தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்!
பலாப்பழ பால் பாயசம்! தேவையானவை: பலாப்பழம் - எட்டு சுளை, கொப்பரைத் தேங்காய் - கால் மூடி, சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கவும், நெய் - ஆறு தேக்கரண்டி, முந்திரி - பத்து, உலர்திராட்சை - பத்து, தேங்காய்ப்பால் - அரை லிட்டர், வெல்லம் - 200 கிராம்.செய்முறை: ஒவ்வொரு பலாச்சுளையையும், சதுர வடிவில் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வாணலியில் நெய் ஊற்றி, காய்ந்ததும், நறுக்கிய பலா துண்டுகளைப் போட்டு லேசாக வதக்கவும். பின், வாணலியில் மீதமிருக்கும் நெய்யிலேயே முந்திரி, உலர் திராட்சை, சின்ன துண்டுகளாக நறுக்கிய கொப்பரைத் தேங்காய் ஆகியவற்றை போட்டு வதக்கி ஆறவிடவும்.வெல்லத்தை கரைத்து வடிகட்டி, தனியாக ஒரு கப்பில் எடுத்து வையுங்கள்.அடுப்பை மூட்டி, வாணலியை வைத்து, அதில் வதக்கிய பலாத்துண்டுகளைப் போட்டு, வெல்லக் கரைசலை ஊற்றி, திராட்சை, முந்திரி, கொப்பரைத் தேங்காய் போட்டு, இரண்டு நிமிடம் நன்கு கிளறி, இறக்கவும். பின், தேங்காய்ப்பாலை ஊற்றிக் கலந்து அருந்தலாம். *******மாங்காய் பச்சடி! தேவையானவை: மாங்காய் - ஒன்று, துருவிய வெல்லம் - அரை கப், கடுகு, வெந்தயம் - தலா கால் தேக்கரண்டி, உப்பு - இரண்டு சிட்டிகை அளவு, பச்சைமிளகாய் - ஒன்று, நெய் - அரை தேக்கரண்டி, சுக்குத்துாள் - இரண்டு சிட்டிகை அளவு.செய்முறை: மாங்காயை தோல் சீவி, பெரிய துண்டங்களாக நறுக்கவும். சிட்டிகை அளவு உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து, குக்கரில் குழைய வேகவைத்து மசிக்கவும். வெல்லத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து, அடுப்பில் வைத்து, கரைந்ததும் வடிகட்டவும்.கடாயில் நெய் சேர்த்து, பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறி சேர்க்கவும். கடுகு, வெந்தயம், வடிகட்டிய வெல்லம் சேர்த்து கொதிக்க விடவும். கெட்டியாகக் கொதித்து வரும்போது, மசித்த மாங்காய், சுக்குத்துாள் சேர்த்து, கலந்து இறக்கவும். **********தேங்காய் கோவா போளி! தேவையானவை: தேங்காய் துருவல் - ஒரு கப், சர்க்கரை - ஒரு மேஜைக்கரண்டி, சர்க்கரை சேர்த்த கோவா - ஒரு கப், ஏலக்காய்த்துாள் - கால் தேக்கரண்டி, நெய் - தேவையான அளவு, மைதாமாவு - அரை கப், கோதுமைமாவு - கால் கப், கார்ன்ப்ளார் - கால் கப், உப்பு - கால் தேக்கரண்டி.செய்முறை: அடி கனமான பாத்திரத்தில் தேங்காய் துருவல் மற்றும் சர்க்கரை சேர்த்து, குறைந்த தீயில் கிளறவும். கெட்டியாக வரும் பக்குவத்தில் அதனுடன் கோவா, ஏலக்காய்த்துாள் சேர்க்கவும். கடைசியாக ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து சுருள கிளறி இறக்கவும்.மைதா மாவு, கோதுமை மாவு, கார்ன்ப்ளார் மூன்றையும் உப்பு சேர்த்து கெட்டியாக பிசைந்து, ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். இந்த மாவில் சிறிது எடுத்து அப்பளம் போல் இட்டு, அதில் தேங்காய் பூரணத்தை வைத்து மூடி, போளியாக தட்டி இருபுறமும் நெய் விட்டு சுட்டெடுக்கவும்.**********முப்பருப்பு வடை!தேவையானவை: துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு - தலா கால் கப், வெண்ணெய் - ஒரு தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் - ஐந்து, தேங்காய் துருவல் - ஒரு மேஜைக்கரண்டி, பெருங்காயத்துாள் - கால் தேக்கரண்டி, கறிவேப்பிலை - சிறிது, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.செய்முறை: மூன்றுவித பருப்பையும் ஒன்றாகச் சேர்த்து, அரைமணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும், காய்ந்த மிளகாய், உப்பு மற்றும் பெருங்காயத்துாள் சேர்த்து, சற்று கரகரப்பாக அரைக்கவும்.அரைத்த மாவில் வெண்ணெய், கறிவேப்பிலை, தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கலந்து, வடைகளாக பொரித்து எடுக்கவும்.