உள்ளூர் செய்திகள்

ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர் (9)

காலஞ்சென்ற கவிஞர் சுரதா, பாகவதருடனான தன் அனுபவங்களை ஒரு பேட்டியில் கூறும்போது:ஒருநாள், என்னையும், உமரையும் அழைத்து, பாகவதரின் வீட்டிற்குச் சென்றார், தயாரிப்பாளர் நாகூர். 'இந்த இளைஞருக்கு சினிமா அனுபவம் உண்டு. நன்றாகப் பாடல்களும் எழுதுவார். நம் படத்தில், சில பாடல்களை எழுதப் போகிறார்...' என்று, பாகவதரிடம், என்னை அறிமுகம் செய்தார், நாகூர்.எதுவும் பேசாமல், என்னையே சில நொடிகள் உற்றுப் பார்த்து, 'சரி, எழுதட்டும்...' என்று சொல்லி விட்டார், பாகவதர்.நானும் சில பாடல்கள் எழுதினேன். அமரகவி படத்தில் இடம்பெற்ற, 'யானைத் தந்தம் போலே பிறைநிலா...' என்று, பி.லீலாவுடன் பாகவதர் பாடும் பாட்டைக் கேட்டால், இப்போதும் நாம் சொக்கிப் போய் விடுவோம்.படம் வெளியான பிறகு, ஒருநாள், அவர் வீட்டிற்கு மதிய உணவிற்கு வருமாறு என்னை அழைத்தார், பாகவதர். அளவில்லா சந்தோஷத்தோடு சென்றேன். தங்கத் தட்டிலே உணவு பரிமாறி, என்னை சாப்பிடச் சொன்னார்.அவர் தானே தங்கத் தட்டில் சாப்பிடுவது பழக்கம், ஒரு வேளை ஞாபகப் பிசகாக, தட்டை நம் பக்கம் வைத்து விட்டாரோ என்று நினைத்து, 'ஐயா, இது தங்கத் தட்டு...' என்றேன்.'தெரியும். இந்த தங்கத் தட்டில் தான் இன்று, நீங்கள் விருந்துண்ண வேண்டும். தங்களின், கவிப்புலமைக்கு நான் தரும் கவுரவம் இது...' என்றார், பாகவதர். என்னுடைய ஜென்மம் சாபல்யம் ஆகிவிட்டதைப் போன்ற பெருமகிழ்வோடு சாப்பிட்டேன்.அது மட்டுமல்ல, 'நான் தரும் இந்த சிறு பரிசை ஏற்றுக்கொள்ள வேண்டும்...' என்று சொல்லி, 500 ரூபாய் சன்மானமும் தந்தார், பாகவதர்.இவ்வாறு, ஒரு பேட்டியில் கூறியுள்ளார், சுரதா.திருவையாறு தியாகபிரம்ம ஆராதனையில் பங்கேற்று, பாட வேண்டும் என, பாகவதருக்கு ஆவல். மிகுந்த முயற்சிக்குப் பின், அதற்கான வாய்ப்பும் கிடைத்தது.பாகவதருக்கு கொடுக்கப்பட்டது வெறும், 15 நிமிடங்கள் தான். அதுவும், மதியம், 12:00 மணிக்கு. பாகவதர் பாட ஆரம்பித்தார். சரியாக, 15 நிமிடத்தில் முடித்து விட்டார். 'இன்னும், பாடுங்கோ, பாடுங்கோ...' என்று ரசிகர்கள் கூச்சலிட, என்ன செய்வதென்று புரியாமல் தவித்தார், பாகவதர்.'சரி சரி, பாடுங்கள்...' என, சபாக்காரர்கள் சொல்லவும், பாட ஆரம்பித்தார்.அடுத்து அங்கே கான வெள்ளம் பாய்ந்தோடியது. ஒரு மணி நேரம் ஆகியது. பாடிய பின் எழுந்தார்.'இன்னும் பாடுங்கள், இன்னும் பாடுங்கள்...' என்று ரசிகர்களின் கூச்சல். சபாக்காரர்களைப் பார்த்தார், பாகவதர். 'இதுக்குத்தான், வாய்ப்பே கொடுக்கக் கூடாது என்று நினைத்தோம். வசமாக இப்போது மாட்டிக் கொண்டோமே...' என்று நினைத்தவர்கள், சலிப்போடு, 0'ம்... ம், பாடுங்கள்...' என்று கூறினர்.மீண்டும் அங்கே இசை மழை. மேலும் ஒரு மணி நேரம் பாடி முடித்து, எழுந்திருக்க முயன்றார்.'கூடாது, கூடாது, இன்னும் பாட வேண்டும்...' என்று ரசிகர்கள் முன்பை காட்டிலும், அதிகமாக கூச்சலிட்டனர்.தர்மசங்கடமான நிலையில் சபாக்காரர்களை பார்த்தார், பாகவதர். எள்ளும் கொள்ளும் முகத்தில் வெடிக்க, 'ம்... ம், பாடி முடியுங்கள்...' என்று கோபத்தோடு கூறினர். மறுபடியும் ஆரம்பித்து விட்டது, கானாம்ருதம். ஆனந்த லாகிரியில் சஞ்சரித்துக் கொண்டிருந்தனர், ரசிகர்கள். நேரம், 3:00 மணி. பதறிப் போன பாகவதர், சட்டென்று எழுந்து, 'எனக்கு கொடுத்தது, 15 நிமிடம் தான். உங்கள் அன்பிற்கு கட்டுப்பட்டு, மூன்று மணி நேரம் பாடி விட்டேன். இனியும் பாடினால், சபாக்காரர்களின் கோபத்திற்கு ஆளாவேன். அது மட்டுமல்ல, எனக்குப் பின்னால், நிறைய பாடகர்கள் பாட வேண்டும்.'என்னால், அவர்களுக்கு கஷ்டம் வரக்கூடாது. எனவே, நான் புறப்படுவதற்கு அனுமதி கொடுங்கள்...' என்று அன்புடன் சொல்லி, பெரிய கும்பிடு போட்டு புறப்பட்டார், பாகவதர்.பாகவதருக்கு, கர்நாடக சங்கீதத்தைப் பற்றி என்ன பெரிதாகத் தெரிந்து விடப்போகிறது என்று அலட்சியமாக நினைத்தவர்களுக்கு, சரியான குட்டு கிடைத்தது.மறுநாள், தஞ்சாவூரில் பாகவதர் கச்சேரி. திருவையாறு கூட்டம் மொத்தமும் அங்கே தான் சென்றது.பாகவதர் என்ற சரித்திர புருஷனின் புகழ் எத்தகையது என்பதை, இந்நிகழ்ச்சி நிரூபித்தது.செட்டிநாட்டு வள்ளல் கோட்டையூர் ஆர்.எம்.அழகப்ப செட்டியார், எத்தனையோ கல்வி நிறுவனங்களை நிறுவி, தமிழகத்திலே உயர் கல்வியின் தரத்தை உயர்த்திய மாமனிதர்.திருவாங்கூர் பல்கலைக்கழகத்திற்கு, 1943ல், தமிழ்த்துறை துவங்குவதற்காக, ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை தந்தார். இன்றைய மதிப்பில், 10 கோடி ரூபாய்.தன் ஒரே மகள் உமையாள் திருமணத்தை, சீரும் சிறப்புமாய் நடத்தினார், அழகப்ப செட்டியார். ஐந்து நாள் திருமணம். வட மாநில பாடகர்கள், தென் மாநில பாடகர்கள் என, ஐந்து நாட்களும் கச்சேரிகள். வந்திருந்த அனைவருக்கும் வயிறார சாப்பாடு.மூலைக்கு மூலை ஒலிபெருக்கிகள் ஐம்பதிற்கும் அதிகமாய், இசை வெள்ளத்தைப் பொழிந்து கொண்டிருந்தன. தமிழ்நாட்டில் உள்ள அத்தனை வித்வான்களும் பாடி மகிழ்வித்தனர். பத்தாயிரம் ரசிகர்கள் பார்த்து, கேட்டு மகிழ்ந்தனர்.ஒருநாள், ஏழிசை மன்னர் பாகவதரின் கச்சேரி. ஒரு லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் கூடி விட்டனர்.முன்வரிசையில் அமர்ந்திருந்தவர்கள் எல்லாம் மிகப்பெரிய மனிதர்கள். சர் சி.பி.ராமசாமி ஐயர், சர் ஆர்.கே.சண்முகம் செட்டியார், செட்டி நாட்டரசர் ராஜா சர் முத்தையா செட்டியார் போன்றோர் அமர்ந்திருந்தனர்.பொதுவாக, இவர்கள் எல்லாம், கூப்பிட்ட மரியாதைக்காக கொஞ்ச நேரம் இருந்து விட்டு, கிளம்பி சென்று விடுவர். ஆனால், அன்று, பாகவதரின் கச்சேரியை முடியும் வரை இருந்து, கேட்டுவிட்டுத் தான் சென்றனர். பாகவதரின் கந்தர்வ கானம் அவர்களைக் கட்டிப்போட்டு விட்டது.அது மட்டுமல்ல, எத்தனையோ பந்தோபஸ்து ஏற்பாடுகள் செய்யப்பட்டும், அன்றைய தினம் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறி விட்டனர், போலீசார். பாகவதர் தான் செய்யும் தொழிலை தெய்வம் போல் மதித்தவர். ரசிகர்களை என்றைக்கும் மரியாதையோடு நடத்துபவர். 'ரசிகர்களால் தான் நான் இருக்கிறேன்...' என்பார்.பெரிய மனிதர்கள், சாதாரணமானவர்கள் என்ற பேதம் எல்லாம் அவரிடம் கிடையவே கிடையாது. அனைவரையும் ஒன்றாகத்தான் பார்த்தார். பாகவதரை நெகிழ வைத்த, பரம ரசிகர்... — தொடரும்கார்முகிலோன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !