உலகின் முதல் மர செயற்கைக்கோள்!
ஜப்பானிய ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்ட, மரத்தால் ஆன உலகின் முதல் செயற்கைக் கோள், சமீபத்தில் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.'நிலவு மற்றும் செவ்வாய்க்கிரக ஆய்வுகளில் மரத்தைப் பயன்படுத்து வதற்கான, ஆரம்ப சோதனை இது...' என, கூறுகின்றனர், விஞ்ஞானிகள். 'லிக்னோசாட்' எனப்படும் இந்த செயற்கைக்கோள், ஜப்பான் நாட்டின் கியுட்டோ பல்கலைக்கழகம் மற்றும் சுமிடோமோ பாரெஸ்ட்ரி நிறுவனத்தால், கூட்டாக உருவாக்கப்பட்டது.'ஸ்பேஸ் எக்ஸ்' பணியில் பயன்படுத்தப்படும் இந்த செயற்கைக்கோள், பின்னர் பூமிக்கு மேலே, சுமார் 400 கி.மீ., சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்படும்.'மரம்' என்பதற்கான, லத்தீன் வார்த்தையை வைத்து, இந்த செயற்கைக்கோளுக்கு, 'லிக்னோசாட்' என, பெயரிடப்பட்டுள்ளது. உள்ளங்கை அளவிலான இந்த, லிக்னோசாட், விண்வெளியில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு பற்றியும் ஆராய உள்ளது.இந்த மர செயற்கைக்கோள், நாசாவின் சான்றுடன் உருவாக்கப்பட்டுள்ளது.சந்திரன் மற்றும் செவ்வாய்க் கிரகத்தில் மரங்களை நடுதல், மர வீடுகளைக் கட்டுதல் போன்றவை குறித்து ஆய்வு செய்ய, இந்த செயற்கைக்கோள் பயன்பட இருக்கிறது. இது, ஜப்பான் விஞ்ஞானிகளின், 50 ஆண்டு திட்டத்தின் ஒரு பகுதியாகும். 'பூமியை விட விண்வெளியில் மரம் அதிக காலம் நீடித்திருக்கும். விண்வெளியில் நீர் அல்லது ஆக்ஸிஜன் இல்லாத நிலையில், மரம் அழுகவோ, எரியவோ வாய்ப்பு இல்லை...' என கூறுகிறார் கியுட்டோ பல்கலைக்கழக பேராசிரியர், கோஜி முராடா.'மர செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்புவது, விண்வெளியில் மாசுபாட்டின் தாக்கத்தையும் குறைக்கும். வழக்கமான உலோக செயற்கைக்கோள்கள், மீண்டும் பூமியின் வளிமண்டலத்துக்குள் வரும் போது, அலுமினிய ஆக்சைடு துகள்களை உருவாக்குகின்றன. ஆனால், மரத்தாலான செயற்கைக்கோள்கள் எரிந்துவிடும் என்பதால், குறைந்த மாசுபாடு தான் ஏற்படும்...' என கூறுகின்றனர், ஆராய்ச்சியாளர்கள். 'மர செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தத் துவங்கினால், உலோக செயற்கைக்கோள்கள் எதிர்காலத்தில் தடை செய்யப்படலாம். மேலும், எங்கள் முதல் மர செயற்கைக்கோள் திட்டம் வெற்றி அடைந்தால், அதை, எலான் மஸ்க்கின், 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்திற்கு வழங்க விரும்புகிறோம்...' என்கிறார், விஞ்ஞானி டோய். மு. ஆதனி