குற்றம் குற்றமே! (6)
முன்கதைச் சுருக்கம் : 'கார்த்திகா இண்டஸ்ட்ரீஸ்' உரிமையாளரான கார்த்திகாவுடன், திருப்பதிக்கு சென்றான், உதவியாளர் தனஞ்ஜெயன். வழியில், காரை மறிக்கும் போலி போலீஸ்காரர்களிடமிருந்து தப்பிச் சென்றனர்.போலியான ஆட்களை பற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவித்து, திருப்பதிக்கு சென்று, சாமி தரிசனம் செய்து. கார்த்திகா அப்பாவின் லட்சியபடி, ஒரு கோடி ரூபாயை திருப்பதி உண்டியலிலும் சேர்த்து விடுகின்றனர்.தரிசனம் முடிந்து திரும்பி வருகிறவர்களிடம், இவர்கள் புகார் கொடுத்த போலீசார், வழிமறித்த போலியான ஆட்கள் தப்பி விட்டதாக கூறி, அவர்கள் யார் என்று கேட்கின்றனர்.நிறுவன பங்குதாரரின் மகன் விவேக் அலுவலக ஆட்கள் என்று, தனஞ்ஜெயன் சொல்ல முற்பட, தடுத்தாள், கார்த்திகா.தனஞ்ஜெயன் முகத்தில் பரவிய அதிர்ச்சியை, கார்த்திகாவும் கவனித்தாள்.''தனா, எனிதிங் சீரியஸ்?'' என்று, கேட்டாள்.கோவிலின் பரபரப்பான சூழலில், விவேக் பற்றி எதுவும் பேச விரும்பாத தனஞ்ஜெயன், ''நத்திங் மேடம்... பிரார்த்தனை நிறைவேறினதுல, உங்களுக்கு இப்ப சந்தோஷம் தானே?'' என்று, மாற்றி கேட்டான்.''நிச்சயம். திருப்பதி பற்றி கேள்விப்பட்டிருக்கேன். ஆனா, இன்னிக்கு தான் நேரில் பார்க்கிறேன். அடேயப்பா எவ்வளவு கூட்டம். என்ன ஒரு பக்தி!''''இது தான் மேடம், நம் தேசத்தோட பலம்!''''எகானமியையும், மிலிட்டரியையும் விடவா?''''அதெல்லாம் பொருளால ஆனது. ஆனா, நம்பிக்கையும், பக்தியும் அருளால ஆனது. பொருளை திருடிக் கூட அடைஞ்சுடலாம். அருள் அப்படி இல்ல... பக்தி இருந்தா மட்டும் தான் கிடைக்கும்.''அவனது பதிலை கார்த்திகா மிக ரசிப்பது, அவள் முகத்தில் தெரிந்தது.''ஆமா, திருப்பதிக்கு வந்தது, இதுதான் முதல் தடவையா... ஆச்சரியமா இருக்கு.''''என் வாழ்க்கையில், அதுக்கு மட்டும் பஞ்சமே கிடையாது,'' என்றாள்.''சரி, எம்.டி.,க்கு போன் பண்ணி சொல்லுங்க. அவர் ரொம்ப சந்தோஷப்படுவார்,'' என்றான், தனஞ்ஜெயன்.கார்த்திகாவும் கோவிலிலிருந்து வெளியில் வந்து, கிருஷ்ணராஜுக்கு போன் செய்தாள். ''அப்பா, எல்லாம் நல்லபடியா முடிஞ்சுது,'' என்றாள்.''நிஜமாவாம்மா?''''சத்தியமாப்பா... நானே என் கையால பணத்தை உண்டியல்ல போட்டேன். திருப்பதி தேவஸ்தான ஆபீசர்ஸ் கூட, நல்ல ஒத்துழைப்பு கொடுத்தாங்க. வீடியோ கூட எடுக்க முன் வந்தாங்க. ஆனா, நான் தான் தவிர்த்துட்டேன்.''''ரொம்ப சந்தோஷம்மா... தனஞ்ஜெயன் நமக்கு நல்லபடி, 'செட்' ஆவார்னு உனக்கு தோணுதா?''''ஆமாப்பா... அவர் அறிவாளியாகவும், சுறுசுறுப்பானவராகவும் இருக்கிறார்.''''எப்படிம்மா அந்த தாமோதரன் மற்றும் விவேக்கிட்ட இருந்து தப்பினீங்க... அவங்களால ஒண்ணும் பிரச்னை இல்லையே?''''எல்லாத்தையும் நேரில் விபரமா சொல்றேன்பா.''''கொஞ்சம் தனஞ்ஜெயன்கிட்ட போனை கொடுக்கறியா?''கிருஷ்ணராஜ் சற்று கெஞ்சல் குரலில் கேட்கவே, காது மாறியது போன்.''வெரி குட்மார்னிங் சார்!''''தேங்க்யூ ஜென்டில்மேன். தேங்க்ஸ் எ லாட்!''''இருக்கட்டும் சார். என் வேலைக்கு எதுக்கு சார் நன்றி?''''இது, பி.ஏ.,வோட வேலை இல்ல தனஞ்ஜெயன். அதுக்கும் மேல...''''நீங்க, அடுத்த, 'அசைன்மென்ட்'டை சொல்லுங்க சார்.''''முதல்ல, நல்லபடியா வீடு வந்து சேருங்க. அடுத்து என்னன்னு நேரில் சொல்றேன். ஜாக்கிரதை தனஞ்ஜெயன்,'' கிருஷ்ணராஜ் குரலில் எச்சரிக்கை அதிகம் தொனித்தது.போனை கார்த்திகாவிடம் தந்தான், தனஞ்ஜெயன்.''அப்பாகிட்ட ரொம்ப நாள் கழிச்சு, இன்னிக்கு தான் சந்தோஷத்தை பார்க்கிறேன்,'' என்றபடியே மொபைல் போனை முடக்கி, பையில் போட்டாள்.''சந்தோஷம் மட்டுமில்ல, அவர்கிட்ட எச்சரிக்கைங்கிற பேர்ல பயமும் நல்லாவே தெரிஞ்சது. ஜாக்கிரதையா வீடு வந்து சேருங்கன்னார். ஆமா, அந்த விவேக் கும்பல், அவ்வளவு மோசமானவங்களா?'' கேட்டபடியே பார்க்கிங்கில் நின்றிருந்த காரை இருவரும் நெருங்கினர். சிணுங்களுடன், 'ரிமோட் லாக்' கதவு திறந்தது.காருக்குள் இருவரும் ஏறி அமர்ந்ததும், வண்டியை கிளப்பினான், தனஞ்ஜெயன்.''இப்ப சொல்லுங்க தனா... அந்த விவேக் லைன்ல வந்தானா?'' கேட்டாள், கார்த்திகா.''எஸ் மேடம்...''''வேலையை விட்டுட்டு ஓடிடு... இல்ல, உயிரை விட வேண்டியிருக்கும்ன்னு சொன்னானா?''''கரெக்ட். அவன் பேசினது உங்க காதுலயும் விழுந்துச்சா?''''இது, வழக்கமா அவன் பேசுற வசனம். ஆமா, என்ன பண்ணப் போறீங்க?''கார்த்திகாவின் கேள்விக்கு, திருப்பதியின் சந்தடி மிகுந்த சாலையில் சாதுர்யமாக, 'டிரைவ்' செய்தபடியே, ''நான், வேலையை விட்டுட்டு ஓடினாலும் ஓடிடுவேன்னு இன்னுமா நீங்க நினைக்கறீங்க?'' என்று, திருப்பி கேட்டான், தனா.''இப்ப, இங்க கூட நம்பள, 'பாலோ' பண்ணிகிட்டு அவன் ஆட்கள் வரலாம்.''''அவன் அவ்வளவு பெரிய கிரிமினலா?'' காரை வளைவான மலைப் பாதையில் செலுத்திக் கொண்டே கேட்டான்.ஆமாம் என்பது போல தலையை ஆட்டியவள், ''எங்கப்பாவும் தான்...'' என்றபோது, அவள் கண்களில் கண்ணீரின் உருளல்.''என்ன மேடம் சொல்றீங்க?'' தனாவிடமும் அதிர்வு.''எங்க அப்பாவும், மோசமான, குரூரமான மனிதர் தான், தனா. இப்படி சொல்லாம, அந்த ரெண்டாவது, 'அசைன்மென்ட்'கிட்ட என்னால போக முடியாது,'' என்றபடி கண்ணீரை துடைத்துக் கொண்டாள், கார்த்திகா.''புரியுது மேடம்... விவேக் கூட சொன்னான். ஆனா, அப்ப நான் நம்பலை.''''ஓ... சொல்லிட்டானா?''''ஆமாம்... ஆனா, இப்ப நீங்க சொல்றது தான் எனக்கு பெரிய ஆச்சரியம்.''''நான் தான் ஆரம்பத்துலயே சொன்னேனே... என்கிட்ட ஆச்சரியங்களுக்கு பஞ்சமே இல்லைன்னு.''''என் வரைல இந்த உலகத்துல யாருமே முழுமையான நல்லவங்க கிடையாது. என்கிட்ட கூட எவ்வளவோ குறைகள் இருக்கு தெரியுமா?''''அப்கோர்ஸ்... குறை இல்லாத மனிதன்னு ஒருத்தன் இருக்க முடியாது தான். ஆனா, குற்றம், குரூரம், கொடூரம்ன்னு, வெறி பிடிச்ச மனுஷனை நீங்க என்னன்னு சொல்வீங்க?''கார்த்திகாவின் கேள்விக்கு, மலைப் பாதையில் சாலையோர மர நிழலின் கீழ் காரை நிறுத்தியபடி, வெறித்துப் பார்த்தான், தனா.''என்ன தனா... விவேக்கை விட நான் ரொம்ப அதிர்ச்சி தர்றேனா... அதிர்ச்சியா தான் இருக்கும். அடுத்தடுத்து நான் சொல்லப் போறதை எல்லாம் கேட்டா, என்னை விட்றுங்க, நான் வரேன்னு கூட நீங்க சொல்லலாம்.''''போதும் மேடம்... பூடகமாவே நீங்க பேசினா, என்னாலயும் புரிஞ்சுக்க முடியாது. தயவுசெய்து வெளிப்படையா பேசுங்க,'' என்று, தனா சொல்லவும், காரை விட்டு இறங்கினாள், கார்த்திகா.பக்தர்களோடு ஒரு பேருந்து, ஜில்லென்று காற்றை விசிறி விட்டபடி, அவளை கடந்து போனது.அவனும் இறங்கினான். பக்கவாட்டில் திருப்பதி மலையின் சரிந்த மலைக்காடு. அதன்மேல் மேக பொதிகளின் தழுவல். ஜில்லென்ற காற்று வீசியது.கைகள் இரண்டையும் முன்புறமாக கட்டிக்கொண்டு, அந்த மேக பொதிகளை பார்த்தபடியே தனஞ்ஜெயனின் கேள்விகளுக்கு பதில் சொல்லத் துவங்கினாள், கார்த்திகா.''தனா, நான் இப்ப சுருக்கமா சில விஷயங்களை சொல்லப் போறேன். உங்களுக்கும் நிச்சயமா அதிர்ச்சியா இருக்கும்.''''முதல்ல, என்னன்னு சொல்லுங்க மேடம்...''''அதுக்கு முன், எனக்கு, நீங்க ஒரு சத்தியம் பண்ணித் தரணும்.''''சத்தியமா?''''ஆமா... இந்த திருப்பதி மலை மேல சாட்சியா, அந்த சாமி மேல சத்தியமா நான் சொல்லப் போறதை, நீங்க வெளியே யார்கிட்டயும் சொல்லக் கூடாது.''''அவ்வளவு ரகசியமானதா மேடம், நீங்க சொல்லப் போற விஷயங்கள்?''''ரகசியம்ன்னும் சொல்லலாம், படுபாதகம்ன்னும் அதை விமர்சிக்கலாம்.''''இதையெல்லாம் நீங்க என்கிட்ட அவசியம் சொல்லணுமா மேடம்?''''ஆமாம்... சொல்லியே ஆகணும். அப்பதான் உங்களாலயும் எங்களுக்கு உதவ முடியும்.''''சரி சொல்லுங்க.''''சத்தியம் பண்ணாமலே சொல்லுங்கன்னா என்ன அர்த்தம்?'' என்றாள், கார்த்திகா.''கையை நீட்டுங்க பண்றேன்,'' தயாரானான், தனா.''என் கை மேல அடிச்சு வேண்டாம்...'' என்றவள், காரிலிருந்து திருப்பதி லட்டு பிரசாத பையை எடுத்தாள். அதன் மேல் திருப்பதி பெருமாளின் படம். காரின் பானட் மேல், விரித்து வைத்து, ''இந்த பெருமாள் படம் மேல அடிச்சு, சத்தியம் செய்யுங்க,'' என்றாள்.தயங்கினான், தனஞ்ஜெயன்.''என்ன தனா... இஷ்டமில்லையா?''''எப்படி சொல்றதுன்னு தெரியல மேடம்... தெய்வத்து மேல சத்தியம் பண்ணிட்டா, உயிரே போனாலும் மீறக் கூடாது; மாறவும் கூடாது. அதுதான் என்னை யோசிக்க வைக்குது.''''அப்ப சரி... இப்ப எனக்கு செய்திருக்கிற இந்த உதவியோட ஒதுங்கிப் போயிடுங்க. நான் உங்களை வற்புறுத்த மாட்டேன்.''''என்ன மேடம், சட்டுன்னு இப்படி சொல்லிட்டீங்க?''''என்னோட நிலை அப்படி, தனா. இருக்குற பாவங்கள் போதாதுன்னு உங்களையும் பாவியாக்கணுமா?''''அப்படி என்ன மேடம் அந்த விஷயங்கள்?''''அதெல்லாம் விஷயங்களல்ல, தனா... ஒவ்வொண்ணும் ஒரு ரகசியம். சாதாரண ரகசியம் கூட இல்ல... சிதம்பர ரகசியம்ன்னு சொல்வாங்களே அந்த மாதிரி...''''பரவாயில்ல மேடம், எதுவா இருந்தாலும் சொல்லுங்க.''அவன் சொல்லச் சொல்ல, அவள் பார்வை, கார் பானட் மேல் இருந்த திருப்பதி பெருமாள் படத்தின் மேல் சென்றது. அவனும் தன் வலக்கரத்தை பெருமாள் படத்தின் மீது வைத்து, ''சத்தியம் மேடம்...'' என்றான்.''தனா, நான் இப்ப சொல்லப் போற எல்லாமே, கோர்ட்ல, நீதிபதி முன், சத்ய பிரமாணம் செய்து சொல்கிற மாதிரியான உண்மைகள். உங்களை நான், எங்க அப்பாவோட, 'செகரட்டரியா' மட்டும் நினைச்சு இப்ப பேசலை. ஒரு பொறுப்புள்ள நல்ல மனுஷனாவும் நினைச்சு பேசறேன்.''உங்களைப் போல ஒரு நல்ல துணைக்காக தான், நாங்க காத்திருந்தோம். இப்ப அந்த துணை கிடைச்சிட்டதா, நான் நம்பறேன்,'' என்று அவள் சொன்னபோது, வரிசையாக சில பேருந்துகளும், கார்களும் கடந்து போயின. அதில், ஒரு கார்காரர், அவர்களை உரசி நிற்கவும், விக்கித்துப் போனாள், கார்த்திகா.காரின் டிரைவிங் சீட்டில் அமர்ந்திருந்தவர், தெலுங்கில், ''உங்களுக்கு அறிவிருக்கா... இங்க போய் ஜாலியா நின்னு பேசிக்கிட்டிருக்கீங்க. இது, புலி நடமாடுற இடம். நேற்று, இங்க தான் ஒரு புலி, ஒருத்தரை அடிச்சுடுச்சு,'' என்றார்.அடுத்த நொடியே இருவரும் காரில் ஏறிக்கொண்டனர்.''புலின்னு சொன்ன உடனே பயந்துட்டீங்களா?'' என்று, காரை கிளப்பிய படியே கேட்டான், தனா.''பயப்படல... அக்கரையா சொன்னவருக்கு மரியாதை கொடுத்தேன். காட்டுப் புலியெல்லாம் ஒரு மிருகமே இல்லை. எங்கப்பா கிருஷ்ணராஜ் முன்னாலயும், அந்த தாமோதரன் முன்னாலையும்...'' என்றவளை, உற்றுப் பார்த்தபடி, காரை கிரீச்சிட்டு நிறுத்தினான்.''எஸ் தனா... என் அப்பா கிருஷ்ணராஜ், ஒரு கல்ப்ரிட். பெரிய கிரிமினல். அவ்வளவு ஏன் ஒரு கொலைகாரரும் கூட...'' அவள் அழுத்தமாக சொன்னதோடு, அழத் துவங்கினாள்.''விளக்கமா சொல்லுங்க மேடம்...'' என்று, காரை திரும்ப கிளப்பினான்.''கொலை, கொள்ளை, கள்ளக்கடத்தல், கற்பழிப்புன்னு ஒரு குற்றம் கூட, என் அப்பா வரைல பாக்கி இல்லை.''அதெல்லாம் தான், அவர் உடம்புல கிட்னி பெயிலியரா, பிளட் பிரஷரா, லெப்ரசியா மாறி வந்து உட்கார்ந்திருக்கு. இதுல ஒரு வியாதி ஒருத்தருக்கு இருந்தாலே கஷ்டம். அவ்வளவு வியாதியும் இருந்தா?'' அவள் கேட்ட கேள்வி, தனஞ்ஜெயனை கூர்மையாக்கியது.''இந்த வியாதியெல்லாம் தான், என் அப்பாவை கொஞ்சம் கட்டிப் போட்டது. பணம் இருந்தா போதும், இந்த உலகத்துல எதை வேணும்ன்னாலும் விலைக்கு வாங்கிடலாம்ன்னு நினைச்சுகிட்டிருந்தார், அப்பா.''எத்தனை கோடி இருந்தாலும், அழுகத் துவங்கிய தன் தோலுக்கு ஒரு மருந்தை மட்டும் வாங்க முடியலை. வேலை செய்யாம போன கிட்னிக்கு, ஒரு மாற்று கிட்னி கிடைச்சும் செட் ஆகலை.''கொதிக்கிற ரத்தத்தை அடக்க, அப்பப்ப மாத்திரை, ஊசி மருந்துன்னு அவர் உடம்பே ஒரு நரகமா மாறின பிறகு தான், நமக்கு மேல ஒரு சக்தி இருக்குன்னு மெல்ல புரிய ஆரம்பிச்சுது, அவருக்கு. பாவம், புண்ணியம்ன்னா என்னன்னும் தெரியத் துவங்கியது,'' நிறுத்தி நிதானமாக சொன்னாள், கார்த்திகா.''இப்ப எல்லா தப்புக்கும் பரிகாரம் தேட நினைக்கிறாரா மேடம்?'' என்றான், தனா.''ஆமாம்... பரிகாரம் தேட மட்டுமில்ல, செய்த தப்புக்கெல்லாம் சட்டப்படி என்ன தண்டனை உண்டோ அதை அனுபவிக்கவும் தயாரா இருக்கார்.''''தப்பு செய்யும்போது, உங்களால, அவரை தடுக்க முடியலியா?''''நான் பக்கத்துல இருந்தாதானே எனக்கு தெரியும். வடக்கே டேராடூன்ல, ஹைஸ்கூல், காலேஜ்னு என் வாழ்க்கை ஹாஸ்டல்லயே கழிஞ்சுடுச்சு.''''உங்க அம்மா?''''ஒருநாள், அவங்க துாக்கு மாட்டிக்கிட்டு செத்தே போயிட்டாங்க,'' என்று விசும்பலோடு சொல்லி முடித்தாள்.அந்த பதில் நெஞ்சையே அடைத்தது, தனஞ்ஜெயனுக்கு.— தொடரும்- இந்திரா சவுந்திரராஜன்