உள்ளூர் செய்திகள்

திண்ணை!

பூரம் பப்ளிகேஷன்ஸ் வெளியீடு, ஏ.கோபண்ணா எழுதிய, 'இந்திய விடுதலை போர்' நுாலிலிருந்து:கடந்த, 1940ல், வார்தாவில் கூடிய காங்கிரஸ் காரிய கமிட்டி, காந்திஜியின் தனி நபர் சத்தியாகிரக திட்டத்திற்கு ஒப்புதல் தந்தது. தனி நபர் சத்தியாகிரகம் நடந்தபோது, யுத்த எதிர்ப்பு பிரசாரம் செய்யப்பட்டது.அப்போது, 20 ஆயிரம் பிரதிநிதிகள் கைதாயினர். இரண்டாண்டு சிறை தண்டனைக்கு பின் விடுதலை செய்யப்பட்டனர். அதே சமயம், காங்கிரசுக்கு பெரிய தொய்வு ஏற்பட்டது. ஜனவரி, 1942ல், மீண்டும் வார்தாவில் கூடிய காங்கிரஸ் செயற்குழு, 'காந்திஜியே, தொடர்ந்து போராட்டத்தை தலைமை தாங்கி நடத்த வேண்டும்...' என, தீர்மானம் இயற்றியது.இந்த சமயத்தில் ஆங்கிலேய கவர்னர் கிரிப்ஸ், ஒரு திட்டத்தை அறிவித்தார். இதை, காந்திஜியும், மற்ற காங்கிரஸ் தலைவர்களும் நிராகரித்தனர்.'கிரிப்ஸ் திட்டம், பின் தேதி இடப்பட்ட செக்...' என்று வர்ணித்தார், காந்திஜி.'கிரிப்ஸ் திட்டம் நியாயமானது...' என்றார், ராஜாஜி.இது, காங்கிரஸ் தலைவர்களிடையே, பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.தன் முடிவை மாற்றிக் கொள்ளவில்லை, ராஜாஜி.மே 2, 1942ல், அலகாபாத்தில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில், 'பாகிஸ்தான் பிரிவினையை ஏற்று, முஸ்லிம்களுடன், காங்கிரஸ் சமரசம் செய்து கொள்ள வேண்டும்...' என, தீர்மானம் கொண்டு வந்தார், ராஜாஜி.இதை ஏற்க மறுத்து விட்டார், நேரு.'அமிர்தத்திற்காக கடலை கடைவதற்கு, நாம் இங்கு கூடவில்லை. கடலை கடைந்தால் அமிர்தம் வருமா அல்லது விஷம் வருமா என்று, நமக்கு நிச்சயமாக தெரியாது. ராஜாஜி கூறும் புராண உதாரணங்கள் கவைக்கு உதவாது...' என்று காட்டமாக கூறினார், ராஜேந்திர பிரசாத்.'ராஜாஜியின் திட்டம், இயற்கைக்கு முற்றிலும் மாறுபட்டது என்பது என் அபிப்ராயம்...' என்றார், காந்திஜி.இதனால், கடுப்பான ராஜாஜி, சென்னை திரும்பும்போது அளித்த ஒரு பேட்டியில், 'என் வழிக்கு காங்கிரஸ் திரும்பாவிடில், சென்னை மாகாணம் இந்தியாவிலிருந்து பிரிந்து விடும்...' என்றார்.இதைக் கேட்டு திகைத்த தமிழ்நாடு காங்கிரஸ் காரிய கமிட்டி, ராஜாஜி, காங்கிரஸ் கட்சிக்கு விரோதமாக செயல்படுவதாக கூறி, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முன் வந்தது.இதுபற்றி அறிந்த காந்திஜி, 'என் வாரிசு ராஜாஜியல்ல, நேரு தான்...' என்று அறிவித்து விட்டார்.இதையடுத்து, 'ஜப்பானை எதிர்ப்பது போல் காங்கிரசையும் எதிர்ப்பேன்...' என, பிரசாரம் செய்தார், ராஜாஜி.இதற்கு தமிழ்நாட்டில், ஈ.வெ.ரா., மற்றும் கம்யூனிஸ்ட்களின் ஆதரவும் கிடைத்தது. இதனால், ராஜாஜி பேசிய கூட்டங்களில் கண்டன குரல் எழுப்பி, ரகளை செய்தனர், காங்கிரசார்.ராஜாஜியின் செயல், காங்கிரசில் சிக்கலை உண்டாக்கியது. இதை உடைக்கவே கொண்டு வரப்பட்டது தான், இந்தியாவை விட்டு வெளியேறு, 'க்யூட் இந்தியா' திட்டம்.ஒரு கட்டத்தில், காங்கிரசிலிருந்து விலகினார், ராஜாஜி. சிறிது காலத்துக்கு பின், டில்லி சென்று பல தலைவர்களை பார்த்து, காங்கிரசில் மீண்டும் சேர்ந்தது, தனிக் கதை!     மார்ச் 18, 1922ல், நீதிமன்றத்தில், ஒரு விசாரணை ஆரம்பமானது.குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர், தம் குற்றத்தை ஒப்புக்கொண்டு, வாக்குமூலம் கொடுத்தார்.'நீதிபதி அவர்களே, நீங்க செய்யக் கூடிய ஒரே காரியம் என்னன்னா, பதவியை விட்டு விலகணும். இல்லேன்னா, எனக்கு கடுமையான தண்டனை விதிக்கணும்...' என்று சொல்லி, திரும்பி வந்து உட்கார்ந்தார். அவர், யார் தெரியுமா?காந்திஜி.ஒத்துழையாமை இயக்கம் நடந்த போது, 'யங் இந்தியா' பத்திரிகையில் வெளியான மூன்று கட்டுரைகளுக்காக, 'அரசு எதிர்ப்பு குற்றம்'ன்னு சொல்லி, காந்திஜியையும், சங்கர்லால் பாங்கரையும் கைது செய்தனர்.அப்போது நடந்த விசாரணையின் போதுதான், மேற்கூறியவாறு பேசினார், காந்திஜி.     - நடுத்தெரு நாராயணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !