உள்ளூர் செய்திகள்

பெரியோரிடம் ஆசி வாங்குவது ஏன்?

நம்முடைய வாழ்க்கையில் பலரை சந்திக்கிறோம். இவைகளில் சில நிகழ்ச்சிகள் பயனுள்ளதாகவும், சில பயனற்றதாகவும் உள்ளன. சிலரை சந்தித்து நெடுநேரம் வம்பு பேசிவிட்டு வருகிறோம். இதனால், பயன் ஏதும் இருக்காது.அதேபோல், சில மகான்களை தரிசித்து விட்டு வந்தால், மன நிம்மதியும், ஷேமங்களும் ஏற்படும். மகான்களை தரிசித்தால், தபஸ்விகளை தரிசித்த புண்ணியம் கிடைக்கிறது. அவர்களும் நம்மை ஆசிர்வதிக்கின்றனர். நம் ஷேமத்தை பார்க்கின்றனர். இதில், ஹஸ்த தீட்சை, மானஸ தீட்சை, நேத்ர தீட்சை என்று மூன்று வகை உண்டு.மகான்கள், நம் தலையில் கை வைத்து, 'ஷேமமாக இரு...' என்பது, ஹஸ்த தீட்சை. கருணையோடு கண்களால் நம்மைப் பார்த்து விட்டாலும், ஷேமம் ஏற்படும். இது, 'நேத்ர தீட்சை' எனப்படும். மூன்றாவது, அவன் எங்கிருந்தாலும் ஷேமமாக இருக்கட்டும் என்று, நம்மை அவர்கள் மனதால் நினைத்தாலும் போதும். இது, மானஸ தீட்சை. அதனால், மகான்களின் தொடர்பு விசேஷமானது.நதியில், தாய் மீன்கள் வரிசையாக போகும். மீன் முட்டைகள் இருக்கும். தாய் மீன்கள், முட்டைகளை கண்ணால் பார்த்துக் கொண்டே போனால் போதும். முட்டைகள், குஞ்சு பொரித்து விடும். இது தான் நேத்ர தீட்சை.ஆமை, மணலில் முட்டையிட்டு மூடி விடும். அது, தன் மனதில் இந்த முட்டைகளையே நினைத்துக் கொண்டிருந்தால், முட்டைகள் குஞ்சு பொரித்து, ஆமை குஞ்சுகள் வெளியே வந்து விடும். இது, மானஸ தீட்சை. இப்படி, ஜீவன்கள் நலம்பெற மூன்று வித தீட்சைகளை கூறியுள்ளனர்.இதில் மகான்களின் தரிசனமும், பார்வையும் மிகவும் உயர்ந்தது. அதனால் தான், மகான்கள் இருக்குமிடத்தை தேடிப் போய் தரிசனம் செய்வதும், அவர், நம்மை ஆசிர்வதிக்கிறாரா என்று பார்ப்பதும் சகஜம்.வேண்டியவன், வேண்டாதவன் என்ற பேதமில்லாமல், 'எல்லாரும் சவுக்கியமாக இருக்க வேண்டும்...' என்று நினைப்பவர்கள், மகான்கள். யார் வந்தாலும் ஆசிர்வாதம் செய்வர்; சுயநலமில்லாதவர்கள்; மிகவும் எளிமையானவர்கள்.அவர்கள் தபோதனர்கள். தனம் இல்லாவிட்டாலும், தவம் உள்ளது. தவம் தான் அவர்களது தனம். இவர்களை தரிசித்து ஆசி பெற்றால், சவுக்கியமாக இருக்கலாம். சும்மா ஊர் சுற்றி, அரட்டை அடித்து வந்தால் என்ன புண்ணியம் கிடைக்கும்.மகான்களை தேடிப் போக வேண்டும். வீண் வம்பு பேசுகிறவர்களை தேடிப் போக வேண்டியதில்லை; அவர்களே வருவர். நாம், நம்முடைய ஷேமத்தை தான் சிந்திக்க வேண்டும்.பி. என். பி.,அறிவோம் ஆன்மிகம்!பூஜை அறையில் சாம்பிராணி துாபம் போடுவது அவசியம். சாம்பிராணி, சிறந்த கிருமி நாசினி. துாபத் திருத்தொண்டால், முக்தி பெற்றவர் குங்கிலிக்கலய நாயனார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !