கிறிஸ்துமஸ் விளக்கு அலங்காரம்!
இங்கிலாந்து நாட்டில், நவம்பர் 25 முதலே, 'கிறிஸ்துமஸ் லைட்டிங்' என்ற பெயரில், அலங்கார மின் விளக்குகள், மக்கள் கூடும் இடங்களில் ஜொலிக்கும்.பிரபல தலைவர்கள், சினிமா நட்சத்திரங்களை அழைத்து, கிறிஸ்துமஸ் லைட்டிங்கின் ஆரம்ப விழாவையே, பெருவிழா போல் நடத்துவர். பல மாடல்களில் ஜொலிக்கும் இந்த அலங்கார மின் விளக்குகளை வேடிக்கை பார்ப்பதற்கென்றே வருகின்றனர், பொதுமக்கள். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, கடைகள் மற்றும் அலுவலகங்களில் ஒருநாள், ஊழியர்களுக்கு விருந்தளிக்கின்றனர். முதலாளியே, தொழிலாளர்களுக்கு பரிமாறுவது சிறப்பு அம்சம்.பள்ளிகளில், தலைமை ஆசிரியர், அலுவலகம் எனில், உயரதிகாரி, இப்படி பரிமாறுவது, தங்கள் நன்றியையும், நட்பையும் தெரிவிக்கும் வழக்கம். தனிமையிலிருக்கும் முதியவர், அனாதை, கணவன் அல்லது மனைவியை இழந்தவர், விவாகரத்து ஆனவர் என, ஒருவரையாவது, வீட்டுக்கு விருந்துக்கு அழைப்பர். அவர்களுக்கு புத்தாடை, பரிசுகள் வழங்கி, அன்று முழுவதும் பண்டிகையைக் கொண்டாடி மகிழ்கின்றனர். நம் ஊரில், திருவிழா காலத்தில், தண்ணீர் பந்தல் அமைப்பது போல், 'சூப் கிச்சன்' என, லண்டனில் பல இடங்களில் அமைக்கின்றனர். ஏழ்மையில் இருப்பவர்களுக்கு சூப் மற்றும் ரொட்டி வழங்குகின்றனர். வீடில்லாதவர்கள் தெருவில் திண்டாடாமல், பண்டிகையின்போது குளிக்க இடம், விருந்து, பொதுமக்களிடமிருந்து சேகரித்த பரிசுப் பொருட்களை வினியோகித்தல் போன்ற, பல ஏற்பாடுகளை தன்னார்வலர்கள் பலர் சேர்ந்து செய்கின்றனர். சமையல் செய்வது முதல், பல ஏற்பாடுகளை செய்யும் இந்த அமைப்புகள், ஆங்காங்கே உண்டு. கிறிஸ்துமசுக்கு ஒரு மாதம் முன், ஞாயிறு அன்று, சர்ச்சுக்கு சென்று திரும்பியவுடனே வீடுகளில் புட்டிங் தயாரிக்கின்றனர். மாவைக் கிழக்கிலிருந்து மேற்காக கிளறுவர். குழந்தை இயேசு பிறந்ததும் காண வந்த மூன்று ஞானிகளின் நினைவாக, அந்தத் திசைப்படி கிளறுகின்றனராம். குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவரும், புட்டிங் கலவையை ஒரு கிளறு கிளற வேண்டும். அப்படிக் கிளறும் போது ஒவ்வொருவரும் ஏதாவதொன்றை வேண்டிக் கொள்வராம்! புட்டிங் மாவுடன், ஒரு வெள்ளி நாணயம் ஒன்றைப் போட்டு தயார் விடுவர். அது யார் தட்டில் கிடைக்கிறதோ, அவருக்கு செல்வம் கிடைக்கும் என்று நம்புகின்றனர். வெளியூரில் இருந்தாலும் குடும்ப உறவினர் அனைவரும், கிறிஸ்துமஸ் தினத்தன்று வீட்டுக்கு வந்து விடுவர். அன்று வெளியில் போகாமல் சேர்ந்து விருந்துண்டு மகிழ்வர். மேலும், தெருக்களில் வாகனப் போக்குவரத்து மிகக் குறைவாகவே காணப்படும். மறுநாள், பாக்சிங்டே என்பதால், பரிசுப் பொருட்களுடன் நண்பர்கள் மற்றும் உறவினர்களை பார்க்க கிளம்பி விடுவர். குழந்தைகளை மகிழ்விக்கும் வழக்கமும் இந்த சீசனில் பிரசித்தம். கிறிஸ்துமஸ் மரத்தின் அடியில் முதல் நாள் இரவே, பரிசுகளை ஒளித்து வைத்துவிட, பண்டிகையன்று, குழந்தைகள் குதுாகலித்தபடி அவற்றை கண்டுபிடித்து எடுப்பர். அலங்காரம் செய்யப்பட்ட சாக்ஸ் வடிவ சிவப்பு பையில், சாக்லேட் போன்ற பரிசுகளை வைத்து குழந்தைகளின் கட்டிலில் கட்டி வைத்து விடுவர். தங்கம், வெள்ளியிலான ஆபரண பரிசுகளையும், அதேபோல் சிறிய அழகான சாக்சில் போட்டு வைத்துவிடுவர். சான்டா கிளாஸ் தாத்தா தான், அந்தப் பரிசுகளை வைத்ததாக நம்புகின்றனர், குழந்தைகள்.