உள்ளூர் செய்திகள்

திண்ணை!

'நான் முகம் பார்த்த சினிமாக் கண்ணாடிகள்!' என்ற நுாலில், வசனகர்த்தா, ஆரூர்தாஸ்: எம். ஜி.ஆரை வைத்து படம் எடுக்க புதிதாக வரும் தயாரிப்பாளரிடம், 'நீங்க படம் எடுக்கப் போறது என்னை வச்சா? இல்லே, உங்களை வச்சா?' என்று கேட்பார், எம்.ஜி.ஆர்., இதன் விளக்கம், 'என்னை வைத்தா?' என்றால், 'என் பெயரைச் சொல்லி எவரிடமாவது நிதி உதவி பெற்று, எனக்கு பணம் கொடுத்துப் படம் எடுக்கப் போகிறீர்களா?' என்றும், 'உங்களை வைத்தா?' என்பதற்கு, 'எனக்குப் பணம் கொடுத்துப் படம் எடுக்க, உங்களிடம் பண வசதி இருக்கிறதா?' என்றும் பொருள்படும். 'உங்களை வைத்து தான்...' என்று வந்த அந்த தயாரிப்பாளர் கூறினால், அவர் யார்? அவருக்கும், தனக்கும் உள்ள பழைய அல்லது புதிய தொடர்பு என்ன? அவருக்கு நாம் உதவுவதால், என்ன பலன்? அவர் நல்லவரா, கெட்டவரா ஆகிய இந்த வினாக்களை தனக்கு தானே வினவி, அதற்கு கிடைக்கும் பதிலைப் பொறுத்து, பச்சைக் கொடி காட்டுவார், எம்.ஜி.ஆர்., இல்லையேல், சிவப்புக் கொடி தான்! எம்.ஜி.ஆரின் பெயரை சொல்லி, நிதி உதவிப் பெற்று, படம் எடுக்கும், அந்தத் தயாரிப்பாளர், படம் துவங்கிய சில மாதங்களில், எம்.ஜி.ஆரின் பினாமி போல ஆகிவிடுவார். காரணம், நிதி உதவி செய்பவருக்கும், எம்.ஜி.ஆருக்கும் நாளடைவில் தொடர்பு ஏற்பட்டு விடும். அதன்பிறகு, தயாரிப்பாளரின் பாதி குடுமி, எம்.ஜி.ஆரின் கையிலும், மீதி குடுமி, பைனான்சியரின் கையிலும் சிக்கிவிடும். எதிர்பாராத இந்த நிலை ஏற்பட்டுவிட்ட பின்னர், தயாரிப்பாளராக வந்தவர், பாவம், தரகர் போல ஆகிவிடுவார். இது ஒரு வகை. இன்னொரு வகை: தயாரிப்பாளர் மற்றும் பைனான்சியர் சேர்ந்து கொண்டு திரைமறைவில் ஏதாவது ஒரு நாடகத்தை தயாரித்து, ஒருவருக்கு ஒருவர் ஒன்றும் தெரியாதது போல, தனித்தனியே வந்து எம்.ஜி.ஆர்., முன் அதை அரங்கேற்றுவர். இயற்கையிலேயே, எம்.ஜி.ஆரிடம் அமைந்திருந்த துப்பறியும் மூளை, 'அது வெறும் நாடகமே' என்பதை அவருக்கு உணர்த்தி விடும். அவர் புரிந்து கொள்வார்; அவ்வளவு தான். பிறகு, அந்தப் படம் எப்படி வளரப் போகிறது? எப்போது முடியப் போகிறது? என்றைக்கு வெளிவரப் போகிறது என்பதெல்லாம் தயாரிப்பாளருக்கும், பைனான்சியருக்கும் மட்டுமல்ல, எம்.ஜி.ஆருக்கே தெரியாது. ********** 'அறிஞர்கள் வாழ்வில் நகைச்சுவை!' என்ற நுாலிலிருந்து... ஒ ரு பொது நிகழ்ச்சியில், கவிஞர், கண்ணதாசனிடம், 'பக்குவத்திற்கும், பரிபக்குவத்திற்கும் என்ன வித்தியாசம்?' எனக் கேட்டார், ஒருவர். அதற்கு, 'நான் அரசியலில் ஈடுபட்டு முதலில் ஒருவரைத் தலைவராக கொண்டிருந்தேன். அடுத்து, இன்னொருவரை தலைவராக்கிக் கொண்டேன். அரசியலில் சில கசப்பான அனுபவங்கள் கிடைத்தன. அது, பக்குவம். 'அதன்பின், அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கி கவிதை, ஆன்மிகம் ஆகியவற்றில் மட்டும் கவனம் செலுத்த துவங்கினேன். அது தான் பரிபக்குவம்...' என்றார். ******* சபர்மதி ஆசிரமத்திற்கு ஒருவர் அடிக்கடி வந்து, காந்திஜியிடம் 'வளவள'வென ஏதாவது பேசிக்கொண்டே இருப்பார். ஒருமுறை, 'நாம் எருமைப் பால் குடித்தால், நாமும் எருமை மாதிரி மந்தமாகி விடுவோம். பசும்பால் குடித்தால், பசு மாதிரி சாதுவாகி விடுவோம்...' எனக் கூறினார். உடனே காந்திஜி, 'நான் ஆட்டுப்பால் குடிப்பவன். நீங்கள் இப்படியே பேசிக்கொண்டிருந்தால், உங்களை ஒரு முட்டு முட்டிவிடுவேன்...' எனக்கூற, அனைவரும் சிரித்து விட்டனர். பேசியவர் வாயை மூடிக் கொண்டார். நடுத்தெரு நாராயணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !