அந்துமணி பா.கே.ப.,
பா - கேதை மாதம் பிறந்ததிலிருந்தே, ஏகப்பட்ட திருமண அழைப்பிதழ்கள் வந்த வண்ணம் இருந்தன. எந்த கல்யாணத்துக்கு போவது, எதை விடுவது என்று புரியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தேன்.என் தவிப்பைப் பார்த்து உதவிக்கு வந்தார், லென்ஸ் மாமா.'மணி... அழைப்பிதழ்களை இப்படி கொடு. நான் ஒரு, 'ஷெட்யூல்' போட்டு தருகிறேன். அதன்படி போய் வரலாம். முகூர்த்த நேரத்தில், தாலி கட்டியதும், அட்சதையை துாவிட்டு, அடுத்த திருமண நிகழ்வுக்கு சென்று வரலாம்...' என்றார், மாமா.திருமண நிகழ்வுக்கு, தான் கண்டிப்பாக உடன் வருவதை சொல்லாமல் சொல்லி விட்டார், மாமா.'தாலி என்றதும் ஒரு விஷயம் நினைவுக்கு வருது, மணி... திருமணத்தின் போது, தாலி கட்டும் வழக்கம் இடையில் வந்தது தான் என்றும், பழைய திரைப்படத்தில் கூட, 'தாலி சென்டிமென்ட்'க்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பர் என்றும், சில ஆண்டுகளுக்கு முன் ஒரு கட்டுரை, இதே பகுதியில் எழுதியிருந்தாயே...'பெண்கள் தாலி அணிவதற்கு இன்னொரு அறிவியல் காரணமும் உள்ளது என்று, சமீபத்தில் படித்தேன். அது என்னென்னா...' என்று சொல்ல ஆரம்பித்தார், திண்ணை நாராயணன்:பெண்ணுக்கு மார்பு பகுதியில் ஒரு நரம்பு முடிச்சு இருக்கிறது. இந்த நரம்பு முடிச்சு, மூளையிலுள்ள, பேசன் ரீஜன் என்ற பகுதியோடு தொடர்பு ஏற்படுத்தும் வேலை செய்யும். இது பெண்ணுக்கு, இரண்டு நரம்புகள் கொண்ட பாதையாகவும், ஆணுக்கு ஒரு நரம்பு கொண்ட பாதையாகவும் இருக்கிறது. இதனால், ஆணை விட, பெண்ணுக்கு அதிக ஞாபக சக்தி உண்டாகிறது.இந்த அதிக ஞாபக சக்தி, பெண்ணுக்கு சில குழப்பங்களையும் கொடுக்கிறது. பெண் ஒரு விஷயத்தில் முடிவு எடுத்துவிட்ட பின், 'இப்படி செய்திருக்கலாமோ...' என்று, குழப்பம் அடைவதற்கு இதுதான் காரணம். இதை கண்டறிந்த நம் பழங்கால ஞானி ஒருவர், ராஜராஜ சோழனிடம் சொல்ல, அதற்கு மருந்து கண்டுபிடிக்க சொன்னார்.ஒவ்வொரு உலோகத்திற்கும், ஒரு மருத்துவ குணம் உண்டு. அதன்படி, தங்கத்திற்கு இருக்கும் மருத்துவ குணத்தை கண்டறிந்தனர். அந்தத் தங்கம் பெண்ணுடைய மார்பு குழியில் எப்போதும் உரசும்படி செய்தால், பெண்ணுக்கு, நன்மை தரும் என்று சொல்ல, இந்த தாலி முறை கொண்டு வரப்பட்டது, என்கின்றனர்.அது சரியாக, மார்பு குழி இடத்தில் வரவேண்டும். மூன்று முடிச்சு போடும் போது, தங்க ஆபரணம் மார்பு குழியில் வரும் என, ஒரு கணக்கு போட்டனர். அதிலிருந்து தான், தாலி முறை இப்போது வரைக்கும் வழக்கத்தில் உள்ளது. 'ஓஹோ... தாலி அணிவதில் இவ்ளோ விஷயம் இருக்கிறதா? சரி... மணி உனக்காக எந்தெந்த கல்யாணத்துக்கு போவது என்று ஒரு அட்டவணை போட்டுள்ளேன், பார்...' என்று, ஒரு பட்டியலை என்னிடம் கொடுத்தார்.அதில் பெரும்பாலான திருமணங்களில், நிச்சயம் அசைவ உணவு பரிமாறுவர் என்று தெரிந்தது. மாமாவின் நோக்கம் புரிய, அந்த பேப்பரை ஒதுக்கி வைத்தேன்.வந்திருந்த அழைப்பிதழ்களில் எதெதற்கு நேரில் செல்வது, எதற்கு வாழ்த்து மடல் அனுப்புவது என்று, தனியாக பிரித்து வைக்க ஆரம்பித்தேன், நான்.பவாழ்க்கையை மகிழ்ச்சியாக, நிம்மதியாக வாழ வேண்டுமா... * செலவுகளுக்கு யோசிக்காதீர்கள்; மண்டையை பிய்த்துக் கொள்ளாதீர்கள். உங்கள் தேவைகளுக்கு, நீங்கள் செலவழிக்கா விட்டால், யார் செலவழிப்பர். ஆகவே, தேவையானவைகளுக்கு பணத்தை செலவு செய்யுங்கள். * ரசிக்க வேண்டியதை ரசியுங்கள். அனுபவிக்க வேண்டியதை அனுபவியுங்கள். மொத்தத்தில், சந்தோஷமாக இருக்க வேண்டிய நேரத்தில், சந்தோஷமாக இருங்கள். * முடிந்த அளவு தான, தர்மங்கள் செய்யுங்கள். * உங்கள் குழந்தைகள் மற்றும் பேரக் குழந்தைகளிடம், நீங்கள் இறந்த பிறகு, உங்கள் சொத்து, அவர்களுக்கு கிடைக்கும் என்ற நினைப்பை உண்டாக்கி விடாதீர்கள். * நீங்கள் இறந்த பிறகு, உங்களுடைய பணம் என்ன ஆகும் என்றோ, உங்களை யார் பாராட்டுவர் அல்லது திட்டி தீர்ப்பர் என்றோ, உங்களுக்கு கவலை வேண்டாம். அதைக் கேட்பதற்கும் அல்லது அதைப் பார்ப்பதற்கும், நீங்கள் இருக்கப் போவதில்லை.* நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம், சொத்து எல்லாம், ஒருநாள் உங்களை விட்டு போகப் போகிறது. அதை தடுப்பதற்கும் அல்லது காப்பாற்றுவதற்கும், நீங்கள் இருக்கப் போவதில்லை. அதை மனதில் வையுங்கள். * உங்கள் குழந்தைகளுக்காக அதிகம் கவலைப்படாதீர்கள். அவர்களின் வாழ்க்கை, அவர்களுடைய தலைவிதி படித்தான் நடக்கும். அதில், உங்கள் பங்காற்றலுக்கு எந்த வாய்ப்பும் இல்லை. * என்ன தான் நீங்கள் மாங்கு மாங்கு என்று உழைத்தாலும், தினசரி வாழ்க்கை ஒரே மாதிரி சீராக இருக்காது. தொட்டிலில், படுத்து இருந்த காலத்திலிருந்து, சுடுகாட்டில், படுக்க வைக்கப்படும் காலம் வரை, ஒரே மாதிரி இருந்தால், அதில், சுவாரஸ்யம் இருக்குமா? ஒருநாள் மகிழ்வோடு இருப்பீர்கள்; ஒருநாள் மகிழ்ச்சியின்றி இருப்பீர்கள்; எல்லா நாட்களையும் ஒரே மனப் போக்கில் ஏற்றுக் கொள்ளுங்கள். * எப்போதும் உற்சாகமாக இருந்தால், உங்களுக்கு ஏற்படும் நோய் நொடிகள் தானாகவே சரியாகும். உற்சாகம் தொடரும். மகிழ்ச்சியுடன் இருப்பவரை நோய் அண்டாது. * உங்கள் உறவினர்களையும், நண்பர்களையும் போற்றி வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் இல்லையேல், உங்கள் வாழ்க்கை தனிமைப்பட்டு போய்விடும். * எதிர்பார்ப்பிற்கும், நடப்பிற்கும் உள்ள இடைவெளி தான், மன அழுத்தத்தை உண்டு பண்ணும். அந்த இடைவெளி அதிகமாக அதிகமாக, மன அழுத்தமும் அதிகமாகும். ஆகவே, எதையும் எதிர்பார்க்காதீர்கள். எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளுங்கள். * அடிக்கு அடி, சரிக்கு சரி என்ற போட்டி மனப்பான்மையை உதறித் தள்ளுங்கள். ஒரு நாய் நம்மை கடித்தால், அதை நாம் திரும்ப கடிக்க முடியாது. ஆகவே, உங்கள் தராதரத்தை, மேன்மையை விட்டுக் கொடுக்காதீர்கள். அடுத்தவர்களுக்கு, உதாரணமாக இருங்கள்.சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், எதையும் ஒருமுறைக்கு, இருமுறை யோசித்து செய்யுங்கள். புத்திசாலித்தனத்துடன் நடந்து கொள்ளுங்கள். நடப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். வாழ்க்கை சுவையாக இருக்கும். - எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.