உள்ளூர் செய்திகள்

பூமிதித் திருவிழா!

பார்வதி, தன் வீட்டின் கதவை திறக்கும் முன், ''என்ன மயினி, பட்டணத்துக்குப் போயிட்டு நீ மட்டும் தான் வந்துருக்க. எங்க உன் மவனை காணோம், எல்லாம் திருவிழாவுக்கு வருவாகளா, இல்ல இந்த வருஷமும் புஸ்வாணம் தானா,'' என, விசாரித்தான், பக்கத்து வீட்டு முத்துக்காளை. ''எல்லாம் வருவாங்கய்யா... கோவில்ல பூச்சாட்டினதும் பொங்கலுக்கு குடும்பத்தோட வாரேன்னு தான் சொல்லியிருக்கான், என் மவன். இந்த முறை நான், ஆத்தாளுக்கு பூ மிதிக்கிறதா வேண்டியிருக்கேன். அதனால, கண்டிப்பா வருவான்,'' என்று பதிலளித்தாள், பார்வதி. ''என்னவோ போ மயினி, வெளியூர் போன பயலுகளெல்லாம் நம் ஊர் பூஜையில கலந்துக்கிட்டா தான், நம்ம அய்யனாரு சக்தியும், முத்தாலம்மன் அருளைப் பற்றியும் தெரியும்,'' என, புலம்பியபடியே நகர்ந்தான், முத்துக்காளை. 'முத்து சொல்றது நிஜம் தான். என் பெற்றோரும், அவர்கள் பெற்றோரும், தங்களுக்கு நேர்ந்த உணர்வுகளையும், அனுபவங்களையும், நம்பிக்கைகளையும் எங்களிடம் கடத்தினர். அதுபோல, நாங்கள், எங்களின் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்லவில்லை போலும். அது தான் இந்தக் கால பிள்ளைங்க, எல்லாவற்றையுமே மூட நம்பிக்கைகள் என, புறந்தள்ளுகின்றனரோ...' மனம் கேட்ட கேள்விகளுக்கு, பதிலளிக்க முடியாமல் திகைத்தாள், பார்வதி. 'என்ன துாக்கம், எந்திரி பச்சை குதிரை வந்துகிட்டு இருக்குது பாரு. இனி, அய்யனார் சாமி வந்துடுவாரு...' என, தன் அப்பா, அனைவரையும், நடுநிசியில் எழுப்பி, தெரு முக்கில் இருக்கும் திடலுக்கு கூட்டி வரும் காட்சி, பார்வதியின் மனக்கண்ணில் விரிந்தது. கடைக்குட்டியான பார்வதியை இடுப்பில் துாக்கி, அவளுக்கு மூத்தவளை கையில் பிடித்துக் கொண்டு கிளம்புவார், அப்பா. அவள் அண்ணன்மார் இருவரையும் கைகளில் பிடித்தபடி அப்பாவின் பின்னே வருவாள், அம்மா. தெருவில் உள்ளோர் அனைவரும், பிள்ளைகளை கூட்டிக் கொண்டு திடலில் தான் நிற்பர்.மேளதாளத்துடன், மல்லிகையும், மருவும் மணக்க, சூளையில் வைத்து சுடாத பச்சை களிமண்ணால் செய்யப்பட்ட குதிரைகளின் மேல், அய்யனார் சாமியும், முத்தாலம்மனும் ஜெக ஜோதியாக ஒளி வெள்ளத்தில் ஜொலிப்பர்.கிராமத்து மக்களுக்கு விவசாயம் ஒன்று தான் தொழில். ஆடியில் விதைத்து முளைத்த பயிர், நல்ல விளைச்சலை கொடுக்க, மழை வேண்டி, புரட்டாசியில் சாமி கும்பிடுவர். ஒலிபெருக்கியில், பாடல்களுக்கு இடையே, 'அய்யனார் சாமி, கோவிலை விட்டு புறப்பட்டு விட்டார்...' என்று, செய்தி கூறுவர். அங்கு, ஒரே பரபரப்பாகி விடும்.பிள்ளைகள், பெரியவர்களின் கைகளை இறுகப் பிடித்து, பயத்துடன், அய்யனார் சாமியை வரவேற்க காத்திருப்பர். 'வெள்ளை குதிரையின் மேல் அய்யனாரே... வேகமாய் வந்தருளும் அய்யனாரே...' பாடல் ஒலிபெருக்கியில் வழிந்தோடும்.'ஆடு துளுத்திடுச்சா...' என்று கேட்டதும், 'ம்ம்... ஆடு வெட்டி, பச்ச ரத்தம் அய்யனாருக்கு கொடுத்தாச்சு...' என்று பெரியவர்கள் பேசும் பேச்சும், பிள்ளைகளை மிரள வைக்கும். 'வாரார் அய்யா வாராரு... அய்யனாரு குலசாமி குலங்காக்க வாராரு...' என்ற பாடல்கள் தொடர்ந்து ஒலிக்கும். கையில் தீப்பந்தங்களுடன் இருவர், 'விலகு விலகு...' என்று கூறியபடி, முன்னால் ஓடி வர, கையில் வீச்சருவாளுடன், காலில் சலங்கை, இடுப்பில் தார்ப்பாய்ச்சு வேட்டியும், மார்பில் குறுக்கு மறுக்காக மாலைகள் போட்டு, தலையில் முண்டாசு கட்டி, 'ஜல் ஜல்' என, ஓடி வருவார், அய்யனாரின் அருள் இறங்கிய சாமியாடி. 'அய்யா கருப்பசாமி, எங்க குலசாமி எங்களை காப்பாத்துப்பா...' என கூறி, தலைமேல் கைகளை உயர்த்தி கும்பிட்டு, குலவையிடுவர், பெண்கள். குலவை சத்தம் கேட்டு துாக்கக் கலக்கத்தில் இருக்கும், சிறு பிள்ளைகள் வீறிட்டு அழுவர். முன்னால் நிற்கும் பஞ்சாயத்து தலைவர், 'அய்யா, அய்யனாரே கருப்பசாமி... நல்வாக்கு சொல்லய்யா...' என்று கூறி, சாமியாடியின் கால்களில் விழுந்து வணங்குவார். அவரைத் தொடர்ந்து அனைவருமே வணங்குவர். தலைவரின் கைப்பிடித்து, 'நான் பார்த்துக்கறேன், பயிர் பச்சையெல்லாம் நல்லா வரும்; எல்லாரையும் நான் காப்பாத்திக்கிறேன்...' என்று, அய்யனார் அருள் வாக்கு கூறியதும், திரும்பவும் மகிழ்ச்சியில் குலவையிடுவர், பெண்கள். அய்யனார் ஆடியபடியே அங்கிருந்து சற்று தொலைவில் உள்ள முத்தாலம்மன் கோவிலுக்கு போவார். வழி முழுவதும் பெண்களும், ஆண்களும் அவர் காலில் விழுந்து, ஆசி பெறுவர். 'கவலைப்படாம போ நான் பார்த்துக்கறேன்...' என்ற வார்த்தைகளே, சாமியாடியின் வாயிலிருந்து வரும். ஆண்டு முழுவதும் அந்த மக்களுக்கு, மன பலத்தையும், உடல் உரத்தையும் கொடுப்பது, அந்த வார்த்தைகள் தான். அய்யனார் கோவிலுக்குள் சென்றதும், கோவிலின் முன் உள்ள குண்டத்தில் இறங்குபவர்கள், பக்தியுடன் விரதமிருந்து, குளித்து, மஞ்சள் ஆடையில் வரிசையில் நிற்பர். கலச நீருடன் தக தக என தகிக்கும் குண்டத்தில், பூசாரி இறங்கியதும், மற்ற அனைவரும் ஒவ்வொருவராக, 'அம்மா தாயே...' என கூவியபடி, குண்டத்தில் இறங்கி, ஓடுவர். மறுநாள் காலை, புதுச்சேலை சரசரக்க, அலங்கரித்த முளைப்பாரியை தலையில் சுமந்து, கோவிலுக்கு ஊர்வலமாக வருவர், இளம் பெண்கள். அத்தை மகள், மாமன் மகள்களைப் பார்த்தபடி, ஒரக்காலில் நடந்து வருவர், இளந்தாரி ஆண்கள்.கோவிலினுள் பொங்கல் வைப்பவர், மாவிளக்கு போடுபவர், காணிக்கை செலுத்துபவர் என, குடும்பம் குடும்பமாக நிறைந்திருப்பர். கிராமத்தில், விவசாயத்திற்கு பின், இளந்தாரி பயல்கள் வேலைக்கு சேருவது, பட்டாளத்தில் தான் - மிலிட்டரி. கோவில் திருவிழாவுக்கு, பட்டாளத்தில் விடுமுறை கிடைத்ததை கதை, கதையாக பேசுவர். 'மாமா, விடுமுறை தரமாட்டேன்னு சொன்னாரு, மிலிட்டரி ஆபீஸரு...' 'அப்புறம் எப்படி வந்த மாப்ள?' என்பார்.'ஆபீசரு கனவுல, அய்யனாரு போய் பயமுறுத்திட்டாரு போல... மறுநாளே, பூமிதி திருவிழாவுக்கு போறவன் எல்லாருக்கும் பத்து நாள் விடுமுறை தரேன்னுட்டாரு மாமா...' என்று பேசி சிரிப்பர்.'நம்பினால் நடக்கும்ன்னு அப்ப நினைச்சோம். நடக்கட்டும் நம்பறோம்ன்னு இப்ப சொல்லுதுங்க, இந்தக் கால பிள்ளைங்க. எல்லாம் காலக் கொடுமை தான்...' நெடிய பெருமூச்செறிந்தாள், பார்வதி. கணவனை இழந்த பின், தான் வாழ்வதே பிள்ளைகளுக்காத்தான் என்று இருந்தாள். இப்போது, இருவருமே வளர்ந்து, அவர்கள் போக்கில் வாழ்கின்றனர். 'தெய்வ நம்பிக்கை, வாழ்க்கைக்கு மிகவும் அவசியம்...' என்று சொல்லி சொல்லி, சலித்து விட்டாள், பார்வதி. 'அம்மா, எனக்கு கடவுள் நம்பிக்கை எல்லாம் இருக்குது. ஆனால், உங்க காலமே வேற. பழசை எல்லாம் பேசாதம்மா... உலகம் எங்கேயோ போயிட்டு இருக்குதும்மா. உனக்கு அதெல்லாம் புரியாது.'நானும் தான், நாலு வருஷமா, 'பிரமோஷனுக்காக' துறைக்கான தேர்வு எழுதறேன். உங்க அய்யனாரை கொடுக்கச் சொல்லேன் பார்க்கலாம்...' என்று, விதண்டாவாதம் செய்வான், மகன் கருணாகரன். 'தம்பி, மனித முயற்சியோட இறை நம்பிக்கையும் வேணுமய்யா. கால நேரம், கூடி வரும்போது, எல்லாம் நல்ல முறையில் நடக்கும்...' என்பாள், பார்வதி.'உன் நம்பிக்கையை கெடுப்பானேன். அம்மா, ஆபிசில் விடுமுறை கிடைச்சா வாரேன்...' என்று கூறுவான். ஆனால், திருவிழா சமயத்தில், 'ஆபிசில் ஆடிட்டிங், பிள்ளைகளுக்கு விடுமுறை இல்லை...' என, ஏதோ சாக்கு சொல்லி, கிராமத்துக்கு வருவதை தவிர்த்து விடுவான், மகன். இந்த விஷயத்தில், பார்வதியின் மகள் கொஞ்சம் பரவாயில்லை. திருவிழா சமயத்தில் குடும்பத்துடன் வந்து, ஒருநாள் தங்கி, அய்யனார் சாமியை பார்த்து விட்டு போய் விடுவாள். திருவிழாவிற்கு பூச்சாட்டியதும், கிராமத்து வீடுகளுக்கு வரும் உறவினர்களால், கிராமம் களை கட்டும். 'இந்த ஆண்டாவது, மகன் குடும்பம் வர வேண்டும்...' என, மனதிற்குள் அய்யனாரை வேண்டிக் கொண்டாள், பார்வதி. சென்னை வீட்டில்-''என்னங்க... இந்த முறை, கண்டிப்பா நாம திருவிழாவுக்கு போயிட்டு வரலாங்க. அத்தையும், உங்களுக்காக வேண்டிக்கிட்டு, பூமிதிக்கிறாங்க,'' என்றாள், கருணாகரன் மனைவி. ''என்னது, பூமிதிக்கிறாங்களா... யாரைக் கேட்டு வேண்டிக்கிட்டாங்க? இந்த வயசுல இதெல்லாம் தேவையா அம்மாவுக்கு... அய்யனாரு, எனக்கு, 'பிரமோஷன்' போடற ஆபீசரை கனவுல பயமுறுத்தி, எனக்கு துாக்கி கொடுக்க போறாறா... என்ன இது மூட நம்பிக்கை.''எப்போதும் போல, நல்லா தான் எழுதியிருக்கேன். இருந்தாலும் பாஸாக மாட்டேங்கிறேன் என இழுத்தான்,'' கருணாகரன்.''முதல்ல ரயில் டிக்கெட்டைப் போடுங்க. 'பிரமோஷன்' வருதோ இல்லையோ, அத்தை சந்தோஷப்படுவாங்க. கிராமத்தில் ஒரு வாரம் தங்கிட்டு வரலாம்,'' கண்டிப்புடன் கூறினாள், அவன் மனைவி.மகன் குடும்பத்தார் திருவிழாவிற்கு வந்து இறங்கியதும், பார்வதிக்கு, தலை கால் புரியவில்லை. ''அத்தை, சமையல் எல்லாம் நான் பார்த்துக்கறேன். நீங்க பிள்ளைங்களோட இருங்க,'' என்று மருமகள் கூறியதும், பேரப் பிள்ளைகளுடன் கோவிலுக்கு சென்றாள், பார்வதி. அங்கு அய்யனாரின் சக்தியைப் பற்றிய கதைகளையும், முத்தாலம்மன் அருளைப் பற்றியும் கூறினாள். ''அப்போ, இந்த ஆண்டு அப்பாவுக்கு, 'பிரமோஷன்' கிடைச்சுருமா பாட்டி,'' என்று, கேட்டான் பேரன். ''நீ, அய்யனார்கிட்ட வேண்டிக்க. குழந்தைங்க வேண்டினா, அய்யா, உடனே குடுத்துருவாரு...'' என்று, பக்தியுடன் கூறினாள், பார்வதி. வீச்சருவாளுடன் வீரமாக நின்று கொண்டிருந்த, அய்யனார் சிலையை, பய பக்தியுடன் வணங்கிய பேரப்பிள்ளைகள் இருவரும், 'அய்யா கருப்பசாமி... இந்த ஆண்டு, எங்க அப்பாவுக்கு, 'பிரமோஷன்' கொடுத்துடு...' என, வேண்டிக் கொண்டனர். நகரத்தில், வளர்ந்த பேரப் பிள்ளைகளுக்கு கிராமத்து திருவிழாவின் சூழல், புதுமையாக இருந்தது. குடை ராட்டினம், தொட்டில் ராட்டினம், போட்டோ கடை, வளையல் கடை, பொம்மை கடை, ஜூஸ் கடை என, கோவிலுக்கு செல்லும் வழி நெடுகிலும் திடீரென முளைத்த கடைகளில், மக்கள் கூட்டம் அலைமோதியது.பார்வதியின் மகளும், திருவிழாவிற்கு வந்ததால், அவள் பிள்ளைகளுடன் சேர்ந்து, கடைகளில் எதை எதையோ வாங்கி குவித்தனர். ஐந்து நாள் திருவிழா, நிமிடங்களாக ஓடி மறைந்தன, பார்வதிக்கு. அன்று, அனைவரும் ஊருக்கு கிளம்பினர். வெகு நாட்கள் கழித்து பழைய நண்பர்களை பார்த்ததில், கருணாகரனுக்கும் நிறைவாக இருந்தது. ''தம்பி, இனி திருவிழாவுக்கு தவறாம வந்துருங்கப்பா,'' என்றாள், பார்வதி.''சரிம்மா வரேன்...'' என்று சிரித்தபடியே, வந்த மொபைல் போன் அழைப்பை எடுத்தான்.''கருணா, 'பிரமோஷன் லிஸ்ட்' வந்துடுச்சு,'' என்றான், அவன் நண்பன். ''என்ன வழக்கம் போல தானே,'' என்றான், கருணாகரன்.''ஏய்... நீ, ஜே.இ., ஆயாச்சு. 'வாட்ஸ் - அப்'ல, 'லிஸ்ட்' அனுப்பி இருக்கேன் பாருப்பா,'' என, உற்சாகமாக கூறினான், கருணாகரனின் நண்பன். கருணாகரனால், தன் கண்களையே நம்ப முடியவில்லை. விஷயத்தை கூறியதும், பேரப் பிள்ளைகள் இருவரும், பார்வதியை கட்டிக் கொண்டனர். 'அய்யனாரு சக்தி வாய்ந்தவர் தான், பாட்டி...' என்றனர்.''ஆமாம் தங்கம்...'' என்றாள், மன மகிழ்ச்சியுடன் பார்வதி. 'காக்கா உட்கார பனம் பழம் விழுந்ததோ... இல்லை, நான் பரீட்சையை நன்கு எழுதியதோ... எது எப்படியோ, எனக்கு, 'பிரமோஷன்' கிடைத்தது. என் அம்மா மனம் மகிழ, இனி ஆண்டுதோறும் பூமிதி திருவிழாவுக்கு வரவேண்டும்...' என, மனதில் உறுதி எடுத்துக் கொண்டான், கருணாகரன். பவானி உமாசங்கர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !