திண்ணை!
கடந்த, 1927ல், முத்துராமலிங்க தேவரின், ஆரம்ப கால அரசியலுக்கு வழிவகுத்தது, காங்கிரசும், காங்கிரஸ் மாநாடும் தான். ஆனாலும், அடிப்படை காரணம், அன்றைய பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் குற்றப் பரம்பரை சட்டம் தான்.இந்த சட்டத்தை எதிர்த்து, கிராமம் கிராமமாக பிரசாரம் செய்தவர், தேவர். கொள்கைக்காக அமைச்சர் பதவியையே மறுத்தவர். முதுகுளத்துார் சட்டப்பேரவைக்கு, 1946ல் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, அவருக்கு அமைச்சர் பதவி தர முன் வந்தார், அப்போதைய முதல்வர் சுப்பராயன். ஆனால், அதை ஏற்க மறுத்து, 'அமைச்சர் பதவிக்கு பதிலாக, குற்றப் பரம்பரை சட்டத்தை அகற்றுங்கள் அது போதும்...' என்றார், தேவர். பதவிக்காகவும், அதிகாரத்துக்காகவும் கொள்கையை காற்றில் பறக்கவிடும் அரசியல்வாதிகளை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கும் இந்தியாவில், கொள்கைக்காக பதவியை மறுத்த அரசியல்வாதிகளில், முதன்மையானவர், முத்துராமலிங்க தேவர். ******காமராஜர் தலைமையில், காரைக்குடியில் ஒரு கூட்டம் நடந்தது.கூட்டத்தின் துவக்கத்தில் பேச வந்த பேச்சாளர் ஒருவர், காமராஜரை, 'இந்திரனே, சந்திரனே...' என வர்ணிக்க துவங்கினார்.அவரை தடுத்து நிறுத்தி, 'என்னவே, நான் வந்து அரை மணி ஆச்சுன்னேன்... நாகபுரி காங்கிரசில் நிறைவேற்றப்பட்ட சோஷலிச தீர்மானத்தை பற்றி பேசுன்னேன். என்னைப் பத்தி தான் இங்குள்ள எல்லாருக்கும் தெரியும்ன்னேன். சப்ஜெட்டுக்கு வான்னேன்...' என்று, தனிநபர் துதிபாட்டில் தன்னுடைய அதிருப்தியை தெரிவித்தார், காமராஜர்.தனி நபர் துதிபாடு, அநாகரிகத்தின் அடையாளம் என்பது, காமராஜரின் கருத்து.********இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஆங்கில அறிஞர் சாமுவேல் ஜான்சன், தன், 80வது வயதில், பால்ய வயதில் அவர் குடியிருந்த ஊருக்கு சென்றார். அது மழைக்காலம்; மழை கொட்டோ கொட்டென்று கொட்டிக் கொண்டிருந்தது. அவரை ஏற்றிச் சென்ற வண்டிக்காரனிடம், 'வெகு காலத்திற்கு முன், இந்த ஊரில் ஒரு சந்தை இருந்ததே, அங்கே அழைத்து செல்ல முடியுமா?' என்று கேட்டார்.'சந்தை இருந்த இடம் இப்போது, முட்செடிகள் மண்டிய காடாக உள்ளது. அதுமட்டுமல்ல; அங்கு சேறும், சகதியுமாக இருக்கும். அதனால், அங்கு வண்டி போகாது...' என்றான், வண்டிக்காரன். இதனால், அந்த பகுதியின் முகப்பிலேயே இறங்கி கொண்டார், ஜான்சன். சேற்றிலும், மழையிலும் தள்ளாடிச் சென்று, அங்கு ஒரு இடத்தை அடையாளம் கண்டு, அந்த இடத்தில் கொட்டும் மழையில், நடு நிசி வரை நின்று விட்டு திரும்பினார். தன் சீடர் பாஸ்வெல்லிடம், தன் வாழ்க்கை குறிப்புகளை கூறும் போது, 'அந்த இடத்தில் தான், என் தந்தை, பழைய புத்தக கடை வைத்து இருந்தார். சிறு வயதில் ஒருநாள், தனக்கு காய்ச்சலாக இருப்பதால், 'இன்று ஒருநாள் மட்டும் கடையை கவனித்து கொள்ள முடியுமா?' என்று, என்னிடம் கேட்டார். 'நான் முடியாது என்று, நிர்தாட்சண்யமாக மறுத்து விட்டேன். இந்த மறுதலிப்பு, என் வாழ்நாள் முழுதும் உறுத்தி கொண்டே இருந்தது. அதற்கு பிராயசித்தமாக தான், அன்றிரவு மழையில் அதே இடத்தில் பல மணி நேரம் நின்றேன்...' என்று, அந்த சம்பவத்தை பற்றி கூறியுள்ளார், ஜான்சன். - நடுத்தெரு நாராயணன்