உள்ளூர் செய்திகள்

திண்ணை!

நாமக்கல் கவிஞர் எழுதிய, 'என் கதை!' என்ற நுாலிலிருந்து: தமிழகத்துக்கு வந்த, காந்திஜி பல ஊர்களில் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டிருந்தார். அந்த பயணத்தின் போது, கரூரிலும் அவர் பேச இருந்தார். இதை அறிந்த கரூரை சேர்ந்த காங்கிரசாரும், நானும், காந்திஜியிடம் பணமுடிப்பு கொடுக்க, மூவாயிரம் ரூபாய் வசூல் செய்தோம். அந்த நேரத்தில் திடீரென, காந்திஜி, கரூர்க்கு வருவதாகயில்லை என்பதை அறிந்ததும், நாங்கள் வருத்தம் அடைந்து, ராஜாஜியை சந்தித்து பேசினோம். காந்திஜியின் உடல்நிலை சரியில்லை அதனால் தான் இந்த முடிவு எனக் கூறியதுடன், மாற்ற இயலாது என கூறிவிட்டார். இதனால், காந்திஜியை நேரில் சந்தித்து பேச முடிவு செய்தோம். நண்பர், ஆர்.கே.ஷண்முகம் வீட்டில் தங்கியிருந்தார், காந்திஜி. தினமும் மதிய ஆகாரத்திற்கு பின், சிறிது நேரம் ஓய்வெடுப்பது, காந்திஜியின் வழக்கம். அதன்பின், ஒரு மணி நேரம் நுால் நுாற்பார். அப்போது, நுால் நுாற்றபடியே வந்தவர்களுடன் பேசுவார். அந்த சமயத்தில், நானும், காங்., கட்சியினரும் உள்ளே சென்று, காந்திஜியுடன் பேசினோம். கரூர் பயணம் ரத்தானது வருத்தமளிக்கிறது. தாங்கள் கட்டாயம் வர வேண்டும் என, கோரிக்கை வைத்ததோடு, ஒரு மாதமாக நடந்த கடித போக்குவரத்தையும் காட்டினோம். அனைத்தையும் படித்த, காந்திஜி, ராஜாஜியை அழைத்து சுற்றுப்பயணம் பற்றிய விபரம் கேட்டார். நடுவில் இரண்டு நாள் ஓய்வு இருப்பதை அறிந்தார். அவரிடம், 'வாக்குறுதி என்றால் வாக்குறுதியாகத்தான் இருக்க வேண்டும். கொடுத்த வாக்கை காப்பாற்றியே தீர வேண்டும். ஓய்வு எடுக்க இருந்த நாளில், கரூர் போக ஏற்பாடு செய்து விடுங்கள்...' என்றார், காந்திஜி. இதைக் கேட்டதும், 'எங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி விட்டார், காந்திஜி...' என்று சொல்லி, விடை பெற்றோம். ****** நடிகர் சிவாஜி கணேசனை சந்தித்து, அமர தீபம் படத்தின் கதையை சொன்னார் இயக்குனர், ஸ்ரீதர். கதை பிரமாதம் என்று, சிவாஜி தட்டிக்கொடுக்க, 'நாயகிகளாக, பத்மினி, சாவித்ரி, இயக்குனர், பிரகாஷ் ராவ் மற்றும் இசையமைப்பாளர், சலபதி ராவ் ஆகியோரை முடிவு செய்துள்ளதாகவும், ஆனால், படம் தயாரிக்க போதிய பணம் இல்லை...' என்றும் கூறியுள்ளார், ஸ்ரீதர். மேலும், 'உங்களுக்கு, 'அட்வான்ஸ்' கொடுக்குறதுக்கே இப்ப என்கிட்ட பணம் இல்ல. உங்களோட பேரை போட்டு விளம்பரம் செய்ய அனுமதி கொடுங்க. அந்த விளம்பரத்தை பார்த்து, வினியோகஸ்தர்களும், பைனான்சியர்களும், பணம் கொடுப்பாங்க. அதன்பின், உங்களுக்கு, 'அட்வான்ஸ்' கொடுக்கிறேன்...' என்று கூறியுள்ளார். ஸ்ரீதரின் பேச்சுக்கு, சிவாஜியும் சம்மதம் சொல்ல, நடிகையர், பத்மினி மற்றும் சாவித்ரி இருவரும், சிவாஜி வழியிலேயே சம்மதம் கூறியுள்ளனர். இதை தொடர்ந்து, நாளிதழ்களில், அமர தீபம் பட விளம்பரம் முழுப்பக்கங்களாக வெளியானது. அதையடுத்து, பைனான்சியர்கள் முதலீடு செய்ய போட்டிப் போட்டு முன்வந்தனர். படத்தின், கதை வசனகர்த்தாவும், இணை தயாரிப்பாளருமான, ஸ்ரீதர், கொடுத்த வாக்குபடி, நடிகர், நடிகையருக்கு உரிய பணம் கொடுத்து, படத்தையும் சிறப்பாக முடித்து கொடுத்தார். படமும் பெரிய வெற்றி பெற்றது . நடுத்தெரு நாராயணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Sankara Narayanan
மார் 29, 2026 12:43

தேசத்தின் தந்தை காந்தி அவர்கள் நேர்மைக்கும் சொன்ன சொல் தட்டாதவர் எனவும் நிரூபிக்க திரு இராமலிங்க கவிஞர் அவர்களின் கட்டுரையே ஒரு சான்று . அவர்களின் சகாப்தத்திற்கு பின்னர் அம்மாதிரி மாமேதைகளை நாம் காணவில்லை என்பது நமது தேசத்தின் துரதிர்ஷ்டமே .


Thravisham
மார் 29, 2026 14:26

உண்மையான மகாத்மா மோடிதான்.


Sankara Narayanan
மார் 29, 2026 12:35

ஆரம்ப காலத்திலிருந்தே சிவாஜியின் பெருந்தன்மை நிகரற்றது. டைரக்டர் ஸ்ரீதரின் திறமையை அறிந்து அமரதீபம் படப் பிடிப்பு துவங்குவதற்கே உதவி செய்த நடிகர் திலகத்தின் உதவும் குணமும் இதே போல நாட்டிய பேரொளியும் நடிகையர் திலகமும் உதவி செய்ய முன் வந்ததும் பாராட்ட தக்கதும் அல்லாமல் படத்தின் வெற்றிக்கும் அவர்களது பங்கு குறிப்பிட தக்கது .