திண்ணை!
ஜன., 23 - நேதாஜி பிறந்தநாள்இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன், இங்கிலாந்தில், இந்தியாவுக்கான அமைச்சராக இருந்தவர், மாண்டேகு பிரபு. அவரைக் காண சென்ற, சுபாஷ் சந்திரபோஸ், 'நான் ஐ.சி.எஸ்., தேர்வில் முதல் வகுப்பில் தேறியுள்ளேன். எனக்கு வேலை வேண்டும்...' என்றார். 'ஆங்கிலேயர்களுக்கு தான் முதலில் வேலை கொடுப்போம். இந்தியர்களுக்கு கிடையாது...' என்றார், மாண்டேகு. இதைக்கேட்டதும், போசுக்கு கோபம் வந்தது.'பிரிட்டிஷாரின் ஐ.சி.எஸ்., பட்டம் எனக்கு முக்கியமில்லை. அதைத் துறந்து விடவே விரும்புகிறேன்...' என்றார்.'உனக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது?' என்றார், மாண்டேகு.'ஆமாம், இந்தியாவிலிருந்து பிரிட்டிஷாரைத் துரத்த வேண்டும் என்ற பைத்தியம் பிடித்திருக்கிறது...' என்று கோபமாக கூறி, வெளியேறினார், சுபாஷ் சந்திர போஸ்.****ஒருமுறை, கோல்கட்டா மாநகராட்சியின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். அப்போது, அவரது மாத ஊதியம், 3,000 ரூபாயாக இருந்தது. ஆனால், முதல் மாதச் சம்பளம் பெறும்போது, 1,500 ரூபாயை மட்டுமே பெற்றுக் கொண்டார். அதைக் கண்டு திகைத்த, காசாளர், 'சார், உங்கள் சம்பளம், 3,000 ரூபாய்...' என்றார். உடனே, 'தெரியும். ஆனால், எனக்கு அதில் பாதியே போதும்...' என்றார், நேதாஜி. ****'நேதாஜி எங்கே!' என்னும் நுாலில், பழ நெடுமாறன்: நேதாஜியின் வாழ்க்கையில், தமிழர்களின் பங்கு மகத்தானது. காங்கிரஸ் தலைவர் தேர்தலில், காந்தியடிகளால் நிறுத்தப்பட்ட, பட்டாபி சீதாராமையாவை எதிர்த்து, நேதாஜி போட்டியிட்டார். அப்போது, தமிழ்நாடு முழுமையாக அவருக்கு ஆதரவளித்து, அவரது வெற்றிக்கு வழிவகுத்தது. எஸ்.சீனிவாசய்யங்கார், எஸ்.சத்தியமூர்த்தி, கு.காமராஜர், உ.முத்துராமலிங்க தேவர் மற்றும் ப.ஜீவானந்தம் போன்ற தலைவர்கள், நேதாஜிக்கு உறுதுணையாக இருந்தனர். ஜெர்மனியில் நேதாஜி, இந்திய சுதந்திரப் படையை அமைத்த போது, அதன் வானொலி நிகழ்ச்சிக்குப் பொறுப்பாளராக இருந்தவர், ஆளவந்தார் என்னும் தமிழரே.தென்கிழக்கு ஆசியாவில் வாழ்ந்த தமிழர்கள் ஒரு முகமாக, நேதாஜியின் விடுதலைப் போராட்டத்திற்காக ஆதரவளித்தனர். அவரது படையில் அணியணியாக சேர்ந்தனர். அவர் நிதி கேட்டபோது, அள்ளி தந்தனர். அக்., 21, 1943ல், சிங்கப்பூரில், நேதாஜி தன் சுதந்திர அரசை பிரகடனம் செய்தபோது, கூடியிருந்த கூட்டத்தில் பெரும்பாலோர், தமிழர்களாக இருந்தனர். எனவே தான், நேதாஜி தன் பேச்சை தமிழில் மொழி பெயர்த்த போது, பெரும் ஆரவாரம் எழுந்தது. வேறு எந்த இந்திய மொழியிலும் அவரது பேச்சு மொழி பெயர்க்கப்படவில்லை.நேதாஜியின் நம்பிக்கைக்கு உரியவர்களாக விளங்கினர், பல தமிழர்கள். இவரது ராணுவத்திலும், அரசாங்கத்திலும் உயர் பதவிகளை வகித்தனர். கேப்டன் லட்சுமி ராகவன், மகாகவி பாரதி, ஏ.டி.லோகநாதன், மேஜர் ஜெனரல் அழகப்பன், கேப்டன் ஜானகி தேவர். நேதாஜியின் தனி உதவியாளர் மேஜர் பாஸ்கரன், அவரது சமையல்காரர் காளி மற்றும் ஈ.தே.ரா. ஒற்றுமைப்படை பயிற்சிப் பள்ளித் தலைவராக பணியாற்றிய என்.ஜி.சுவாமி ஆகியோர் அவர்களில் சிலர். தமிழர்கள் தனக்கு உறுதுணையாக நிற்பதைக் கண்டு, உள்ளம் நெகிழ்ந்தார், நேதாஜி.'அடுத்த பிறவியில் தமிழனாக பிறக்க வேண்டும் என விரும்புகிறேன்...' என, மனம் விட்டும் கூறினார்.- நடுத்தெரு நாராயணன்