உள்ளூர் செய்திகள்

உத்திரத்தில் பிறந்த புத்திரன்!

மார்ச் 25 - பங்குனி உத்திரம்இந்த உலகத்தில் அநியாயம் பெருகும் போது, தெய்வங்கள் அவதாரம் எடுத்து வந்துள்ளனர். அந்த வகையில் சிவ, விஷ்ணுவின் பிள்ளையான தர்மசாஸ்தாவும், ஐயப்பன் என்னும் மாவீரனாக அவதாரம் எடுத்து வந்துள்ளார். இவரது அவதாரம் பற்றி பல்வேறு கதைகள் இருந்தாலும், அவர் மானிடனாக பிறந்த வித்தியாசமான கதை ஒன்று, நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.சபரிமலை அருகிலுள்ள நிலக்கல்லில் வசித்தவர், துப்பன் நம்பூதிரி. இவரது மனைவி சாவித்திரி. இவர்களுக்கு ஜெயந்தன் என்ற மகன் இருந்தார். அந்தக் கால சபரிமலை தர்மசாஸ்தா கோவில் பூசாரியாக இருந்தார், துப்பன் நம்பூதிரி. துப்பன் என்ற சொல்லுக்கு, உறுதியான முகம் கொண்டவர் என பொருள்.கரிமலையில் வசித்த, உதயணன் என்ற கொள்ளைக்காரனுக்கு, நிலக்கல்லில் வசிக்கும் மக்களை விரட்டி விட்டு, அதைக் கைப்பற்றுவது நோக்கம். ஆனால், தர்மசாஸ்தா அருளால் அவனை பலமுறை விரட்டியடித்தனர், ஊர் மக்கள்.இதற்கு பழிவாங்க, சபரிமலையில் பூஜை செய்த துப்பன் நம்பூதிரியைக் கொன்று, சபரிமலை கோவிலையும் தீ வைத்து எரித்து விட்டான்.அப்போது ஜெயந்தனுக்கு, 10 வயது. தந்தையைக் கொன்ற உதயணனைப் பழிவாங்கவும், தர்மசாஸ்தா கோவிலை மீண்டும் கட்டி முடிக்கவும் சபதம் ஏற்றான். பிரம்மானந்த மகரிஷி என்பவரிடம் பல பயிற்சிகளைப் பெற்றான்.இந்த சமயத்தில், பந்தள ராஜாவை சந்திக்க சென்றான், உதயணன். அங்கிருந்து கிளம்பும் போது, ஒரு குளத்தில் நீராடிக் கொண்டிருந்த இளவரசி மாயாவைக் கடத்திச் சென்று விட்டான். விஷயமறிந்த பிரம்மானந்தர், ஜெயந்தனிடம், இளவரசியை உதயணனிடமிருந்து மீட்டு வர உத்தரவிட்டார். ஜெயந்தனுக்கு உதவியாக மலை, கருப்பன் என்ற மலைவாழ் வீரர்களை அனுப்பினார். அவர்கள் உதயணனுடன் போராடி, இளவரசி மாயாவை மீட்டனர். ஜெயந்தனிடம், 'நீ மாயாவை மணந்து கொள். உங்களுக்கு பிறக்கும் குழந்தை, உதயணனைக் கொல்வான். உன் தந்தையைக் கொன்றவனை பழி வாங்க இதுவே ஏற்ற சமயம். மக்களும் கொள்ளை பயமின்றி வாழ்வர்...' என்றார், பிரம்மானந்தர்.மாயாவும் சம்மதிக்க, திருமணம் நடந்தது. இவர்களுக்கு பிறந்த பிள்ளைக்கு, ஆர்யன் என பெயர் சூட்டினர். ஆர்யன் என்ற சொல், ஐயன் என்றாகி, ஐயப்பன் என்றானது.பிறகு மாயா, தன் செல்ல மகனை காட்டில் விட்டாள். அந்தக் குழந்தையை பந்தளராஜா கண்டெடுத்து வளர்த்தார்.புராணத்தின்படி, சாஸ்தாவே தன் பிள்ளையாகப் பிறக்க வேண்டுமென பந்தளராஜா, தன் முற்பிறப்பில் வேண்டியதாகச் சொல்வர். உதயணனைக் கொன்று, தன் தந்தையின் சபதத்தை நிறைவேற்றினான், ஐயப்பன். ஐயப்பன் பிறந்த பங்குனி உத்திரத்தில், வித்தியாசமான வரலாறைத் தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி தானே!     தி. செல்லப்பா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !