' என, நன்மைக்காக சில பொய்களையும் சொல்லிக் கொண்டாள். அடுத்தடுத்த முறைகள் சந்திக்கையில், அப்பாவிடம் தெரிந்த மாற்றம் கண்ட மூத்த சகோதரிகளும், மேகலாவின் பாதையில் மெதுவாய் பங்குகொள்ள ஆரம்பித்தனர். அதே வேளையில், கைக்குழந்தையான தன் மகளுக்கு இணையாய், தன் ஆறு வயது மகனையும் பேண ஆரம்பித்தாள், மேகலா. தினம் இரவு சாப்பாடு ஊட்டி, கதை சொல்லி, அவனை மடியிலிட்டுக் கொஞ்சி, அவன் மனதைத் தணிய வைத்தாள். சில மாதங்கள் கடந்தன. இப்போதெல்லாம், அம்மாவிடமிருந்து அதிகமான புலம்பல்கள் இல்லை. ''ரொம்பக் குடிக்கறது இல்லப்பா. நல்லாக் குளிச்சு, விபூதி வெச்சுட்டு வெளிய போறாரு. ஆனா, செலவுக்கு தான் ஒண்ணும் தருவதில்லை. வீட்டுல சாப்பிடுறதும் இல்லை,'' என்று கூறும் அம்மாவிடம் இருந்து, அன்று காலை அழைப்பு வந்தது. ''மேகலா, அப்பா இன்னைக்கு வீட்டுல சாப்பிட்டாரும்மா. 'இந்தா செலவுக்கு வெச்சுக்கன்னு...' 2,000 ரூபாய் கொடுத்துட்டு போறாரு,'' என்றாள், அம்மா. இதைக்கேட்டு, மெலிதாய் சிரித்தாள், மேகலா. இரவு மகனை மடியிலிட்டுத் தட்டிக் கொடுத்துக் கொண்டு, உட்கார்ந்திருந்த மேகலாவுக்கு அப்பாவிடம் இருந்து மொபைல் போனில் அழைப்பு வந்தது. ''சொல்லுங்கப்பா,'' என்றவளின் வார்த்தையை தொடர்ந்து, ''மேகலாம்மா, நாளைக்கு உன் வீட்டுக்கு வரவாடா? பாப்பாவுக்கு ஒரு சைக்கிள் வாங்கினேன். கொண்டுட்டு வரவாடா?'' என, அப்பா கேட்டபோது, ஆனந்த கண்ணீர் வடித்தாள்.''வாங்கப்பா,'' என்ற பேச்சு சத்தத்தில், துாக்கம் கலைந்து எழுந்தான், மகன்.''அம்மா, பாப்பா இன்னும் துாங்காம இருக்காளா? நான் கீழே படுத்துக்குறேன். நீ, அவள மடியில படுக்க வெச்சுக்கோ,'' என்றபடி, பூங்கொத்தை அள்ளுவது போல், தங்கையை அள்ளி, அம்மாவின் மடியில் வைத்து, அவள் பிஞ்சுக் கன்னத்தில் முத்தமிட்டு மகிழ்வாய் சிரித்தான், மேகலாவின் மகன். புனிதா பார்த்திபன்வயது: 30. ஊர்: பட்டிவீரன்பட்டி, திண்டுக்கல்.தமிழ் வார, மாத இதழ்களில் இவரது சிறுகதைகள் வெளியாகியுள்ளன. 'மருதாணிவாசம்' என்ற தலைப்பில் சிறுகதை தொகுப்பு ஒன்றும் வெளியாகியுள்ளது. வாழ்வியலை புரிய வைக்கும் படைப்புகள் எழுத வேண்டும் என்பது, இவரது லட்சியம். அவரவர் பக்க பிரச்னைகளும், நியாயங்களுமே பிரதானமாக கருதி, மற்றவர்களின் மன உளைச்சலை புரிந்து கொள்ளாமல் சுயநலமாக இருந்ததால், உறவுகளிடம் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நேரில் உணர்ந்ததில் எழுந்த சிறுகதை தான் இது என்கிறார்.