பெண் கட்டிய சூரியக்கோவில்!
மோதோரா என்பது, குஜராத்திலுள்ள ஒரு சிறு நகரம். இந்த ஊரின் விசேஷம் என்னவென்றால், அழகான சூரியக்கோவில். இதை, ஒரு பெண் கட்டியுள்ளார் என்பது, விசேஷம்.இந்தக் கோவிலில் மூன்று சிறப்புகள் உண்டு. ஒன்று, இப்படியும் அமைக்க முடியுமா என, மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு கட்டப்பட்டுள்ள குளம். இதன் பெயர், சூரிய குண்டம். இன்னொன்று, ஒரு ஆண்டின், 52 வாரங்களைக் குறிக்கும் வகையில், 52 துாண்களைக் கொண்ட சபா மண்டபம்; மூன்றாவது, குடா மண்டபம் எனப்படும் கருவறை.ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், அதாவது, 1026ல், சவுராஷ்டிரத்தை ஆட்சி செய்த, முதலாம் பீமதேவனின் மனைவி உதயமதி, இந்தக் கோவிலைக் கட்டியுள்ளார். இவரது பெயரில் கூட, சூரியனின் உதயம் இருப்பது குறிப்பிடத்தக்கது.ஒரு காலத்தில், சூரியனை வணங்கிய மதத்தை, சவுரம் என்றனர். இதிலிருந்தே சூரியனை வணங்கியவர்களை, சவுராஷ்டிரர்கள் என்றதாகவும் ஒரு கருத்து உண்டு.இந்தக் கோவிலில் சூரியனுக்கு, தங்கச்சிலை அமைக்கப்பட்டிருந்தது. சூரியன் மட்டுமின்றி, அவரது, தேரோட்டியான அருணனையும் தங்கத்திலேயே வடித்துள்ளனர். இந்த அழகிய கருவறையை பிற்காலத்தில் வந்த மன்னர்கள் கொள்ளையடித்தனர்; கோவிலையும் சிதைத்தனர். பிறகு வந்த, சவுராஷ்டிர ஹிந்து மன்னர்களும், வியாபாரிகளும் இணைந்து, கோவிலைப் புதுப்பித்தனர்.இங்குள்ள சூரிய குண்ட குளத்தை, ராம குண்டம் என்றும் சொல்வர். ராவணனைக் கொன்ற பாவம் நீங்க, ராமபிரான் இப்பகுதிக்கு வந்து லிங்கம் அமைத்து வழிபட்டார். இவரது பெயரால், குளத்திற்கு ராம குண்டம் என பெயரிட்டுள்ளனர். இது, 53.6 மீட்டர் நீளம், 36.6 மீட்டர் அகலம் கொண்டது. குளத்திற்குள் இறங்க, 108 அழகான படிகள் அமைக்கப்பட்டுள்ளன. படிக்கட்டு ஓரங்களில் விநாயகர், சிவன், நடராஜர், பார்வதி, பெருமாள் மற்றும் ஏராளமான கடவுள்களின் சிலைகள் வடிக்கப்பட்டுள்ளன.புனிதமான இந்த தீர்த்தத்தில் குளித்த பிறகே, பக்தர்கள் கோவிலுக்குள் சென்ற காலம் இருந்தது. இந்தக் குளத்தை தாண்டினால், நகைகளை வளைத்துப் பிடித்தால் எப்படியிருக்குமோ, அது போன்ற வடிவில், தோரண வாயில்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த வாசல்களைக் கடந்தால், 52 துாண்களைக் கொண்ட, சபா மண்படம் உள்ளது. ஒரு ஆண்டின், 52 வாரங்களும் சூரியன் ஓய்வின்றி பயணம் செய்து கொண்டிருப்பதை இது குறிக்கிறது.இந்த துாண்களில் ராமாயணம், மகாபாரதம், கிருஷ்ணர் செய்த அற்புத லீலைகளை விவரிக்கும் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.இந்த மண்டபத்தைக் கடந்ததும், குடா மண்டபம் எனும் கருவறை வருகிறது. இங்கு தான் தேரில் பவனி வரும் சூரிய பகவான் அழகே வடிவாய் தரிசனம் தருகிறார்.இங்கு, ஜனவரி மூன்றாம் வாரம் நாட்டியாஞ்சலி நடக்கும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, பெண்கள், தங்கள் சாதனையை வெளிப்படுத்தியுள்ளனர் என்பதற்கு இந்தக் கோவில் ஒரு சான்று.ஆமதாபாத்- - பாலன்பூர் நெடுஞ்சாலையில், 98 கி.மீ., துாரத்திலுள்ளது, மோதோரா.- தி.செல்லப்பா