உள்ளூர் செய்திகள்

சொர்க்கம் எங்குள்ளது?

கோவிலில், ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்தி கொண்டிருந்தார், ஒரு பெரியவர். கடவுள், சொர்க்கம் மற்றும் மனிதனை பற்றி விபரமாக பேசினார். அந்த கூட்டத்தில், ஒரு தத்துவ ஞானியும் உட்கார்ந்திருந்தார்.பேசி முடித்ததும், மேடையை விட்டு இறங்கி, தத்துவ ஞானியிடம் வந்து, 'எப்படி இருந்தது என் பேச்சு...' என்றார், பெரியவர். 'நீங்க பேசினது ஒன்றுக்கொன்று முரண்பாடாக இருந்தது...''எப்படி?''கடவுளை நம்புகிறவன் சொர்க்கத்துக்கு போவான்னு சொன்னீங்க. அப்புறம், நல்லவிதமாக வாழறவன் சொர்க்கத்துக்கு போவான்னு சொன்னீங்க...' என்றார்.'இதுல என்ன முரண்பாடு?' என்றார்.'ஒருத்தன், எல்லா தப்பும் செய்துவிட்டு, கடவுளை நம்பினால், அவன் சொர்க்கத்துக்கு போவானா அல்லது ஒரு தவறும் செய்யாமல் ஒழுங்காக வாழ்ந்துகிட்டு, கடவுளை நம்பாம இருக்கும் ஒருத்தன், நரகத்துக்கு போயிடுவானா?'கடவுள் நம்பிக்கையுள்ள ஒரு திருடன் எங்கே போவான்... கடவுள் நம்பிக்கையே இல்லாத ஒரு நல்லவன் எங்கே போவான்? ஒருத்தன், இங்கே கடவுள் நம்பிக்கையோட வாழறது முக்கியமா, நல்லவனா வாழறது முக்கியமா?' என்றார்.குழப்பத்தோடு வீட்டுக்கு போய், படுத்து துாங்கினார், பேச்சாளர்.கனவில், ஒரு ரயிலில் போய் கொண்டிருந்தார். எதிரில் உட்கார்ந்திருந்தவரிடம், 'நாம இப்ப எங்கே போறோம்...' என்றார்.'சொர்க்கத்துக்கு போய் கொண்டிருக்கிறோம்...' என்றார்.ரயில் நின்றது, இவரும் இறங்கினார்.இங்கே கவுதம புத்தர், சாக்ரட்டீஸ் இருப்பர். அவர்களை பார்ப்பதற்கு நல்ல வாய்ப்பு என நினைத்து, அங்கேயும், இங்கேயும் பார்த்தார். பாலைவனம் மாதிரி இருந்தது. எலும்பும், தோலுமாக சில முனிவர்கள், அங்கே உட்கார்ந்திருந்தனர்.அவர்களிடம், 'புத்தர், சாக்ரட்டீஸ் எல்லாம் எங்கே இருக்காங்க?' என, கேட்டார்.'அப்படி யாரும் இங்கே இல்லையே... அவர்கள் எல்லாம் யார்?' என்றனர்.அதிர்ச்சியடைந்தவர், உடனே, ரயில் நிலையத்துக்கு ஓடி வந்து, புறப்பட்டு கொண்டிருந்த ரயிலில் ஏறி உட்கார்ந்தார். நரகம் நெருங்க நெருங்க, காற்று குளிர்ச்சியாக வீசியது. வெளியே, அழகான நீர் நிலைகள், நந்தவனங்கள், மலர்கள் கூட்டம். அங்கே இருந்தவர்களும் மகிழ்ச்சியாக, உல்லாசமாக இருந்தனர். எங்கே பார்த்தாலும் ஆடல், பாடல், உற்சாகம்.ரயிலை விட்டு இறங்கியதும், சந்தேகம் வர, 'இதுவா நரகம்?' என, விசாரிச்சார்.'ஆமாம்...' என்றனர்.'கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் எல்லாம், இங்கே இருக்கின்றனரா என்பது தான், என் சந்தேகம்...' என்றார்.'இங்கே நீங்க பார்க்கறீங்களே... பசுமையும், ஆடல் பாடல்களும், அழகிய மலர்களும்... இது எல்லாமே கவுதம புத்தரும், சாக்ரட்டீசும், லாவோசும், மற்ற மகான்களும் இங்கே வர ஆரம்பித்த பிறகு தான் உண்டாக ஆரம்பித்தது.'இந்த பிரதேசத்தையே அவர்கள் மாற்றி விட்டனர். இப்போது இங்கே இருக்கிறவர்கள் எவரும் சொர்க்கத்துக்கு போகவே விரும்புறதில்லை...' என்றனர்.இந்த அதிர்ச்சியில், அவர் கனவு கலைந்தது.இதில் இருக்கும் கருத்து என்னவெனில், நல்லவர்கள் எங்கே இருக்கின்றனரோ, அந்த இடத்துக்கு பேர் தான் சொர்க்கம். பி.என்.பி.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !