ஓய்வு!
கையை பிசைந்தபடி, எதிரில் வந்து நின்ற மேனகாவை, கண்ணாடி வழியே பார்த்தவாறே, சவரம் செய்த கன்னத்தை மேல் துண்டால் ஒற்றினான், ரமணன்.''சொல்ல வந்ததை சொல்லிட்டால், நீயும் உன் வேலையைப் பார்க்கலாம். நானும், என் வேலையைப் பார்ப்பேன்,'' என்றான், கேலியாக.''அம்மா, போன் பண்ணி வர்றேன்னு சொல்லி இருக்காங்க,'' குரலில் அவ்வளவு தயக்கம். வியப்பாய் நிமிர்ந்து பார்த்தான்.''வரட்டும், அதுல உனக்கேன் இத்தனை குழப்பம்?''''வழக்கம் போல அவங்களுக்கும், அப்பாவுக்கும் ஏதோ பிரச்னை. குரலே சரியில்லை. இது எப்பவும் நடக்கிறது தான். ஆனால், இப்போ அத்தையும், மாமாவும் வந்திருக்கிற சமயத்துல, அவங்க இங்க வந்தால், எனக்கு அசிங்கமா இருக்காதா?''''இதுல அசிங்கப்பட என்ன இருக்கு. வயசானால் மனஸ்தாபம் வரவே கூடாதா? நீ அதிகம் யோசிக்கிறதை விட்டுட்டு, எப்போதும் போல இயல்பா இரு. எனக்கு, ஆபிஸ்ல ஆடிட்டிங் இருக்கு. நீ சீக்கிரம் கிளம்பினா தான் உன்னை காலேஜ்ல, 'டிராப்' பண்ணிட்டு போக முடியும்.'' இதெல்லாம் ஒரு பிரச்னையே இல்லை என்பது போல, கடந்து போய் விட்டான், ரமணன். ஆனால், மேனகாவால் தான் அத்தனை எளிதாக அதைத் தாண்ட முடியவில்லை.இருவரும் தயாராகி வெளியில் வர, பேப்பர் படித்துக் கொண்டே, மென்மையாக புன்னகைத்தாள், விமலா. கையிலிருந்த ஆங்கில நாளேட்டை வியப்பாய் பார்த்தான், ரமணன். மகனின் பார்வை பிடிபட, விமலாவின் முகத்தில் வெட்கம் கலந்த பெருமிதச் சிரிப்பு தொக்கி வழிந்தது.''முன்னமே கொஞ்சம் கொஞ்சம் வாசிப்பேன், ரமணா. வீட்டில சும்மா இருக்கும்போது உங்கப்பாகிட்ட கத்துக்கிட்டது தான். இப்ப, நல்லாவே செய்திகளை வாசித்து, புரிஞ்சுக்க முடியுது.''கணவன் - மனைவிக்கு நடுவில் இருக்கும் அன்னியோன்னத்தைப் பார்க்கும்போது, மேனகாவிற்கு ஏக்கமாக இருந்தது. நினைவு தெரிந்த நாள் முதல், அவள் பெற்றோருக்கு இடையில் நடக்கும் ஏட்டிக்கு போட்டியான வாக்குவாதங்களைப் பார்த்துள்ளாள். சலித்துப் போய், தனக்கு திருமணமே வேண்டாம் என்று, பயந்தோடிய காலமும் உண்டு.இப்போது அம்மாவை மறுத்துப் பேச வழியற்று வரச்சொல்லி இருந்தாலும், உள்ளுக்குள் ஒருவித குறையுணர்வுடன் தான் இருந்தாள். ரமணனோ, அவன் பெற்றோரோ குறை பாராட்டும் ரகமில்லாவிட்டாலும், இந்த வயதில் அப்பாவோடு முரண்பட்டு, அம்மா இங்கே வந்து நிற்பது, மேனகாவிற்கு கசப்பாகத்தான் இருந்தது.கல்லுாரிக்கு வந்ததும் முதல் வேலையாய், ''வீட்டில் அத்தையும், மாமாவும் இருக்காங்க. உனக்கும், அப்பாவுக்கும் பிரச்னை இருக்கிற மாதிரி காட்டிக்காதே. நம்மள குறைவா நினைச்சுடுவாங்க. சும்மா எப்போதும் போல் நடந்துக்கம்மா,'' என, அம்மாவுக்கு பாடம் எடுத்து முடித்தாள், மேனகா.மேனகாவின் அம்மா வீட்டிற்கு வந்ததும், அன்போடு வரவேற்றனர், விமலாவும், வாசனும்.'எங்கே உங்க வீட்டுக்காரர் வரல; என்ன திடீர்னு வந்திருக்கீங்க?' போன்ற எந்த அபத்தமான கேள்விகளும் இல்லாமல், அவர்கள் எதிர்கொண்டு அழைத்துப் போனது ஆறுதலாக இருந்தது.மாலை கல்லுாரியிலிருந்து வீட்டிற்கு வந்ததும், அம்மாவை அழைத்து மொட்டை மாடிக்கு வந்தாள், மேனகா.இதற்கே காத்திருந்தது போல், அம்மாவின் கண்களில் கண்ணீர் தேக்கமிட்டது.''மறுபடியும் என்னம்மா பிரச்னை?'' என்றாள், மேனகா.''என்கிட்ட கேட்காத. உன் அப்பாகிட்ட போய் கேளு,'' என்றார், அம்மா.''இதென்னமா பேச்சு? எதிரில் நிற்கிற உங்களை விட்டுட்டு, அப்பாவை ஏன் கேட்கணும்?'' என்றாள், மேனகா.''அவர், ஓய்வு பெற்று, வீட்டில் இருக்க ஆரம்பிச்சதுலிருந்து, எனக்கு தலை வேதனை ஆரம்பிச்சாச்சு. இதைச் செய்யாதே, அதைச் செய்யாதே, நொடிக்கு நொடி ஆயிரம் கெடுபிடி. இத்தனை வயசுக்கு அப்புறமும் வீட்டுக்குள்ள சுதந்திரமும், நிம்மதியும் இல்லாம வாழ முடியவே இல்லை,'' கண்களை ஒற்றிக் கொண்டார், அம்மா.அவளுக்கும் இது புரியாமல் இல்லை. இதற்கு ஆறுதலோ, மாறுதலோ சொல்லுகிற வயதும், அனுபவமும், மேனகாவிற்கும் இல்லை.''எல்லா விஷயத்திலும் குறை கண்டுபிடிச்சுட்டே இருந்தால், மீதமுள்ள வாழ்க்கை நரகம் தான். தன்னை, 'ஆக்டிவா' வச்சுக்க, என்னை பாடாய் படுத்தறார். இதுக்கு மேலயும் முடியாது, மேனகா. மாப்பிள்ளைகிட்ட சொல்லி என்னை ஏதாவது, 'ஹோம்'ல சேர்த்து விட்டுடு,'' என்றாள், அம்மா. ''சரி விடும்மா. எதையும் என் மாமானார், மாமியார் எதிரில் காட்டிக்க வேண்டாம். இயல்பா இருங்க,'' என்று, மென் குரலில் சொல்லி, அம்மாவோடு கீழே இறங்கினாள். மறுநாள் இருவரும் வேலைக்கு கிளம்பிப் போய்விட, வீட்டில் மூத்தவர்கள் மூவரும் தான். ''உங்களுக்கு, என்ன வேணும்ன்னு சொல்லிடுங்க, சம்பந்தி... அவர் சமைச்சுடுவார்,'' என்ற விமலாவை அதிர்ந்து போய் பார்த்தார், மேனகாவின் அம்மா. அவர் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை.''அட, அவர் நம்மை விட பக்குவமா, நல்லாவே சமைப்பார். இன்னும் சொல்லப் போனால், நமக்குத் தெரியாத புதுப்புது ஐட்டங்களை செஞ்சு தருவார். இதுகூட நல்லாத்தான் இருக்கு,'' என்று சொல்லி, விமலா சிரிக்கவும், தலை சுற்றுவது போல் இருந்தது.''என்ன அண்ணி, இப்படி சொல்றீங்க... ஏதோ ஆசைக்கு ஒருநாள் அடுக்களை புகுந்தால், அவங்க கலைச்சு போடறதை சரிகட்டவே நமக்கு நாலு நாள் ஆகும். இதுல வழக்கமா இவங்களே சமைக்கிறதா இருந்தால் சொல்லவே வேண்டாம்,'' என, அலுத்துக் கொண்டார்.அவரை, அர்த்த புஷ்ட்டியுடன் பார்த்தனர், கணவரும் - மனைவியும்.''ஏன் சம்பந்தி, உங்க வீட்டில் இதெல்லாம் நடக்காதா?'' ''ஏன் இல்லாம? அவர், ஒருநாள் கிச்சன் வந்தால், அடுத்து நாலு நாள் எங்களுக்கு சண்டையில் தான் விடியும்.''அரிந்த காய்கறிகளுடன், வாசன் உள்ளே வர, மேனகாவின் அம்மாவை அழைத்துக் கொண்டு வெளியே சென்றார், விமலா.உள்ளேயே அடைந்து கிடப்பதை விட, காலாற நடப்பது இதமாக இருந்தது. வங்கிக்கு போய் காலாவதியான கணக்கு பற்றி விசாரித்து, இன்சூரன்ஸ் பிரீமியம் செலுத்தி விட்டு, கொஞ்சமாய் காய்கறிகள் வாங்கிக் கொண்டு, கபேயில் வந்து அமர்ந்த போது, இருவருக்கும் லேசாய் வியர்த்திருந்தது.அதைவிட, மேனகாவின் அம்மாவிற்கு மெல்லிய வியப்பு. கிட்டத்தட்ட விமலாவிற்கும், அவருக்கும் ஒத்த வயது தான் இருக்கும். படிப்பு, வாழ்க்கைத் தரமென்று எல்லாமே சற்று ஏறக்குறைய இருவருக்கும் ஒன்று தான்.ஆனால், இந்த முதிர்ந்த பருவத்தில் தனக்கும், தன் கணவருக்கும் இருக்கும் சஞ்சலங்கள் விமலாவிற்கோ, அவள் கணவருக்கோ இல்லை என்பது தெளிவாகப் புரிந்தது. ''உங்க வீட்டில், எல்லாமே தலைகீழாத் தான் நடக்குமா அண்ணி?'' என்றதும், மெல்லிய புன்னகை மலர்ந்தது, விமலாவிற்குள்.''நேரானது, தலைகீழானதுங்கிறது எல்லாமே நாம எங்கே இருந்து பார்க்கிறோம்கிறதுல இருக்கு, சம்பந்தி. இது இது இப்படி மட்டும் தான் இருக்கணும்கிறது நியதியும் இல்ல, தீர்ப்பும் இல்ல. ''மூணு வருஷத்துக்கு முன், அவருக்கு பணி ஓய்வு கிடைச்சது. கோவில், குளம், சொந்தம், பந்தம், சுற்றுலா, ஓய்வுன்னு எல்லாமே ஆறு மாசத்துக்குள்ள அலுத்துப் போச்சு. தெரிந்த வேலையை வேறொரு இடத்துல செய்யிறதுல என்ன சுவாரஸ்யம் இருக்கு?''வீட்டில் ஓய்வா இருக்கிறதை விட்டுட்டு, பிள்ளைகள் வீட்டுக்குப் போய் அங்கேயும் ஓய்வா இருக்கிறது பெரிய தண்டனையா இருந்தது.''அவருக்கு, அன்றாடம் இருந்த வேலைகளிலிருந்து ஓய்வு தந்த மாதிரி, எனக்கு, இருந்த வேலைகளிலிருந்து ஓய்வு கொடுக்க, அவர் சமையல் கத்துக்க ஆரம்பிச்சார். வங்கிக்கு போறது, காய்கறி வாங்கறது, பிரீமியம் கட்டறது வரைக்குமான வேலைகளை ஆர்வத்தோடு நான் கத்துக்கிட்டு செய்ய ஆரம்பிச்சேன்.''ஓய்வு நேரத்தில், இதுக்கெல்லாம் தேவைப்படற அளவுக்கு இங்கிலீஷ் கற்றுக் கொடுத்தார். சின்ன சின்ன வாக்கியங்களை பேச கற்றுத் தரும்போது, எங்களுக்குள்ள அத்தனை ரகளையா இருக்கும்.''இப்போ நானே வங்கிக்கு போய் பணம் போடறேன், எடுக்கறேன். அவ்வளவு தன்னம்பிக்கையா இருக்கு. இது ஒரு மாற்றுப் பாதை சம்பந்தி.''ஒரே தொழில், ஒரே வேலை, ஒரே முகம், இது எல்லாமே எத்தனை விருப்பமானதா இருந்தாலும், ஒரு காலகட்டத்தில் அலுத்துப் போயிடும். இதுக்கு அர்த்தம், அந்தப் பொருள் மீதோ, நபர் மீதோ, தொழில் மீதோ நமக்கான ஈடுபாடு குறைந்து போச்சுங்கிற பார்வையே இல்லை.''ஒரே, 'பொசிஷன்'ல மணிக்கணக்காய் உட்கார்ந்திருந்தால், கால்களில் ஸ்மரணை இல்லாம போயிடும் இல்லையா... அதேமாதிரி, மாறுதல் இல்லாத ஒரே செயல்கள் விருப்பத்தை உடைச்சு, வெறுப்பை உண்டாக்கிடும்.''பளு துாக்கிட்டு வரும்போது, கை வலி பொறுத்துக்க, அப்பப்போ கை மாத்திக்கிறோம் இல்லையா, அது மாதிரித்தான் பொறுப்புகளும், கடமைகளும். பரஸ்பரம் கை மாத்திக்கிறதால அந்த வேலை மேலான சலிப்புகள் குறையும்.''இதைத்தான் நானும், அவரும் செய்றோம். 40 வருஷமா சமையல் அறையில் அடைபட்டுக் கிடந்த எனக்கு, வெளி வேலைகளை கத்துக்க இது ஒரு வாய்ப்பு. ஆபிஸ்லயும், வீட்டிலயும் நிர்வாகத்தை பார்த்து பார்த்து அலுத்துப் போன அவருக்கு, ஓய்வு காலத்துல இன்னொரு வாழ்க்கை வாழற சுவாரஸ்யம்.''மேனகாவின் அம்மாவிற்கு அந்த வார்த்தைகள் பிரமிப்பாக இருந்தது. தனக்கே, தனக்காக சொல்லப்பட்டது போல், கண்களில் கண்ணீர் திரண்டது. மனம் முழுக்க சிந்தனை மொய்த்தது. தங்களுக்குள் எங்கே தவறு நடந்திருக்கிறது என்பது புரிந்தது.ஆட்டோவில் வீடு திரும்பினர்.''இதில் இன்னொரு விஷயமும் இருக்கு, சம்பந்தி. இணையாய், துணையாய், கணவன் மனைவியாய், வேறு வேறு பரிமாணத்தில் வாழ்ந்தவங்க, கடைசி காலத்துல நண்பர்களா வாழணும். எந்த உறவிலும் இல்லாத அன்பும், புரிதலும் நட்புக்கு மட்டுமே சாத்தியமாகும். ''நமக்கு பிறகும் நம் துணை கஷ்டப்படவே கூடாதுங்கிற பேரன்பும், எங்களுக்குள்ள இருக்கு. மரணம் தவிர்க்க முடியாத நிஜம். நான் முந்திட்டால், அவர் சாப்பாட்டுக்கு கஷ்டப்படக் கூடாது.''ஒருவேளை, அவர் முந்திட்டால், வெளி உலகத்துல இயங்கத் தெரியாம நான் கஷ்டப்படக் கூடாதுங்கிற அக்கறையும், இந்த பொறுப்பை கைமாற்றியதன் பின்னணியில் இருக்கு,'' என்று புன்முறுவலுடன் முடித்தார், விமலா.தன்னை கட்டுப்பட்டுத்த இயலாமல் சம்பந்தி கண்ணீர் சிந்த, காரணத்தை ஆராயாமல், அவர் கைகளை பற்றி உள்ளே அழைத்துப் போனார், விமலா. ஹாலில், வாசனுடன் பேசிக் கொண்டிருந்த கணவரைப் பார்த்ததும், அதிர்ந்து போய் விமலாவைப் பார்க்க, அவர் புன்னகையுடன் மென்மையாக தலை அசைத்தார்.''வாங்க சம்பந்தியம்மா, முதல் முறையா பிரியாணி செய்திருக்கிறேன். நீங்களும் சம்பந்தியும், 'டேஸ்ட்' பண்ணிட்டு, எப்படி இருக்குன்னு சொல்லுங்க,'' என, முகமலர்வுடன் அழைத்த வாசனைப் பார்த்து, இருவரும் நன்றி பெருக்கோடு, கரம் குவித்தனர். பர்வின்பானு