இன்று புதிதாய் பிறந்தாள்!
''இந்த டிரஸ் வேணாம் போ, நல்லாவே இல்லை,'' என, அப்பா வாங்கி வந்த டிரஸ்சை துாக்கிப் போட்டு அழுதாள், 10 வயது, ப்ரதிகா.கோபமாய் முறைத்தாள், அம்மா விமலா.''அடம் பிடிக்காத, ப்ரதி. உனக்கு பிடிக்கும்ன்னுதானே வாங்கி வந்திருக்காங்க.''''அப்பாவுக்கு பிடிச்சா போதுமா... எனக்கு பிடிக்க வேணாமாம்மா? கலரும், டிசைனும் நல்லாவே இல்லை,'' ஏமாற்றம் கண்களில் கண்ணீராய் வழிந்தது.''அப்படியெல்லாம் சொல்லாத. அப்பா வாங்கிட்டு வந்ததை, மறுக்காம போட்டுக்கணும்.''''மாட்டேன் போ.''ப்ரதிகாவின் எதிர்பார்ப்பே வேறாக இருந்தது. அவள் ப்ரெண்ட், அபூர்வா தன் பிறந்த நாளுக்கு எடுத்திருந்த டிரெஸ்சை நேற்று காட்டினாள். மயில் நீல கலரில், நல்ல டிசைனில் ரொம்பவே அழகாக இருந்தது.'அப்பா, என்னை கடைக்கு அழைத்து சென்று, நாலு கடை ஏறி இறங்கி, என்னையே, 'செலக்ட்' செய்யச் சொல்லி வாங்கி தந்த டிரெஸ்...' என்று, பெருமையாக சொன்னாள், அபூர்வா.அது போலவே, தானும், அப்பாவுடன் கடைக்கு சென்று, தனக்கு தேவையானதை தேர்ந்தெடுத்து வாங்க வேண்டுமென்று எதிர்பார்த்தாள்.ஆனால், நடந்ததோ வேறு. இன்று, திடுதிப்பென்று அப்பா, அவளுக்கு டிரெஸ் எடுத்து வந்து, அவள் ஆசையில் மண்ணை போடுவார் என்று யாருக்கு தெரியும்? அதுவும், அவளுக்கு கொஞ்சமும் பிடிக்காத, பச்சை கலர்.வேறு வழியில்லை. அப்பாவை பற்றி அவளுக்கு நன்கு தெரியும். வீட்டில் எந்த விஷயமென்றாலும், அவர் முடிவு செய்வது தான். பிடிக்கிறதோ இல்லையோ, அவரின் முடிவை அனைவரும் ஏற்க வேண்டும். இல்லாவிட்டால், பிரளயமே நடக்கும்.சாதாரண சாப்பாட்டு விஷயத்திலிருந்து, எந்த முக்கியமான விஷயமும் அவர் எடுப்பது தான் முடிவு.வீட்டில் மனைவி, மகள் என்று இரண்டு ஜீவன்கள் இருப்பதோ, அவர்களுக்கும் மனசு, விருப்பம் என்ற ஒன்று இருப்பதோ, அவருக்கு சுத்தமாக நினைவிருக்காது. ப்ரதிகா அருகில் வந்ததும், அவளை அழைத்து அணைத்துக் கொண்டாள், விமலா.''ப்ரதி, என் செல்லம்ல... இதப்பாரு, அப்பா எனக்கு எடுத்து வந்துருக்கிற புடவை கூடத்தான் பிடிக்கல. அதுக்காக நான் உன்னை மாதிரி அழுதுட்டா இருக்கேன்? ''ஆசைகளையும், ஏமாற்றங்களையும் அடக்கிக்கிட்டு, ஏத்துக்கல. அது மாதிரி ஏத்துக்க, நீயும் பழகிக்கணும். நீ சின்ன பொண்ணுல்ல, 10 வயசாகுது. அப்பா பற்றி தெரியும் தானே?''அப்போது தான் திடுக்கிட்டு போய் அம்மாவின் முகத்தை பார்த்தாள், ப்ரதிகா. அதில் தெரிந்தது ஏமாற்றமா இல்லை விரக்தியா என, அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை.''ஏம்மா இப்படி இருக்கார் அப்பா?'' என்றாள், ப்ரதிகா.அம்மாவின் வாயிலிருந்து, ''ப்ச்...'' என்ற ஒற்றை வார்த்தை மட்டுமே பதிலாக வந்தது. கண்கள் வெறுமையாக துாரப் பார்வை பார்த்துக் கொண்டிருந்தது.''விமலா விமலா...'' கணவனின் குரல் கேட்டதும், பரபரப்பானாள், விமலா.''அப்பா வந்துட்டார். கண்ண துடைச்சுக்க,'' அவசரமாக புடவைத் தலைப்பால் துடைத்து விட்டாள், அம்மா.''என்ன... ரெண்டு பேருக்கும் டிரஸ் பிடிச்சிருக்கா?'' அமர்த்தலாக வந்தது, குரல்.''ம் ம்... ரொம்ப பிடிச்சிருக்குங்க. புது டிசைன்ல, பார்க்கவே அழகா இருக்கு,'' உதட்டில் சிரிப்புடன் பொய் சொன்ன அம்மாவை, அதிர்ச்சியாக பார்த்தாள், ப்ரதிகா.''ப்ரதி, உனக்கு?''''அவளுக்கும் தான். இவ்வளவு நேரம் அதை பற்றி தான் சந்தோஷமா பேசிக்கிட்டிருந்தோம்.'' அம்மா கண்களில் சைகையோடு தலையாட்ட, ப்ரதிகாவும், 'ஆமாம்' என்று, அவசரமாக தலை ஆட்டினாள்.''அதானே!'' என சொல்லி, வெளியே போனார்.''அம்மா.''''நீ என்ன சொல்ல வர்றேன்னு புரியுது. வேற வழி இல்லை, சொன்னாலும் ப்ரயோஜனம் இல்லை. நான் பொய் சொன்னது உனக்கு அதிர்ச்சியாத்தான் இருக்கும். இவரை கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு அப்புறம் நான் பழகிட்டேன். நீயும் பழகிக்கோ. பின்னால ஏமாற்றங்களை தாங்க உபயோகமா இருக்கும்.''அறையை விட்டு வெளியே போன விமலாவையே வெறித்த விழிகளுடன் பார்த்தாள், ப்ரதிகா.காலங்கள் ஓடியது. அவள் பள்ளி முடித்து, கல்லுாரியில் சேரும்போதும், இதுதான் நடந்தது.பிளஸ் 2வில் நல்ல மதிப்பெண் எடுத்த ப்ரதிகாவுக்கு, ஸ்கூல் டீச்சராக விருப்பம். டீச்சர் வேலையில் அவளுக்கு காதல் அல்ல, வெறி என்றே சொல்லலாம். அவ்வளவு நேசித்தாள்.சிறு வயதிலேயே, 'அம்மா, நான் பெரியவளாகி, நல்லா படிச்சு, டீச்சர் வேலைக்கு தான் போவேன்...' என்பாள்.சின்ன வயசு, ஏதோ சொல்கிறாள் என்று, சிரித்தபடி சென்று விடுவாள், விமலா.ஆனால், வயதாக ஆக, அவள் அதையே சொன்னதும், அவளின் லட்சியமே அது என்றும், அவள் குழந்தைத்தனமாக பேசவில்லை என்பதும், விமலாவுக்கு புரிந்தது.''வைஷூ... நல்ல மார்க் வந்திருக்குடி. எனக்கு சின்ன வயசுலிருந்து டீச்சராகணும்ன்னு ஆசை. அதான் மேல படிக்கப் போறேன். ஆமா, உனக்கும் நல்ல மார்க் வந்திருக்கேடி. நீ என்ன பண்ண போற?'' என, பள்ளி வளாகத்தில் மதிப்பெண் பட்டியலை வாங்கியதும், தன் நெருங்கிய தோழி வைஷ்ணவியிடம் கேட்டாள், ப்ரதிகா.''தெரியலடி. இன்ஜினியரிங் போறதா, இல்ல கம்ப்யூட்டர் சேர்றதான்னு ரெண்டு, 'சாய்ஸ்' இருக்கு. என்ன பண்ணப் போறேன்னு தெரியல.''''வீட்ல என்ன சொல்றாங்க?''''என் அப்பா தெளிவா சொல்லிட்டார், ப்ரதிகா. படிக்கப் போறது நீ. உன் விருப்பம் தான் முக்கியம். உனக்கு எதுல விருப்பமோ அதுல சேர்ந்துக்க. எந்த முடிவு பண்ணாலும் எனக்கு ஓ.கே.,ன்னு சொல்லிட்டார். அனேகமா, கம்ப்யூட்டர் கோர்ஸ்ல தான் சேருவேன்னு நினைக்கிறேன்,'' என்றாள், வைஷ்ணவி.''அதிர்ஷ்டசாலிடி நீ.''''என்ன சொல்ற?''''ஒண்ணுமில்ல வைஷூ,'' என்றாள்.அப்போதுதான் தன் அப்பாவின் ஞாபகம் வந்தது.'சம்மதிக்க வேண்டுமே, அவர் என்ன முடிவு செய்து வைத்திருக்கிறாரோ?' நினைத்த போதே பகீரென இருந்தது.''உன் வீட்ல ஓ.கே., உன் ஆசைக்கு குறுக்க நிற்க மாட்டாங்க. ஆனா, என் அப்பாவ நினைச்சேன். என்ன சொல்லப் போறார்னு தெரியலடி.''அவளின் வீட்டைப் பற்றி முழுதாய் தெரிந்து வைத்திருந்த வைஷ்ணவியால், ப்ரதிகாவை பரிதாபமாக பார்க்க மட்டுமே முடிந்தது.''நம் சத்யாவை பாரு ப்ரதி. அவளும் உன்ன மாதிரி டீச்சராகணும்னு தான் சொல்லிக்கிட்டிருக்கா. அவளும், நீயும் ஒரே காலேஜ்ல சேர்ந்துக்கலாம்,'' என்றாள், வைஷ்ணவி.ப்ரதிகா வீட்டுக்கு வந்தபோது, சாப்பிட்டுக் கொண்டிருந்தார், அப்பா.''என்ன மார்க்?''இவள் சொன்னதும், அவர் முகம் சந்தோஷ பட்டது போல் தெரிந்தது.'நல்ல மூடில் தான் இருப்பார் போல, இந்த சமயத்தில், என் விருப்பத்தை சொல்லி அவரிடம் அனுமதி வாங்கி விட வேண்டும்...' என, நினைத்தாள்.''அடுத்தது என்ன செய்ய போற?'' சாப்பிட்டவர், கையை துடைத்தபடி எழுந்தார்.ப்ரதிகா விமலாவை பார்க்க, 'சொல்லு, சொல்லு...' என்பதைப் போல் கண்ணை காட்டினாள், விமலா.''அது வந்துப்பா...'' தயங்கியது, ப்ரதிகாவின் குரல்.''ம் சொல்லு!''''சின்ன வயசிலிருந்து டீச்சர் வேலைக்கு போகணும்ன்னு ஆசை. அதுக்கு படிக்கிறேனே,'' தைரியமாய் சொன்னது, அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது.''டீச்சர் வேலைக்கா...'' அவர் குரலில் ஏன் அவ்வளவு ஏளனம் என்று இருவருக்கும் புரியவில்லை.திடீரென சத்தமாக சிரித்தார்.''நாளு பூரா நின்னுக்கிட்டே மாரடிக்கணும். டீச்சர் வேலையெல்லாம் வேணா. கம்ப்யூட்டர் படி. ஐ.டி., கம்பெனில, 'ஏசி'ல ஜாலியா வேலை செய்யலாம். என்ன?''ப்ரதிகாவின் மனதில் மொட்டுவிட ஆரம்பித்திருந்த மலர், அப்போதே கருக ஆரம்பித்திருந்தது.''அப்பா!''''என்ன?''''சின்ன வயசிலிருந்தே, டீச்சர் வேலைக்கு போகணும்ன்னு எனக்கு ஆசைப்பா. அதுக்கே படிக்கிறேனே, ப்ளீஸ்.'' குழந்தைகள் எனும் சின்னஞ்சிறு மலர்களின் மத்தியில் தானும் ஒரு மலராக மலர்ந்திருக்க ஆசைப்பட்டாள்.''ப்ரதிகா...'' என்றாள், அம்மா. அவளை நிஷ்டூரமாக பார்த்தார், அப்பா. 'என் முடிவை மறுத்து பேசற அளவுக்கு ஆளாயிட்டியா?' என்பது போல் இருந்தது, அந்த பார்வை.அவள் எவ்வளவோ கெஞ்சியும், கடைசியில், அப்பாவின் ஆசைப்படி கம்ப்யூட்டர் கோர்ஸ் தான் சேர்ந்தாள். தன் பள்ளி தோழிகள் சேரும் கல்லுாரியில் படிக்க விரும்புவதாக, அம்மாவிடம் சொன்னாள், ப்ரதிகா.''அப்பா வேற காலேஜ் சொல்றார், ப்ரதி. அந்த காலேஜ்லயே சேர்ந்துக்க.''''அம்மா!''''ஆமாம்மா. இப்ப வந்து கேட்பார், சம்மதிச்சுடு.''''என்னம்மா, நான் சொன்ன காலேஜ் பிடிச்சிருக்கு தான?''''ஆமாப்பா பிடிச்சிருக்கு. அங்கயே சேர்ந்துக்கறேன்.'' இது தன்னை தானே ஏமாற்றிக் கொள்ளும் எத்தனையாவது பொய் என்று அவளுக்கு தெரியவில்லை.படிப்பு, கோர்ஸ் என்று எல்லா விஷயங்களிலும் பொய்தான் பேசினாள். அப்பாவின் விருப்பமே ஜெயித்தது. ஒவ்வொரு முறையும் மரித்துப் போனாள், ப்ரதிகா.காலம் ஓடியது. இதோ இப்போது அவள் பெரிய கம்பெனி ஒன்றில் உயர் பொறுப்பில்.'பீச்'சில் கடல் அலைகள் கால்களை நனைக்க, சந்தோஷுடன், சந்தோஷமாக உட்கார்ந்திருந்தாள். சந்தோஷ், அவளின் காதலன்; அவளுடன் வேலை செய்பவன்.''வீட்ல அம்மா கல்யாணம் பண்ணிக்க சொல்லி வற்புறுத்தறாங்க, ப்ரதிகா. எவ்வளவு நாள் தான் சாக்கு சொல்றது? பொண்ணு பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க,'' என்றான், சந்தோஷ்.''சரி, வீட்ல பேசிடறேன்,'' என்று எழுந்தாள், ப்ரதிகா.ஞாயிற்றுக்கிழமை —வெளியில் போயிருந்தார், அப்பா.''உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடிவு பண்ணி இருக்கார், ப்ரதி. பாரு மாப்பிள்ளையோட போட்டோ, 'வாட்ஸ் அப்' பண்ணி இருக்காங்க. அப்பாவுக்கு பிடிச்சிருக்காம்,'' என்றாள், அம்மா.குறுக்கிட்ட ப்ரதிகா, சந்தோஷ் பற்றி அம்மாவிடம் சொன்னாள்.''ப்ரதி... ஆனா, அப்பா.'''' அவர் வாழ்க்கையை நிறைவாய், சந்தோஷமாய் வாழ்றார், அப்பா. தான் நினைச்சதை சாதிச்சுக்கிட்டு, தான் விரும்பியதை பண்ணிக்கிட்டு, தன் அதிகாரத்தை நம் மேல செலுத்திக்கிட்டு, தப்பா, சரியான்னு கூட யோசிக்கறதில்லை.''வாழ்க்கைய தன் மனசுக்கு பிடிச்ச மாதிரி வாழறார். ஆனா, நம் ரெண்டு பேரையும் நினைச்சுப் பாரு. நம் வாழ்க்கையை நமக்கு பிடிச்ச மாதிரி என்னிக்காவது வாழ்ந்திருக்கோமா?''சாதாரண சாப்பாட்டிலிருந்து, போடற டிரெஸ், படிப்பு, செய்யிற வேலை எல்லாம் அவர் விருப்பபடிதான் நடக்குது.''அம்மா, நம் வாழ்க்கையை எப்போ நாம வாழப் போறோம்? விருப்பு, வெறுப்பு, கனவு எல்லாத்தையும் அவருக்காக, இன்னும் பலி கொடுக்கணுமா? அவருக்காக நாம வாழ்ந்தது போதும். இனி, நம் வாழ்க்கையை நாம வாழ ஆரம்பிக்கலாமே, அம்மா...'' என்றாள், ப்ரதிகா.அவளையே இமைக்காமல் பார்த்தாள், விமலா.''அப்பா பார்த்திருக்கிற மாப்பிள்ளையை பிடிச்சிருக்குன்னு இனியும் என்னால பொய் சொல்ல முடியாதும்மா. வாழ்க்கையில நிறைய பொய் பேசிட்டேன். இப்பவாவது உண்மை பேசியே ஆகணும்.''நான் சந்தோஷை காதலிக்கிறேன். அவரைத்தான் கல்யாணம் பண்ணிக்க போறேன். அப்பாவுக்காக என் ஆசைகளையும், கனவுகளையும் எனக்குள்ளே பலியிட்டு, பொய் பேசி, நிறைய முறை மரிச்சுப் போயிட்டேன். இப்பவாச்சும் உயிர்த்தெழ ஒரு வாய்ப்பு கொடு,'' என்று சொல்லி வேகமாக சென்றாள்.ப்ரதிகாவை அதிர்ச்சியாக பார்த்தாள், விமலா. ஆனாலும், ஒரு இனம் புரியாத சந்தோஷம் ஓட ஆரம்பித்திருந்தது.''ப்ரதிகா, ஒரு நிமிஷம்மா,'' என்ற விமலா, ''அந்த பையனை நம் வீட்டுக்கு பொண்ணு பார்க்க வர சொல்லு,'' என்றதும் சந்தோஷமாக பார்த்தாள், ப்ரதிகா.கே. ஆனந்தன்