அந்துமணி பா.கே.ப.,
பா - கேஅரசின், சமூக நல துறையில் பணிபுரிந்து, ஓய்வு பெற்றவர் அவர்; எழுத்தாளரும் கூட.சமீபத்தில், அலுவலகம் வந்தவர், வெளிநாட்டுக்கு போக போவதாக தகவல் தெரிவித்தார்.அவரிடம், எந்த நாட்டுக்கு போக போறீங்க, சுற்றிப் பார்க்கவா, தனியாகவா, குடும்பத்துடனா, எத்தனை நாள் பயணம் என்றெல்லாம் விசாரித்து கொண்டிருந்தார், உதவி ஆசிரியை ஒருவர்.அவரது அனைத்து கேள்விகளுக்கும் பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டிருந்தார், அந்த நண்பர்.அப்போது, உள்ளே வந்த, 'திண்ணை' நாராயணன், 'ஏம்பா... நீ போற நாட்டுக்கு, விசா அவசியமா? சமீபத்தில், இலங்கை, ஈரான், தாய்லாந்து மற்றும் மலேஷியா நாடுகளுக்கு செல்ல, விசா தேவையில்லை என்று அறிவித்திருந்தனரே...' என்றார்.'ஓய்... நாணா, பொருளாதாரத்தில் அதல பாதாளத்துக்கு சென்ற அந்த நாடுகள், அதை துாக்கி நிறுத்த வேண்டாமா? நம்மை போன்ற இளிச்சவாயர்களை, சுற்றுலா என்ற பெயரில், வெளிநாட்டினரை வரவழைக்க செய்யும் சூட்சுமம் இது. இதனால், அவர்களது வருவாய் அதிகரிக்கும் என்ற நோக்கத்தில், கொஞ்சம் தாராளம் காட்டியுள்ளனர்.'ஆனால், அவங்க நாட்டிற்குள் காலடி எடுத்து வைத்தால், அவ்வளவு தான். டாக்சி கட்டணம், ஹோட்டல் கட்டணம் என்று எடுத்ததற்கெல்லாம், வரி, அது, இதுன்னு நம் பர்சை காலி செய்து விடுவர்.'அதிலும், இலங்கைக்கு சென்றால், இந்தியர்கள் என்று தெரிந்தால் போதும், மற்றவர்களை விட நமக்கு பல மடங்கு அதிக கட்டணங்களை வசூலித்து விடுவர்.'உதாரணமாக, அங்குள்ள கோவிலுக்கு சென்று, நுழைவு கட்டணம் தவிர்த்து, செருப்பு கழட்டி விட்டு செல்ல, உள்ளூர் ஆசாமிகளுக்கு, 10 ரூபாய் என்றால், நம்மிடம், 100 ரூபாய் வசூலிப்பர்.'விசா தேவையில்லை என்றதும், இலவசமாக சுற்றி பார்த்து விட்டு வரலாம் என்று கனவு காணாதீர்...' என்று, நாராயணன் ஆர்வத்துக்கு முட்டுக்கட்டை போட்டார், லென்ஸ் மாமா.இதை கேட்டுக் கொண்டிருந்த, மூத்த செய்தியாளர் ஒருவர், 'அதெல்லாம் இருக்கட்டும். உலகிலேயே எந்த நாட்டின் பாஸ்போர்ட், அதாவது, கடவுச்சீட்டு அதிக மதிப்புள்ளது தெரியுமா?' என்றார்.பதில் கூறாமல் அவர் முகத்தையே பார்க்க, அவர் தொடர்ந்தார்:உலகில் உள்ள மற்ற நாடுகளுக்கு, பயணம் மேற்கொள்ள, கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) இன்றியமையாதது. பாஸ்போர்ட்டில், நான்கு விதம் உள்ளன. 'ஆர்டினரி' பாஸ்போர்ட் - சாதாரண குடிமக்களுக்கும், துறை சார்ந்த பாஸ்போர்ட் - அரசாங்க ஊழியர்களுக்கும், 'டொமஸ்டிக்' பாஸ்போர்ட் - பிரதமர் மற்றும் முதல்வர் போன்ற உயர்மட்ட தலைவர்களுக்கானது, ஜம்போ பாஸ்போர்ட் - வியாபார நிமித்தமாக அடிக்கடி வெளிநாடு செல்பவர்களுக்கான பாஸ்போர்ட்கள் வழங்கப்படுகின்றன.இதில், எந்த நாட்டின் பாஸ்போர்ட், அதிக மதிப்புள்ளது என்பது குறித்த பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.லண்டனை சேர்ந்த, 'ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ்' என்ற நிறுவனம், வெளியிட்டுள்ள பட்டியலில்:உலகிலேயே மதிப்புமிக்கதாக, சிங்கப்பூர் பாஸ்போர்ட் முதல் இடத்தில் உள்ளது. சிங்கப்பூர் பாஸ்போர்ட் வைத்திருப்போர், விசா இல்லாமல், 192 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளலாம். ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் நாட்டின் பாஸ்போர்ட், இரண்டாம் இடம் பெற்றுள்ளது. இந்நாட்டின் பாஸ்போர்ட்கள் மூலம், விசா இல்லாமல், 190 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளலாம்.அதைத் தொடர்ந்து, ஆஸ்திரியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜப்பான், லக்ஸம்பர்க், தென் கொரியா மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளின் பாஸ்போர்ட், மூன்றாம் இடம் பிடித்துள்ளன. இதன் மூலம், 189 நாடுகளுக்கு, விசா இல்லாமல் பயணிக்கலாம்.நான்காவது இடத்தில், டென்மார்க், அயர்லாந்து, நெதர்லாந்து மற்றும் லண்டன் பாஸ்போர்ட் உள்ளது. இதன் மூலம் விசா இல்லாமல், 188 நாடுகளுக்கு பயணிக்கலாம்.ஐந்தாம் இடத்தில், பெல்ஜியம், செக் குடியரசு, மால்டா, நியூசிலாந்து, நார்வே, போர்ச்சுகல், ஆஸ்திரேலியா, ஹங்கேரி, போலந்து மற்றும் கனடா ஆகிய நாடுகளின் பாஸ்போர்ட் உள்ளது. இதன் மூலம், 186 நாடுகளுக்கு, விசா இல்லாமல் பயணிக்கலாம்.இந்தியாவின் பாஸ்போர்ட், 80வது இடத்தை பிடித்துள்ளது. இதன் மூலம், 57 நாடுகளுக்கு, விசா இன்றி பயணிக்கலாம். பாகிஸ்தான் பாஸ்போர்ட், 100வது இடத்தில் உள்ளது.இந்த பட்டியலில், ஆப்கானிஸ்தான் கடைசி இடம் பிடித்துள்ளது. இந்த நாட்டின் பாஸ்போர்ட் மூலம், 27 நாடுகளுக்கு மட்டுமே, விசா இன்றி பயணிக்கலாம்.- என்று கூறி முடித்தார், மூத்த செய்தியாளர்.'இதுவரை கேள்விப்படாத தகவலா இருக்கே...' என்றார், நாராயணன்.இவங்க கூட்டத்தில் வந்து மாட்டிக் கொண்டோமே என்று நினைத்தாரோ என்னவோ, ஆசிரியரிடம் விடைபெற்று, சிட்டாக பறந்து விட்டார், அந்த எழுத்தாள நண்பர்.பநம் நாட்டில் எதற்கு லீவு விடலாம் என, அரசும் காத்திருக்கும், மக்களும், அதை முழுமையாக அனுபவிக்க ரெடியாக இருப்பர்.கடந்த, 1953ல் ரஷ்ய நாட்டில், மாபெரும் தலைவராக இருந்த ஸ்டாலின் இறந்தபோது, அப்போது, இந்தியாவில் பிரதமராக இருந்தார், ஜவஹர்லால் நேரு.ஸ்டாலினை வெகுவாக புகழ்ந்து, அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், பார்லிமென்டின் இரு அவைகளிலும் அலுவல்களை நிறுத்தி வைத்து, எல்லா அரசாங்க அலுவல்களுக்கும் விடுமுறை என்று அறிவித்தார்.பிறகு தான், ஸ்டாலின் இயற்கை எய்திய சோவியத் ரஷ்யாவில், அந்த மாதிரியான எந்த விடுமுறையும் கிடையாது என்பதை அறிவித்தனர்.அமெரிக்க ஜனாதிபதி ஜான் எப்.கென்னடி, சுட்டுக் கொல்லப்பட்ட போது, இந்தியாவில் விடுமுறை என்று அறிவித்தனர். ஆனால், அமெரிக்காவில், கென்னடி இறுதி ஊர்வலத்தின் போது, இரண்டு மணி நேரம் தான் பணியை நிறுத்தினர் என்பதை நினைக்கும் போது, அமெரிக்கர்களை விட, இந்தியர்களுக்கு தான் கென்னடியின் மீது, பாசம் பொங்கி வழிந்தது, தெரிய வந்தது.இந்தியாவின் பிரதமராக வி.பி.சிங் இருந்தபோது, ஆக., 15, 1989, சுதந்திர தினத்தன்று, செங்கோட்டையில் கொடி ஏற்றி விட்டு, இஸ்லாம் மதத்தை தோற்றுவித்த நபிகள் நாயகம் பிறந்த நாளன்று, அரசாங்க விடுமுறை என்று, மிகப்பெருமையுடன் அறிவித்தார்.அதில் ஆச்சரியம் என்னவென்றால், அம்மாதிரியான விடுமுறை, இஸ்லாமிய நாடான, எகிப்து, இந்தோனேஷியா உட்பட பல நாடுகளில் கிடையாது. பாகிஸ்தானிலும் விடுமுறை கிடையாது.- நர்மதா பதிப்பக வெளியீடான, முன்னாள் தலைமை போலீஸ் அதிகாரி, வி.சுந்தரவரதன் எழுதிய, 'காவல்துறை சொன்ன உண்மைக் கதைகள்' நுாலிலிருந்து படித்தது.