உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்!

கே. சுப்பிரமணியம், திண்டிவனம்: பொன்முடி என்னாவார்? இனி, வாழ்க்கை முழுவதும், களி தின்னுவதும், கம்பி எண்ணுவதும் தான் செய்ய முடியும்... தமிழக நீதித்துறையின் மீது, மக்களுக்கு அதிக நம்பிக்கை வந்துவிட்டது! க. கல்பனா, சென்னை: சென்னை சாலைகளில் ஏற்பட்டிருக்கும் சிறு, சிறு பள்ளங்களைக் கூட சரி செய்ய முடியாத, தி.மு.க., அரசால் எப்படி சென்னையை சிங்கார சென்னையாக மாற்ற முடியும்? திராவிட மாடல் அரசால், நிவாரணப் பணிக்கு ஒதுக்கப்படும் மாநில அரசின் நிதியும், மத்திய அரசிடம் இருந்து பெறப்படும் நிதியும், அவர்கள் வீட்டிற்கும், 'பினாமி'கள் பெயருக்கும் சென்று விடுவதால், சென்னை, பள்ளச் சென்னையாகவே இருக்கும்... பள்ள சிங்காரச் சென்னை என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம்! * எம். ராமன், திருச்சி: ஒருவன் வாழ்க்கையில், வெற்றி தானாகக் கிடைக்குமா?வெற்றி என்பது தானாகக் கிடைப்பதில்லை. அது, உழைப்பால் பெறக் கூடிய ஊதியம்... முயற்சி செய்வதால் கிடைக்கக் கூடியது. உழைத்து, தைரியமாக செயல்படக் கூடியவருக்கும், உண்மையாகவும், நேர்மையாகவும் செயல்படுபவர்களுக்கும், வெற்றி நிச்சயம்! என். ஜெயம், புவனகிரி: இவ்வளவு ஆண்டுகள் கடந்த பின்னும், எம்.ஜி.ஆரின் நினைவு நாளில் தொடர்ந்து அவரது திருமுகத்தை, 'வாரமலர்' இதழில் விடாமல் அட்டை படமாக வெளியிட்டு வருவது ஏன்? அவர் இறக்கும் வரை, சாதாரண பிரஜைகளின் தலைவராக செயல்பட்டவர். அதனால், மக்கள் இன்னமும் அவரை மறக்கவில்லை. நாமும் அதை மறக்காமல், அட்டையில், அவர் படத்தை இடம் பெற செய்து விடுகிறோம்! எம். சிவா, ராமநாதபுரம்: தே.மு.தி.க.,வுடன் கூட்டணி வைக்க, பல கட்சிகள் தயாராக இருப்பதாக, அக்கட்சியின் பொது செயலர், பிரேமலதா விஜயகாந்த் கூறி உள்ளாரே?திராவிட கட்சிகள் இரண்டும் தயார் இல்லை என்பது, அனைவருக்கும் தெரியும். வேண்டுமானால், இவரைப் போன்ற, 'லெட்டர் பேட்' கட்சிகள் ஏதேனும் முன் வரலாம்! * ஆர்.எஸ். சந்திரசேகர், சென்னை: தனக்கு அதிகாரம் இருந்தால், தமிழகத்தில், கஞ்சாவை ஒரு மாதத்தில் ஒழித்து விடுவேன், என்று பா.ம.க., தலைவர் அன்புமணி ராமதாஸ் பேச்சு பற்றி... முதலில் அதிகாரம் கைக்கு வர வேண்டுமே... அது, ஒரு போதும் நடக்கப் போவதில்லை. தமிழகத்தில் போலீஸ் உதவியுடன் கஞ்சா வியாபாரம் நடக்கிறது. அதனால், ஒரு போதும் கஞ்சாவை ஒழிக்க முடியாது! எஸ். உதயா, திருவாரூர்: ஹிந்தி கற்றிருந்தால், 'இண்டியா' கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக, ஸ்டாலின் அறிவிக்கப்பட்டு இருக்கலாம்... வாய்ப்பை நழுவ விட்டு விட்டாரே?'இண்டியா' கூட்டணியில் உள்ள, தி.மு.க., தவிர, அனைத்து கட்சி தலைவர்களும், ஹிந்தி தெரிந்தவர்கள் தான்... அவர்களில் ஒரு சிலரைத் தவிர, அனைவரும் பிரதமர் கனவில் உள்ளனரே... இதில், ஹிந்தி தெரிந்தால் மட்டும், ஸ்டாலினுக்கு வாய்ப்பு கிடைத்துவிடுமா என்ன!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !