ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர் (18)
அதுவரை சிறு சிறு வேடங்களில் மட்டுமே நடித்து வந்த, எம்.ஜி.ஆர்., பாகவதரின் சிபாரிசால், அசோக்குமார் படத்தில், அவருடன் முக்கிய வேடத்தில் நடித்தார்.கதைப்படி, மன்னரின் கட்டளையை ஏற்று, சேனாதிபதியான எம்.ஜி.ஆர்., பாகவதர் கண்களை குருடாக்க வேண்டும். பாகவதருக்கும், எம்.ஜி.ஆருக்கும், உணர்ச்சிகரமான உரையாடல் இடம்பெற்றிருக்கும். முடிவில், பாகவதரின் கண்களை குருடாக்க வேண்டும், எம்.ஜி.ஆர்.,அற்புதமாக வசனம் பேசிய, எம்.ஜி.ஆர்., கம்பியை கையில் வைத்துக் கொண்டு, கண்கள் கலங்க நிற்பார். இயக்குனர் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும், குத்தவில்லை.'நடிப்பு தானே ராமச்சந்திரா, ஏன் தயங்குகிறாய்...' என்று, பாகவதர் பலமுறை சொல்லியும், 'நடிப்பு தான் என்றாலும் கூட, நான் பெரிதும் மதிக்கும் உங்கள் கண்களை குருடாக்கும் காட்சியில் என்னால் நடிக்க இயலவில்லை...' என்று சொல்லி, விசும்ப ஆரம்பித்து விட்டார், எம்.ஜி.ஆர்., பாகவதரிடம் அளப்பரிய அன்பும், மதிப்பும் கொண்டிருந்தவர், எம்.ஜி.ஆர்.,பிறகு, காட்சியில் சிறு மாற்றம் செய்து, அந்த கம்பியை பாகவதரே வாங்கி, தன் கண்களை தானே குத்திக் கொள்வது போல் படமாக்கப்பட்டது.சிவகவி படம், 1943ல் வெளிவந்தது. இதுவும் வெற்றி மேல் வெற்றி தான். ஏராளமான பாடல்கள்.ஆரம்பத்தில் இப்படத்தை இயக்கியவர், ராஜா சாண்டோ தான். தயாரிப்பாளர், ஸ்ரீராமுலு நாயுடுவோடு ஏற்பட்ட மனஸ்தாபத்தால், பாதியில் விலகி விட்டார். பிறகு, நாயுடுவே படத்தை இயக்கினார்.படப்பிடிப்பில் நீண்டகாலம் எடுத்துக் கொண்ட, சிவகவி படத்தில் இடம்பெற்ற, 'சொப்பன வாழ்வில் மகிழ்ந்து...' என்ற பாடல், 1943ல், தலை சிறந்த பாடலாக தேர்வு செய்யப்பட்டது.இப்படத்தில், பாகதவருக்கு ஜோடியாக நடித்தவர், எஸ்.ஜெயலட்சுமி. இவர், வீணை எஸ்.பாலசந்தரின் மூத்த சகோதரி.முதன்முதலாக, பாகவதர் படத்தில், வில்லி வேஷத்தில் டி.ஆர்.ராஜகுமாரி நடித்தது, இப்படத்தில் தான்.இப்படத்தில், வீணை பாலசந்தரின் சகோதரர், எஸ்.ராஜம் நடித்திருந்தார். இவர், அற்புதமான ஓவியர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படம், பல ஊர்களில் ஒரு ஆண்டிற்கு மேல் ஓடியது.ஹரிதாஸ் படம், 1944ல் வெளிவந்தது. இதற்கு முன் வசூலான அத்தனை படங்களையும் துாக்கி சாப்பிடும் அளவுக்கு, எல்லாரும் திக்குமுக்காடி போகும் அளவுக்கு, மிக பிரம்மாண்டமான வெற்றிப் படமாக அமைந்தது.சினிமா உலகில், மூன்று தீபாவளிகளை கொண்டாடிய ஒரே படம், ஹரிதாஸ் மட்டும் தான் என்பது அதிசயமான உண்மை. எந்த ஒரு படமும் இத்தகைய சாதனையை இதுவரை செய்யவில்லை. அக்., 16, 1944 முதல் நவ., 22, 1946 வரை, 110 வாரங்கள், சென்னை, பிராட்வே தியேட்டரில், மூன்று தீபாவளிகளை கொண்டாடியது.முதல் காட்சியில், ஒரு பெண்ணை, குதிரை மீது அமர்ந்தபடி துரத்திச் செல்வார், பாகவதர். அந்த காட்சியில் நடித்த பெண் தான், பிற்காலத்தில் கதாநாயகியாக உயர்ந்த, பண்டரிபாய்.அந்த குதிரையை பற்றியும் இங்கே சொல்ல வேண்டும். இப்படத்தில் இடம்பெற்ற அந்த குதிரை, பாகவதருக்கு பரிசாக கிடைத்தது என்று சொல்வர்.சிவகவி படம் வெளிவந்தபோது, பாகவதரின் பணக்கார நண்பர் ஒருவர், தன் அன்பு பரிசாக இந்த வெள்ளை குதிரையை பரிசளித்துள்ளார். அது, பாகவதரோடு, ஹரிதாஸ் படத்திலும், கம்பீரமாக நடித்து விட்டது.இந்த செல்ல குதிரையை பராமரிப்பதற்காக, தன் பங்களாவில், குதிரை லாயம் கட்டி, அதற்காக சில பணியாளர்களையும் நியமித்தார், பாகவதர்.படத்தில், டி.ஆர்.ராஜகுமாரியின் தோழிகளில் ஒருவராய் நடித்த டி.ஏ.ஜெயலட்சுமி, பின்னர், நாம் இருவர் படத்தின் கதாநாயகி ஆனார்.யாருமே நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு, புகழின் உச்சிக்கு சென்றார், பாகவதர்.ஹரிதாஸ் படத்தில் இடம் பெற்ற, 'கிருஷ்ணா முகுந்தா முராரே...' என்ற பாடல் பட்டி தொட்டிகளிலெல்லாம் ஒலிக்கத் துவங்கியது. கேட்ட அனைவரையும் கட்டிப் போட்டு விட்டது. அந்த படத்தில் உள்ள பாடல்கள் அனைத்துமே தேன் மழை தான் என்றாலும், இப்பாட்டு, படத்திற்கு ஒரு மணி மகுடம் போல் அமைந்து விட்டது.எந்த பாடலாக இருந்தாலும், பாடலை, 'ரிகார்டு' செய்வதற்கு முன், குறைந்தது, 15 - 20 நாட்கள் அதை பாடிப்பாடி மெருகேற்றுவாராம், பாகவதர். அந்த உழைப்பும், அர்ப்பணிப்பு உணர்வும் தான், அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.இன்னொரு முக்கியமான செய்தி. அதுவரை, நல்லவனாகவே வேஷம் கட்டிக் கொண்டிருந்த, பாகவதர், மிகவும் துணிச்சலுடன் இப்படத்தில் எதிர்மறை வேஷத்தில், பெண் பித்தராக நடித்தார். 'பாகவதருக்கென்று ஒரு, 'இமேஜ்' இருக்கிறது. ஏன் இப்படி அவர், 'ரிஸ்க்' எடுத்து நடிக்கிறார்...' என, தன் நண்பர்களிடம் கூறி ஆதங்கப்பட்டுள்ளார், கல்கி. — தொடரும் ராஜா சாண்டோவுக்கு, 'செட்டில்மென்ட்' செய்தபோது, 'தங்களுடைய அன்பு பரிசாக, டைரக் ஷன் ராஜா சாண்டோ என, போட்டுக் கொள்ளலாமா...' என்று கேட்டார், நாயுடு.உடனடியாக மறுத்து விட்டாராம், ராஜா சாண்டோ.பாகதவருக்கு நல்ல நண்பராக இருந்தார், ராஜா சாண்டோ. யாரும் எதிர்பாராத வகையில், திடீரென்று மாரடைப்பால், நவம்பர் 24, 1943ல், இயற்கை எய்தினார்.மிகவும் வருத்தப்பட்டார், பாகவதர்.ராஜா சாண்டோவின் இறுதி கிரியைகள் முடியும் வரை, மயானத்திலேயே இருந்து, தன் நண்பருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார், பாகவதர். - கார்முகிலோன்