திண்ணை!
சுரதா பதிப்பக வெளியீடு, கவிஞர் சுரதா எழுதிய, 'சொன்னார்கள்!' என்ற நுாலிலிருந்து: முன்னாள் பாரத பிரதமர், நேரு: எனக்கு மிகவும் பிடித்தமான பொருள், புத்தகம். புத்தகத்திற்காக பணம் செலவழிப்பதில் நான், ஊதாரி என்ற பட்டத்தையும் பெறத் தயாராயிருக்கிறேன். தமிழக முன்னாள் முதல்வர், காமராஜர்: எனக்கு அலுப்பே கிடையாது. எவ்வளவு பேர் வந்தாலும் பார்த்து, பேசிக் கொண்டே இருப்பேன். ஆனால், காலை வேளையில் என்னை யாரும் தொந்தரவு செய்யாமலிருந்தால் நல்லது. பத்திரிகை படிக்கும் நேரம் எனக்கு மிகவும் முக்கியம். அறிவியல் அறிஞர், சர்.சி.வி.ராமன்: அதிகம் புகழ்ந்தால் கர்வம் ஏற்பட்டு விடும். எனக்கு அந்த விதமான ஆபத்து, பல சமயம் ஏற்பட்டிருக்கிறது. அப்படி மண்டைக்கனம் ஏற்பட்டு தலை வீங்கி விடக்கூடாது என்பதற்காக தான், தலையைச் சுற்றி இறுக்கமாக தலைப்பாகை கட்டியிருக்கிறேன். நடிகை, கே.பி.சுந்தராம்பாள்: சுதந்திர போராட்டத்தில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, சத்தியமூர்த்தி மேடைகளில் முழங்குவார். நானும் தேசிய பாடல்களை பாடுவேன். ஊருக்கு ஊர், கிராமத்துக்கு கிராமம் என்று நாங்கள் இருவரும் போகாத இடமே இல்லை. 'பாட்டாலேயே சுந்தராம்பாள், வெள்ளைக்காரனை அடித்து விரட்டி விடுவார்...' என்று மக்கள் சொல்லுமளவுக்கு பாட்டில் உணர்ச்சி கொந்தளிக்கும், என்பார், சத்தியமூர்த்தி. தொழிலதிபர், நா.மகாலிங்கம்: பள்ளி நேரம் தவிர்த்து, மற்ற நேரங்களில் நான், எங்கள் வீட்டிற்கு பக்கத்திலிருந்த ஒரு புத்தக, 'பைண்டர்' வீட்டிற்கு சென்று, அவர் செய்யும் வேலைகளை கூர்ந்து கவனித்தபடியே, கூடமாட உதவியும் செய்வேன். 'பைண்டிங்' செய்ய கற்றுக்கொண்டு நான், 'பைண்டிங்' செய்யவும் ஆரம்பித்தேன். முதன்முதலாக ஒரு புத்தகத்தை, 'பைண்ட்' செய்த அன்று நான் அடைந்த மகிழ்ச்சிக்கு ஈடு கிடையாது. திரைப்பட தயாரிப்பாளர், சாண்டோ சின்னப்பா தேவர்: நான் முதன்முதலில், கோயம்புத்தூரில் உள்ள மில்லில், 3 அணா கூலிக்கு, 'பங்கா' இழுக்கிற (மின் விசிறி இல்லாத காலத்தில், அதற்கு பதில் பெரிய விசிறியை உயரத்தில் கட்டி காற்று வருவதற்காக அதை கயிறு மூலம் இழுத்து விடுவது) வேலை தான் செய்தேன். *********** வானதி பதிப்பகம் வெளியீடான, கலைமாமணி அவ்வை டி.கே.ஷண்முகம் எழுதிய, 'தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் - தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் வாழ்க்கை வரலாறு!' என்ற நுாலிலிருந்து: அ ண்ணாதுரை, ஓர் இரவு திரைக்கதையை ஒரே இரவுக்குள் எழுதி முடித்தார் என, சினிமா உலகில் கூறுவதுண்டு. இதேபோல் ஒரே இரவில், 'அபிமன்யூ' என்ற சிறுவர் நாடகத்தை எழுதி முடித்த பெருமை, சங்கரதாஸ் சுவாமிகளுக்கு உண்டு. நாடக சபையின் உரிமையாளர்களில் ஒருவரான, பழனியப்ப பிள்ளை என்பவர், சங்கரதாஸ் சுவாமிகளிடம், 'டி.கே.எஸ்., சகோதரர்களில், சண்முகத்துக்கு, ஏழு வயது. அப்பவே அவர் நாடகங்களில் நாரதராக, சிறுவர் நாடகங்களில் நடித்து வந்தார். இந்த, சண்முகத்தை காட்டி, 'ஷண்முகம், கதாநாயகனாக நடிக்க ஏதுவாய் ஒரு நாடகம் எழுதுங்கள்...' என்றார். அன்று மாலையே சுவாமிகள் புத்தகக் கடைக்கு சென்று, 'அபிமன்யூ சுந்தரி அம்மானை' பாடல் பிரதி ஒன்றை வாங்கி வந்து, அதை ஆதாரமாக கொண்டு, அரிக்கன் விளக்கை வைத்து, இரவு முழுவதும் எழுதினார். நுாற்றுக்கு மேற்பட்ட பாடல்கள். அதற்கேற்ற உரையாடல்கள் ஆரம்பத்திலிருந்து முடிவு வரை அடித்தல், திருத்தல் கிடையாது. நகல் எடுக்க வேண்டிய அவசியமே இருக்கவில்லை. கற்பனையாக, நான்கு மணி நேரம் நடைபெறக் கூடிய ஒரு நாடகத்தை, மங்கள பாட்டுடன் முடித்து கொடுத்திருந்தார், சுவாமிகள். - நடுத்தெரு நாராயணன்