திண்ணை!
மின்னல் எழுதிய, 'மறக்க முடியாத திரைப்படத் தயாரிப்பு அனுபவங்கள்' நுாலிலிருந்து: நடிப்பிலும், பேச்சிலும், தந்தை எம்.ஆர்.ராதாவைப் போலவே, ஏற்ற இறக்கமாய் பேசுவார், நடிகர் எம்.ஆர்.ஆர்.வாசு. சிலருக்கு நாள் முழுவதும், மது இல்லாமல் இருக்க முடியாது. ஆனால், படப்பிடிப்பின் போது, 'ஸ்டெடி'யாக இருப்பார். சிவாஜி, கே.ஆர்.விஜயாவை வைத்து ஒரு படம் எடுத்துக் கொண்டிருந்தார், சின்ன அண்ணாமலை. அதில், எம்.ஆர்.ஆர்.வாசுவும் நடித்தார். படத்தின் கடைசி நாள். இறுதிக்கட்ட காட்சி படப்பிடிப்பு. சிவாஜி உட்பட, அனைத்து நடிகர்களும் அந்த காட்சியில் இடம்பெற்றிருந்தனர். காட்சி சற்று நீளமானது. ஒரு ஷாட்டில், 300 அடிகள் மட்டும் பாக்கி. லைட்டிங் ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார், கேமராமேன். 'மேக் -- அப்' அறையில், தான் வைத்திருந்த விஸ்கி பாட்டிலைத் திறந்து கொஞ்சம் சாப்பிட, தண்ணீர் தேடினார், வாசு; கிடைக்கவில்லை.செட் பாயை கூப்பிட்டு, சோடா வாங்கி வரச் சொன்னார். போனவன் போனவன் தான்! அடுத்து, வேறொரு பையனை அழைத்து சோடா வாங்கி வரும்படி சொன்னார்.சின்ன அண்ணாமலையிடம் சென்று பணம் கேட்டான், அந்த பையன்.அவரோ, 'நீ கண்டுக்காம வேறு பக்கம் போய் விடு...' என சொல்லி, பணம் தரவில்லை. அந்த சமயம் வெளியே வந்த, வாசு, இதை கவனித்து விட்டார். 'ஒரு சோடாவுக்கு வக்கில்லாதவங்கள் எல்லாம், சினிமா எடுக்க வந்துட்டாங்கப்பா...' எனக் கூறியபடி, படப்பிடிப்பு தளத்திற்கு வந்தார். சிவாஜி முதல் அனைவரும் பேசிய பின் கடைசியாக, வாசு பேச வேண்டும். பேசினார், வாசு. ஆனால், படத்தில் இல்லாத வசனம் ஒன்றை பேச, காட்சி நிறுத்தப்பட்டது. இப்படி நான்கு, 'டேக்' முடிந்தும், காட்சி சரியாக வரவில்லை. அப்போது வாசுவிடம், 'என்னப்பா, ஓவரா...' என்றார், சிவாஜி.'இல்லண்ணா...' எனக்கூறி, வாசு தொடர்ந்து நடித்தார்.ஒன்பதாவது, 'டேக்'கில் தான் காட்சி வெற்றியானது. 1,000 அடி கொண்ட ஒரு ரோலின் விலை, அன்று 3,000 ரூபாய். இப்படி மூன்று ரோல் செலவானது. ஆக, கூட்டிக் கழித்துப் பார்த்தால், மொத்த பிலிம் செலவு, 10 ஆயிரம் ரூபாய்.படப்பிடிப்பு முடிந்ததும், சின்ன அண்ணாமலையிடம், 'சாரி அண்ணே.. என்னால உங்களுக்கு நிறைய பிலிம் வேஸ்ட்டாகி விட்டது...' என்றார், வாசு; அதற்கு பதில் கூறாமல், மவுனம் காத்தார், சின்ன அண்ணாமலை. உடனே, 'ஒரு ரூபாய்க்கு சோடா வாங்கிக் கொடுத்திருந்தால், 10 ஆயிரம் ரூபாய் மிச்சம் பிடிச்சிருக்கலாமே ஸ்வாமி...' என, நக்கலாக பேசி சென்று விட்டார், எம்.ஆர்.ஆர்.வாசு. விகடன் பிரசுரம், கவிஞர் வாலி எழுதிய, 'நினைவு நாடாக்கள்' சுயசரிதை நுாலிலிருந்து: ராமநாராயணன் படம், கருணாநிதி கதை வசனம், ஏவி.எம்.,மில் பூஜை. கருணாநிதி தலைமையில் அனைவரும் பேசினர்.அதில், 'ராமநாராயணன், 100 படம் எடுத்தவர். அதில், 70 படங்களுக்கு நான் பாட்டு எழுதியிருக்கிறேன். எல்லா படத்திலும் பாம்பு பாடும். நான் மொத்த நாகத்துக்கும் எழுதி விட்டேன். இனி, துத்த நாகம் தான் பாக்கி...' என்று, பேசினேன்.அடுத்து பேச வந்தவரும் பாட்டு எழுதுபவர் தான். அவர், 'நான் துத்தநாகத்துக்கெல்லாம் பாட்டு எழுத மாட்டேன்...' என்று, எகத்தாளமாக பேசி அமர்ந்தார். அடுத்த வாரம் அந்த படத்துக்கு பாட்டு எழுத சொல்லி, என் வீட்டிற்கு வந்தார், ராமநாராயணன். 'என்னைப் பற்றி மேடையில் எகத்தாளமாகப் பேசியபோது, நீங்களோ, கருணாநிதியோ அதைக் கண்டிக்கவில்லை. ஆகவே, நான் இந்தப் படத்துக்கு பாட்டெழுத மாட்டேன்...' என்று, மறுத்து விட்டேன். அன்று இரவு, தொலைபேசியில் பேசினார், கருணாநிதி.'உங்கள் கோபம் நியாயமானது, அந்த ஆள் அப்படிப் பேசியது தப்பு தான். ஆனால், எனக்கு உங்க பாட்டு வேணும். நீங்க எழுதணும்...' என்றார். - நடுத்தெரு நாராயணன்