உள்ளூர் செய்திகள்

திண்ணை!

நடிகர், கமல்ஹாசனின் தந்தை சீனிவாசன் ஒரு முறை, நண்பர்களிடம் பேசும்போது, ஹாசன் பெயர் பற்றி பேச்சு வந்தது, அப்போது அது பற்றி இப்படி கூறினார்... 'அதுவாப்பா... நானெல்லாம் சுதந்திரப் போராட்ட தியாகி. காந்திஜியும், ராஜாஜியும் சொல்லிட்டா போதும். கொடியை துாக்கிட்டு வெள்ளைக்காரனை எதிர்த்து போராட்டத்துக்கு கிளம்பிடுவோம். 'அப்படி ஒரு முறை என்னை பிடித்து, சிறையில் அடைத்தனர். சிறையில் எனக்கு அறிமுகமான இஸ்லாமிய நண்பர் பெயர், ஹாசன். அவருக்கு நானும், எனக்கு அவரும் உதவியாக இருந்தோம். உயிருக்கு உயிரான நண்பர்களாக, உணர்வால் இணைந்தோம். 'அந்த, ஹாசனை நான் என்றைக்குமே மறக்க கூடாது என, நினைத்தேன். அதனால் தான் எனக்கு பிறந்த, 3 மகன்களுக்கும் பெயர் வைக்கும் போது, நண்பனின் பெயரான, ஹாசன் என்ற பெயரை, சேர்த்து, சாருஹாசன், சந்திரஹாசன் மற்றும் கமல்ஹாசன் என, பெயர் வைத்தேன். அவர்களை கூப்பிட்ட போது, என் நண்பனை கூப்பிட்ட மாதிரி நெகிழ்ச்சியாக உணர்வேன்...' என்றார், சீனிவாசன். ******** பஞ்சாபி மொழி, நாடக ஆசிரியர், இயக்குனர், நடிகர், நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர், என, பன்முகம் கொண்டவர், பல்வந்த் கார்கி. சாகித்திய அகாடமி விருது மற்றும் 'பத்மஸ்ரீ' விருது பெற்றவர். பஞ்சாப் மாநிலத்திலுள்ள பதிந்தா மாவட்டத்தில் பிறந்தவர். கடந்த, 1992ல் இவருக்கு, 75 வயது ஆனபோது, அவரை பேட்டி கண்டது, 'ஹெல்த்' பத்திரிகை. 'உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களை, நீங்கள் எப்படி சமாளிக்கிறீர்கள்?' என்று கேள்வி கேட்டார், பத்திரிகையாளர். 'என் திருமண வாழ்வு முறிந்தது. சுய இரக்கத்தினால் நான் தவிக்கவில்லை. நாடகத்தில் அதிக நாட்டம் செலுத்தினேன். கண்ணீர் வடித்துக் கொண்டிருப்பது, முகம் புதைக்க தோள் தேடுவதும், தோற்று ஓடுவதும் என் எண்ணமல்ல. என் இழப்புகளை, வளர்ச்சி ஆக்குவதும், என் நஷ்டங்களை சொத்துகளாக்கிக் கொள்வதும் என் வாழ்வின் சித்தாந்தம்...' என, பதில் அளித்தார், பல்வந்த் கார்கி. *******மகாராஷ்டிர மாநிலம் கொலபா அருகே ககோடா கிராமத்தில் பிறந்தவர், வினோபா. இவர் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு பலமுறை சிறை சென்றவர். இவரும், காந்திஜியும் நல்ல நண்பர்கள். ஒருமுறை, காந்திஜியிடமிருந்து வந்த ஒரு கடிதத்தை, அவரிடம், கொடுத்தார், தபால்காரர். அதை வாங்கி படித்து முடித்ததும் சுக்கு நுாறாக கிழித்து போட்டார், வினோபா. இதை பார்த்து, 'காந்திஜியிடமிருந்து வந்த கடிதத்தை கிழிப்பதாவது...' என்று வருந்தி, விளக்கம் கேட்டனர், அங்கிருந்தவர்கள். அதற்கு அவர், 'கடிதத்தில், என்னை பெரிய மகான் என்று, பெரிதாக புகழ்ந்து எழுதியிருக்கிறார், காந்திஜி. அவர் பெருந்தன்மையாக என்னை குறித்து எழுதிய அந்த உயர்வான வார்த்தைகளை, நான் எடுத்து பாதுகாத்தால், அந்த வார்த்தைகள் நாளடைவில் என் மனதில் ஆழமாக பதிந்து விடும்; அதனால், என் மனம் மாறிப்போகும். ஆகவே தான் அவ்வாறு செய்தேன்...' என, புன்னகையுடன் கூறினார், வினோபா. - நடுத்தெரு நாராயணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Barathi Dhasan
ஜன 19, 2026 07:48

சூப்பர் ஐயா


Barathi Dhasan
ஜன 19, 2026 07:48

சூப்பர்


Thravisham
ஜன 19, 2026 07:45

மஹான் மகாத்மா என்ற பட்டமெல்லாம் மோடிக்கே தகுதி. நேருவை பிரதமராக்கி நாட்டை நாசப்படுத்தியவர்க்கு அல்ல.


saiprakash
ஜன 19, 2026 15:29

அப்படியா,


Parthasarathy
ஜன 20, 2026 07:49

ப்ரகாஷ் அவர்களே. நிச்சயமாக.


D.Ambujavalli
ஜன 18, 2026 12:28

தனக்குத் தானே பட்டன்கள் சூட்டிக் கொண்டு ஒரு பட்டாளம் தன் புகழ் பாட வேண்டுமென்று பறக்கும் பறக்காவெட்டிகளுக்கு இதெல்லாம் எட்டிக்காய் விஷயங்கள்