பிரம்ம ஞானம்!
ரொம்ப கோபமாக இருந்த ஒருவர், 'நான் யாருங்கிறதை இந்த உலகத்துக்கு புரிய வைக்கப் போறேன்...' என்றார்.ஏராளமான நிலம், வீடு, வாசல் என, அவருக்கு எல்லா வசதியும் இருந்தும், அவர் யாருங்கறதை மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பது, அவரது ஆசை. 'ஏங்க, இப்படி கோவமா இருக்கீங்க... இப்ப என்ன ஆச்சு?' என, அவரிடம் கேட்டனர்.'என் தோட்டத்துல, அடுத்த தோட்டத்துக்காரன் ஒரு அரை அடி வரப்பைத் தள்ளி போட்டுட்டாங்க. என்ன தைரியம் அவனுக்கு...' என்று, பொரிந்து தள்ளினார். 'நியாயமா அளந்து, சரி பண்ணிக்கிட்டாப் போச்சு... அதை ஏன், பெரிதுபடுத்தறீங்க, விட்டுத் தள்ளுங்க...' என்று, யோசனை கூறினர்.'அது எப்படிங்க விட்டுட முடியும். நான் யாருங்கறது அவனுக்கு புரிய வேணாமா?' என, துள்ளிக் குதித்தார். 'சரி, அதற்கு என்ன செய்ய போறீங்க?' என்றனர். 'ஹைகோர்ட், சுப்ரீம் கோர்ட் இல்ல... கடைசி வரைக்கும் பார்த்துடறேன். என் சொத்துப் முழுவதையும் வித்தாலும் சரி, கவலை இல்லை...' என்றார்.சொத்து எல்லாத்தையும், காலி பண்ணினார். கடைசியில், நடுத்தெருவில் நின்றார். நான் யாருன்னு புரிய வைக்கறேன் என்றவர், புரிய வைத்து விட்டார். அவர், ஒரு வரட்டுப் பிடிவாதக்காரர் என்பதை புரிந்து கொண்டனர், மற்றவர்கள். இந்த நிலைமைக்கு காரணம், 'நான்' எனும் அகந்தை தான்! தன்னைப் பற்றியே உயர்வாக நினைக்கும் குணம், நிறைய பேரிடம் உள்ளது. அதனால், வரும் கஷ்டங்களை அனுபவித்து பார்த்தால் தான் தெரியும். உண்மையான புகழ் இருப்பவர்களுக்கு அடைமொழி தேவையில்லை.அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் போன்றோரின் பெயரை சொன்னாலே பெருமை தான்; அவங்களை, 'உயர் திருவாளர் அப்பர் அவர்கள்' என, யாரும் சொல்வதில்லை. பி. என். பி.,அறிவோம் ஆன்மிகம்!கோவிலில், விபூதி பிரசாதம் வாங்கும்போது, ஒற்றைக் கையை நீட்டி வாங்கக்கூடாது. வலது கையில் கீழ், இடது கையைச் சேர்த்து விபூதியை வாங்க வேண்டும். விபூதியை இடது கையில் தட்டி, அதிலிருந்து எடுத்து பூசக்கூடாது. ஒரு தாளில் கொட்டி, அதிலிருந்து எடுத்து பூசலாம்.