ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர் (12)
இரண்டாம் உலகப் போர் நடந்த சமயம், நிதி உதவி கேட்டு, பாகவதரிடம் கோரிக்கை வைத்தார், அப்போதைய கவர்னர், சர் ஆர்தர் ஹோப்.அதை ஏற்று, நாடகம் நடத்தி, குவிந்த பணத்தை அரசிடம் ஒப்படைத்தார், பாகதவர். அதற்கு பிரதியுபகாரமாக, ஒரு கிராமத்தை எழுதி தந்தார், கவர்னர். அதை மறுத்து விட்டார், பாகவதர்.'அரசாங்கம், தங்களுக்குச் செய்யும் பிரதியுபகாரமாக இதை தயவு செய்து ஏற்க வேண்டும்...' என்று மீண்டும் வற்புறுத்தினார், கவர்னர்.'பணம், காசுக்கெல்லாம் ஆசைப்பட்டு, நான் இதைச் செய்யவில்லை. என் தேசத்திற்காக, என்னால் முடிந்ததைச் செய்தேன். அவ்வளவு தான். இந்த மன நிறைவே எனக்குப் போதும். நிலம் எதுவும் தேவையில்லை...' என்று, அன்புடன் மறுத்து விட்டார்.வெள்ளைக்காரன் விடுவதாய் இல்லை. இந்த அதிசய மனிதருக்கு நாம் ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்று நினைத்தான்.'தங்களுக்கு, 'திவான் பகதுார்' பட்டம் தர விழைகிறோம். அதையாவது, ஏற்க வேண்டும்...' என்று வேண்டுகோள் வைத்தார், கவர்னர்.இப்போது, 'பாரதரத்னா' எப்படி மிக உயர்ந்த சிவிலியன் விருதோ, அப்படித்தான், வெள்ளையர் ஆட்சியில், 'திவான் பகதுார்' பட்டமும். அதையும் அன்போடு மறுத்து விட்டார், பாகவதர்.தீபாவளி பண்டிகை சமயம், சிவகவி படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. பாகவதருடன், படப்பிடிப்புக் குழுவினர் ஜாலியாகப் பேசிக் கொண்டிருந்தனர்.அப்போது, 'இந்த தீபாவளி ஜாலி எல்லாம் ஏழைகளுக்கு ஏது? பாவம் அவர்கள்...' என்றார், ஒருவர்.இதைக் கேட்டதும், பாகவதரின் முகம் வாடியது. அதன் பிறகும், உரையாடல் தொடர்ந்தது. ஆனால், மறுநாள் நடந்தது தான் ஆச்சரியம்.மறுநாள், பாகவதர் படப்பிடிப்பிற்கு வந்தபோது, அவர் பின்னால் ஒரு பெரிய மூட்டை வந்தது. 20 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமான புதுத் துணிகள், ஸ்டூடியோ ஊழியர்களிடம் வினியோகிக்கப்பட்டது. இன்றைய மதிப்பில், இரண்டு கோடி ரூபாய். கோவில்பட்டியில், ஒரு பள்ளிக்கு நிதியுதவி செய்ய, பாட்டுக் கச்சேரி செய்து பெருந்தொகையை நன்கொடையாகத் தந்தார், பாகவதர். நன்றி மறவாத அந்தப் பள்ளி, பாகவதருக்கு சிலை வைத்து மரியாதை செய்தது.பலுசிஸ்தானில் பெரும் பூகம்பம் நிகழ்ந்து, ஏராளமானோர் பலியாயினர். அதற்கு வருந்திய பாகவதர், நிறைய நாடகங்கள் நடத்தி, பெருந்தொகையை நன்கொடையாக அனுப்பி வைத்தார்.கொடுக்கும் குணம் ரத்தத்தில் இருக்க வேண்டும் என்பது, பெரியோர் வாக்கு. துவக்க காலத்திலேயே இதை பலமுறை நிரூபித்துள்ளார், பாகவதர். உதாரணத்திற்கு ஒன்றே ஒன்று: ஒருமுறை, புதுக்கோட்டையில், பாகவதரை வைத்து, 'வள்ளித் திருமணம்' நாடகம் நடத்துவதற்காக, தடபுடலாக விளம்பரம் செய்தார், ஒரு கான்ட்ராக்டர்.நாடக நாளும் வந்தது. அன்று ஏனோ, நாடகம் ஆரம்பிக்கும் வரை, டிக்கெட் விற்பனை கொஞ்சம் மந்தமாகத்தான் இருந்தது. பயந்து போன கான்ட்ராக்டர், யாரிடமும் சொல்லாமல் கம்பி நீட்டி விட்டார்.நாடகம் ஆரம்பிக்கும் நேரம் வந்தது. எல்லாரிடமும் படபடப்பு. இன்னும் தாமதம் செய்தால், கல்லை வீசி எறிவர் என்ற நிலை. கான்ட்ராக்டர் ஓடிப் போனால் என்ன, நடிக்கப் போவது நாம் தானே என்ற தைரியத்தில், நாடகத்தை ஆரம்பித்து விட்டார், பாகவதர்.சற்று நேரத்தில், பெரும் கூட்டம் சேர்ந்து விட்டது. வசூலும் எதிர்பார்த்ததை விட, அதிகமாக ஆனது. எல்லா செலவுகளும் போக, மீதி உள்ள பணத்தை ஒரு கவரில் போட்டு, 'கான்ட்ராக்டர் எப்போது வந்தாலும் கொடுத்து விடுங்கள்...' என்று, ஊர் பெரியவர்களிடம் சொல்லி, தன் குழுவினருடன் புறப்பட்டு விட்டார், பாகவதர்.ஒருமுறை கன்னியாகுமரியில் பாகவதரின் இலவச கச்சேரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.கட்டுக்கடங்காத கூட்டம். கச்சேரியை ஏற்பாடு செய்திருந்தவர்களுக்கு, ஒரு நப்பாசை. இதுதான் நல்ல தருணம், கச்சேரிக்கு கட்டணம் வசூலித்தால், நல்ல வருமானம் தேறுமே என்று நினைத்தனர்.'இந்த கட்டுக்கடங்காத கூட்டத்தை பார்த்தால், நல்ல வருமானம் கிடைக்கும் போல் தெரிகிறது. கட்டணம் வசூலித்தால் என்ன தவறு? குறைந்தபட்சம், உங்களுக்குத் தரவாவது உதவுமே...' என்று பவ்யமாக, தங்கள் திட்டத்தை, பாகவதரிடம் தெரிவித்தனர்.'அந்தக் கவலை தங்களுக்கு வேண்டாம். நான் இலவசமாகக் கச்சேரி செய்யும் போதெல்லாம், என் குழுவினருக்கான சன்மானத்தை நானே என் கைக்காசிலிருந்து கொடுப்பதுதான் வழக்கம்.'அதுபோல் தான், இப்போதும் செய்வேன். இலவசம் என்று சொல்லிவிட்டு, திடீரென்று கட்டணம் வசூலித்தால், மக்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பர். இந்தத் தவறுக்கு நான் ஒருபோதும் உடன்பட மாட்டேன்...' என்று மறுத்து விட்டார், பாகவதர்.அந்த சத்தியம் தவறாத உத்தம குணம் தான், கஷ்ட காலத்திலும், பாகவதரைக் காப்பாற்றியது. தன் தாயாரின் விருப்பத்திற்கிணங்க, பெரிய மனையாக வாங்கி வீடு கட்ட விரும்பினார், பாகவதர். 'பெரிய மனை வாங்க வேண்டும் என்றால், ஊரை விட்டு கொஞ்சம் தள்ளிப் போனால் தான் கிடைக்கும் போல் இருக்கிறது...' என்று, தன் நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தார்.'எதற்கு தள்ளிப் போக வேண்டும். இங்கேயே கிடைக்குமே...' என்று கூறியுள்ளார், அந்த நண்பர். 'அது எப்படி, இங்கே ஏது அவ்வளவு இடம்...' என்று கேட்டார்.'சுற்றியுள்ள வீடுகளை எல்லாம் வாங்கி விடுவோம். அவர்கள் கேட்கும் பணத்திற்கு அதிகமாகவே தந்து விடுவோம். பிறகு என்ன, எல்லா வீடுகளும் நம் வசம் தான். நம் விருப்பப்படி கட்டிக் கொள்ளலாம்...' என்று கூறியுள்ளார், நண்பர்.அதை கேட்டு, 'ஐயய்யோ, என்ன இப்படிப் பேசுகிறாய்? நம்மிடம் பணம் இருக்கிறது என்பதற்காக, பரம்பரை பரம்பரையாக வாழுகிற இவர்களை வெளியேற்றுவது மிகவும் தவறு. அந்த பாவத்தை நான் ஒருபோதும் செய்ய மாட்டேன்...' என்று, உடனடியாக மறுத்தார், பாகவதர். அவர் சொன்னது போன்றே, சற்று துாரத்தில், தேவையான அளவு இடம் வாங்கி, தன் பங்களாவைக் கட்டினார். — தொடரும்.கானாடுகாத்தானில் கண்ட பிரமாண்ட பங்களாக்களை பற்றி வியந்து சொல்லியுள்ளார், பாகவதரின் தாயார்.'அவ்வளவு தானே அம்மா, நாமும் அதுபோல் ஒன்று கட்டி விடுவோம்...' என்று சொல்லி, சொன்னபடியே, செப்டம்பர் 1, 1943ல், தன் பிரமாண்டமான பங்களாவான, 'ஆனந்த நிலையத்திற்கு' கிரஹப்பிரவேசம் செய்தார், பாகவதர்.அந்த மாளிகையில் பெரிய நீச்சல் குளமும் இருந்ததாக சொல்கின்றனர். அந்த மாளிகையை சுற்றி, தன் பிரியமான குதிரையில் சவாரி செய்வது, பாகவதருக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு. - கார்முகிலோன்