உள்ளூர் செய்திகள்

சம்மர் ஸ்பெஷல் - வீட்டிலேயே பாப்ஸிகல் செய்யலாம்!

பழச்சாறுகளையும், பழத்துண்டுகளையும் பயன்படுத்தி, குழந்தைகள் விரும்பும், 'குச்சி ஐஸ்' வடிவில், வீட்டிலேயே பலவிதமான சுவைகளில், 'பாப்ஸிகல்' தயாரிக்கலாம். கலர்புல் பாப்ஸிகல்: மாம்பழம் விழுது, ஸ்ட்ராபெரி விழுது அல்லது தர்பூசணி விழுது ஆகியவற்றை தலா, ஒரு கப் அளவு எடுத்துக் கொள்ளவும். பாப்ஸிகல் மோல்டுகளில், முதலில் சிறிதளவு தர்பூசணி விழுதை ஊற்றி, அதன் மேலேயே, ஸ்ட்ராபெரி விழுதை சிறிதளவு விடவும். பின்னர், அதன் மீது, மாம்பழ விழுதை சிறிதளவு ஊற்றி மோல்டுகளை நிரப்பி, பிரீசரில், எட்டு மணி நேரம் வைத்திருந்து எடுக்கவும். தர்பூசணி -கிவி பாப்ஸிகல்: ஒரு கப் தர்பூசணி துண்டுகளுடன், சிறிதளவு தேன் சேர்த்து அரைத்து வைக்கவும். கிவி பழத்தின் தோலை சீவி, துண்டுகளாக்கி, சிறிதளவு தேன் விட்டு மிக்சியில் அரைக்கவும். பாப்ஸிகல் மோல்டில் முதலில் பாதியளவு தர்பூசணி விழுதை நிரப்பி, அதன் மீது கிவிப்பழ விழுதை நிரப்பி, மோல்டை மூடவும். அதை பிரீசரில், எட்டு மணி நேரம் வைத்து எடுக்கவும். இளநீர் பாப்ஸிகல்: விருப்பமான பழங்களை நன்றாக கழுவி, துண்டுகளாக்கி கொள்ளவும். பாப்ஸிகல் மோல்டில் பழத்துண்டுகளை சிறிதளவு போட்டு, அதன் மேல் சிறிதளவு இளநீரை ஊற்றி, மோல்டை மூடவும். பின், அதை பிரீசரில் இரவு முழுவதும் வைத்திருந்து, மறுநாள் எடுத்து பரிமாறவும். பாதாம் பாப்ஸிகல்: தலா, ஐந்து பாதாம் மற்றும் முந்திரியை வெறும் வாணலியில் வறுத்து, சிறிய துண்டுகளாக்கவும். ஒரு கப் பாலை நன்றாக காய்ச்சி ஆற வைக்கவும். இதனுடன், இரண்டு தேக்கரண்டி பாதாம் பவுடரை கலந்து, பாப்ஸிகல் மோல்டில் நிரப்பி, வறுத்து பொடித்த, பாதாம் - முந்திரித் துண்டுகளை சேர்த்து, மோல்டை மூடவும். பின்னர், அதை பிரீசரில், எட்டு மணி நேரம் வைத்திருந்து எடுக்கவும். சாக்லேட் பாப்ஸிகல்: ஒரு கப் பிரெஷ் கிரீம் அல்லது காய்ச்சிய பாலுடன், இரண்டு தேக்கரண்டி சாக்லேட் பவுடர், தேவையான அளவு சர்க்கரை சேர்த்து மிக்சியில் நுரை பொங்க அடிக்கவும். இதை பாப்ஸிகல் மோல்டில் நிரப்பி, பிரீசரில் இரவு முழுவதும் வைத்திருந்து எடுக்கவும். மாம்பழம் - தேங்காய்ப்பால் பாப்ஸிகல்: ஒரு மாம்பழத்தை எடுத்து, அதன் தோலை சீவி துண்டுகளாக்கி, மிக்சியில் போடவும். இதனுடன், அரை கப் தேங்காய்ப்பால், சுவைக்கேற்ப தேன் சேர்த்து அரைக்கவும். இந்த விழுதை பாப்ஸிகல் மோல்டில் நிரப்பி, இரவு முழுவதும் பிரீசரில் வைத்திருந்து, மறுநாள் எடுத்து பரிமாறவும். மின்ட் பாப்ஸிகல்: எலுமிச்சம்பழ சாறு பிழிந்து, அதனுடன் தேவையான அளவு சர்க்கரை, தண்ணீர் சேர்த்து கரைக்கவும். சிறிய துண்டு இஞ்சியின் தோலை சீவி மிக்சியில் போட்டு, சுத்தம் செய்த, 10 புதினா இலைகள் சேர்த்து நைசாக அரைத்து வடிகட்டவும். இந்த புதினா சாறை ஏற்கனவே கலந்து வைத்துள்ள எலுமிச்சை சாறுடன் கலந்து, பாப்ஸிகல் மோல்டில் நிரப்பவும். இதை பிரீசரில் இரவு முழுவதும் வைத்திருந்து, மறுநாள் எடுத்து பரிமாறவும். லஸ்ஸி பாப்ஸிகல்: ஒரு கப் தயிரை மிக்சியில் கடைந்து, அதனுடன் சிட்டிகை உப்பு, தேவையான அளவு சர்க்கரை சேர்த்து மறுபடியும் ஒரு சுற்று விட்டு எடுக்கவும். இந்தக் கலவையை பாப்ஸிகல் மோல்டுகளில் நிரப்பி, நடுவே ஐஸ் குச்சியை செருகி பிரீசரில், எட்டு மணி நேரம் வைத்திருந்து எடுக்கவும். டிப்ஸ்!'பாப்ஸிகல் மோல்டு' இல்லாவிட்டால், 'குல்பி மோல்டு' அல்லது சிறிய பிளாஸ்டிக் டம்ளரில் கூட பழக்கலவையை நிரப்பி செய்யலாம். * பிரீசரில் வைப்பதற்கு முன்பாகவே, ஐஸ் குச்சியை செருகி விடவேண்டும். * பிரீசரில் இருந்து வெளியே எடுத்ததும் சில நிமிடங்கள், குழாய் தண்ணீரில் மோல்டை வைத்திருந்து எடுத்தால், மோல்டிலிருந்து பாப்ஸிகல் எளிதில் பிரிந்து விடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !