உள்ளூர் செய்திகள்

திண்ணை!

சிவலை இளமதி எழுதிய, 'இந்திய விடுதலை போரில் தமிழக தலைவர்கள் - பாகம் 2' நுாலிலிருந்து: தென் ஆப்ரிக்காவில் இருந்த சமயம், ஒரு முறை லண்டன் வந்திருந்தார், காந்தி. அப்போது, வ.வே.சுவாமிநாத ஐயரும் லண்டனில் இருந்தார். வ.வே.சு.,வுக்கு, காந்தியை அழைத்து விருந்து கொடுக்க வேண்டும் என, ஆசை. காந்திஜியை சந்தித்த போது, இதை தெரிவித்தார்; இதற்கு காந்திஜியும் சம்மதித்து, 'விருந்து ஆடம்பர இடத்தில் கூடாது...' எனக் கூறிவிட்டார். இதனால், விசாலமான இடத்தை, 'புக்' செய்து, இங்கிலாந்தில் வசிக்கும் இந்தியர்களுக்கு தெரிவித்து, காந்திஜியும் கலந்து கொள்ள இருப்பதை கூறினார், வ.வே.சு., அதனால், பலர் ஆர்வமுடன் கூடிவிட்டனர். சமையல் வேலை நடந்து கொண்டிருந்தது. வெளியில் சென்றிருந்தார், வ.வே.சு.,அப்போது, சமையல் நடக்கும் இடத்திற்கு வந்த ஒருவர், 'நான் உங்களுக்கு ஏதாவது உதவி செய்யட்டுமா?' எனக் கேட்டார்.ஆர்வமாக கேட்கிறாரே, என, அவரையும் வேலையில் சேர்த்துக் கொண்டனர். பாத்திரம் தேய்த்தல், காய்கறி நறுக்குதல், தண்ணீர் கொண்டு வருதல் போன்ற எடுப்பு வேலைகளை எல்லாம் செய்யக் கூறினர். அவரும் ஆர்வமுடன் அவற்றை செய்தார். வெளியில் சென்றிருந்த வ.வே.சு., திரும்பி வந்தார். எடுப்பு வேலைகளைச் செய்து கொண்டிருப்பவரை பார்த்து,திகைத்து, 'நீங்கள் இப்படி செய்யலாமா?' எனக் கேட்டார்.இதைக் கேட்டு, சுற்றி இருந்தவர்கள் திகைத்து, 'யார் இவர்?' என்றனர். 'இன்றைய சிறப்பு விருந்தினரான, மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி...' என்றார், வ.வே.சு.,உடனே, அனைவரும் காந்திஜியிடம் மன்னிப்பு கேட்டனர். காந்திஜி அதை ஏற்கவில்லை.'இதில், மன்னிப்புக்கு ஒன்றுமில்லை. பெரிய விருந்து நடத்துவது எவ்வளவு சிரமம் என, எனக்கு தெரியும். உங்களுக்கு சிறிதளவாவது உதவ முடிந்ததே என மகிழ்கிறேன்...' என்ற காந்திஜி, விருந்துக்காக போட்டிருந்த மேஜைகளில் உணவு ஐயிட்டங்களை பரிமாறி விட்டு, கடைசியாக தான், தன் இருக்கையில் அமர்ந்தார்.இந்த விருந்தில், வீர சவார்க்கரும் கலந்து கொண்டார். அப்போது, 'காந்திஜிக்கும், எங்களுக்கும் இடையில் கருத்து வேறுபாடு இருந்தாலும், நானும், நண்பர்களும் அவரை மிக உயர்வாக மதிக்கிறோம்...' என்றார், சவார்க்கர். இதைக் கேட்ட காந்திஜி, 'தேசம் விடுதலை அடைய வேண்டும் என்பது தான், நம் இருசாராரின் பொதுவான குறிக்கோள். இதில், நானோ, நீங்களோ முரண்படவில்லை. நீங்களும், நானும் ஒரே லட்சியத்திற்காகத் தான் போராடுகிறோம்...' என்ற போது, கூடியிருந்த அனைவரும் பலத்த கரகோஷம் எழுப்பினர். ****கூட்டம் ஒன்றில் பேசுவதற்காக அழைக்கப்பட்டிருந்தார், காந்திஜி. அந்த கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் அவருக்கு வாழ்த்து மடல் ஒன்றை வாசித்துக் காட்டி, பண முடிப்பு ஒன்றையும் கொடுக்க எண்ணினர். கூட்டத்திற்கு வந்த, காந்திஜி மிகுந்த களைப்புடன் காணப்பட்டார். அதைக் கவனித்த விழா கமிட்டியினர், காந்திஜிக்கு அதிக சிரமம் கொடுக்க கூடாது என்று எண்ணி, கூட்டத்தை விரைவாக முடிக்க, முடிவு செய்தனர். காந்திஜியிடம், 'பாபுஜி, தங்களை வாழ்த்துவதற்காக தயார் செய்திருந்த வாழ்த்து மடலை படிக்காமலேயே படித்து விட்டதாக ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்...' என்றார், விழா காரியதரிசி. 'நான் மிகுந்த களைப்புடன் இருப்பதால் கூட்டத்தை விரைவில் முடிக்க வேண்டும் என்ற, தங்களின் நல்லெண்ணத்தைப் பாராட்டுகிறேன். அதேபோல், என் பேச்சையும் பேசப் பட்டதாக நீங்கள் ஏற்றுக் கொள்ளும்படி, கேட்டுக் கொள்கிறேன்.'ஆனால், எனக்கு கொடுக்க வேண்டிய பண முடிப்பை கொடுக்காமலேயே கொடுத்து விட்டதாக சொல்லி விடாதீர்கள்...' என்று கூறி சிரித்தார், காந்திஜி. அவரது இந்த நகைச்சுவையை, கூட்டமே கைதட்டி ரசித்தது. - நடுத்தெரு நாராயணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !