அன்புடன் அந்தரங்கம்!
அன்புள்ள அம்மாவுக்கு -என் வயது: 32. பெற்றோர் அனுமதியுடன் காதல் திருமணம் செய்து கொண்டவள். கணவரும், புகுந்த வீட்டினரும் என் மீது பாசமாக இருப்பர். எனக்கு, ஐந்து வயதில் ஒரு மகன் இருக்கிறான்.நான் இயல்பிலேயே கலகல சுபாவம் கொண்டவள். வீட்டில் எவ்வளவு பிரச்னை இருந்தாலும், அதை என் கலகலப்பான பேச்சால், சரி செய்து விடுவேன்.எத்தனை, 'பாசிட்டிவ்' எண்ணம் இருந்தாலும், கணவரோ அல்லது வீட்டினரோ மற்றும் நட்பு வட்டத்திலோ, உறவினர் யாராக இருந்தாலும், என் மனம் நோகும்படி ஒரு வார்த்தை கூறி விட்டாலும், அதை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது.'விளையாட்டுக்காக, சும்மா கிண்டலுக்காக கூறினேன்...' என்றாலும், என்னால் அதன்பின் அவர்களோடு இயல்பாக பழக முடிவதில்லை; பேசுவதையும் தவிர்த்து விடுவேன். தவறை உணர்ந்து, அவர்கள் சமரசத்துக்கு வந்தாலும், மனம் சமாதானமாகாது.இவ்வளவு, 'சென்சிட்டிவ்' ஆக இருக்கக் கூடாது என்று நினைத்தாலும், என்னால் மாற்றிக் கொள்ள முடியவில்லை.என் இந்த மனப்பான்மையை அறிந்து, யாரும் என்னுடன் சகஜமாக பேச, பழக தயங்குகின்றனர்.கலகலப்பாக இருக்கணும், என்னை சுற்றிலும் இருப்பவர்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் எனக்கு, இந்த குணத்தால், பாதகம் தான் விளைகிறது.என்னை மாற்றிக் கொள்வது எப்படி என, நல்ல ஆலோசனை கூறுங்கள், அம்மா!— இப்படிக்கு,உங்கள் மகள்.தொட்டால் சுருங்கி மகளுக்கு -நீ ஒரு உணர்வுப்பூர்வமான வெளியுலக ஈடுபாட்டாளர். வலது கையில் பவுர்ணமியையும், இடது கையில் அமாவாசையையும் சுமந்து நிற்கிறாய்.எல்லைகள் அற்ற வெளிப்படைத்தன்மை ஆபத்தானது. வெளிப்படை தன்மையால் உடனடி நண்பர்கள் கிடைப்பர். நொடியில் அபிமானத்தை பெறும் நீ, மறு நொடியில் அதை இழந்து, வெறுப்பை சம்பாதிப்பாய்.நீ வெளிப்படையாக இருப்பதை போல, எதிராளி வெளிப்படையாக இருப்பது, உனக்கு ஒவ்வாமையாக இருக்கிறது. அவர்களின் ஒரு வார்த்தை கேட்டு, ஆமை போல ஓட்டுக்குள் சுருங்கிக் கொள்கிறாய். நீ துப்பினால் மருந்து, அவர்கள் துப்பினால் விஷமா?இனி, நீ செய்ய வேண்டியது என்ன?* தினம் ஆளுயர கண்ணாடி முன் நின்று, 'நான் வாயாடியும் அல்ல, அமுக்னியும் அல்ல. தேவைக்கும், சூழலுக்கும் பேசும் சமாதானி...' என, உன்னை சுயவசியம் செய்து கொள். * யாரையும் பாய்ந்து கட்டிக் கொள்ளாதே. யாரின் மீதும் பாய்ந்து பிராண்டாதே. அளவாய் வெளிப்படு.* பேசுவதற்கு முன், இந்த வார்த்தைகளை பேசுவது சரிதானா என, மன தராசில் நிறுத்தி பார். யாரையும் உடனடியாக கவர பேசாதே. கவர்ச்சி பேச்சு கவைக்கு உதவாது.* நகைச்சுவை உணர்வு நல்லது தான். ஆனால், பலமுறை கேட்ட அரதபழசு நகைச்சுவையை எதிராளி மீது வீசாதே. ஆபாசம் கலந்த நகைச்சுவை, உருவக்கேலி நகைச்சுவை, உன் ஒப்புமையை சேதப்படுத்தும்.* எதிராளி உன்னை காயப்படுத்தி பேசினால், அந்த வார்த்தைகளை மனதில் வைத்துக் கொள்ளாதே. எதையாவது வாய்க்குள் பாடியபடி, உனக்கு பிடித்த நகைச்சுவையை நினைத்து சிரித்தபடி, எதிராளியை கடந்து போய் விடு. எனக்கு தெரிந்த ஒரு மேல் அதிகாரி, எந்த சூழலிலும் புன்முறுவல் முகத்துடனேயே இருப்பார். எதிராளிக்கு அவரை காயப்படுத்த துணிச்சல் வராது. அவரை எதிர்கொள்ள திராணி இல்லாமல் விலகி ஓடி விடுவர்.புகுந்த வீட்டாருடன் இணக்கமாக நடந்து, சிறு வட்டத்தை மகிமைப்படுத்து.* வெற்றி பெற்ற சாதனையாளர்களின் சுய சரிதைகளை படி. ஆன்மிகத்துக்குள் ஆழ் நீச்சல் அடி. கணவரின் ஆக்க ரீதியான விமர்சனங்களை பாடமாக எடுத்துக் கொள்.* நட்பு என்பது, சர்வதேச தபால் தலைகள் சேகரிப்பு அல்ல. நேர்மறை எண்ணம் கொண்ட நீண்டகால நட்புகளை பாதுகாத்துக் கொள். குறுகிய கால நட்புகள் வந்தால், வரவில் வை, சென்றால், செலவில் வை. * தான் என்ற அகந்தையை விடு. வாரா வாரம் கோவிலுக்கு போ. உன்னை பற்றி சக மனிதர்கள், இறைவனிடம் புகார் பட்டியல் சமர்ப்பிக்காதபடி நடந்து கொள்.* பிறர் உன்னுடன் பழக தயங்குகின்றனர் என்பது கூட, உன் மனப்பிரமையாக இருக்கலாம். — என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.