உள்ளூர் செய்திகள்

திருடர்களின் திருப்பணி!

ஜன., 25 தைப்பூசம்சிவனோடும், முருகனோடும் இணைந்தது, தைப்பூசத் திருவிழா. ஆனால், சிவனே கதியென வாழ்ந்த ஒரு பெண்மணியின், அமரத்துவ நாளாகவும், இது திகழ்கிறது. திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் வடக்கு கோபுரத்தைக் கட்டிய, இவரது பெயர், அம்மணி அம்மா. திருடர்களையும் திருத்தி, பக்தி வழியில் செலுத்திய பெருமையாளர்.ஒருமுறை, சிவன், தன் கண்கள் சூரியனும், சந்திரனும் என, சொன்னார். அதைச் சோதிக்க அவரது கண்களைப் பொத்தினாள், பார்வதி. உலகமே இருளாகி விட்டது. இந்த பாவத்துக்கு பரிகாரமாக, பூலோகத்தில் இரண்டு பிறவிகள் எடுக்க சாபமிட்டார், சிவன். திருவண்ணாமலை அருகிலுள்ள சென்னசமுத்திரத்தில், ஆதையன் - -கோதாவரி தம்பதி வசித்தனர். குழந்தை இல்லை.ஆதையனின் கனவில் தோன்றிய சிவன், 'ஊர் மக்கள் உன்னிடம் ஒரு கல்லை ஒப்படைப்பர். அதிலிருந்து, ஒரு பெண் குழந்தை உனக்கு கிடைக்கும். அதை வளர்த்து வா...' என்றார்.அதன்படியே நடந்தது. அவளுக்கு சென்னம்மா என பெயரிட்டனர்.இவளது அபூர்வ சக்தி பற்றி கேள்விப்பட்ட மன்னர் ஒருவர், அவளைத் தன் பட்டத்தரசியாக ஏற்பதாக கூறினார்.இதை ஏற்காத சென்னம்மா, நீப்பாத்துறை என்ற கிராமத்துக்கு சென்று, அங்கு வசித்த வெள்ளியப்ப சித்தர் உதவியுடன், ஒரு குகையில் தங்கினாள். அங்கு சப்தகன்னிகள் இருந்தனர். அவர்கள், அவளைப் பாதுகாத்தனர். இதையறிந்த ராஜா, நீப்பாத்துறைக்கு வந்தார். 'அவள் தெய்வப் பணிக்காகப் பிறந்தவள். இப்போது சப்த கன்னிகள் மேற்பார்வையில் இருக்கிறாள். அவளை நீங்கள் அடைய முடியாது...' என்றார் சித்தர்.இதை ஏற்ற ராஜா, அவளது தெய்வப் பணிக்கு அடிமை எனக் கூறி, அந்தக் குகையின் காவலனாகி விட்டார். அடுத்த பிறப்பில், அதே ஊரில் கோபாலன்- - ஆயி அம்மா தம்பதிக்கு மகளாகப் பிறந்தாள். திருமண ஏற்பாடாயிற்று, அதை வெறுத்து, குளத்தில் குதித்தவளை இரண்டு நாளாகக் காணவில்லை.மூன்றாம் நாள் வெளிப்பட்ட அவள், அனைவருக்கும் மணலை பிரசாதமாகக் கொடுத்தாள். அது பொரியாக மாறியது. அவள் தெய்வசக்தி மிக்கவள் என்பதை அறிந்த பெற்றோர், சிவப்பணிக்கு அனுப்பி விட்டனர். அவளை, அம்மணி அம்மா என, அழைத்தனர், மக்கள்.திருவண்ணாமலையை ஆண்ட, வல்லாள மகாராஜா, வடக்கு கோபுர பணியை அஸ்திவாரத்துடன் விட்டிருந்தார். அதைக் கட்டி முடிக்கும்படி, அம்மணி அம்மாளிடம் கூறினார், சிவன்.அம்மணி அம்மாளும் பலரிடம் நிதி உதவி பெற்று, கோபுரத்தைக் கட்டினார். ஐந்து நிலைகள் கட்டியதும், மற்ற நிலைகளை எழுப்ப, மைசூர் மகாராஜாவிடம் பொருள் பெற சென்றார்.அங்கே அனுமதி மறுக்கப்பட்டது. சித்தரான அவர், தனது சக்தியைப் பயன்படுத்தி மற்றொரு வடிவம் எடுத்து அரண்மனைக்குள் சென்று விட்டார். அவரது சக்தியை அறிந்த மகாராஜா, ஏராளமான பொருளுதவி செய்தார்.அவற்றை ஒட்டகங்களில் ஏற்றி வரும் போது, மல்லவாடி என்ற இடத்தில் திருடர்கள் வழி மறித்து, பறித்தனர். இதனால் பார்வை இழந்து வருந்திய அவர்கள், அம்மணி அம்மாவிடம் மன்னிப்பு கேட்க, மீண்டும் பார்வை பெற்றனர்.அவர்களையும் அழைத்து வந்து கோபுர திருப்பணியில் ஈடுபடுத்தி, 11 நிலைகளின் பணியையும் முடித்தார். இதை, 'அம்மணி அம்மா கோபுரம்' என்கின்றனர்.இவர் முக்தி பெற்றது, ஒரு தைப்பூச நன்னாளில். திருவண்ணாமலை கிரிவலப்பாதையில், ஈசான லிங்கம் எதிரே, இவரது நினைவிடம் உள்ளது. திருடர்களையும் திருத்தி, திருப்பணி செய்ய வைத்த இந்த அம்மையை, தைப்பூச நன்னாளில் வணங்கி வருவோம். தி. செல்லப்பா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !