அந்துமணி பதில்கள்!
* டி.ஜே. பாலன், நஞ்சுண்டாபுரம்: வரும், 2024 லோக்சபா தேர்தலில், என்ன நடக்கும் என்று கூறுங்களேன்...'இண்டியா' கூட்டணி காணாமல் போய் விடும்; மீண்டும், பா.ஜ., தான் ஆட்சியைப் பிடிக்கும். மீண்டும், மோடி தான், நம் நாட்டின் பிரதமராவார்! * ராம் ஆதிநாராயணன், தஞ்சாவூர்: நடிகர் விஜய், தீவிர அரசியலில் இறங்க ஆயத்தமாவது போல் தெரிகிறதே... அடுத்த, எம்.ஜி.ஆர்., ஆவாரா அல்லது அடுத்த கமல் ஆவாரா?எம்.ஜி.ஆர்., போல இனி யாருமே வர முடியாது என்பது தான். உண்மை நிலவரம்... விஜய், அடுத்த கமல் ஆவார் என்பதுவே நிஜம்! ஐ. சுப்பிரமணியன், ஆவரைகுளம்: 'ஞாயிற்றுக்கிழமை, கடைகளில், 'தினமலர்' நாளிதழ் வாங்க வேண்டுமானால், காலை, 7:00 மணிக்குள் வரவேண்டும். அதற்கு பின் வந்தால் கிடைக்காது...' என, கடைக்காரர்கள் சொல்கின்றனரே... ஏன்?'வாரமலர்' வாசக முதலாளிகள் எல்லாருக்கும், காலை, 7:00 மணிக்குள், 'வாரமலர்' இதழை படித்து விட வேண்டும் என்ற ஆவல் இருப்பதால், ஞாயிற்றுக்கிழமை படு வேகமாக உள்ளனர். அதனால், 7:00 மணிக்கு மேல், 'தினமலர்' நாளிதழ் கிடைப்பதில்லை! எஸ்.ஆர்.எஸ். ராகவன், சென்னை: ஒரு பக்கம் இலவசங்கள், அதனால் ஏற்படும் பொருளாதார பற்றாக்குறை, அதை சரிக்கட்ட, 'டாஸ்மாக்' மூலம் வரும் வருமானம்... இப்படித்தான் தமிழகம் போய் கொண்டிருக்கிறது. இதை மாற்றி, இலவசங்களை நிறுத்தி, மதுவிலக்கை அமல்படுத்தினால், தமிழகத்திற்கும், மக்களுக்கும் நன்மை பயக்கும் அல்லவா?நன்மை பயக்கும் தான்... ஆனால், இதுவெல்லாம் நடக்காது. இலவசங்களை அறிவிக்கவில்லை என்றால், ஆட்சியைப் பிடிக்க முடியாது. 'டாஸ்மாக்'கை மூடினால், உற்சாகபான பிரியர்களின் ஓட்டும் கிடைக்காதே. எஸ். பாத்திமா, ஈரோடு: மூன்று மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் படு தோல்வி அடைந்தாலும், 'மீண்டும் பாத யாத்திரை செல்வேன்...' என, ராகுல் கூறுகிறார். இதனால், லோக்சபா தேர்தலில் வெற்றி கிடைக்குமா?மூன்று மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் தான், லோக்சபா தேர்தலிலும் காங்கிரசுக்கு கிடைக்கும்... இவர், முழுக்க முழுக்க நடை பயணம் மட்டும் செல்வதில்லை, அனேகமாக, பஸ் பயணம் தான் செல்கிறார்! மு. கணேசன், நெல்லை: நான், உயர்ந்த நிலைக்கு வரவேண்டும் என்று எண்ணுகிறேன். என்ன செய்தால், உயர் நிலையை அடைய முடியும்?உங்களிடம், அகங்காரமும், சுயநலமும் இருக்கிறதா... அவற்றை முதலில் ஒழித்துக் கட்டுங்கள்... ஒழுக்கத்தையும், அடக்கத்தையும் வளர்த்துக் கொள்ளுங்கள்... உயர்ந்த நிலைக்கு வந்து விடலாம்!எஸ். நரேந்திரன், திருச்சி: இந்த உலகத்தில் யாரை நம்பலாம்?நன்றியுள்ள மனிதர்களை... அவர்கள், எது சொன்னாலும் நம்பலாம். அவர்கள், துரோகம் செய்ய மாட்டார்கள்!