உள்ளூர் செய்திகள்

தேர்தல் களைகட்டும் ஆண்டு!

நாட்டை ஆள்வதற்கு, சரியான நபரை தேர்ந்தெடுக்கும் மிகச்சிறந்த முறையாக தேர்தல் கருதப்படுகிறது. அந்த வகையில், ஆரம்ப கால மன்னர் ஆட்சி முதல், தற்போதைய மக்கள் ஆட்சி வரை, உலகம் முழுவதும் உள்ள தேர்தல்கள், பல கால கட்டத்தை கடந்து வந்துள்ளது.இந்த ஆண்டு, 60க்கும் மேற்பட்ட உலக நாடுகளில், ஜனநாயக முறைப்படித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு முன், பல நாடுகளிலும், இவ்வாறு ஒரே ஆண்டில் தேர்தல் நடந்ததில்லை.உலகின் மக்கள் தொகையில், 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள், இந்த நாடுகளில் வசிக்கின்றனர். இந்நாடுகளில், 2024ல், பல அதிபர் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது ஆச்சரியம் அளிக்கக் கூடியது. இதன்படி, இந்த ஆண்டு தேர்தல் நடைபெறப் போகும் சில நாடுகளைப் பார்ப்போம்.இந்த ஆண்டு பிறந்த உடனே, இரண்டு நாடுகளில் தேர்தல் நடந்து முடிந்துள்ளன. வங்க தேசத்தில், ஜனவரி 7ல் நடைபெற்ற தேர்தலில், ஷேக் ஹசீனா தொடர்ச்சியாக நான்காவது முறையாக பிரதம மந்திரியாக பொறுப்பேற்றுள்ளார். கிழக்கு ஆசிய நாடான தைவானில், ஜனவரி 13ல் நடைபெற்ற, அதிபர் தேர்தலில், ஆளும் ஜனநாயக முற்போக்கு கட்சி, மூன்றாவது முறை வென்று, லாய் சிங் டே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.பாகிஸ்தானில், பிப்ரவரி 8ல், தேர்தல் நடைபெற்றது. பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியை சேர்ந்த, ஷெபாஸ் ஷெரிப், பிரதமராக ௨வது முறையாக பதவி ஏற்றார்.செனகலில், மார்ச் 24ம் தேதியும், எல்சல்வடோரில், பிப்., 4ம் தேதியும், பெலாரசில், பிப்., 25ம் தேதியும் அதிபர் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.உலகின் மூன்றாவது பெரிய ஜனநாயக நாடு எனப்படும், இந்தோனேஷியாவில், பிப்ரவரி 14ம் தேதி தேர்தல் நடந்தது. 20 கோடி மக்களுக்கும் மேல் ஓட்டளிக்க கலந்து கொண்டனர். இது, உலகின் மிகப்பெரிய ஒருநாள் தேர்தல் என்று கருதப்படுகிறது.ரஷ்யாவில், அதிபர் தேர்தல், மார்ச் 15 முதல் 17ம் தேதி வரை, மூன்று நாள் நடந்தது. புதிய அதிபராக விளாடிமிர் புடின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். உக்ரைன் நாட்டில், இந்த ஆண்டு தேர்தல் நடக்க வேண்டும். ஆனால், நடக்குமா என்பது தெரியவில்லை. அடுத்து, ஆவலோடு எதிர்பார்க்கப்படும் மற்றொரு தேர்தல், இந்தியா நாடாளுமன்ற தேர்தல். ஏப்., 19ம் தேதி நடக்கவுள்ளது.ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற மற்றும் மெக்சிகோ நாட்டின் அதிபர் தேர்தல், வரும் ஜூன் மாதம் நடைபெற இருக்கிறது. மே முதல் ஆகஸ்ட் 2024க்குள், தென் ஆப்ரிக்கா தேர்தல் நடக்கவுள்ளது.கிரேட் பிரிட்டனில் இந்த ஆண்டு தேர்தல் நடக்க வேண்டும். இங்கிலாந்து நாட்டில் பெரும்பாலும் பொது தேர்தல்கள் வியாழக்கிழமை தான் நடத்தப்படும். ஒரே ஒரு முறை மட்டும் அக்., 1991ல், வேறொரு கிழமை நடந்தது. இங்கிலாந்து நாட்டில், வீட்டின் செல்ல நாய்க்குட்டியுடன் கூட சென்று ஓட்டளிக்கலாம். அக்டோபர் மாதம், பிரேசிலில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.உஸ்பெகிஸ்தானில், பொதுத் தேர்தல், அக்டோபர் அல்லது டிசம்பர் மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.சர்வதேச அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்த, அமெரிக்க அதிபர் பதவிக்கு நடைபெற இருக்கும் தேர்தல், இந்த ஆண்டின் முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. பொதுவாக, அமெரிக்காவில் நவம்பர் மாதம், செவ்வாய்க் கிழமைகளில் தான் தேர்தல் நடைபெறும். எனவே, நவம்பர் 5ல், தேர்தல் நடக்கவுள்ளது. அமெரிக்காவில் விவசாயிகள் அதிகமாக இருந்த போதிலிருந்து, இது நடைமுறையில் உள்ளது.உலகின் இளைய நாடான, தெற்கு சூடானில், டிசம்பரில் தேர்தல் நடைபெற இருக்கிறது.மெக்ஸிகோ, ஈரான், தென் கொரியா, அல்ஜீரியா, உஸ்பெகிஸ்தான், வட கொரியா, சிரியா, இலங்கை, ஐரோப்பிய கூட்டமைப்பு மற்றும் ராணுவப் புரட்சியால் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட, சில ஆப்ரிக்க நாடுகளிலும், இந்த ஆண்டு தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது.பல நாடுகளில், 18 வயதை நிரம்பியோர் ஓட்டளிக்கலாம் என்ற சட்டம் உள்ளது. மால்டா மற்றும் ஆஸ்திரியாவில், 16 வயதை அடைந்தவர்கள் கூட ஓட்டளிக்க முடியும்; உள்ளூர் தேர்தலில் ஓட்டளிக்க, ஜெர்மானியர்கள், 16 வயதை அனுமதிக்கின்றனர்.ஆஸ்திரேலியா, பிரேசில் மற்றும் கிரீஸ் உட்பட பல நாடுகளில், விடுமுறை நாட்களான சனி அல்லது ஞாயிற்றுக் கிழமைகளில் தேர்தல் நடத்தப்படும். இந்நாடுகளில் ஓட்டளிக்காதவர்களுக்கு அபராதம் விதிப்பதால், 91 சதவீதம் ஓட்டளிப்பர். உலகில், 22 நாடுகளில், தேர்தலில் ஓட்டளிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.நெதர்லாந்து போன்ற நாடுகளில், புதன் கிழமைகளில் தேர்தல் நடைபெறும். பெரும்பாலான ஓட்டுச்சாவடிகள்பள்ளிகளில் அமைக்கப்படுவதை அடுத்து, பள்ளிகளுக்கு புதன் கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படுகிறது.எஸ்டேனியா நாட்டு மக்கள், உலகில் எங்கே இருந்தாலும், தேர்தல் நேரத்தில், இன்டர்நெட் வழியாக ஓட்டளிக்கலாம். அமெரிக்காவில், வெளிநாடுகளில் வசிப்பவர்கள் மற்றும் ராணுவ வீரர்கள், 'இ - மெயில்' மூலம் ஓட்டளிக்கலாம். ஸ்பெயின் நாட்டில், பார்வையற்றோர்களுக்கு, பிரெய்லி ஓட்டுச்சீட்டு வழங்கப்படுகிறது.- தேவ்ராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !