திண்ணை!
ஒருசமயம், சீனத் தத்துவஞானி கன்பூஷியசிடம், 'ஐயா, ஒரு நல்ல அரசின் அடிப்படை தேவைகள் என்னென்ன?' எனக் கேட்டான், சீடன் ஒருவன்.'உணவு, போர் கருவிகள், மக்களின் நம்பிக்கை...' என்றார், கன்பூஷியஸ். 'இவற்றில் ஒன்றை விட வேண்டிய நிலை ஏற்பட்டால், தாங்கள் எதை விடுவீர்கள்?' என்றான், சீடன்.'போர்க்கருவிகள்...' என்றார், கன்பூஷியஸ்.'மற்ற இரண்டில் ஒன்றை விட வேண்டிய நிலை ஏற்பட்டால்?' எனக் கேட்டான், சீடன்.'உணவு...' என பதிலளித்தார், கன்பூஷியஸ்.'உணவு இல்லாவிட்டல் மக்கள் இறந்து விடுவரே...' என்றான்.'மக்களுக்கு மரணம் என்பது, தவிர்க்க முடியாதது. அதுபற்றி எந்த மாற்று கருத்தும் இல்லை. ஆனால், மக்கள் தங்களை ஆள்பவரிடம் நம்பிக்கை இழந்துவிட்டால், அவர்களின் நிலை பரிதாபத்திற்குரியது. அதைப் போல், கொடுமை வேறில்லை...' என்றார், கன்பூஷியஸ்.*****அமெரிக்காவிலிருந்து வெளிவரும், 'டைம்ஸ்' மற்றும் 'லைப்' பத்திரிகைகளின் அதிபரான, ஹென்றி லுாயிஸின் இருப்பிடம், நியூயார்க் நகரின், ஒரு அப்பார்ட்மெண்ட்டில், 34வது தளத்தில் இருந்தது. தினமும் அலுவலகத்தில் இருந்து திரும்புபவர், 'லிப்டில்' ஏறித்தான், தன் வீட்டை சென்றடைவார். அப்படி, 'லிப்டில்' செல்லும் போது, தான் மட்டுமே செல்வார். உடன் வர வேறு யாரையும் அனுமதிக்க மாட்டார்.ஒருநாள் அவரை நன்கு அறிந்த ஒரு மனிதர், 'மிஸ்டர் ஹென்றி தினமும், 'லிப்டில்' நீங்கள் மட்டுமே தனியே சென்று வருகிறீர்களே... யாரையேனும் துணைக்கு அழைத்து சென்றால், உங்கள் அவசரத்துக்கு உதவுவரே...' என்றார். 'உண்மை தான். ஆனால், நான், 'லிப்டில்' தனியே சென்று வருவதற்கு காரணம் இருக்கிறது. எப்போதும் ஓய்வில்லாமல் இருக்கும் என் வாழ்க்கையில், இறைவனை நினைத்து பிரார்த்தனை செய்ய நேரமே கிடைப்பதில்லை. 'லிப்டில்' ஏறி இறங்கும் அந்த கொஞ்ச நேரம் தான், எனக்கு பிரார்த்தனை நேரம்...' என்றார், ஹென்றி.பரபரப்பான பத்திரிகையாளரான ஹென்றியை ஆச்சரியத்தோடு பார்த்தார், அந்த மனிதர்.********கொள்ளை நோயான, அம்மைக்கு மருந்து கண்டுபிடித்தவர், இங்கிலாந்து நாட்டை சேர்ந்த, எட்வர்ட் ஜென்னர். மருத்துவர் எட்வர்ட் ஜென்னர் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தான், பிரான்ஸ் நாட்டு மன்னன், நெப்போலியன். அதை அறிந்த நண்பர் ஒருவர், ஒருநாள் நெப்போலியனிடம், 'டாக்டர் ஜென்னர் தங்களின் எதிரி நாட்டை சேர்ந்தவர். அவரை போய் பெருமையாக பேசுகிறீர்களே. அதற்கு என்ன காரணம்?' என்றார்.'மன்னர்களின் பெருமை, போரில் ஆயிரக்கணக்கான உயிர்களை கொல்வதில் இருக்கிறது. ஆனால், அவர்களால், தாங்கள் அழித்த உயிர்களை மீட்டுத்தர இயலாது. ஆனால், டாக்டர் ஜென்னர், அம்மை நோயால் இறக்காமல் ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றும் வேலையை செய்து வருகிறார். அதனால், உயிர் காக்கும் அவரை, நான் மதிப்பது தான் முறை...' என்றார், நெப்போலியன்.எதிரி நாட்டை சேர்ந்த ஒருவரை மதிக்கும், நெப்போலியன் குணத்தை எண்ணி வியந்து போனார், நண்பர். **********