உள்ளூர் செய்திகள்

குற்றம் குற்றமே! (18)

முன்கதைச் சுருக்கம்: 'கார்த்திகா இண்டஸ்ட்ரீஸ்' நிறுவனர், கிருஷ்ணராஜின் மூன்றாவது, 'அசைன்மென்ட்'டை முடிக்க விடாமல் தடுக்க, திட்டம் தீட்டினார், பங்குதாரரான தாமோதர். அதன்படி, தனஞ்ஜெயனின் அக்கா திருமணத்துக்கு, வரன் ஒன்றை, தரகர் மூலமாக, அவன் குடும்பத்தினரிடம் பேச வைத்தார். தரகர் மீது சந்தேகம் கொண்டு, வரன் பற்றி அவர் கூறிய தகவல்கள் உண்மைதானா என்று விசாரிக்க முற்பட்டான், தனஞ்ஜெயன். இதில், தாமோதரின் சூழ்ச்சி ஏதாவது இருக்குமா என்று அறிய, தானே, தாமோதரின் மகன் விவேக்குக்கு போன் செய்து மிரட்டலாக பேசினான், தனஞ்ஜெயன். அதிர்ந்து போய், வாயைப் பிளந்த விவேக்கை, சற்று கர்வ புன்னகையோடு பார்த்தார், தாமோதர்.''டாட்... இது என்ன, 'ட்விஸ்ட்?' நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை,'' என்றான், விவேக். ''இனி எல்லாமே, 'ட்விஸ்ட்' தான். அந்த, தனஞ்ஜெயன், நம்ப கால்ல எப்படி வந்து விழறான்னு பார்.'' ''எப்படி டாட், என்கிட்ட கூட சொல்லாம, நீங்க இப்படி ஒரு திட்டம் போட்டீங்க?'' ''அட போடா முட்டாள். உன்கிட்ட சொல்லிட்டா நான், 'அண்டர்வேர்ல்ட் பிசினசை ஸ்டார்ட்' பண்ணினேன்? நான் பார்க்க பிறந்தவன்டா, நீ. நான் உன் அப்பன்.''''அது சரி, உங்க புத்திசாலித்தனமும், தைரியமும் யாருக்கும் வராது. நான் ஒத்துக்கிறேன்.'' ''மண்ணாங்கட்டி, தாய் எட்டடின்னா, குட்டி பதினாறடி பாயணும். நீ என்ன, அப்படியா இருக்கே?''''தயவுசெய்து என்னை, 'அண்டர் எஸ்டிமேட்' பண்ணாதீங்க. இனி பாருங்க, என் சாமர்த்தியத்தை.'' ''நீயா எதையும் கிழிக்க வேண்டாம். நான் சொல்றதை, சொன்னபடி செய்தா போதும்.'' ''சரி டாட்... அப்ப, இந்த கல்யாணம்?'' ''ஒரு தடையுமில்லாம நடக்கணும். நீ, உதார் மட்டும் விட்டா போதும். ஆனா, கல்யாணம் கட்டாயம் நடக்கணும். அவன் சிஸ்டர், என் நண்பனோட மகனுக்கு, மனைவியாகவும் வரணும். அப்படி வந்த பிறகு தான் இருக்கு, நம்ப விளையாட்டு.'' ''யார் டாட், அந்த நண்பர்?'' ''நம்ப மலேஷியா ராமகிருஷ்ணன் தான்... வேற யார்?'' ''ஓ... ராமகிருஷ்ணன் அங்கிளா?'' ''அவனே தான். என்னையும், கல்யாணத்துக்கு, 'இன்வைட்' பண்ணியிருந்தான். அவன் நம்ப, 'அண்டர்கிரவுன்ட் பிசினஸ்' பார்ட்னர், வேற. சிங்கப்பூர், மலேஷியா, தைவான் ஆகிய நாடுகள்ல நம்ப, 'பிசினசு'க்கு, ராமகிருஷ்ணன் தானே ஏஜென்ட்?'' ''இப்ப புரியுது டாட். அப்ப, அவர் மகன் கல்யாணம் தான் நின்னு போச்சா?'' ''ஆமாம், அந்த கல்யாணப் பொண்ணு முதல் நாளே எவனோடயோ ஓடிட்டா. இவன் நிலைகுலைஞ்சிட்டான். அப்ப தான் எனக்கு, தனஞ்ஜெயன் சிஸ்டர் ஞாபகம் வந்தது. அவன் குடும்ப புரோக்கர் வையாபுரின்னு தெரிஞ்சு, அவனை வளைச்சு பிடிச்சேன். ஐந்து லட்சம் ரூபாய் கமிஷன்னேன். தலைகுப்புற விழுந்துட்டான். ''ராமகிருஷ்ணனையும் சமாதானப்படுத்தி சம்மதிக்க வெச்சேன். அப்படியே நம்ப சிக்கலையும் சொன்னேன். ராமகிருஷ்ணன் மறு பேச்சே பேசல. அவன் பையன் மோகனும், 'நான் என்ன சொன்னாலும் கேட்கிறேன் அங்கிள்'ன்னு சொல்லிட்டான்.'' ''இப்ப எனக்கு எல்லாமே புரிஞ்சு போச்சு, டாட். அக்காவுக்காக, தனஞ்ஜெயன் நமக்கு கட்டுப்பட்டே தீரணும். இல்லேன்னா அந்த மோகன் அடிச்சு துரத்துவான். அப்படி தானே?'' ''சும்மால்லாம் துரத்த மாட்டான், வயித்துல ஒரு குழந்தையோட துரத்துவான்.'' ''அதுக்கு ஒரு மூணு மாசமாவது ஆகுமே டாட்.'' ''அது ஒரு பக்கம், மறுபக்கம் தான், அவன் பையனை கண்டுபிடிக்கிற அந்த, 'அசென்மென்ட்' இருக்கே?'' ''நிச்சயமா அந்த தனஞ்ஜெயன் அவனை கண்டுபிடிச்சிடுவான். அப்படி கண்டுபிடிக்கப் போறவனை நாம போட்டுத் தள்ளப் போறோமா டாட்?'' ''அவன் முதல்ல கண்டுபிடிக்கட்டும். அப்ப சொல்றேன்,'' என, கெச்சலாக சிரித்தார், தாமோதர், ''என்கிட்டயே சஸ்பென்சா, டாட்?'' ''அண்டர்கிரவுன்ட் தாதாக்கள், அவங்க நிழலைக் கூட சந்தேகப்படணும். இல்லேன்னா, 'பிசினஸ்' பண்ண முடியாது. நீ, என் பிள்ளைங்கிறது உண்மைன்னா, அவனுக்கு முன்ன, நீ அந்த பையனை கண்டுபிடிச்சு, என்கிட்ட வந்து நில்லு. அப்ப சொல்றேன், அந்த மாஸ்டர் பிளானை,'' என்றபடியே விலகிப் போனார், தாமோதர். காரை, 'பார்க்' செய்துவிட்டு கழுத்து, 'டை'யை தளர்த்தியபடியே வீட்டுக்குள் நுழைந்த, தனஞ்ஜெயனை மிக ஆர்வமாக பார்த்தாள், அம்மா சுசீலா.புத்தகம் வாசித்தபடி இருந்த சாந்தி, அதை மூடியபடி நிமிர, தங்கைகள் ஸ்ருதியும், கீர்த்தியும், 'டிவி'யை அணைத்துவிட்டு, அவனை நோக்கி வந்தனர். தனஞ்ஜெயனுடன் வந்திருந்த குமார், கட்டை விரலை உயர்த்திக் காட்டி, அவர்களின், 'டென்ஷனை' முதலில் தணித்தான். பிறகு, விசாரித்த விபரங்களை கூறி முடிக்கவும், பெருமூச்சுடன், சாந்தியை பார்த்தாள், சுசீலா. அவளிடமும் மெல்லிய புன்னகை. ''அப்ப பெண் பார்க்க வரச் சொல்லிடலாம் தானே?'' என்று கேட்டாள், சுசீலா. ''உங்ககிட்ட பேசிட்டு தான் சொல்லலாம்ன்னு இருக்கேன்,'' என்றான், தனஞ்ஜெயன். ''இனி பேச என்னடா இருக்கு, முதல்ல வரச்சொல்லு.'' ''அவசரப்படாதம்மா இப்பல்லாம் கல்யாணம் பண்ணிக்கிறவங்க மனம் விட்டு பேசறது தான், பேஷன். மொபைல் போன்னு ஒண்ண கண்டுபிடிச்சிருக்கிறதே கூட, அவங்க தங்களுக்குள்ள கடலை போட்டுக்கத்தான். ''இந்த கல்யாண விஷயத்துல, சாந்திக்கு அப்படி விருப்பம் இருக்கும் தானே?'' ''இதுல என்னடா இருக்கு, தாராளமா பேசிக்கட்டும்.'' ''என்ன சாந்தி சொல்ற, உனக்கு சம்மதம் தானே?'' ''எனக்கு பிரியமில்லேன்னா, புரோக்கர் வந்து பேசும்போதே சொல்லியிருப்பேனே, தனா.'' ''அப்ப நீ வெளிநாட்டுக்கு வாழ்க்கைப்பட்டு போக தயாராயிட்டேன்னு சொல்லு.'' ''நான் நகர்ந்தா தானே, உனக்கு கல்யாணம் நடக்கும்? உனக்கு மட்டுமா, இதோ பின்னால நிற்குறாங்களே, இந்த இரண்டு பேர். எல்லாருக்கும் ஒரு வழியே, நான் கிளம்பறதுல தானே இருக்கு?'' ''ஐயோடா, எங்களுக்காக எல்லாம் நீ, உன் விருப்பத்தை கட்டுப்படுத்திக்க வேண்டாம். உன்னோட பூரண சம்மதம் தான் எனக்கு முக்கியம்.'' ''தனா, நீ ஒரு தப்பான முடிவை எடுக்க மாட்டேங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு. ஆக வேண்டியதை பார்,'' என்று, பட்டுக் கத்தரித்த மாதிரி சொன்னாள், அம்மா சுசீலா. ''இப்படி நம்பிக்கை வைக்கிறது தான், எனக்கு பயத்தையும் தருது. போகட்டும், இப்ப நான் சொல்லப் போறதையும் கவனமா கேட்டுக்குங்க. இந்த கல்யாணம் நடக்கக் கூடாதுன்னு நினைக்கவும் ஒரு கூட்டம் இருக்கு,'' என்று சற்று இடைவெளி விட்டவனை, அதிர்வோடு பார்த்தாள், அம்மா சுசீலா. ''ஆமாம்மா, என் முதலாளி கிருஷ்ணராஜுக்கும், அவர் மகள் கார்த்திகாவுக்கும் எதிரா ஒருத்தர் இருக்கார். அவர், என்னை விலைக்கு வாங்க முயற்சி செய்தார். நான் மறுத்துட்டேன்.''அதனால, என்னை வழிக்கு கொண்டு வர, அவர் எந்த எல்லைக்கும் போவார். அவரால ஆபத்து நிறையவே இருக்கு. அதனால, இந்த கல்யாணத்தை ஆடம்பரமா, ஊரை கூட்டியெல்லாம் நடத்த, என்னால முடியாது. காதும் காதும் வெச்ச மாதிரி, 'ரிஜிஸ்டர் ஆபீஸ்'ல முடிச்சுக்கிறது தான் நல்லது. ''கல்யாணம் நல்லபடியா முடிஞ்சு, ஒரு மாசம் கழிச்சு, ஸ்டார் ஹோட்டல்ல, 'கிராண்டா ரிசப்ஷன்' கொடுத்துடுவோம். இதுக்கு நீங்கல்லாம் சம்மதிக்கணும்,'' என்ற தனஞ்ஜெயனை, அம்மா சுசீலா, சாந்தி, ஸ்ருதி, கீர்த்தி என்ற நான்கு பேருமே அதிர்ச்சியோடு பார்த்தனர். ''என்ன அப்படி பார்க்கறீங்க, இப்படி ஒரு முடிவை நீங்க எதிர்பார்க்கல இல்ல?'' ''ஆமாம்டா, உன் முதலாளிக்கு எதிரின்னா அவர்கிட்டதான்டா மோதணும். உன்கிட்ட ஏன்டா மோதணும்?'' ''அவருக்கு யாரும் துணையாக இருக்கக் கூடாது. அவரை கஷ்டப்படுத்தணும். ஆனா, நான் அதுக்கு தடையா இருக்கேன். அப்ப நானும் எதிரிதானேம்மா?'' ''அதுக்காக, ஒரு பொண்ணு கல்யாண வாழ்க்கையிலுமா விளையாடுவாங்க?'' ''அம்மா, ரொம்ப விபரமா எதையும் கேட்காதே. என்னாலயும் உன்கிட்ட எதையும் சொல்ல முடியாது. ராணுவத்துல வேலை பார்க்கிற அதிகாரி, தன் மனைவிகிட்ட கூட எதையும் சொல்ல மாட்டார். அது, அவரோட தொழில் கடமை. நானும் இப்ப அப்படி ஒரு நிலையில தான் இருக்கேன்.''''இவ்வளவு பெரிய பங்களா, கார், லட்சத்துல சம்பளம்ன்னும் சொல்லும்போதே, நான் சந்தேகப்பட்டேன். அது சரியா தான்டா இருக்கு. இப்படி ஒரு ஆபத்தான வேலை எல்லாம் உனக்கு வேண்டாம், தனா. நாம நம்ம பழைய வாழ்க்கைக்கே போயிடுவோம்,'' பதறத் துவங்கினாள், சுசீலா. ''நீ, இப்படி சொல்வேன்னு தான், நான் எதையும் சொல்லல. கோழையா நுாறு ஆண்டு வாழறதுக்கு, தைரியத்தோட சில காலம் வாழறது எவ்வளவோ மேல், அம்மா.'' ''என்னடா சினிமா வசனம் பேசற. ஏழையா வாழறது ஒண்ணும் கோழைத்தனம் இல்லடா. மனசுக்கு நிம்மதி முக்கியம்.'' ''போதும்மா, நான் ஆபத்துன்னு சொன்னதை கேட்டு நீ ரொம்பவே பயப்படற. அதான் இப்படி எல்லாம் பேசற? வாழ்க்கையில ஜெயிக்கணும்ன்னா, 'ரிஸ்க்' எடுத்துதாம்மா தீரணும். நானும், அப்படியொரு, 'ரிஸ்க்' தான் எடுத்திருக்கேன். இல்லேன்னா, இவ்வளவு பெரிய இடம் தேடி வராது. அதை நீ, புரிஞ்சுக்கோ.'' ''டேய், எனக்கு உன்னை விட எதுவுமே பெருசில்லடா. நல்லவிதமா தொழில்ல, 'ரிஸ்க்' எடு. எதுக்குடா நமக்கு பணக்கார பகை?'' ''சாரிம்மா, நான் இந்த வேலையில ரொம்ப துாரம் போயிட்டேன். அப்படி எல்லாம் உடனே விட்டுட்டு விலகி வரவும் முடியாது. நீ எதுக்கும் கவலைப்படாத. எந்த ஆபத்தும் உங்களுக்கு வராது. அப்படி வரக்கூடாதுன்னு தான், 'சிம்பிளா ரிஜிஸ்டர் மேரேஜ்' செய்யணும்ன்னு சொல்றேன். ''கொஞ்ச நாள் தாம்மா. ஒரு சில கடமைகள் மட்டும் பாக்கி இருக்கு, அது முடியட்டும். நீ சொல்ற மாதிரி இந்த வேலையை விட்டுட்டு, உன் மகனா உன்கிட்ட வந்திடுறேன். இப்ப நீ எந்த தடையும் சொல்லாத,'' என்று தீர்மானமாக சொன்னான். அக்கா சாந்தியிடம், ''அம்மாவுக்கு ஆறுதல் சொல். தைரியமா இரு. 'ரிஜிஸ்டர் மேரேஜ்'ல உனக்கு ஆட்சேபனை இல்ல தானே?'' ''தனா, எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலடா.'' ''எதுவும் சொல்லாத, சந்தோஷமா கல்யாணம் பண்ணிக்கிட்டு மாப்பிள்ளையோட மேல் நாட்டுக்கு போ. அதுதான் எனக்கும் வேணும். மத்ததெல்லாம் போகப் போக சரியாயிடும்,'' என்றான். குமார் பக்கம் திரும்பி, ''எனக்கு, குமாரும் பக்க பலமா இருக்கான்மா. நீ கவலைபடாத,'' என்றான். ''ஆமாம்மா... நல்ல காரியம் நடக்கப் போகுது, அந்த சந்தோஷத்தோட இருங்க. எங்க சிக்கல் போகப் போக சரியாயிடும்,'' என்றான், குமார்.மறுநாள்-மனைவி ரஞ்சிதம், மகன் மோகனோடு கம்பீரமாக, 'ஆடி' காரில் வந்து இறங்கினார், மலேஷியா ராமகிருஷ்ணன். வேலைக்காரர்களால், தட்டு தட்டாக சீர் பொருட்களும் எடுத்து வரப்பட்டன.ராமகிருஷ்ணனும் வந்த வேகத்தில், தனஞ்ஜெயன் கைகளைப் பிடித்துக் கொண்டு, ''இது என் வரையில கை இல்லை, கால்...'' என்றார். அதை பார்த்து சிலிர்த்து விட்டாள், சுசீலா. தனி அறைக்குள் மாப்பிள்ளை மோகனும், சாந்தியும் மனம் விட்டு பேசத் துவங்கினர். அந்த சந்திப்பில், ஒரு வைர மோதிரத்தை சாந்தியின் கைக்கு போட்டு விட்டான், மோகன். ''கல்யாணம்கிறது சொர்க்கதுல தீர்மானிக்கற விஷயம்ன்னு சொல்வாங்க. அது எவ்வளவு பெரிய உண்மைன்னு நான் இப்ப தெரிஞ்சுக்கறேன்,'' என்று சாந்தியை நெகிழ்வித்தான், மாப்பிள்ளை மோகன். அப்போது, ராமகிருஷ்ணனுக்கு போனில் அழைப்பு. அதுவும் மலேஷியாவிலிருந்து. ''சார், இங்க நம்ப ஏஜென்ட் ஒருத்தன், 'இன்டர்நேஷனல் போலீஸ்' கையில சிக்கிட்டான். அவனை, 'டார்ச்சர்' பண்ணதுல, உங்களையும் காட்டி கொடுத்துட்டான்,'' என்றார், போன் செய்தவர். ராமகிருஷ்ணனுக்கு, இடி விழுந்தது போல் இருந்தது. — தொடரும்.இந்திரா சவுந்தர்ராஜன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !