உள்ளூர் செய்திகள்

தொழில் பக்தி!

''என்னங்க, காலை, 6:00 மணி ஆகப் போகுது. டிராவல்ஸ் கார் வந்திருமா?'' என்றாள், சுகுணா. ''அதெல்லாம் கரெக்டா வந்திரும். பி.ஆர்.பி., டிராவல்ஸ் எவ்வளவு பெரிய நிறுவனம்? அதில் தானே, 'புக்' பண்ணியிருக்கேன்,'' என்றபடி, ''சரி, நீ கோவிலுக்கு எடுத்துப் போக வேண்டிய பொருட்களை கரெக்டா எடுத்து வச்சுட்டியா? குழந்தைக்கு மொட்டை அடிச்ச பிறகு, புது டிரெஸ் எடுத்து வைக்கலைன்னு சொல்லாதே,'' என்றான், கதிர். ''எல்லாத்தையும் ராத்திரியே தயாராக எடுத்து வச்சுட்டேன்,'' என, தன் இரண்டு வயது குழந்தைக்கு ஸ்வெட்டர் மாட்டியபடி கூறினாள், சுகுணா. செ ன்னையை தாண்டி, மூன்று மணி நேர துாரத்தில் இருக்கும், கரம்பூர் முத்துமாரியம்மன் கோவிலுக்கு கிளம்பிக் கொண்டிருந்தனர். 'குழந்தைக்கு அடிக்கடி உடல்நிலை முடியாமல் போகுது. நான், கரம்பூர் முத்துமாரியம்மனுக்கு முடி காணிக்கை தருவதாக வேண்டிக்கிட்டேன். மாப்பிள்ளையோடு ஒருமுறை கோவிலுக்குப் போய், குழந்தைக்கு மொட்டை போட்டு விட்டு வந்திடும்மா...' என்ற, சுகுணா அம்மாவின் வேண்டுதலை நிறைவேற்ற தான், புறப்பட்டுக் கொண்டிருந்தனர். கோவிலில் கூட்டம் இருந்தாலும் சீக்கிரம் போனால், இரவுக்குள் திரும்பி விடலாம் என்பது, அவர்கள் திட்டம். காலை மணி, 6:05 ஆக, பொறுமை இழந்தாள், சுகுணா. ''என்னங்க இது. விடிகாலை, 4:00 மணிக்கு எழுந்து, துாங்கற குழந்தையைக் கிளப்பி, தயாராகி இருக்கோம். காரை இன்னும் காணும். என்ன பெரிய டிராவல்ஸ் கம்பெனி. சொன்ன நேரத்துக்கு வர வேண்டாமா?'' ''வரும் சுகுணா. அஞ்சு, பத்து நிமிஷம் முன்னே, பின்னே ஆகறதுக்கு கோபப்பட முடியுமா. அவங்ககிட்டே, 10 வேன், 20 'இனோவா' கார், இன்னும், 'ஸ்விப்ட், ஹோண்டா'ன்னு, 40 வண்டிகளுக்கு மேலே இருக்கு. ''சென்னையிலேயே நல்ல பேர் வாங்கின டிராவல்ஸ். என் நண்பன் சொல்லித்தான், 'புக்' பண்ணினேன்,'' என, கதிர் சொல்லி முடிக்க, வாசலில் கார் வந்து நிற்கும் சப்தம் கேட்டது. 'கார் வந்துடுச்சு போலிருக்கு...' என்றபடி, இருவரும் வெளியே வர, காரில் இருந்து, 35 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவன் இறங்கி வந்தான். ''சாரி சார்... 10 நிமிஷம், 'லேட்' ஆயிடுச்சு. கிளம்பலாமா?'' சுகுணாவுக்கு, அவனுடைய மீசை, குறுந்தாடி, 'ஹேர் ஸ்டைல்' எல்லாம் பார்க்க, 'டிரைவராக இருந்தாலும், இந்த, 'ஸ்டைலு'க்கு ஒன்றும் குறைச்சல் இல்லை...' என, ஏனோ அவன் மீது எரிச்சல் வந்தது. ''இந்த, 'லக்கேஜை' எடுத்து காரில் வைப்பா,'' என்றாள், சுகுணா. அவளை ஒருமுறை நிமிர்ந்து பார்த்தவன், 'டிக்கி'யைத் திறந்து பொருட்களை எடுத்து வைத்தான். அதிகம் பேசாமல் கார் ஓட்டுவதில் மட்டும் கவனமாக இருந்தான். பின் சீட்டில் அருகில் உட்கார்ந்திருக்கும் கதிரிடம், கிசுகிசுப்பான குரலில், ''இந்த டிரைவர் கொஞ்சம் திமிர் பிடித்தவனாக இருப்பான் போலிருக்கு. காதில், 'புளூடூத்' வச்சுக்கிட்டு, 'குசுகுசு'ன்னு ஏதோ போனில் பேசிட்டே வர்றான்.'' ''டிரைவராக இருந்தாலும் அவனும் மனுஷன் தானே. அவனுக்கு என்ன பிரச்னையோ. அதான் போனில் பேசறான். இருந்தாலும், கவனமாகத் தானே நல்லபடியாக வண்டி ஓட்டுறான். அப்புறம் என்ன?'' ''எதுக்கு இப்படி அமைதியா வரணும். காரில் பாட்டு ஏதாவது போடச் சொல்லுங்க,'' என, குரல் உயர்த்தி, டிரைவர் காதில் விழும்படி கூறினாள், சுகுணா. ''மேடம், குழந்தை துாங்குதுன்னு தான் போடலை. நீங்க போடச் சொன்னால் போடறேன்,'' என்ற படி, சத்தம் குறைவாக வைத்து, 'மாரியம்மா எங்கள் மாரியம்மா...' பாடல் ஒலித்தது. கா லை மணி, 8:00ஐ நெருங்க, ''சாப்பிட நல்ல ஹோட்டலாகப் பார்த்து நிறுத்துப்பா,'' என்றான், கதிர். அடுத்த பத்தாவது நிமிடம், ஒரு பெரிய ஹோட்டல் முன், காரை நிறுத்தினான். ''என்னங்க, பெரிய ஸ்டார் ஹோட்டல் மாதிரி இருக்கு. இங்கு டிரைவரை சாப்பிட கூப்பிடாதீங்க. அவர்கிட்டே, 100 ரூபாய் கொடுங்க. எதிரில் இருக்கும், டீக்கடை ஹோட்டலில் சாப்பிட்டு வரட்டும்,'' என்றாள். காரை விட்டு இறங்கி, ''தம்பி நீயும் போய் சாப்பிட்டு வந்துடறியாப்பா,'' எனச் சொல்லி, பணத்தை தந்தான், கதிர். ''வேண்டாம், சார். நீங்க தான், 'டிரைவர் பேட்டா' எல்லாம் சேர்த்து தானே தரப்போறீங்க. பணம் எதுவும் வேண்டாம். நான் பார்த்துக்கிறேன். ரொம்ப தாங்க்ஸ்.'' ''சரி வாங்க, நாம் போகலாம். நான் சொன்னேன் இல்லையா. சரியான திமிர் பிடித்தவனாக இருக்கான்னு. கொடுக்கிற பணத்தைக் கூட வேண்டாம்ன்னு சொல்றான்,'' என்றாள், சுகுணா. உள்ளே போய், 'ஆர்டர்' செய்து, சாப்பிட ஆரம்பித்தனர். அப்போது தான், நாலு டேபிள் தள்ளி, டிரைவரும் உட்கார்ந்து சாப்பிடுவதை கவனித்தாள், சுகுணா. ''பார்த்தீங்களா... எதிரில் இருக்கிற டீக்கடைக்கு போறான்னு பார்த்தா, நமக்கு சமமாக இங்கே தான் உட்கார்ந்து சாப்பிடறான். இவன் சம்பாதிக்கிற சம்பாத்தியம் இவன் சாப்பாட்டுக்கும், டிரஸ்சுக்குமே சரியா போகும் போலிருக்கு.'' ''இங்கே பாரு சுகுணா, அவன் வேலை பார்க்கிறான். செலவு பண்றான். நீ ஏன் அவனைப் பத்தி ஏதாவது, 'கமென்ட்' பண்ணிட்டே வர்றே. கோவிலுக்குப் போனோம். சாமி கும்பிட்டோம், வீட்டுக்கு வரப் போறோம். நம்பளை இறக்கி விட்டுட்டுப் போனால் அவன் யாரோ, நாம் யாரோ. தேவையில்லாமல் எரிச்சல்படாதே.'' சாப்பிட்டு முடித்தவர்கள், குழந்தையுடன் காருக்கு வர, கதவைத் திறந்து விட்டான். ''உட்காருங்க, ஒரு அஞ்சு நிமிஷம் முக்கியமான போன் அழைப்பு, பேசிட்டு வந்துடறேன்.'' கா ர் கதவை சாத்தி, ஒரு ஓரமாக நின்னு போனில் பேசினான், டிரைவர். ''பார்த்தீங்களா, நான் சொன்னதுக்கு என் வாயை அடைச்சிங்க. வாடிக்கையாளரை அழைச்சுட்டு போக வந்துட்டு, நம்பளை காரில் உட்கார வச்சுட்டு, அவன் போன் பேச போயிட்டான். காரில் பேசிட்டு வந்தது பத்தலை போலிருக்கு.'' ''சரி, சரி இப்ப என்ன அவன் வந்துடுவான். ஏதாவது முக்கியமான விஷயமாக இருக்கும். அங்கே பாரு. குரலை உயர்த்திப் பேசறான். அதனால் தான் வெளியே இருந்து பேசறான். போகலாம். நமக்கு தான் நேரமிருக்கே. நீ, 'டென்ஷன்' ஆகாதே,'' என, சுகுணாவை சமாதானப்படுத்தினான், கதிர். கோ விலில் நல்லபடியாக சாமி கும்பிட்டு, குழந்தைக்கு மொட்டை அடித்து, எல்லாம் நல்லவிதமாக முடிய, கோவிலை விட்டு வெளியே வந்தனர். இரண்டு மணி நேரம் கோவிலில் இருந்தது, அழுது கொண்டே மொட்டை அடித்தது என, குழந்தை சூழ்நிலை பிடிக்காமல் அழ ஆரம்பித்தது. குழந்தையை சமாதானப்படுத்தியபடி காருக்கு வந்தனர். ''அடடா... ஏன் மேடம் குழந்தை அழறான். மொட்டை அடித்தது பிடிக்கலையா. சமர்த்தா வந்த குழந்தை. சாப்பிட எதுவும் தர்றீங்களா?'' என, டிரைவர் கேட்க, அப்போது தான் குழந்தைக்கு ஹோட்டலில் பிளாஸ்கில் பால் வாங்காமல் வந்தது, சுகுணாவுக்கு ஞாபகம் வந்தது. ''பிளாஸ்க்கில் பால் வாங்காமல் மறந்திட்டேன். என்னங்க செய்யறது?'' என, அழும் குழந்தையை கையில் வைத்துக் கொண்டு கணவனைப் பார்த்தாள். ''ஒன்றும் பிரச்னையில்லை. நீங்க குழந்தையை வச்சுக்கிட்டு காரில் உட்காருங்க... பிளாஸ்க் கொடுங்க. அதோ அங்கே ஒரு டீக்கடை இருக்கு. நான் போய் வாங்கிட்டு வரேன்.'' ''என்ன, அந்த கடையிலேயா?'' என, முகத்தை சுளித்தாள். ''இந்த நேரத்தில் சுத்தம், சுகாதாரம் பார்க்க முடியாது. குழந்தை அழுகுது. பிளாஸ்க்கை கொடுங்க. குழந்தைக்குன்னு சொல்லி, வாங்கிட்டு வரேன்.'' அவள் பதிலை எதிர்பார்க்காமல், கதிர் கொடுத்த பிளாஸ்க்கை வாங்கி வேகமாகப் போனான். ''இவன், டீக்கடையில் சாப்பிட மாட்டான். ஸ்டார் ஹோட்டலில் சாப்பிடுவான். நம்ப குழந்தைக்கு இங்கே போய் வாங்கிட்டு வரேன்னு சொல்லிட்டு போறான் பார்த்தீங்களா?'' ''புரியாமல் பேசாதே. அழும் குழந்தையோடு எவ்வளவு நேரம் போக முடியும். நல்ல ஹோட்டல் வரணும்ன்னா, இன்னும் அரை மணி நேரம் போகணும். அவன் செய்யறது சரிதான். நீ எல்லாத்திலும் குத்தம் கண்டுபிடிக்காதே.'' பால் குடித்தவுடன் குழந்தை துாங்க ஆரம்பித்தது. கா ர், சென்னையை நோக்கி பயணிக்க, பகல், 12:00 மணியை நெருங்கியது. ''அதோ கோபுரம் தெரியுதே. அது திருவரம்பூர் பிள்ளையார் கோவில் தானே...'' என, கணவனிடம் கேட்க, ''ஆமாம். அந்த கோவில் தான்,'' என்றான், கதிர். ''டிரைவர்கிட்டே அந்த கோவிலில் கொஞ்சம் நிறுத்தச் சொல்லுங்க. எங்க பாட்டி, அந்த பிள்ளையார் ரொம்ப சக்தி வாய்ந்தவர்ன்னு சொல்வாங்க. போய் சாமி கும்பிட்டு வந்திடுவோம்.'' ''மேடம் அங்கே போனால், ஒரு மணி நேரம் ஆகும். 'லஞ்ச்' முடிஞ்சு சென்னை போக, இரவு, 7:00 மணி ஆயிடும்...'' என்றான், டிரைவர். ''பரவாயில்லை... கோவிலுக்கு போய்ட்டே போகலாம்,'' என்றாள், சுகுணா. ''நாம், கரம்பூர் மாரியம்மன் கோவிலுக்கு தான் போகணும்ன்னு, 'புக்' பண்ணினோம். இப்படி வழியெல்லாம் நிறுத்த சொன்னால் எப்படி, சுகுணா?'' ''காசு தானே கொடுக்கப் போறோம். போற வழியில் இருக்கிற கோவிலுக்குப் போனால் என்னாயிடும். ஊருக்குப் போக லேட்டாகும் அவ்வளவு தானே...'' கோவில் முன் காரை நிறுத்த, குழந்தையுடன் இருவரும் இறங்கி உள்ளே போயினர். போனில் பேசத் துவங்கினான், டிரைவர். சென்னை வர, இரவு, 8:00 மணி ஆனது. அவசர அவசரமாக பொருட்களை இறக்கி வைத்தவன், ''சார், கிலோ மீட்டரை நோட் பண்ணிக்குங்க,'' என்றான், டிரைவர். ''இருப்பா... கணக்கு பண்ணி பணம் கொடுத்திடறேன்,'' என்றான், கதிர். ''இருக்கட்டும், சார். எனக்கு அவசர வேலை இருக்கு. நாளைக்கு வந்து பொறுமையா வாங்கிக்கிறேன். நீங்க ஓய்வெடுங்க. வரேன் சார். மேடம்கிட்டே சொல்லிடுங்க,'' என, காரைக் கிளப்பி போய் விட்டான். ''என்னாச்சுங்க, பணம் கூட வாங்காமல் போறான்.'' ''ஏதோ வேலை இருக்காம். நாளைக்கு வந்து வாங்கிக்கிறேன்னு சொல்லிட்டு போறான்.'' ''நல்ல டிரைவர். என்ன பெரிய கலெக்டர் வேலை. இருந்து பணம் வாங்கிட்டு போகாமல் அவசரமாக ஓடறான். இவனுக்கு, 'எக்ஸ்ட்ரா' காசு எதுவும் தராதீங்க. கரெக்டா கணக்கு பண்ணி பணம் கொடுங்க.'' ''எதுக்கு சுகுணா அனாவசியமாக அவன் மேல் கோபப்படறே. நல்லபடியாக அழைச்சுட்டு போயிட்டு தானே வந்தான்.'' ம றுநாள் காலை, அவன் வராமல் வேறு ஒருவர், 'பில்'லுடன் வந்தார். ''நேத்து நீங்க போன டிராவல்ஸ் கார், 'பில்' கொடுத்துட்டு வரச் சொன்னாங்க.'' அவனைப் பார்த்த கதிர், ''ஏன், அந்த டிரைவர் வரலையா?'' ''யாரைச் சொல்றீங்க? நேத்து வந்தவரையா. அவர் டிரைவர் இல்லைங்க. இந்த கம்பெனி ஓனர். எங்க எம்.டி.,'' என்றான். கண்களில் அதிர்ச்சியுடன், ''என்னப்பா சொல்ற?'' ''ஆமாங்க. நேத்து இந்த காரோட டிரைவருக்கு, 'புட் பாய்சன்' ஆகி, 'டிரிப்ஸ்' ஏத்தி, வரமுடியலைன்ற விஷயத்தை, அதிகாலை, 4:00 மணிக்கு தான் தகவல் சொன்னாரு. 'ஆல்டர்நேட்' டிரைவர் நாலைஞ்சு பேரும், அய்யப்பன் கோவில் போகிற சீசன்கிறதால லயனில் இருக்காங்க. 'புக்' பண்ண வாடிக்கையாளர் சிரமப்படக் கூடாது, கம்பெனி பெயர் கெட்டு போயிடும்ன்னு, எங்க எம்.டி.,யே. வண்டி எடுத்துட்டு வந்துட்டாரு. ''அவருக்கு இருக்கிற, 'ஒர்க் லோடில்' இவ்வளவு துாரம் வந்திருக்காரு. அதுவுமில்லாமல் நேத்து இரவு, 10:00 மணிக்கு, குடும்பத்தோடு சிங்கப்பூர் போகணும். அதான், 'லேட்'டாச்சுன்னு, குடும்பத்தினரை அப்படியே, 'ஏர்போர்ட்' வரச்சொல்லி, இங்கிருந்தே அவசரமாகக் கிளம்பிட்டாரு,'' என்றான், வந்தவன். அருகில் இருந்து கேட்டு கொண்டிருந்த, சுகுணா, 'எவ்வளவு பெரிய மனுஷனை இவ்வளவு 'சீப்'பாக எடை போட்டுட்டோம்...' என, நினைத்து வருந்தினாள். ''உங்க எம்.டி., வந்ததும் தகவல் சொல்லுப்பா. அவசியம் நாங்க அவரை நேரில் வந்து பார்க்கணும்,'' என்றாள், சுகுணா. ''தொழில் மீது உள்ள ஈடுபாடு தான், இந்த சின்ன வயசிலேயே அவரை இவ்வளவு உயரத்திற்கு கொண்டு போயிருக்கு,'' என்றபடி, பணம் எடுத்து வர உள்ளே போனான், கதிர். பரிமளா ராஜேந்திரன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

saiprakash
செப் 24, 2025 16:07

நல்ல அருமையான கருத்துள்ள கதை


Shankar
செப் 15, 2025 21:48

அருமையான கதை சுவாரஸ்யமான நல்ல கதை நேர்மையான தொழில் பக்தி பணிவு சுய மரியாதை நிறைந்த உணர்வு மிகுந்த அருமையான கதை நல் வாழ்த்துக்கள் இறைவன் துணையோடு வாழ்க வளமுடன்.....வாழு வாழு மற்றவரை மகிழ்வித்து மகிழ்ந்து வாழ்.....